மூலம் : ஜான் சீவர்
தமிழாக்கம் : மைத்ரேயன்
ப்ளேக் எலவேட்டரிலிருந்து வெளியே வந்ததும் அவளைப் பார்த்தார். சிலர், பெரும்பாலும் பெண்களுக்காகக் காத்திருக்கும் ஆண்கள், அந்த முன் கூடத்தில் நின்று எலவேட்டரின் கதவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அவள் அவர்கள் நடுவே இருந்தாள். அவளை அவர் பார்த்தபோது, அவள் முகம் அப்படி ஒரு வெறுப்பையும், தீவிர கடுப்பையும் கொண்டது, அதைக் கவனித்ததும் தனக்காகத்தான் அவள் காத்திருக்கிறாள் என்று அவர் உணர்ந்தார். அவளை அவர் அணுகவில்லை. நியாயமாக அவரிடம் அவளுக்கு ஒரு வேலையும் இல்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் பேசவும் ஏதும் இல்லை. அவர் திரும்பி, முன்கூடத்தின் மறுகோடியில் இருந்த கண்ணாடிக் கதவுகளை நோக்கி நடந்தார், போகும்போதே பழைய நண்பர்கள் அல்லது வகுப்புத் தோழர்கள் வறுமை நிலையில் இருப்பவர்களாகவோ, அல்லது நோயுற்றவர்களாகவோ அல்லது வேறேதோ வகையில் துன்பப்பட்டவர்களாகவோ இருப்பதைப் பார்த்து விட்டு அவர்களைத் தாண்டிப் போகும்போது நாம் உணரக் கூடிய குற்றவுணர்வை அவரும் அடைந்தார். வெஸ்டர்ன் யூனியன் அலுவலகத்தின் கடிகாரத்தின்படி, அப்போது ஐந்து பதினெட்டு. அவர் எக்ஸ்ப்ரஸ் ரயிலைப் பிடிக்க முடியலாம். சுழன்றபடி திறக்கும் கதவுகளருகே, சுழற்சியில் தன் புறம் திறப்பு வருவதற்காக அவர் நிற்கும்போது வெளியே மழை இன்னும் பெய்கிறதென்று கவனித்தார். அன்று பூராவும் மழை பெய்து கொண்டிருந்தது, மழை எவ்வளவுக்குத் தெருவின் இதர ஓசைகளை ஒலி பெருக்கிக் காட்டியது என்பதைக் கவனித்தார். வெளியே, மாடிஸன் அவென்யூவை நோக்கிக் கிழக்காக வேகமாக நடக்கத் தொடங்கினார். போக்குவரத்து தடைப்பட்டு அடைசலாக நின்றிருந்தது, கார் குழலொலிகள் தூரத்துக் குறுக்குத் தெருவில் அவசரமாக ஒலித்துக் கொண்டிருந்தன. நடைபாதையும் கூட்டமாக இருந்தது. தான் நாள் முடிவில் கட்டடத்திலிருந்து வெளியே வருவதை ஒரு கணம் பார்ப்பதால் என்ன பெற முடியும் என்று அவள் நினைத்திருப்பாள் என்று அவர் யோசித்தார். அப்போது, அவள் தன் பின்னே தொடர்கிறாளா என்று வியந்தார்.
நகரத்தில் நடக்கும்போது அரிதாகத்தான் நாம் திரும்பி, பின்னே பார்ப்போம். அந்தப் பழக்கம் ப்ளேக்கையும் கட்டுப்படுத்தியது. நடந்து போகும்போது ஒரு நிமிடம்- மடத்தனமாக- அவர் காது கொடுத்துக் கேட்டார், ஏதோ மழைக்கால மாலையின் முடிவில் நகரத்தில் சுற்றிலும் கேட்கும் ஒலிகள் நடுவே அவளுடைய காலடி ஓசையை அவரால் பிரித்து அறிந்து விட முடியும் என்பது போல. பிறகு அவர் கவனித்தார், தெருவின் மறுபுறம், அவருக்கு முன்னால் சற்றுத் தொலைவில் கட்டடங்களின் இடையே ஓர் இடைவெளி இருப்பதைப் பார்த்தார், அங்கு ஏதோ இடித்துத் தள்ளப்பட்டு, வேறேதோ அங்கு எழுப்பப்பட்டு வந்தது, ஆனால் அங்கு இரும்புக் கட்டுமானம் நடைபாதையின் வேலி உயரம்தான் எழுந்திருந்தது, பகலொளி அந்த இடைவெளி வழியே கொட்டி அடித்தது. இதற்கு எதிரே ப்ளேக் நின்றார், ஒரு கடையின் கண்ணாடி ஜன்னலுக்குள் நோக்கினார். அது ஓர் அலங்கரிப்பாளரின் அல்லது ஏலம் விடுபவரின் கடை. அந்த ஜன்னல் நண்பர்களுக்கு விருந்துபசாரம் செய்வோரின் முன்னறை போல அமைக்கப்பட்டிருந்தது. காஃபி மேஜை மீது கோப்பைகள் இருந்தன, பத்திரிகைகள் கிடந்தன, கண்ணாடி ஜாடிகளில் பூங்கொத்துகள் இருந்தன, ஆனால் பூக்கள் வாடிப் போயிருந்தன, கோப்பைகள் காலியாக இருந்தன, விருந்தாளிகள் யாரும் வந்திருக்கவில்லை. தடித்த கண்ணாடி முகப்பில், ப்ளேக் தன்னுடையதெளிவான பிம்பத்தையும், தெருவில் பின்னே கடந்து போகும் கூட்டத்தின் நிழல்கள் போன்ற பிம்பத்தையும் பார்த்தார். பிறகு அவளுடைய பிம்பத்தைக் கண்டார்- தனக்கு அத்தனை அருகே அவள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவள் அவருக்குப் பின்னே, ஓரடி அல்லது இரண்டடிதான் தள்ளி நின்றாள். அவர் திரும்பி அவளுக்கு என்ன வேண்டுமென்று அவளிடம் கேட்டிருக்கலாம், ஆனால் அவளை அங்கீகரிப்பதற்குப் பதில், கோணிக் கொண்டிருந்த அவள் முகத்தின் பிம்பத்திலிருந்து அவர் கூசி, விருட்டென்று விலகினார், தெருவோடு நடந்து போனார். அவள் அவருக்கு ஏதும் கெடுதல் விளைவிக்கக் கூடும்- அவரைக் கொல்ல நினைத்திருக்கக் கூடும்.
அவளுடைய பிம்பத்தைப் பார்த்ததும் திடீரென்று அவர் நகர்ந்ததால், அவருடைய தலைக் குல்லாயின் விளிம்பிலிருந்து தண்ணீர் கீழே கொட்டியதில், சிறிது அவருடைய கழுத்து வழியே உள்ளே ஓடியது. பயத்தால் வரும் வியர்வையைப் போல அது சகிக்க முடியாததாக இருந்தது. அப்புறம் முகத்தின் மீதும், கைகளின் மீதும் கொட்டும் மழைநீர், வடிதாரைகளிலிருந்தும், சாலையிலிருந்தும் மழையின் ஈரத்தால் வீசும் அவிசல் நாற்றம், அவருடைய கால்கள் காலணிக்குள்ளும் ஈரமாகத் தொடங்கி விட்டதை அறிந்து தனக்கு சளி பிடிக்கலாம் என்ற எண்ணம்- எல்லாம் மழையில் நடப்பதனால் எழும் அசௌகரியங்கள்- மொத்தமாக அவரைப் பின் தொடர்பவளின் அபாயத்தை உயர்த்திக் காட்டின, அவருடைய உடலின் தூலத்தன்மை பற்றியும், அவள் எத்தனை சுலபமாக அவரைக் காயப்படுத்தக் கூடும் என்பது பற்றியும் மோசமான ஓர் ஊக உணர்வைக் கொணர்ந்தன. மாடிஸன் அவென்யூவை அடைந்து விட்டால் தான் பாதுகாப்பைப் பெற முடியும் என்று உணர்ந்தார். தெரு மூலையில் அங்கு இரண்டு வாயில்கள் கொண்ட ஒரு அடுமனை இருந்தது, க்ராஸ்டௌன் தெருவின் வாயில் வழியே உள்ளே போனார், எந்தப் பயணியும் செய்வது போல ஒரு காஃபி வளைய இனிப்பு ரொட்டியை வாங்கினார், மாடிஸன் அவென்யு வாசல் வழியே வெளியேறினார். மாடிஸன் அவென்யுவில் நடக்கத் துவங்கிய போது, செய்தித்தாள்கள் விற்க அங்கு நிறுவப்பட்டிருந்த ஒரு கூண்டின் அருகில் அவள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்த்தார்.
அவள் சாமர்த்தியசாலி இல்லை. எளிதாக அவளிடமிருந்து தப்பித்து விடலாம். ஒரு டாக்ஸிக்குள் ஏறிக் கொண்டு மறு கதவு வழியே வெளியேறி விடலாம். ஒரு பொலீஸ்காரரிடம் பேசலாம். அவர் ஓடி விடலாம் – ஆனால் ஓடினால், அவள் திட்டமிட்டிருக்கிறாள் என்று அவர் ஊகிக்கிற வன்முறை தூண்டப்பட்டு நிஜமாகி விடக் கூடும். அவர் இப்போது நகரில் தனக்கு நன்கு தெரிந்த ஒரு பகுதியை நெருங்கி விட்டார், அங்கு தெருவின் தளத்திலும், தரையடியிலும் திசை தெரியாது குழப்பும் பாதைகள் உண்டு, வரிசையாக எலவேட்டர்கள் பல உண்டு, கூட்டமான கட்டடத்து முன் அரங்குகள் உண்டு, அங்கு ஒரு நபர் தன் பின் தொடர்பவரை எளிதில் தொலைத்து விடக் கூடும். இந்த எண்ணமும், காஃபி வளையத்திலிருந்து வீசிய வெப்பமான சர்க்கரை வாசனையும் அவருக்கு உற்சாகமூட்டின. கூட்டமான ஒரு தெருவில் தான் தாக்கப்படக் கூடும் என்று அச்சப்படுவது அபத்தமானது. அவள் முட்டாளானவள், தவறாக வழிகாட்டப்பட்டிருக்கிறாள், ஒருக்கால் தனியளாக உணர்கிறாளோ என்னவோ- அதெல்லாம் அவ்வளவாகத்தான் இருக்க முடியும். அவரென்ன, பொருட்படுத்தப்படத் தேவையில்லாதபடி சாதாரண மனிதர், அவரை அலுவலகத்திலிருந்து ரயில் நிலையம் வரை பின் தொடர்வதில் ஒரு பயனும் இல்லை. யாருக்கும் அவசியமான எந்த ரகசியமும் அவருக்குத் தெரியாது. பின் தொடர்பவர்கள், நீண்ட மேலங்கி அணிந்தவர்கள், ஈரமான சாலையோர நடைபாதைகள் ஆகியவற்றோடு தொடர்பு படுத்தி நாம் எண்ணக் கூடிய போர், அமைதி, போதை மருந்து விற்பனைப் பாதைகள், ஹைட்ரஜன் குண்டு, அல்லது வேறெந்த பன்னாட்டுச் சதி வேலைகள் ஆகியன எவற்றோடும் அவருடைய கைப்பெட்டியில் உள்ள அறிக்கைகள் சிறிதும் தொடர்பில்லாதவை. அப்போது முன்னால் ஆண்களுக்கான மதுக்கடை ஒன்றின் கதவைப் பார்த்தார். ஓ, இது மிக எளியது!
