Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

20 வடை + 13 பேர் = 2 புத்தகம்..

மணி ஐந்தரை ஆகிவிட்டது. பரபரப்பாகிவிட்டான் தேவன். வேலை முடியும் தருவாயில் இருந்தாலும் உடனடியாக போக வேண்டும். ஆறரைக்கு கூட்டம் என்றாலும் அதை ஒழுங்கு செய்தாக வேண்டும் . பொறுப்பிலிருக்கும் நாமே தாமதமாக போவது எப்பொழுதும் மனம் உறுத்தலாகவே இருக்கும். ஒரு வருடத்திற்கு முன்பு  மாதக் கூட்டத்தின் போதும், இப்படித்தான் வேலை செய்யுமிடத்தில் மாட்டிக் கொண்டான் . ஆறரைக்கு மேல் ஆகிவிட்டது வந்து சேர்வதற்க்குள் வாசகர் வட்டத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான   வயதில் மூத்தவரும் ஒய்வு பெற்ற பொறியல் அறிஞர்  பரமசிவம் முன்பாகவே வந்திருந்து மேஜை நாற்காலிகளை துடைத்து ஒழுங்கு செய்து வட்ட வடிவமாக அமைத்துக் கொண்டிருந்தார். அன்றே அவனுக்கு மனச்சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது. இனி, எக்காரணம் கொண்டும் தாமதமாக வரக்கூடாது என மன உறுதி எடுத்துக் கொண்டான். இவ்விஷயத்தில் யாரையும் எதிர்பார்க்கக் கூடாது என்ற நிலையை அடைந்ததும் நல்லதே. தேவனோடு சேர்த்து மூவர் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள். வாசகர் வட்ட வாட்சாப் குழுவில் உறுப்பினர்களாக நற்பத்தியாறு பேரும் , அட்மின்களாக பரமசிவம் , தேவன், திலீபன் இருக்கிறார்கள்

 பார்த்துக் கொண்டிருந்த வேலையை நிறுத்தி உதவியாளர்களை போகச் சொல்லி அவர்களுக்கான கூலித்தொகையை உடனடியாக பணச்செயலி மூலம் அனுப்பிவிட்டு இருசக்கர வாகனத்தை சற்றே வேகமாக ஒட்டியபடி கூட்டம் நடக்குமிடத்திற்கு ஐந்து நாற்பதுக்கெல்லாம் வந்து சேர்ந்தான் தேவன். பெரும்பாலான நேரங்களில் செல் பேசியில் உள்ள பணச் செயலி உபயோகமாகவே இருக்கிறது. வெளியூர்களுக்கும் புத்தகவிற்பனை செய்யும் பதிப்பகங்களுக்கும் உடனடியாக பணம் அனுப்பவும் கையில் பணமாக இல்லாத போது  வங்கியிலிருக்கும் பணத்தை இச்செயலிகள் மூலம் அனுப்புவது மிக எளிதாகவே இருகிறது.

இன்னும் யாரும் வரவில்லை. கூட்டம் நடக்கும் கட்டிடத்தின் சாவி பக்கத்துவீட்டிலிருப்பவர், கட்டிட உரிமையாளர் ஜெகன்நாதனின் நெருங்கிய நண்பரான துருவனிடம் இருக்கும். அவர், அவரின் மனைவி, மகள். யாராவது எப்பொழுதும் வீட்டிலிருப்பார்கள். வாங்கி திறந்து கொள்வோம். அன்று துருவனே வீட்டிலிருந்தார் மிகப்பிரம்மாண்டமான உடல்வாகு.  ஒரு சுற்றில் பிடிக்க இருவர் வேண்டும். மிகச் சாந்தமான முகமும் எப்பொழுதும் சிரித்த முகத்துடனே இருப்பார். ஆழமான கண்களில் சந்தேகம் மின்னியவன்னமிருக்கும். சாவியை வாங்கிக் கொண்ட போது வாழ்த்துக்கள் சொன்னார். வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டு நன்றி சொல்லி, “நீங்களும் வந்து விடுங்கள்; இன்று மிக முக்கியமான நாள்.” என்றான் தேவன். “எனக்கும் தெரியும் அதனால் தான் முந்திக்கொண்டு வாழ்த்துக்கள் சொன்னேன்.” என்றார் துருவன்.

