
உங்கள் சகுனி எப்படியோ
எனக்குத் தெரியாது
ஆனால்
என்னுடையதுடன்
பல்லாண்டு
வாழ்க்கை நடத்தி இருப்பதால்
அதன் பல்வேறு ஆட்டங்களை நன்கு அறிவேன்
நான்
எதுவும் செய்ய மனமில்லாமல் இடித்த புளியாய்
மணிக் கணக்காய்
அமர்ந்திருத்தல்
சகிக்க முடியாத அசட்டுத்தனம் கொண்ட திரைப்படங்களை
ஒரு காட்சி விடாமல் காணுதல்
தடுக்கும் அறிவையும்
ஒதுக்கி
இனிப்பு டப்பாக்களையும்
வறுவல் பொட்டலங்களையும்
காலி செய்தல்
உப்பு பெறா விஷயங்களுக்கு
கவலைப் படுதல்
பொருட்டாக
நினைக்காத
முட்டாள் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு
சொன்ன ஒரு சொல்லை எண்ணி மருகுதல்
முக்கிய பணிக்காக
ஒருவரை
தொலைபேசியில் அழைப்பதை
ஒத்திப் போடுதல்
எல்லாம் உள்ளே உள்ள
மனச் சோர்வெனும்
சகுனியின் ஆட்டமென்று
எனக்கா தெரியாது?