ஒரு கிப்ஸனைக் (காக்டெய்ல் பானம்) கொடுக்கச் சொல்லிக் கேட்டார், பார் மேஜையை ஒட்டி நின்ற இரண்டு மனிதர்கள் நடுவே புகுந்து போனார், ஜன்னல் வழியே பார்த்திருந்தாளானால் அவரை அவள் பார்க்க முடியாமல் போகட்டும் என்று. ரயிலில் ஏறுமுன் ஒரு பானத்தை அருந்தி விட முயலும் பயணிகளின் கூட்டம் அந்த மதுபானக் கடையில் நெரிந்தது. அவர்கள் தங்களுடைய ஆடைகளில் – மேலும் காலணிகளிலும், குடைகளிலும்- வெளியே இருந்த ஈரமான அந்தி நேரத்தின் அவிசல் நெடியை உள்ளே கொணர்ந்திருந்தனர், ஆனால் ப்ளேக் தன் கிப்ஸன் பானத்தை ருசித்ததும் இறுக்கம் குறைந்ததாக உணர்ந்தார், சுற்றிலும் பார்த்த போது அனேகமும் சாதாரணமான, அத்தனை இளமையாக இல்லாத முகங்கள், வரி வீதங்கள் பற்றியும், பொருள் விற்பனைக்கு யாரைப் பொறுப்பாகப் போடுவார்கள் என்பது பற்றியும் கவலை தோய்ந்தவை போலிருந்தவை, அதாவது அவர்கள் எதற்காகவாவது கவலைப்படுகிறவர்கள் என்றால். அவளுடைய பெயரை நினைவு கூர முயன்றார் – மிஸ் டெண்ட், மிஸ் பெண்ட், மிஸ் லெண்ட்- அதைத் தன்னால் நினைவு கூர முடியவில்லை என்பது அவருக்கு வியப்பூட்டியது, இத்தனைக்கும் தன் நினைவுகளின் விரிவு, மேலும் ஆழம் பற்றியும், அவற்றைக் காக்கும் தன் நினைவுத்திறனின் வலு பற்றியும் அவருக்குப் பெருமிதம் உண்டு, அவளுடைய நினைவோ ஆறு மாதங்களுக்கு முந்தையதுதான்.
அவர் ஒரு காரியதரிசியை நிர்வாகத்திடம் கோரி இருந்தார்- நிர்வாகம் ஒரு பின்மாலையில் அவளை அனுப்பி இருந்தது. வயதில் அவள் இருபதுகளில் இருந்திருக்கலாம் – மெலிந்தவளாகவும், கூச்சப்படுபவளாகவும் இருந்த அவள், சிறிது கருத்த தோற்றம் கொண்டிருந்தாள். அவளுடைய உடை எளியதாக இருந்தது, உரு கவனிக்கத்தக்கதாக இல்லை, அவளுடைய காலுறைகளில் ஒன்று கோணியிருந்தது, ஆனால் அவளுடைய குரல் மென்மையானதாக இருந்தது, அவளை வேலையில் அமர்த்திப் பார்க்க அவர் சம்மதித்தார். சில நாட்கள் அங்கு பணி புரிந்தவள், தான் ஒரு மருத்துவ மனையில் எட்டு மாதங்கள் இருந்ததாகவும், அதற்குப் பிறகு வேலை கிடைப்பது கடினமாக இருந்ததென்றும் தெரிவித்தாள், அவர் அவளுக்கு வேலை வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தாள். அவளுடைய தலை முடி கருப்பாக இருந்தது, கண்களும் கருமை; அவருக்கு அவளுடைய கருமை ஒரு மகிழ்வான அனுபவமாக இருந்தது. அவளைப் பற்றி மேலும் அவருக்குத் தெரிய வந்தபோது, அவள் மிகையாக உணர்ச்சி வசப்படுகிறவளென்றும், அதன் விளைவாக அவள் தனிமைப்பட்டுப் போனாளென்றும் அவருக்குத் தோன்றியது. அவரிடம் அவள் ஒரு நாள் பேசுகையில், அவர் வாழ்க்கை எப்படி இருக்குமென்று- நிறைய நட்புகள், பணம், அன்பு நிறைந்த பெரிய குடும்பம் என்று இருப்பதாக– தான் கற்பனை செய்ததாக அவள் சொன்னபோது, இழப்பு என்பதைப் பற்றிய வினோதமான உணர்வை அதில் காணமுடிந்ததாக அவர் எண்ணியிருந்தார். உலகின் இதர மனிதர்களின் வாழ்க்கை எல்லாம் அவை இருந்தவற்றை விடப் பிரகாசமாக இருப்பதாக அவள் கற்பனை செய்கிறாளென்று அவருக்குத் தோன்றியது. ஒரு முறை அவருடைய மேஜையில் ஒரு ரோஜாப்பூவை அவள் வைத்திருந்தாள், அவர் அதை குப்பைக் கூடையில் போட்டிருந்தார். “எனக்கு ரோஜாப் பூக்கள் பிடிக்காது,” என்று அவளிடம் சொன்னார்.
அவளுக்கு வேலைத் திறமை இருந்தது, நேரம் தப்பாது வந்தாள், நல்ல தட்டச்சாளியாக இருந்தாள், அவளிடம் அவர் ஒரே ஒரு விஷயத்தில்தான் குறை காண முடிந்தது – அவளுடைய கையெழுத்தில். அவளுடைய தோற்றத்தோடு அவளுடைய சீரற்ற கையெழுத்தை அவரால் பொருத்திப் பார்க்கவியலவில்லை. அவள் வட்டமான சாய்வெழுத்துகளில் எழுதுவாள் என்று எதிர்பார்த்திருந்தார், அவளுடைய கையெழுத்தில் ஆங்காங்கே அப்படிச் சில தடயங்கள் இருந்தன, ஆனால் அவை நேர்த்தியற்ற அச்சு வடிவ எழுத்துகளோடு கலந்து இருந்தன. அவளுடைய கையெழுத்திலிருந்து அவருக்குத் தோன்றிய ஒரு யோசனை, அவள் ஏதோ ஆழ்ந்த உள் உணர்வு(ப் )– ஏதோ உணர்ச்சி (ப்)- போராட்டத்திற்குப் பலியானவள், அதன் கடும் தாக்கம் அவள் காகிதத்தில் கொணரும் வரிகளின் தொடர்ச்சியைக் குலைத்திருக்கிறது. அவரிடம் அவள் மூன்று வாரங்கள் – அதற்கு மேல் இல்லை- பணி புரிந்தபின், ஒரு நாள் அவர்கள் பின்மாலையில் நேரம் தாழ்த்தித் தங்கியபோது, வேலை முடிந்த பிறகு, ஏதும் பானம் அருந்திவிட்டுப் போகலாமா என்று அவர் கேட்டார். “உங்களுக்கு நிஜமாகவே ஏதும் பானம் அருந்த வேணுமானால்,” என்றாள் அவள், “என் வீட்டில் விஸ்கி இருக்கிறது.”
அவள் வசித்த அறை துணிமணிகள் வைக்க உபயோகிக்கப்படும் சிறு அறை போல இருந்தது. அங்கு முறையான முழு அலுவலக உடுப்புகள் வைக்கும் பெட்டிகளும், குல்லாய்களின் பெட்டிகளும் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. அந்த அறையில் ஒரு கட்டில், ஒரு உடுப்பலமாரி, அவர் அமர்ந்திருந்த நாற்காலி ஆகியனவை போட்டிருக்கக் கூட இடம் போதாததாக இருந்தது. இருந்தாலும் ஒரு நிமிர்ந்த பியானோ அங்கே ஒரு சுவரருகே இருந்தது. அதன் ஏதண்டையில் பீதோவனின் சொனாட்டாக்கள் கொண்ட புத்தகமொன்று நின்றது. அவள் அவருக்கு ஒரு கோப்பையில் மதுபானம் கொடுத்தாள், பிறகு தனக்கு வசதியான உடைக்கு மாற்றிக் கொண்டு வருவதாகச் சொன்னாள். அவர் அப்படியே செய்யுமாறு அவளை உந்தினார்: எப்படியும் அதற்காகத்தான் அவர் அங்கே வந்திருந்தார். அவருக்கு ஏதேனும் மனத் தடைகள் இருந்திருந்தால், அவை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளைப் பற்றித்தான் இருந்திருக்கும். அவளுடைய ஒச்சம், அவள் கண்ணோட்டத்திலிருந்த இழப்பு பற்றிய உணர்வு, அவை அவருக்கு எந்தப் பின்விளைவும் இல்லாது பாதுகாக்கும் என்ற எண்ணம் அவரிடம் இருந்தது. அவருக்குத் தெரிந்திருந்த பெண்களில் பெரும்பாலார் அவர்களுக்கு சுய நம்பிக்கை இல்லாதிருந்ததால்தான் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
ஒரு மணி நேரம் போல ஆன பிறகு, அவர் தன் ஆடைகளை மறுபடி அணிந்தபோது, அவள் அழுது கொண்டிருந்தாள். அவரோ தன்னிறைவு பெற்றவராக, கதகதப்பும் சிறிது தூக்கக் கலக்கமும் கொண்டிருந்ததால் அவளுடைய கண்ணீரைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. உடுத்திக் கொண்டிருந்தபோது, துணி அலமாரியில் வீட்டைச் சுத்தம் செய்யும் பெண்ணுக்கு அவள் எழுதி வைத்திருந்த ஒரு குறிப்பைப் பார்த்தார். அங்கு குளியலறையிலிருந்து வந்த வெளிச்சம் மட்டுமே இருந்தது- அதன் கதவு திறந்திருந்தது-இந்த அரை ஒளியில் அந்தக் குறிப்பில் கோரமாகக் கிறுக்கப்பட்டிருந்த எழுத்துகள் அவளுக்குப் பொருந்தாத தவறாகத் தெரிந்தன, வேறு யாரோ மிகைப் பருமையுள்ள பெண்ணொருத்தியின் கையெழுத்தாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. அடுத்த நாள், அவர் செய்யக் கூடிய ஒரே புத்தியுள்ள செயல் என்று அவருக்குத் தோன்றியதைச் செய்தார். அவள் பகலுணவுக்குப் போயிருக்கையில், ஆளெடுப்பு இலாகாவைக் கூப்பிட்டு, அவளைப் பணி நீக்கம் செய்யச் சொன்னார். பிறகு அவர் மீதமுள்ள அரை நாளுக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு போய் விட்டார். சில நாட்கள் கழிந்த பின் அவள் அந்த அலுவலகத்துக்கு வந்து அவரைப் பார்க்க வேண்டும் என்று தெரிவித்தாள். வரவேற்பாளியிடம் அவளை உள்ளே அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டார். பிறகு இன்று காலை வரை அவளை அவர் பார்க்கவில்லை.