கட்டடம் புதிதாக கட்டப்பட்டிருந்தாலும் குறுகிய சந்து போன்ற தெருவின் மையத்திலிருந்தது.  சரியாக பராமரிக்காததாலும் வெள்ளையடித்தது மங்கி சற்றே பழையது போல காட்சியளிக்கும்.கட்டித்தின்  சாவி மூலம் முதலில் சுற்று சுவரின்  கேட்டின் பூட்டையும் இரண்டாவது இரும்பு கிரில் கதவு திறந்து மூன்றாவதாக பெரிய மரக்கதவை திறந்து உள்ளே நுழைந்தான் இடம் கொஞ்சம் தூசியாகவும் திறந்து நீண்ட நாளானதால் ஒரு விதமான வெக்கையுடன் பாசிபிடித்த வாடையடித்தது. முதல் கேட்டிற்கும் இரண்டாவது இரும்பு கிரில் கதவிற்கும் இடையே இருக்கும் ஏழடி பாதையில் அதிகம் குப்பையா தூசியோ இருக்காது . இரண்டாவது இரும்பு கிரில் கதவிற்கும் மரக்கதவிற்கும் இடையே வராண்டா போல உள்ள டைல்ஸ் பதிக்கப்பட்ட இடம்  அதிக தூசியுடன் இருக்கும். மாதம் இருமுறை , மூன்று முறைகள்  மட்டுமே கூட்டங்கள் நடக்கும்.  அதிக புழக்கமில்லாததால், முன்பகுதி காற்றின் வீச்சுதலில் அதிகமான  மண் தூசிகள் இருக்கும். கால் வைத்தால் அந்த இடத்தில் நம் காலடி பதியும் வன்னம் தூசியின் அடர்த்தி இருக்கும். அதனால் எப்பொழுதும் வந்தவுடன் அந்த இடத்தை கூட்டி சுத்தம் செய்வது தேவனின் வழக்கம். வருபவர்களுக்கு முதலில் அதுதான் கண்ணில்படும். யாரும் உதவி செய்ய முன் வர மாட்டார்கள் .

நீண்ட சாப்பாடு போடும் டேபிள் இருந்தது. அதைத் துடைத்து தூசி போக தட்டிவிட்டு மேஜை விரிப்பை விரித்து போட்டுவிட்டு, அறையின் இடது புற ஜன்னலோரம் அடுக்கி வைக்கப்ட்டிருந்த நாற்காலிகளில் இருபது நாற்காலிகளை  எடுத்து தனியே வைத்து துடைத்து வரிசையாக போட்டுக் கொண்டிருந்த போது பரமசிவம் வந்து விட்டார். மணி பார்த்த போது ஆறு ஐந்து ஆகியிருந்தது. நல்ல வேளை கொஞ்சம் முன்பாகவே வந்தது. கூட்டம் நடக்குமிடம் சற்றே பெரிதானது.  இருபதுக்கு இருபது குறையாமல் நானூறு சதுர அடிக்கு குறையாத அளவு இருந்தது. உள்ளே இருள் படிந்திருப்பது போலவே இருக்கும் டியூப்லைட்டுகளை எல்லாம் எரியவிட்டாலும் ஒரு விதமான இருள்சூழ்ந்த வன்னமே இருப்பது ஏனென்று தெரியவில்லை. அனைத்து மின்விசிறிகள் சுற்றினாலும் இறுக்கமாக உணர முடியும். முழுவதுமாக கூட்டி சுத்தம் செய்வது தற்போது இயலாது என்பதால். நாற்காலிகளையும் டேபிளை மட்டும் சத்தம் செய்து போட்டது நல்லதாகப் போனது. பரமசிவம் வருவதற்கு முன்பு செய்து விட்டதை அவர் முக மலர்ச்சியில் காணமுடிந்தது. பரமசிவமும் எப்பொழும் கூட்டத்திற்கு பத்து நிமிடம் அல்லது அரை மணிக்கு முன்பாகவே வந்து விடுவார். வெள்ளை ஜிப்பா வெள்ளை வேட்டித்தான் எப்பொழுதும் அணிவார். பணி ஓய்வுக்கு பின்பு முழுமூச்சாக ஐந்தாண்டுகளாக வாசிப்பிலும் கூட்டம் நடத்துவதிலும் கட்டுரைகள் எழுதுவதிலும் தன் நேரத்தை செலவிட்டு வருகிறார். எதிலும் முன் ஜாக்கிரதையாக பல கோணங்களில் சிந்தித்துத் தயாராகவே இருப்பார். 

