Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

ரவி அல்லது கவிதைகள்

பெருங் கூத்தின் நெடுந்துயர்

குழந்தையின்
கள்ளமின்மையைக்
கொத்தித் தின்றபொழுது
முளைத்த
சிறகிற்கு
வாஞ்சையைத்தவிர
யாதொன்றும்
அறியாது.

நிழலொதுங்கி
நிற்கும்
குனிதலுக்கு
பற்றி எடுத்த
இறகின்
பாங்கில்
அழைக்கும்
யாவும்
பொருளற்றது
இவ்வுயிர்த்தலை
உணராத
சக்காரவாகப் பறத்தலுக்கு
முன்.


பயணத் தேற்றம்

சமன்
பாடுகளின்
துயரம்
தானே
வழியமைத்துக் கொண்டது
மழை.
தேங்கியவைகளுக்கு
எப்பெயராவது
இருந்துவிட்டுப்
போகட்டும்
கடலாகும்
பயணத்தில்.


அழுத்த விசையின் தெறிப்புகள்

இவ்வளவு
விரைவாக
தண்ணீர்
வருவதால்தான்
அலுத்துக்கொள்கிறாள்
மனைவி
சமையலறையில்
தெறித்தவைகளை
சுத்தம் செய்வதன் பொருட்டு.

யாவையும்
பழகினாலும்
திருகலின்
நேர்த்தியில்
குழாயை
மத்திமத்தில்
தண்ணீரைக்
கொட்டவிடத் தெரிவதில்லை
பல பொழுது
முக வாடலாக.

Exit mobile version