ப்ளேக் இரண்டாவது கிப்ஸன் பானத்தை அருந்தினார், எக்ஸ்ப்ரஸ் ரயிலைத் தவற விட்டு விட்டதைக் கடிகாரத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டார். அவர் லோகல் ரயிலைப் பிடிக்கலாம்- ஐந்து நாற்பத்தி எட்டு வண்டி. அந்த மதுக்கடையை விட்டு நீங்கியபோது வானம் இன்னும் வெளிச்சமாக இருந்தது; ஆனால் மழை பெய்து கொண்டிருந்தது. தெருவில் மேலும் கீழும் கவனமாகப் பார்த்தார், அந்த அப்பாவிப் பெண் போய் விட்டாள் என்று அறிந்தார். ரயில் நிலையத்துக்கு நடக்கும்போது, ஓரிரு முறைகள் தன் தோளுக்குப் பின்னே திரும்பி நோக்கினார், ஆனால் தனக்கு ஆபத்தேதும் இல்லை என்று உணர்ந்தார். அவர் இன்னும் சமநிலைக்கு வந்திருக்கவில்லை என்று அவருக்குத் தெரிந்தது, ஏனெனில் அவர் அந்த காஃபி வளையத்தை மதுக்கடையில் விட்டு விட்டார், அவரோ அப்படி பொருட்களை மறக்கிற நபர் இல்லை. இந்த நினைவு மறதி அவரைத் துன்புறுத்தியது.
ஒரு செய்தித்தாளை வாங்கினார். அவர் அந்த ரயிலில் ஏறியபோது அது பாதிதான் நிரம்பி இருந்தது, ஆற்றுப் பக்கம் ஒரு இருக்கையைப் பிடித்தார், தன் மழை அங்கியைக் கழற்றினார். அவர் ஒரு மெலிதான மனிதர், பழுப்பு நிற முடி கொண்டவர்- அவரது சாம்பல் நிறக் கண்களிலோ, அல்லது வெளிறிய நிறத்திலோ அவருடைய ரசாபாசமான விருப்பங்களை நீங்கள் ஊகிக்க முடிந்தாலொழிய, மற்ற எல்லா விதங்களிலும் சாதாரணமானவர், அவர் அணிந்த உடுப்புகளும் – நம் எல்லாருடையதும் போலவே இருந்தன- ஸம்ப்சுவரி சட்டங்கள் நடைமுறையில் இருந்ததாக அவர் ஏற்றுக் கொண்டாற்போல இருந்தன. அவருடைய மழை அங்கி காளான் போல வெளுத்த, மஞ்சள் பழுப்பு நிறமாக இருந்தது. அவரது தலைக் குல்லாய் பழுப்பு; அவரது அலுவலக ஆடையும் அதே நிற சூட். அவரது கழுத்துப் பட்டியில் பளீரிட்ட சில நிறக்கோடுகளைத் தவிர அவரது ஆடைகளில் நிறமே இல்லாதிருந்தது கவனமாகத் திட்டமிடப்பட்டதாக, பாதுகாப்பு தருவதாகத் தெரிந்தது.
அவர் அண்டை வீட்டுக்காரர்கள் யாரும் ரயிலில் இருக்கிறார்களா என்று சுற்றுமுற்றிலும் பார்த்தார். திருமதி.காம்ப்டன் அவருக்கு முன்னால் பல இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார். அவர் புன்னகைத்தார், ஆனால் அது சட்டென்று மறைந்த ஒன்று. துரிதமாகவும், மோசமாகவும் அது மடிந்தது. மிஸ்டர் வாட்கின்ஸ் ப்ளேக்கிற்கு நேர் எதிரே இருந்தார். மிஸ்டர் வாட்கின்ஸுக்கு முடிவெட்டிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது, அவர் சம்ச்சுவரி சட்டங்களை மீறி இருந்தார்; ஒரு கார்டுராய் மேலங்கி அணிந்திருந்தார். அவரும் ப்ளேக்கும் முன்பு சண்டை போட்டுக் கொண்டிருந்தனர், அதனால் பேசிக் கொள்ளவில்லை.
திருமதி காம்ப்டனின் புன்னகை அத்தனை சீக்கிரமாக இறந்தது ப்ளேக்கைப் பாதிக்கவே இல்லை. ப்ளேக் குடும்பத்திற்கு அடுத்த வீட்டில் காம்ப்டன் குடும்பம் இருந்தது, திருமதி காம்ப்டனுக்கு தன் வேலையை மட்டும் கவனித்துக் கொண்டு இருப்பதன் முக்கியத்துவம் புரிந்ததே இல்லை. லூயீஸ் ப்ளேக் தன் கவலைகளை திருமதி காம்ப்டனிடம் எடுத்துப் போனார், ப்ளேக்குக்கு அது தெரியும், லூயீஸின் அழுகைப் படலங்களை நிறுத்துவதற்குப் பதிலாக, திருமதி காம்ப்டன் தான் ஏதோ ரகசியங்களைக் கேட்டுக் கொண்டு மன அமைதி கொடுக்கும் மதபோதகர் போல என்று நினைத்துக் கொண்டு விட்டார், ப்ளேக் தம்பதியரின் அந்தரங்க விவகாரங்களில் தலையிடத் தொடங்கினார். அனேகமாக ப்ளேக் தம்பதியரின் சமீபத்திய சண்டை பற்றிய விவரணை அவரிடம் ஏற்கனவே போயிருக்க வேண்டும். ப்ளேக் ஒரு தினம் தாமதமாக வீட்டுக்கு வந்திருந்தார், ஏகமாக வேலை செய்து விட்டுக் களைத்துப் போய் வந்தால், லூயீஸ் இரவுணவுக்கு எந்த ஏற்பாடும் செய்திருக்கவில்லை என்று காண்கிறார். மாறாக ஜின் பானப் புட்டி பாதிக்கு மேல் காலியாகி இருந்தது, வீட்டின் மது அலமாரியிலிருந்து அவர் எடுத்த முதல் மூன்று கோப்பைகளிலும் உதட்டுச் சாயத்தின் மசை இருந்தது. அவர் சமையலறைக்குள் போனார். லூயீஸ் பின் தொடர்ந்தார், அவர் அவளிடம் சுட்டிக் காட்டினார், அன்று தேதி ஐந்து. சமையலறை நாள்காட்டியில் அந்தத் தேதியைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்தார். “பன்னிரண்டாம் தேதி அன்று ஒரு வாரம் ஆகும். இரண்டு வாரம் என்றால் பத்தொன்பதாம் தேதி,” என்றார். பத்தொன்பதாம் தேதியைச் சுற்றி ஒரு வட்டம் வரைந்தார். “நான் உன்னோடு இரண்டு வாரங்களுக்குப் பேச மாட்டேன்,” என்றிருந்தார் அவர். “அது பத்தொன்பதாம் தேதி.” அவள் அழுதிருந்தாள், தன் எதிர்ப்பைத் தெரிவித்தாள், ஆனால் தன் மன்றாடல்கள் மூலம் அவளால் அவரைச் சிறிதும் அசைக்க முடியாமல் ஆகி எட்டு அல்லது பத்து வருடங்கள் ஆகி விட்டன. லூயீஸுக்கு வயதாகி இருந்தது. இப்போது அவளுடைய முகத்திலிருந்த பள்ளமான கோடுகள் மாற்றப்பட முடியாதவை, மாலைச் செய்தித்தாளைப் படிக்கவென, மூக்குக் கண்ணாடியை அவள் போட்டுக் கொள்ளும்போது, சகிக்க முடியாத வேற்று நபர் போல அவருக்குத் தெரிந்தாள். அவளிடம் இருந்த ஒரே சாதகமான விஷயமான உடலழகும் போய் விட்டிருந்தது. அவர்களுடைய அறைகளுக்கிடையே இருந்த வாயிலில் புத்தக அலமாரி ஒன்றை ப்ளேக் அமைத்து ஒன்பது வருடங்களாகி இருந்தன. அந்தப் புத்தக அலமாரியில் பூட்டப்படக் கூடிய மரக்கதவுகளைப் பொருத்தி இருந்தார், ஏனெனில் குழந்தைகள் அவருடைய புத்தகங்களைப் பார்ப்பதை அவர் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரிடையே இருந்த விலக்கம் ப்ளேக்குக்கு குறிப்பிடத்தக்கதாகத் தெரியவில்லை. அவர் தன் மனைவியுடன் சண்டையிட்டிருந்தார், ஆனால் பெண்ணுக்குப் பிறந்த ஆண்களில் ஒருவர் மற்றவர் செய்வதுதான் அது. அது மனித இயல்பு. மனிதர்களின் குரல்கள் கேட்கும் எந்த இடத்திலும்- ஒரு ஹோட்டலின் புறவெளி, காற்று புழங்கவென இருக்கும் பெரும் குழாய்கள், கோடையில் ஒரு தெரு- நீங்கள் கடும் சொற்களைக் கேட்க முடியும்.