வரிசையாக போடப்பட்டிருந்த நாற்காலிகளை பார்த்தவர்.

”தேவன் ஏன் வரிசையாக சேர்களை போட்டிருக்கீங்க? வட்டமா போடுங்க.”, என்றார்.

”சார்… வேண்டாம். இன்னிக்கு நிறைய பேர் கூட்டத்திற்கு வருவார்கள். அப்படியே இருக்கட்டுமே!?” 

”இல்ல தேவா…  இன்னனிக்கும் நிறைய பேர் வர மாட்டாங்க , நீங்கவேன்னா பாருங்க.”

திடுக்கிட்ட தேவன்

”என்ன சார் சொல்றீங்க!? பத்திரிகை வேற அடிச்சி கொடுத்திருக்கோம். அதிகமான எண்ணிக்கையில் வர மாட்டாங்களா?”

”வருவாங்கண்ணு தோனலை.” என்றார்.

”என்ன காரணமாயிருக்கும் சார்.”

”நீங்கள் நம்பிக்கையாயிருந்தா சரிதான் பாப்போம்.”  என்றார்.

மணி ஆறரையை நெருங்கி விட்டது ஒவ்வாரு நபராக வரத்துவங்கினர் ஆறு பேர்கள் மட்டுமே வந்திருந்தனர்

பரமசிவம் கூட்டத்தை ஆரம்பிக்க சொன்னார்.

”சார்… ஒரு பத்து நிமிசம் பார்ப்போமே!?”

எப்பொழுதும் ஆறு மணி ஒரு நிமிடத்திற்கே கூட்டத்தை துவங்க சொல்லி வலியுறுத்துபவர் அன்று மட்டும் சரி என ஒப்புக் கொண்டது ஆச்சர்யமாக இருந்தது.

”தீலிபன் போன் பண்ணாரா?” என்றார் பரமசிவம்.

”இல்லை சார். நேத்தும் பேசும்போது ஞாபகப்படுத்தினேன்.”  

”சரி பார்ப்போம். டீ க்கும் வடைக்கும் சொல்லியிருக்கேன். இருபது டீ, வடை, போதும்னு  செல்லிட்டேன்.” என்றார்.

மணி ஆறேமுக்கால் ஆகிவிட்டது  . பதிமூன்று பேர் வந்து விட்டார்கள் வந்திருந்தவர்களில் வாசன், கிருஷ்ணன் , போன்றோர் வழக்கமாக வருபவர்கள். மற்றவர்கள்  திடீர்ரென வந்திருந்து அதிர்ச்சி. கூட்டத்தை துவங்லாம் என செய்கை செய்தார் பரமசிவம்.

தேவன் வழக்கம் போல எழுந்து வந்திருந்தவர்களை வரவேற்று மாலை வணக்கம் சொல்லிக் கொண்டிருந்த போது  திலீபன்  உள்ளே நுழைந்தார் எப்பொழுதும் போல ஆடி அசைந்து மெதுவாகவே வந்தார்.

வாசகர் வட்ட பொறுப்பாளர்களில் திலீபனும் ஒருவர். சராசரி உயரமும் சற்றே ஏறிய நெற்றியும் முன் வழுக்கை விழுவற்கான அறிகுறிகளும் தோன்ற ஆம்பித்து விட்டது. வேலை முடிந்து குளித்து விட்டுத் திருநீறு பட்டையுடன் தான் வருவார். கூட்டம் நடக்கும் இடத்திற்கு  எப்பொழுதும் தாமதமாகவே வருவார். எந்த இலக்கிய கூட்டமானாலும் பாதியில் அல்லது தனக்கு தோன்றிய நேரத்தில் தான் வருவார்.

