Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

மழைக்காலம்

1

யாசகம் செய்ய
புதிதாக பழகிய
வயதான ஸ்திரீ ஒருத்தி
தன்னையொத்த
ஒருத்தியை
பேத்தியோடு
பேருந்தில் பார்க்கிறாள்
அவளிடம்
யாசிக்க
வேறெதுவோ இருப்பது போல்
கொடுத்த காசை வாங்காமல்
கண்ணீரோடு
பேருந்திலிருந்து இறங்குகிறாள்
இறங்கிப் போகும் அவளைப் பார்த்து
காசை வீசி எறிகிறாள்
பேத்தி


2

ஒரு மிட்டாயை
பகிர்வது போலல்லாம்
நீங்களும் நானும்
இந்த வாழ்க்கையை பகிர முடிவதில்லை
ஆனாலும்
நாம்
அன்பின் பெயரால் எவ்வளவு பேசிவிட்டோம்
ஒருவருக்கொருவர்
எவ்வளவு
நடித்து விட்டோம்
இனி
இந்த வாழ்வில்
நீயும் நானும் மட்டுமே
என்றுமே எத்தனை பேருக்கு
வாக்களித்து விட்டோம்
இனியாவது
நாம் கைவிட்டு
நகர்ந்தவர்களுக்கு
நமது பொய்கள்
ஒரு
விளையாட்டு பொம்மையாக
அவர்கள் கைகளில் எப்போதும் இருக்கட்டும்
விரும்பிய போது
அதை தூக்கி வீசட்டும்


3

தவிப்பிலிருந்து ஒரு கணம்
நினைப்பிலிருந்து
ஒரு கணம்
ஏக்கம் துளைத்த
நிகழ்தலிலிருந்து
ஒரு கணம்
விடுபட்டு
பறந்து
நெடுஞ்சாலை வாகனங்கள் மோதி
உயிர் விடும்
வழிதவறிய
பட்டாம்பூச்சிகளின்
மரணங்களில்
ஒரு மிடறு அருந்தி
உயிர்க்கிறது
நெருப்பு சிகரெட்டின்
நுனியை தொடும் கணம் போல
யாரும் பறிக்காத
அரளிச்செடியின் வேர்கள்

Exit mobile version