ப்ளேக்குக்கும் மிஸ்டர் வாட்கிஸுக்குமிடையே இருந்த பிணக்கும் ப்ளேக்கின் குடும்பம் பற்றியதுதான், ஆனால் திருமதி காம்ப்டனின் மறையும் சிரிப்பின் பின்னே இருந்த தொல்லை பிடித்த விஷயங்கள் அளவு மோசமானதோ அல்லது தீவிரமானதோ இல்லை. வாட்கின்ஸ் குடும்பம் வாடகைக்கு வீடெடுத்திருந்தது. ஸம்ப்சுவரி சட்டங்களை தினந்தோறும் மிஸ்டர் வாட்கின்ஸ் மீறிக் கொண்டிருந்தார்- எட்டு பதினான்கு (ரயில் வண்டிக்கு) ஒரு முறை ஹவாய் செருப்புகளோடு போனார். அவர் செய்த வேலையோ வணிக ஓவியம் வரைதல். ப்ளேக்கின் மூத்த பையன் – சார்லிக்கு பதினான்கு வயது – வாட்கின்ஸ்களின் மகனோடு நட்பு இருந்தது. வாட்கின்ஸ் குடும்பம் வசித்த அலங்கோலமான வாடகை வீட்டில் அவன் நிறைய நேரத்தைச் செலவிட்டான். அவனுடைய நடத்தையையும், நேர்த்தியான குணத்தையும் அது பாதித்தது. பிறகு வாட்கின்ஸ் குடும்பத்தோடு சாப்பிடும் பழக்கமும் அவனுக்கு ஏற்பட்டது. சனிக்கிழமை இரவுகளில் அங்கேயே தங்க ஆரம்பித்தான். தன் உடைமைகளில் பெரும்பாலானவற்றை அந்த வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டு, வாரத்தில் பாதி இரவுகள் அங்கே செலவழிக்க ஆரம்பித்தான். அப்போது ப்ளேக் நடவடிக்கை எடுக்க வேண்டி வந்தது. சார்லியிடம் பேசாமல், மிஸ்டர் வாட்கின்ஸிடம் பேசினார். அப்போது அவசியம் கருதிச் சிலவற்றைச் சொல்ல வேண்டி வந்தது அவை விமர்சனமாக அமைந்திருந்தன. மிஸ்டர் வாட்கின்ஸின் நீண்ட அழுக்கான தலைமுடியும், கார்டுராய் மேலங்கியும் தான் சொன்னவை சரி என்று ப்ளேக்குக்கு உறுதி செய்திருந்தன.
திருமதி காம்ப்டனின் தேயும் புன்னகையோ, மிஸ்டர் வாட்கின்ஸின் அழுக்கான தலைமுடியோ, தரையடியில் ஆழத்தில் நின்ற ஐந்து நாற்பத்தி எட்டு வண்டியில், சௌகரியமற்ற ஒரு இருக்கையில் அமர்ந்து ஓய்வு பெறும்போது ப்ளேக்குக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைச் சிறிதும் குறைக்கவில்லை. அந்த ரயில்பெட்டி பழையது, அங்கு நிலவிய வாடை, குண்டுவெடிப்பிலிருந்து காக்கும் தரையடி அறையில் குடும்பங்களெல்லாம் இரவு முழுதும் செலவழித்திருந்தால் அங்கு நிலவும் வாடையை ஒத்திருந்தது. பெட்டியின் மேல் கூரையிலிருந்து அவர்களின் தலைகளின் மீதும், தோள்களின் மீதும் விழுந்த ஒளி மங்கலாக இருந்தது. வேறேதோ பயணத்தில் படிந்த அழுக்குடன் மழை நீர் கலந்ததால் திட்டுத் திட்டாகப் படிந்த அழுக்குடன் ஜன்னல் கண்ணாடி. ஒவ்வொரு செய்தித்தாளின் பின்னிருந்தும் சிறு மேகங்களாக எழுந்த பைப் மற்றும் சிகரெட் புகையின் நெடி. ஆனால் இந்தக் காட்சி ப்ளேக்குக்கு தான் பாதுகாப்பான பாதையில் இருக்கிறோம் என்ற உணர்வைக் கொடுத்தது, ஆபத்துடன் அவருக்கு ஏற்பட்ட சிறு உரசலுக்குப் பிறகு திருமதி காம்ப்டன் மற்றும் மிஸ்டர் வாட்கின்ஸின்பால் கூட அவர் சிறிது நட்புணர்வைப் பெற்றிருந்தார்.
தரையடியிலிருந்து பயணித்து அந்த ரயில் மேல் மட்டத்துக்கு வந்தபோது அது மெலிதான பகலொளியைச் சந்தித்தது. அது கடந்த நகரமும் அதன் வறிய குடியிருப்புப் பகுதிகளும் ப்ளேகுக்கு தன்னைத் துரத்தி வந்த பெண்ணை இலேசாக நினைவூட்டின. அவளைப் பற்றி மேலும் ஊகங்களில் இறங்குவதையோ, அவளுக்காக கழிவிரக்கம் கொள்வதையோ தவிர்க்க அவர் மாலைச் செய்தித்தாளின் மீது கவனம் செலுத்தினார். விழிக் கோடியால் வண்டி கடக்கும் நிலப்பரப்பை அவரால் பார்க்க முடிந்தது. அது தொழில்மயமான பகுதி, அந்த நேரத்தில் சோகமாகக் காட்சியளித்தது. எந்திரங்களின் கொட்டகைகளும், பொருட்களின் கிட்டங்கிகளும் இருந்தன, அவற்றுக்கு மேற்புறம் மேகங்களில் சிறிது இடைவெளியை அவர் பார்த்தார்- அவற்றூடே மஞ்சள் ஒளியின் சில்லு. “மிஸ்டர் ப்ளேக்,” யாரோ அழைத்தார். அவர் மேல் நோக்கினார். அவள்தான். ஓட்டத்தில் அசைந்தாடும் வண்டியில் கீழே விழாமல் இருக்க முன்னிருக்கையின் பின் பக்கம் ஒரு கையால் பிடித்தபடி நின்றிருந்தாள். அவளுடைய பெயரை அப்போது அவர் நினைவு கொண்டார் – மிஸ். டென்ட். “ஹெல்லோ, மிஸ். டென்ட்,” என்றார்.
“நான் இங்கே உட்கார்வதில் உங்களுக்கு ஆட்சேபம் உண்டா?”
“ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.”
“நன்றி. அன்பான செயலைச் செய்தீர்கள். இப்படி உங்களைத் தொல்லை செய்ய நான் விரும்பி இருக்கவில்லை. எனக்கு இதில் விருப்பமில்லைதான்…”அவளைப் பார்த்ததும் அவர் அச்சம் கொண்டிருந்தார், ஆனால் அவளுடைய மருண்ட குரல் அவருக்குத் துரிதமாக தைரியத்தைக் கொடுத்தது. தன் பிருஷ்டத்தை நகர்த்திக் கொண்டார்- பயனற்ற ஆனால் இயல்பான வரவேற்கும் சைகை- அவள் உட்கார்ந்து கொண்டாள். அவள் பெருமூச்சு விட்டாள். அவளுடைய ஈரமான துணிகளை அவரால் முகர முடிந்தது. கருநிறத்தில் உருவற்ற ஒரு குல்லாய் அணிந்திருந்தாள், அதில் ஏதோ மகுடச் சின்னம் பின்னப்பட்டிருந்தது. அவளுடைய மேலங்கி மெல்லிய துணியாலானது என்று அவர் கவனித்தார், அவள் கையுறைகள் அணிந்திருந்தாள், ஒரு பெரிய கைப்பை வைத்திருந்தாள்.
“இந்தத் திக்கில்தான் இப்போது வசிக்கிறீர்களா, மிஸ் டென்ட்?”
“இல்லை.”
அவள் தன் கைப்பையைத் திறந்து ஒரு கைக்குட்டையைத் தேடினாள். அவள் அழத் தொடங்கி இருந்தாள். அந்தப் பெட்டியில் வேறு யாராவது இங்கு நோக்குகிறார்களா என்று திரும்பிப் பார்த்தார், ஆனால் யாரும் பார்க்கவில்லை. மாலை ரயிலில் ஆயிரம் பயணிகளுடன் இதே போல அவர் முன்பு உட்கார்ந்திருக்கிறார். அவர்களின் உடைகளை, அவர்களின் கையுறைகளில் இருந்த துளைகளை அவர் கவனித்திருந்தார்; அவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்து ஏதும் முணுமுணுத்தால் அவர்களின் கவலைகள் என்னவாக இருக்கும் என்று வியந்திருக்கிறார். தன் பார்வையைச் செய்தித்தாளில் ஆழ்த்து முன் அனேகமாக அவர்கள் அனைவரையும் அவர் வகைப்படுத்தி இருந்தார். பணம் படைத்தவர், ஏழை, புத்திசாலிகள் அல்லது மந்தமானவர்கள், அண்டைப் புறத்தார் அல்லது வேற்றார்கள் என்று, ஆனால் அந்த ஆயிரர்களில் ஒருவர் கூட இப்படி அழுததில்லை. அவள் அந்தக் கைப்பையைத் திறந்ததும், அவருக்கு அவளுடைய வாசனைத் தைலத்தின் நினைவு வந்தது. அவளுடைய வீட்டுக்கு அவர் சென்றிருந்த இரவு, அந்தத் தைலத்தின் வாசனை அவருடைய தோலில் படிந்திருந்தது.
“நான் ரொம்ப நோய்ப்பட்டிருந்தேன்,” என்றாள். “இரண்டு வாரங்களில் படுக்கையை விட்டு நான் எழுந்திருந்தது இன்றைக்குத்தான். நான் மோசமாக நோய்ப்பட்டிருந்தேன்.”