மூன்று மாதங்களுக்கு முன்பு அறிமுகமானவர் தம்பிதுரை. சாதரண உடல்வாகுடன் சராசரியை விட உயரமானவர். எப்பொழுதும் ஏதோ ஒரு சிந்தனையுடனே இருப்பார். அவரும் ஒய்வு பெற்ற ஆசிரியர். வாசிப்பதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர். புதிதாக அறிமுமானதில் எங்களுக்கு மிகுந்த குதூகலம் அளித்தது. இரண்டு மூன்று நாவல்களை படித்து விட்டு அதன் மையக்கருத்தையும் நாவலின் போக்கையும் துல்லியமாக கூறுமளவுக்கு தகுதியுள்ளவர். தன் தன் கருத்துக்களை ஆணித்தரமாக கூறுபவர். எங்களுக்கு கிடைத்த முத்து எனலாம். அவரும் கூட்டத்திற்கு வந்திருந்தார்.

ந்த மாதம் நாம் பேசப் போவது தி ஜானகிராமனின் மரப்பசு என்னும் ஒரு தகுதியும் சிறப்பும் வாய்ந்த நாவலை.

இம்மாதம் மிகச்சிறப்பான மாதம் , நாம் வாசகர்வட்டம் ஆரம்பித்து மூன்றாவது ஆண்டு முடிந்து நான்காவது ஆண்டு ஆரம்பிக்கிறது. மூன்றாண்டுகளில் நாம் ஒரு சாதனை செய்திருக்கிறோம். ஒரே ஒரு மாதம் கூட கூட்டம் நடத்தாமல் இருந்ததில்லை. இம்மாதம்மும் வழக்க போலவே கூட்டம் அதிகம் கூடவில்லை. நல்லது மரப்பசு  நாவல் சொல்வது என்ன; அது எதை நோக்கி செல்கிறது – என்பதை விமர்சனமாக திருகிருஷ்ணன் தன் பாணியில் கூறுவார். பிறகு நம் அனைவரின் கருத்துரைக்குப் பின் கலந்துரையாடலும் கேள்வி பதிலும் நிகழும்.” என நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து விட்டு அமர்ந்தான் தேவன்.

எங்கள் கூட்டங்களில் ஒரு சிறப்பு உண்டு ஆறுமுப்பத்தாறுக்கெல்லாம் கூட்டம் துவங்கிவிடும். அறிமுக உரை என நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதில்லை. நாவலின் கருவை பேசுபவரை அறிமுகப்படுத்திவிட்டு உடனே நிகழ்ச்சியை துவங்கி விடுவோம். சால்வை, மாலை மரியாதை கலாச்சாரம் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுவிடும்.

வழக்கம் போல கிருஷ்ணன் தன் கருத்துக்களை நாற்பது ஆண்டுகளாக வாசிப்பதின் காரணமாக நாவலின் மையக்கருத்தையும் அதன் போக்கினையும் முன்வைத்தார். பிறகு அவரவர் தங்கள் கருத்துக்களை முன்னவத்தனர். 

கேள்வி பதிலாக நாவலை பற்றிய அலசலும் அருமையாக நிகழ்ந்தது தி.ஜா.ரா. இருந்திருந்தால் மிக நன்றாக இருத்திருக்கும் என நினைக்குபடி இருந்து.

மூன்றாண்டுகளாக எவ்வளவோ முயற்சித்தும் அதிகம்பேரை கூட்ட முடியவில்லை. கட்டுரை என்றால் கொஞ்சம் கூட்டம் அதிகமாக இருக்கும். முப்பது பேர்வரை வருவார்கள். நாவலென்றால் பத்து பேர்களுக்குள்ளாகத்தான் வருவார்கள். ஆறு பேர்கள் தவிர மற்றவர்கள் படிக்கவே மாட்டார்கள். பேசியதிலிருந்து கேள்விகள் கேட்டுவிட்டோ, பாராட்டிவிட்டோ சென்று விடுவார்கள்.

கூட்டம் மிக இனிதே மனதிருப்தியுடன் நிறையுற்றது. இக்கூட்டத்திற்காக நாவலை உறுப்பினர்கள் படிக்க வேண்டுமென்பதற்காக பன்னிரெண்டு புத்தகங்கள் வரவழைத்திருந்தோம். இரண்டு புத்தகம் மட்டுமே விற்பனையாகியிருந்தது.

Exit mobile version