“நீங்க நோய்ப்பட்டிருந்தது பற்றிக் கேட்க எனக்கு வருத்தமாயிருக்கு, மிஸ் டென்ட்,” மிஸ்டர் வாட்கின்ஸுக்கும், திருமதி காம்ப்டனுக்கும் கேட்கக் கூடிய அளவு உரத்த குரலில் அவர் சொன்னார். “இப்ப எங்க வேலை செய்றீங்க?”
“என்னது?”
“இப்ப எங்க வேலை செய்றீங்க?”
“ஓ, என்னைச் சிரிக்கச் சொல்றீங்களா?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
“எனக்குப் புரியல்லை.”
“நீங்க அவங்க மனசில விஷத்தைக் கலந்துட்டீங்க.”
அவர் தன் முதுகை நிமிர்த்திக் கொண்டு தோள்களை இறுக்கிக் கொண்டார். அந்த இழுப்பான அசைவுகள் ஒரு சிறு – ஆனால் நம்பிக்கையிழந்த – விருப்பத்தை, அந்த இடத்தைத் தவிர வேறெங்காவது இருக்கலாமே என்ற ஆசையைக் காட்டின. அவள் தொல்லை கொடுப்பவள். அவர் நீண்ட மூச்சு இழுத்தார். அந்த அரை ஒளியில் பாதி நிரம்பியிருந்த பெட்டியை ஆழ்ந்த உணர்ச்சியோடு பார்த்துக் கொண்டு, இந்த உலகில் தொல்லை அதிகம் இல்லை, இதுதான் எதார்த்தம் என்று உறுதிப்படுத்திக் கொண்டார். அவள் கனமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்ததும், மழையில் நனைந்த அவளுடைய மேலங்கியின் வாடையும் அவர் கவனித்திருந்தவை. ரயில் நின்றது. ஒரு கிருஸ்தவ ஐயையும், ஓவரால் உடைகள் அணிந்த ஆணும் கீழே இறங்கிப் போனார்கள். ரயில் மறுபடி கிளம்பியதும், ப்ளேக் தன் குல்லாயை எடுத்து அணிந்தார், மழை மேலங்கிக்குக் கையெடுத்தார்.
“எங்கே போறீங்க?” என்றாள் அவள்.
“நான் அடுத்த பெட்டிக்குப் போகிறேன்.”
“ஓ,கூடாது,” என்றாள். “கூடாது, கூடாது, கூடாது.” தன் வெளுத்த முகத்தை அவருடைய காதருகே வைத்தாள், அவளுடைய உஷ்ணமான மூச்சுக் காற்றை அவர் தன் கன்னத்தில் உணர்ந்தார். “அதைச் செய்யாதீங்க,” அவள் கிசுகிசுத்தாள். “எங்கிட்டேருந்து தப்பிக்க முயற்சி செய்யாதீங்க. என் கிட்டே ஒரு கைத் துப்பாக்கி இருக்கு, நான் உங்களைக் கொல்ல வேண்டி வரும், எனக்கு அதுல விருப்பம் இல்லை. உங்களோட பேசத்தான் நான் விரும்பறேன். நகராதீங்க, இல்லை நான் உங்களைக் கொல்வேன். செய்யாதீங்க, வேண்டாம், வேண்டாம்.”
ப்ளேக் சடாரென்று தன் இருக்கையில் பின்னே தள்ளி அமர்ந்தார். எழுந்து நின்று உதவி கேட்டுக் கத்த நினைத்தால் கூட அவரால் அதைச் செய்ய முடிந்திராது. அவருடைய நாக்கு அதன் அளவைப் போல இரட்டை மடங்குக்கு உப்பி இருந்தது, அதை நகர்த்த அவர் முயன்றபோது, அது அவருடைய உள்வாயின் மேல் பக்கத்தில் ஒட்டிக் கொண்டது. அவருடைய கால்கள் தொய்ந்தன. அப்போதைக்கு அவரால் செய்ய நினைக்க முடிந்ததெல்லாம், அவருடைய இதயம் தாறுமாறாக அடித்துக் கொள்வதை நிறுத்தக் காத்திருப்பதுதான், அப்படி ஆனபிறகு அவர் தனக்கு உள்ள ஆபத்தின் அளவைக் கணிக்க முடியலாம். அவள் சிறிது பக்கவாட்டில் திரும்பியபடி அமர்ந்திருந்தாள், அவளுடைய கைப்பையில் அந்த பிஸ்டல் இருந்தது, அவருடைய வயிற்றை நோக்கி குறி வைக்கப்பட்டிருந்தது.
“இப்ப என்னைப் புரிஞ்சுகிட்டீங்கதானே, இல்லையா?” அவள் சொன்னாள். “நான் முனைஞ்சிருக்கேன்னு புரிஞ்சுகிட்டீங்களா?” அவர் பேச முயன்றார், ஆனால் இன்னமும் மௌனியாகத்தான் இருந்தார். தலையை அசைத்து ஆமோதிப்பு தெரிவித்தார். “இப்ப கொஞ்ச நேரம் அமைதியா உட்கார்ந்திருப்போம்,” என்றாள். “எனக்கு அவ்வளவு கிளர்ச்சியா இருந்ததால, என் எண்ணமெல்லாம் குழம்பிப் போச்சு. கொஞ்ச நேரம் அமைதியா உட்காருவோம், என் யோசனைகள் ஒரு ஒழுங்குக்கு வரட்டும்.”
உதவி வரும், ப்ளேக் நினைத்தார். இன்னும் சில நிமிஷங்கள்தானாகும். யாராவது அவருடைய முகத்தில் இருக்கிற பாவனையை, அவள் அமர்ந்திருக்கிற விசித்திர தோரணையைப் பார்த்து குறுக்கிட வருவார்கள், அதனால எல்லாம் முடிஞ்சு போயிடும். யாராவது தன்னோட சிக்கலைப் பார்க்கிற வரைக்கும் அவர் பொறுத்திருக்க வேண்டும். ஜன்னல் வழியே ஆற்றையும், வானத்தையும் பார்த்தார். மழை மேகங்கள் ஷட்டர் போல உருண்டு இறங்கிக் கொண்டிருந்தன, அவர் பார்த்திருக்கையிலேயே தொலைவானில் ஓர் ஆரஞ்சு ஒளி பிரகாசமாகியது. அதன் பிரகாசம் பெருகி – அது நகர்வதை அவரால் பார்க்க முடிந்தது- அலைகள் மேலே பரவியது, நதியின் கரைகளை மங்கிய நெருப்பொளியால் வருடிப் போயிற்று. பிறகு அது அணைக்கப்பட்டது. உதவி ஒரு நிமிஷத்தில் வந்து விடும், அவர் எண்ணினார். அவர்கள் நிற்கும் முன்னரே உதவி வந்து விடும்; ஆனால் அந்த ரயில் நின்றது, சிலர் வந்தனர், போயினர், ப்ளேக் இன்னும் உயிருடன் இருந்தார், அந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு அடிமையாய். உதவி வராமல் போகலாம் என்ற சாத்தியப்பாட்டை அவர் எண்ணவும் தயாராக இல்லை. தன்னுடைய சிக்கல் கவனிக்கப்படாமல் போகலாம் என்பதன் சாத்தியப்பாடு, திருமதி காம்ப்டன் ஓர் ஏழை உறவினரை அவர் இரவுச் சாப்பாட்டுக்கு ஷேடி ஹில்லுக்கு அழைத்துப் போகிறார் என்று ஊகிக்கக் கூடும், என்பதெல்லாம் அவர் பின்னர் யோசிப்பார். அப்போது அவர் வாயில் எச்சில் மறுபடி ஊறியது, அவரால் பேச முடிந்தது.
“மிஸ். டென்ட்?”
“ஆ.”
“உங்களுக்கு என்ன வேணும்?”
“உங்களோட பேசணும்.”
“நீங்க என்னோட ஆஃபிசுக்கு வரலாமே.”
“ஓ, முடியாது. இரண்டு வாரம் தினம் அங்கேதான் போனேன்.”
“நீங்க ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கலாம்.”
“இல்லை,” என்றாள். “நாம இங்கேயே பேசலாம்னு நான் நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன், அதை தபால்லெ அனுப்ப முடியல்லை, நான் அத்தனை நோய்ப்பட்டிருந்தேன். என்னோட எல்லா சிந்தனைகளையும் அதில் எழுதியிருக்கேன். எனக்குப் பயணம் போகப் பிடிக்கும். எனக்கு ரயில்களைப் பிடிக்கும். என்னோட பிரச்சினைகள்லெ ஒண்ணு, இப்படிப் பயணம் போகறது எனக்குக் கட்டுப்படியாகாது. நீங்க இங்கே வெளியில இருக்கிற காட்சியை எல்லாம் தினம் ராத்திரி பார்க்கிறபடி இருக்கும், அதனாலெ அதைக் கவனிக்காம விடுவீங்கன்னு இருக்கலாம். ஆனா நோய்ப்பட்டுப் படுக்கைல ரொம்ப காலம் இருந்த ஒருத்தருக்கு இதெல்லாம் ரொம்ப ரசிக்கும்படி இருக்கும். அவங்க சொல்றாங்க அவர் இந்த ஆற்றுலயோ, மலைகள்லேயோ இல்லைன்னு, ஆனா நான் நினைக்கிறேன், அவர் இருக்கார். ‘எங்கே ஞானம் கண்டுபிடிக்கப்படும்,” அது சொல்றது. “புரிதல் இருக்கிற இடம் எங்கே உள்ளது? ஆழம் சொன்னது, அது என்னிடம் இல்லை; கடல் சொன்னது அது என்னிடம் இல்லை. அழிவும், சாவும் சொல்லின, நாங்கள் எங்கள் காதுகளால் அந்த சக்தியைக் கேட்டிருக்கிறோம்.’
“ஓ எனக்குத் தெரியும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு,” அவள் சொன்னாள். “நான் பித்துப் பிடிச்சவள்னு நீங்க நினைச்சுகிட்டிருக்கீங்க, நான் ரொம்ப நோய்ப்பட்டுதான் இருந்தேன், ஆனா இனிமே குணமாகப் போகிறேன். உங்க கிட்டே பேசறது எனக்கு நல்லது செய்யும். உங்க கிட்டே வேலை செய்ய நான் வரதுக்கு முன்னாடி எப்பவும் நான் ஆஸ்பத்திரியிலேயே இருந்தேன், ஆனா அவங்க என்னை குணப்படுத்த முயற்சி செய்யவே இல்லை. என்னோட சுய மதிப்பைத்தான் அழிக்கப் பார்த்தாங்க. இப்போ மூணு மாசமா எனக்கு ஒரு வேலையும் கிடைக்கல்லை. உங்களை நான் கொல்ல வேண்டி வந்தாக் கூட அவங்களாலெ என்னை ஒண்ணும் செய்ய முடியாது, மறுபடி ஆஸ்பத்திரியிலேதான் போடுவாங்க, அதனால பாருங்க எனக்கு ஒரு பயமும் இல்லை. ஆனா நாம கொஞ்ச நேரம் அமைதியா உட்காருவோம். நான் அமைதியா இருக்கணும்.”
ஆற்றின் கரையோரமாக ரயில் தடங்கித் தயங்கி முன்னேறிக் கொண்டிருந்தது, ப்ளேக் தான் தப்பிக்கும் வழிகள் பற்றி யோசிக்கும்படி தன்னைத் தூண்ட முயற்சி செய்தார், ஆனால் அவருடைய உயிருக்கு உடனடியாக இருக்கும் ஆபத்து அதைச் செய்ய விடாமல் துன்பப்படுத்தியது, அறிவோடு திட்டமிடுவதற்குப் பதிலாக, அவளை முதலிலேயே என்ன வழிகளில் தவிர்த்திருக்கலாம் என்பதைப் பற்றியே யோசனைகள் வந்தன. அந்த வருத்தங்களைப் பற்றி எண்ணியதுமே, அவற்றின் பயனற்ற தன்மையை உடனே உணர்ந்தார். அது தான் மருத்துவ மனையில் பல மாதங்கள் கழித்ததாக அவள் சொன்னவுடன் அதைப் பற்றி எந்த சந்தேகமும் கொள்ளாமல் இருந்ததைப் பற்றிப் பின்னால் வருத்தப்பட்டதை ஒத்திருந்தது. அவளுடைய கூச்ச சுபாவம், அவளுடைய சஞ்சலங்கள், பறவைக் காலால் கீறப்பட்டதைப் போன்ற அவளது கையெழுத்து ஆகியவற்றால் எச்சரிக்கை உணர்வைப் பெறாதது குறித்து வருந்துவது போன்றது. அவரது பல தவறுகளைத் திருத்திக் கொள்ள இப்போது வாய்ப்பேதும் இல்லை, மேலும் அவர் உணர்ந்தபடி – அவர் வளர்ந்த பிறகான வருடங்களில் முதல் தடவையாக – வருத்தத்தின் முழு வேகமும் இப்போது அவரைத் தாக்கியது. ஜன்னல் வழியே, அனேகமாக இருண்டு விட்ட ஆற்றில் சில மனிதர்கள் மீன் பிடிப்பதைப் பார்த்தார், பிறகு கரையில் சேர்ந்த துண்டுக் கட்டைகளை வைத்துக் கொண்டு கட்டப்பட்டதைப் போல ஓட்டை உடைசலாகத் தெரிந்த ஒரு படகு முகாமைப் பார்த்தார்.
மிஸ்டர் வாட்கின்ஸ் உறங்கிப் போயிருந்தார். அவர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். திருமதி காம்ப்டன் தன் செய்தித்தாளைப் படித்தார். ரயில் கிரீச்சிட்டது, மெதுவானது, இன்னொரு நிலையத்தில் உறுதியில்லாமல் நின்றது. தெற்கே போகும் ரயில்களுக்கான மேடையை ப்ளேக் பார்த்தார், அங்கே சில பயணிகள் நகருக்குள் போவதற்குக் காத்திருந்தனர். சாப்பாட்டுத் தூக்கு ஒன்றுடன் ஒரு வேலையாள் நின்றார், நன்கு உடுத்திருந்த ஒரு பெண், பெட்டி ஒன்றுடன் இருந்த ஒரு நபர். அவர்கள் தனித்தனியே பிரிந்து நின்றனர். சுவரில் விளம்பரங்கள் அவர்களுக்குப் பின்னே ஒட்டப்பட்டிருந்தன. ஓர் ஆண்-பெண் ஜோடி ஒய்ன் அருந்துவதாக ஒரு படம், ரப்பர் குதிகாலணி பூண்ட பூனைப் பாதத்தின் படம், ஹவாய் தீவுகளின் நாட்டியக்காரரின் ஒரு படம். அவற்றில் காணப்பட்ட உற்சாகம் அந்த நடைமேடையில் தேங்கி இருந்த நீர்க் குட்டைகளைக் கூடத் தாண்டிப் போகவில்லை, அங்கேயே உயிரிழந்து போனது போலிருந்தது. அந்த நடைமேடையும் சரி, மனிதர்களும் சரி, அபலைகள் போல இருந்தனர். அந்த நிலையத்திலிருந்து நீங்கிய ரயில் வண்டி, சேரி ஒன்றின் சிதறிய ஒளிகளூடே சென்று, அத்துவானப் பகுதிகளின் மற்றும் ஆற்றின் இருளுக்குள் போயிற்று.
“ஷேடிஹில்லுக்குப் போவதற்குள் அந்தக் கடிதத்தை நீங்கள் படிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அதை நான் உங்களுக்குத் தபாலில் அனுப்பி இருப்பேன், ஆனால் வெளியே போக முடியாமல் நான் மிகவும் நோய்ப்பட்டிருந்தேன். இரண்டு வாரங்களுக்கு நான் வெளியே போகவே இல்லை. மூன்று மாதங்களாக எனக்கு ஒரு வேலையும் இல்லை. வீட்டுச் சொந்தக்காரியைத் தவிர வேறு யாரிடமும் நான் பேசவேயில்லை. என் கடிதத்தைத் தயவு செய்து படிங்க.”
அவர் இருக்கையில் அவள் விட்டிருந்த கடிதத்தை எடுத்தார். அந்த மலிவான காகிதம் கையால் தொடப்படும்போது அருவருப்பாகவும், அசிங்கமாகவும் இருப்பதாக உணர்ந்தார். அது ஒருமுறை மடிக்கப்பட்டு, மறுபடியும் மடிக்கப்பட்டிருந்தது. ”அன்புக் கணவருக்கு,” அவள் தன் இங்குமங்கும் அலையும், விசித்திரமான கையெழுத்தில் எழுதியிருந்தாள், “மனித அன்பு நம்மை தெய்வீகக் காதலுக்கு இட்டுச் செல்லும் என்று அவர்கள் சொல்கிறார்கள், ஆனால் அது உண்மையா? நான் உங்களைப் பற்றி ஒவ்வொரு இரவும் கனவு காண்கிறேன். எனக்கு மோசமான ஆசைகளெல்லாம் இருக்கின்றன. எனக்கு எப்போதுமே கனவுகள் காண்பதற்குத் தனியான திறமை இருந்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை ஒரு எரிமலை பொங்கி ரத்தமாக எழுவதாகக் கனவு கண்டேன். மருத்துவ மனையில் நான் இருந்தபோது அவர்கள் என்னைக் குணப்படுத்துவதாகச் சொன்னார்கள், ஆனால் அவர்கள் என் சுய மதிப்பை அழிக்கத்தான் விரும்பினார்கள். தையல் வேலையையும், கூடை பின்னுவதையும் பற்றித்தான் நான் கனவு காண வேண்டும் என்று விரும்பினார்கள், ஆனால் நான் கனவு காண்பதில் எனக்கிருந்த தனித்திறமையைக் காப்பாற்றிக் கொண்டேன். என்னால் கண்ணுக்குத் தெரியாதவற்றைப் பார்க்க முடியும். தொலைபேசி எப்போது அடிக்கும் என்று என்னால் சொல்ல முடியும். எனக்கு வாழ்வில் உண்மையான நண்பர் யாரும் இருந்தது கிடையாது….”
ரயில் மறுபடி நின்றது. இன்னொரு நடைமேடை. இன்னொரு ஜோடி ஒய்ன் அருந்தும் படம், அந்த ரப்பர் பாதம், ஹவாய் தீவு நடனக்காரர் படம். திடீரென்று அவள் ப்ளேக்கின் முகத்துக்கு அருகே தன் முகத்தைக் கொணர்ந்தாள், அவர் காதில் கிசுகிசுத்தாள். “நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியும். உங்க முகத்துலயே அது தெரியுது. ஷேடிஹில்லுல எங்கிட்டேயிருந்து தப்பிச்சுடலாம்னு நினைக்கிறீங்க, அப்படித்தானே? ஓ, இதை நான் பல வாரங்களா திட்டமிட்டுக்கிட்டிருக்கேன். இது ஒண்ணுதான் எனக்கு இருந்தது யோசிக்கறத்துக்கு. என்னைப் பேச விட்டீங்கன்னா, உங்களுக்கு ஒரு கெடுதியும் செய்ய மாட்டேன். பிசாசுங்களைப் பத்தி நான் யோசிச்சு வச்சிருக்கேன். இந்த உலகத்துலெயும் மனுசங்களே சிலபேர் கெட்ட பிசாசுங்களா இருக்காங்க. இந்த உலகத்துல தீயசக்திங்க இருந்தா, அதுங்களை அழிக்கிறது நம்ம கடமையா இல்லையா? நீங்க எப்பவும் அடிபட்ட மனுசங்களைத்தான் வேட்டையாடுவீங்கன்னு எனக்குத் தெரியும். என்னால் அதைப் பார்க்க முடியறது. ஓ, சில நேரம் நான் உங்களைக் கொன்னுதானாகணும்னு நினைக்கிறதுண்டு. சில சமயம் எனக்கும் சந்தோஷத்துக்கும் இடையிலெ தடையா இருக்கிறது நீங்கதான்னு நான் நினைக்கிறேன். சில சமயம்….”
அவள் ப்ளேக்கைத் தன் பிஸ்டலால் தொட்டாள். அவர் தன் வயிற்றில் அந்தத் துப்பாக்கியின் முனை தொடுவதை உணர்ந்தார். துப்பாக்கியின் ரவை இத்தனை அருகே நுழையும் இடத்தில் சிறு துளையைத்தான் ஏற்படுத்தும், ஆனால் பின் முதுகில் வெளியேறும் இடத்தில் அது ஒரு கால் பந்து அளவுக்குப் பெரிய துவாரத்தைக் கிழித்துக் கொண்டு போகும். இன்னும் புதைக்கப்படாத இறந்தவர் உடல்களைப் போரில் தான் பார்த்திருப்பதை அவர் நினைவு கூர்ந்தார். அந்த நினைவு அடித்துப் புரண்டு எழுந்தது: குடல், கண்கள், நொறுங்கிய எலும்பு, மலம், மற்றும் இதர கழிவுகள்.
“என் வாழ்வில் நான் வேண்டினதெல்லாம் கொஞ்சம் அன்புதான்,” என்றாள். துப்பாக்கியின் அழுத்தத்தைச் சிறிது குறைத்தாள். மிஸ்டர் வாட்கின்ஸ் இன்னும் உறங்கியபடி இருந்தார். திருமதி காம்ப்டன் தன் கைகளை மடியில் வைத்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார். வண்டி மெல்ல ஆடியது, ஜன்னல்கள் நடுவே தொங்கிய மேலங்கிகளும், காளான் நிறத்து மழை மேலங்கிகளும் வண்டி ஆடும்போது சிறிது ஆடின. ப்ளேகின் முழங்கை ஜன்னல் விளிம்பில் இருந்தது, இடது கால் நீராவிக் குழாயின் மேலே பாதுகாப்புக்குப் போட்டிருந்த தகட்டில் பதிந்திருந்தது. அவலமான ஒரு வகுப்பறை போல அந்த வண்டியின் வாடை இருந்தது. பயணிகள் தூங்கினர், உதிரிகளாகக் கிடந்தனர், ப்ளேக் தான் இந்த மங்கலான ஒளி, வெப்பத்தின் வாடை, மற்றும் ஈரத் துணிகளின் வாடையிலிருந்து தப்பிக்கவே போகிறதில்லை என்று நினைத்தார். தன்னைத் தானே உற்சாகப்படுத்திக் கொள்ள அவர் பயன்படுத்தும் சுய எத்தலை இப்போது முயன்று பார்க்கலாம் என்று நினைத்தார், ஆனால் தன்னை ஏமாற்றிக் கொள்ளவோ, நம்பிக்கை கொள்ளவோ தேவையான சக்தி அவரிடம் ஏதுமில்லை.
வண்டியின் நடத்துனர் அந்தப் பெட்டியில் தலையை நுழைத்து, “ஷேடி ஹில் அடுத்தது, ஷேடி ஹில்,” என்றார்.
“இப்ப,” என்றாள். “இப்ப கிளம்பி எனக்கு முன்னாடி போங்க.”
மிஸ்டர் வாட்கின்ஸ் திடீரென்று விழித்தார், தன் மேலங்கியையும் குல்லாயையும் அணிந்து கொண்டார், தொடர்ந்து தாய்மாருக்குரிய செயல்களோடு தனது பொருட்களைச் சேகரித்துக் கொண்டிருந்த திருமதி காம்ப்டனைப் பார்த்துப் புன்னகைத்தார். அவர்கள் வெளிக்கதவை நோக்கிச் சென்றனர். ப்ளேக் அவர்களைத் தொடர்ந்தார், ஆனால் அவர்கள் யாரும் ப்ளேக்குடன் பேசவில்லை அல்லது பின்னே தொடரும் பெண்ணைக் கவனிக்கவில்லை. நடத்துனர் கதவைத் திறந்து போட்டார், ப்ளேக் அடுத்த பெட்டியின் நடைமேடையில் எக்ஸ்ப்ரஸ் ரயிலைத் தவற விட்ட இதர சில பயணிகளையும் பார்த்தார், அவர்களெல்லாம் இந்தப் பயணம் முடிவடைய மங்கும் ஒளியில் பொறுமையாகக் காத்திருந்தனர். திறந்த கதவு வழியே ஊருக்கு வெளியே இருந்த பாழாகிப் போன மாளிகையை, ஒரு மரத்தில் ஆணி அடித்துப் பொருத்தப்பட்ட ‘அத்து மீறி நுழையக்கூடாது’ என்ற பலகையை, மற்றும் பெரும் எண்ணைச் சேமிப்புக் கலங்களை தன் தலையை உயர்த்திப் பார்த்தார். பாலத்தின் அண்டை காங்க்ரீட் சுவர்கள் கடந்தன, திறந்த கதவுக்கு அத்தனை அருகில் இருந்த அவற்றை அவர் கையை நீட்டினால் தொட்டிருக்கலாம். பிறகு வடக்கே போகும் ரயிலுக்கான நடைமேடையின் முதல் விளக்குக் கம்பங்களைப் பார்த்தார், ஒரு பலகையில் தங்க மற்றும் கருப்பு வண்ணங்களில் ‘ஷேடி ஹில்’ என்ற பெயர் கடந்தது, நிலைய மேம்பாட்டுச் சங்கத்தின் முயற்சியால் பராமரிக்கப்படும் சிறு புற்றரை மற்றும் பூக்களின் பாத்திகள் கடந்தன, பிறகு வாடகைக் கார்களின் நிறுத்தம், பழைய பாணி ரயில் நிலையக் கட்டடம். மறுபடியும் மழை பெய்து கொண்டிருந்தது; அடித்துக் கொட்டியது. நீர் அளையும் ஓசையை அவரால் கேட்க முடிந்தது, குட்டைகளிலும், ஈரமான சாலையிலும் பிரதிபலித்த ஒளியைப் பார்த்தார், நீரின் சொட்டும் ஒலியும் தெளிக்கும் ஓசையும் அவருடைய மனத்தில் தங்குமிடம் ஒன்றின் உருவை எழுப்பின, அது ஒளி கூடியும், வினோதமாகவும் இருந்தது, அவருடைய வாழ்வில் ஏதோ ஒரு கட்டத்தைச் சேர்ந்த இடமாகத் தெரிந்தது, ஆனால் அது எந்தக் கட்டம் என்று அவரால் நினைவு கூர முடியவில்லை.
அவள் அவர் பின்னே வந்து கொண்டிருக்க, அவர் படிகளில் கீழே இறங்கினார். ரயில் நிலையத்தருகே ஒரு டஜன் கார்கள் எஞ்சின் ஓடியபடி நின்றன. ஒவ்வொரு பெட்டியிலிருந்தும் சிலர் இறங்கினார்கள்; அவர்களில் பலரை அவருக்குத் தெரிந்திருந்தது, ஆனால் யாரும் அவரைக் காரில் தம் கூடப் பயணிக்க அழைக்கவில்லை. அவர்கள் ஜோடிகளாகவோ தனியாகவோ நடந்து போனார்கள்- தீர்மானமாக மழையூடே சென்று நடைமேடையிலிருந்த கூரையிட்ட இடத்துக்குப் போனார்கள், அங்கே கார்களின் குழலொலிகள் அவர்களுக்கு அழைப்பு விடுத்தன. வீட்டுக்குப் போக, ஒரு பானம் அருந்த, காதல் செய்ய, இரவுணவு சாப்பிட என்று பல நடவடிக்கைகளுக்கான நேரம் வந்திருந்தது. குன்றில் உயரே விளக்குகளைப் பார்த்தார் – அந்த ஒளியிருந்த இடங்களில் குழந்தைகள் குளிப்பாட்டப் பட்டனர், மாமிசம் சமைக்கப்பட்டது, தட்டுகள் பாத்திரங்கள் கழுவப்பட்டன – அந்த விளக்குகள் மழையில் பளீரிட்டன. ஒவ்வொன்றாக கார்கள் பயணிகளை ஏற்றிக் கொண்டு போயின, கடைசியில் நான்குதான் எஞ்சின. மிஞ்சிய இரண்டு பயணிகள் அந்தச் சிற்றூரின் ஒரே வாடகைக் காரில் ஏறிப் போனார்கள். “நான் வருந்துகிறேன், டார்லிங்,” என்று தன் கணவனிடம் அன்பான குரலில் ஒரு பெண்மணி சொன்னார், அவர் சில நிமிடங்கள் தாமதமாகக் காரில் வந்திருந்தார். “நம் கடிகாரங்கள் எல்லாமே தாமதம்.” கடைசி நபர் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார், மழையைப் பார்த்தார், பிறகு மழையில் நடந்து போனார். போகிறவரைப் பார்த்திருந்த ப்ளேக், இருவரும் விடைபெற்றுக் கொண்டிருக்க ஏதோ காரணம் இருந்தாற்போல உணர்ந்தார்- ஒரு விருந்துக்குப் பிறகு நண்பர்கள் விடைபெறுவதைப் போல இல்லை, ஆனால் தவிர்க்க முடியாத, விரும்பாத விதத்தில் மனமும் உயிரும் பிரிய நேரும்போது விடைபெறுவதைப் போல. கார் நிறுத்துமிடத்தைத் தாண்டி நடைபாதைக்கு அந்த மனிதர் நடந்தபோது, அவருடைய காலடிகளின் ஒலிகள் கேட்டன, பின் அவை மறைந்தன. ரயில் நிலையத்தில் ஒரு தொலைபேசி மணி அடித்தது. அந்த ஒலி உரக்கக் கேட்டது, மன்றாடுவதைப் போல இருந்தது, சமமான இடைவெளிகளில் ஒலித்தது, யாரும் எடுத்துப் பேசவில்லை. யாரோ ஆல்பனிக்கு அடுத்த ரயில் எப்போது என்று தெரிந்து கொள்ள விரும்பினார்கள், ஆனால் ரயில் நிலையத்து நிர்வாகி ஒரு மணி முன்பு வீட்டுக்குப் போயிருந்தார். போகுமுன் நிலையத்தின் எல்லா விளக்குகளையும் ஒளிர விட்டுப் போயிருந்தார். அவை காலியான அந்தப் பயணியர் காத்திருக்கும் அறையில் ஒளிர்ந்தன. தகரத்தாலான மறைப்போடு இருந்த விளக்குகள், நடைமேடையில் மேலும் கீழும் சம இடைவெளிகளில் மங்கலான, பயனற்ற ஒளியின் சோகத்தோடு எரிந்தன. அவை அந்த ஹவாய் தீவின் நடனக்காரரை, கொண்டாட பானம் அருந்தும் ஜோடியை, ரப்பராலான பாதச் சில்லை ஒளியூட்டின.
“நான் இங்கே வந்ததே இல்லை,” அவள் சொன்னாள். “இது வித்தியாசமாக இருக்கும் என்று நினைத்தேன். இத்தனை அவலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. வெளிச்சத்தை விட்டு விட்டு வெளியே போவோம். அங்கே போங்க.”
அவருடைய கால்கள் நொந்திருந்தன. அவருடைய எல்லா வலுவும் போயிருந்தது. “போங்க,” என்றாள் அவள்.
நிலையத்துக்கு வடக்கே சரக்கு இறக்கும் ஒரு கொட்டகையும், கரி சேமிக்கும் கூடமும் இருந்தன. அங்கே உள்ளூர் கசாப்புக் கடைக்காரரும், அடுமனைக்காரரும், பெட்ரோல் நிலையத்தை நடத்துபவரும் ஞாயிறுகளில் மீன் பிடிக்கப் பயன்படுத்தும் ரப்பர் படகுகளைப் போட்டிருந்த ஓர் ஒதுக்கிடமும் இருந்தது. அவை இப்போது மழையால் கனெல் (படகின் மேல் விளிம்பு) வரை மூழ்கி இருந்தன. சரக்குக் கொட்டகையை நோக்கி நடந்த போது அவர் தரையில் ஏதோ அசைவைப் பார்த்தார், ஓர் உரசும் சத்தம் கேட்டது, அப்போது ஒரு பெருச்சாளி காகிதப்பை ஒன்றுக்குள்ளிருந்து தன் தலையை வெளியே எடுத்து அவரை நோக்கியதைப் பார்த்தார். அந்தப் பெருச்சாளி, தன் பற்களால் அந்தப் பையைக் கவ்விக் கொண்டு அதோடு ஒரு வடிநீர்க்குழாய்க்குள் பதுங்கியது.
“நில்லுங்க,” அவள் சொன்னாள். “திரும்புங்க. ஓ, உங்களுக்கு நான் பரிதாபப்படணும். உங்களோட பரிதாபமான முகத்தைப் பாருங்க. ஆனா நான் எத்தனை அவதியை எல்லாம் தாண்டி வந்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியாதில்லையா. பகல் வெளிச்சத்தில போக எனக்குப் பயமாயிருக்கு. என் மேலே நீல வானம் விழுந்துடும்னு எனக்கு அச்சம். நான் ஒரு பயந்த கோழி மாதிரி. இருட்டினப்புறம்தான் நான் நானாயிருக்கிறதா நினைக்கிறேன். ஆனாலும் நான் உங்களை விட மேலானவதான். எனக்கு இன்னமும் நல்ல கனவுகள் சில நேரம் வருது. உல்லாசச் சாப்பாடுகள், சொர்க்கம், மனிதர்களோட சகோதரத்துவம் அதுங்களோட, நிலா வெளிச்சத்தில நிற்கிற அரண்மனைகள், வில்லோ மரங்கள் ரெண்டு பக்கமும் கரையில நிற்கிற ஓர் ஆறு, அயல்நாட்டுல இருக்கிற பெரிய நகரங்கள் இதெல்லாத்தையும் பத்தி நான் கனவு காண்றேன். எனக்கு அன்பைப் பத்தி உங்களை விடக் கூடுதலாத் தெரியும்.”
இருட்டான ஆற்றுப் பக்கத்திலிருந்து படகு ஒன்றின் எஞ்சினுடைய மந்திர ஸ்தாயி ஒலியைக் கேட்டார், இருண்ட நீர்ப்பரப்பின் மேல் நீண்டு பரவிப் போன அந்த ஒலி என்றோ கடந்து போயிருந்த கோடைப்பருவங்கள், மற்றும் பல சந்தோஷங்களின் இனிமையான தெளிவான நினைவுகளின் சுமையைத் தன் பின்னே இழுத்துப் போயிற்று, அது அவருடைய உடலின் சதைகளைக் கீறுவது போலிருந்தது, அப்போது மலைப்பகுதியில் இருந்த இருட்டில் குழந்தைகள் பாடுவதை நினைத்தார். “அவர்கள் என்னைக் குணப்படுத்த ஒரு போதும் எண்ணவில்லை,” என்றாள் அவள். “அவர்கள்….” வடதிசையிலிருந்து வந்த ரயிலின் ஓசை அவளுடைய குரலைக் கேட்க முடியாமல் நசுக்கியது, ஆனால் அவள் பேசிக் கொண்டே போனாள். சத்தம் அவருடைய காதுகளை நிரப்பியது, மனிதர் சாப்பிட்ட, குடித்த, உறங்கிய, படித்த ஜன்னல்கள் பறந்து கடந்தன. பாலத்தை ரயில் கடந்தபின், அந்தச் சத்தம் தூரத்து ஓசையாக மங்கியது, அவள் அவரிடம் கடுமையாகக் கூச்சலிடுவதை அவர் கேட்டார், “மண்டியிடு, மண்டியிடு! நான் சொன்னதைச் செய், மண்டியிடு!”
அவர் தன் முழங்கால்களில் நின்றார். தலையைக் குனிந்தார். “அதுதான்,” என்றாள் அவள். “பாருங்க, நான் சொல்றதைச் செய்யறீங்க. உங்களை நான் சேதப்படுத்த மாட்டேன், ஏன்னாக்க உங்களை நாசம் பண்ண நிசம்மாகவே எனக்கு விருப்பமில்ல. உங்களுக்கு உதவத்தான் நினைக்கிறேன், ஆனால் உங்க முகத்தைப் பார்க்கும்போது உங்களுக்கு என்னால உதவ முடியாதுன்னு சில சமயம் எனக்குத் தோணுது. சிலசமயம் எனக்குத் தோணும், நான் நல்லாயிருந்தா, அன்பானவளாகவும், நேரான புத்தியோடும் இருந்தா- ஓ, இப்ப இருக்கிற என்னை விட ரொம்ப மேலானவளா இருந்தா- சில சமயம் எனக்குத் தோணுது, நான் அப்படியெல்லாம் இருந்தா, அதோட இளமையாகவும், அழகாகவும் இருந்தா, உங்களை அப்போ கூப்பிட்டு சரியான பாதை எதுன்னு காட்டினாக் கூட நீங்க நான் சொல்றதைக் கேட்க மாட்டீங்க. ஓ, நான் உங்களை விட மேலானவதான், மேலானவதான், நான் என்னோட நேரத்தை வீணாகடிக்கக் கூடாது, என் வாழ்க்கையை இப்படிப் பாழ்பண்ணிக்கக் கூடாது. உன்னோட முகத்தை மண்ணில வை. உன் முகத்தை மண்ணுல வை. உன் முகத்தை மண்ணுல வை.”
அவர் அங்கிருந்த அழுக்குகளில் குப்புற விழுந்தார். கரி அவர் முகத்தின் தோலை உரசிப் பிய்த்தது. அவர் தரையில் நீளப் படுத்தார், அழுத் தொடங்கினார். “இப்போத்தான் நான் நல்லா இருக்கற மாதிரி இருக்கு,” அவள் சொன்னாள். “இப்போ உங்களை நான் கை கழுவலாம். இதெல்லாத்தையும் என் கையை விட்டுக் கழுவலாம், ஏன்னா பாருங்க என் கிட்டே கொஞ்சம் அன்பு இருக்கு, கொஞ்சம் சோகம் எனக்குள்ளே இருக்கு, அதை என்னால மறுபடி கண்டு பிடிக்க முடியும், அதைப் பயன்படுத்த முடியும். என் கைகளை நான் கழுவ முடியும்.” அப்போது அவர் அவளது காலடிகள் அவரிடமிருந்து விலகிப் போகிற ஓசையை, அங்கிருந்த உடைந்த கற்களின் மேல் நடந்து போகிற ஓசையைக் கேட்டார். நடைமேடையின் உறுதியான மேல்பரப்பின் மீது அவை எழுப்புகிற தெளிவான ஆனால் தூரத்து ஓசையைக் கேட்டார். அவை ஓய்வதைக் கேட்டார். தன் தலையை உயர்த்தினார். மரப் பாலத்தின் மீது அவள் ஏறிப் போவதையும், கடப்பதையும், எதிர் நடைமேடைக்குப் போவதையும் அங்கிருந்த மங்கலான ஒளியில் அவளுடைய உருவம் சிறியதாக, சாதாரணமானதாக, ஒரு கெடுதலும் இல்லாததாகத் தெரிந்தது. அவர் தூசியிலிருந்து எழுந்தார்- முதலில் ஜாக்கிரதையாக இருந்தார், அவளுடைய தோற்றத்தில், அவளுடைய பாவனையில், அவள் தன்னை முழுதும் மறந்து விட்டாள் என்று புரியும் வரையில் அப்படி; அவள் தான் விரும்பியதைப் பூர்த்தி செய்து கொண்டு விட்டாள், அவர் இப்போது ஆபத்தின்றி இருக்கலாம். அவர் எழுந்து நின்றார், தரையில் விழுந்திருந்த தன் குல்லாயை எடுத்துக் கொண்டார், பிறகு வீட்டுக்கு நடந்து போனார்.
(1954)
இங்கிலிஷ் மூலக்கதையை எழுதியவர்: ஜான் சீவர். கதையின் பெயர்: ‘த ஃபைவ் ஃபார்ட்டி எய்ட்’ ; பிரசுரமான வருடம் 1954. நியூயார்க்கர் பத்திரிகையில் பிரசுரமான கதை. கதை கிட்டிய நூல்: ‘ஒண்டர்ஃபுல் டௌன்- நியூயார்க் ஸ்டோரீஸ் ஃப்ரம் த நியூயார்க்கர்’ என்ற சிறுகதைத் தொகுப்பு. பதிப்பாசிரியர் டேவிட் ரெம்நிக் மற்றும் சூஸன் சோய் (2000) பிரசுரகர்: ராண்டம் ஹௌஸ்/ நியூயார்க்.
தமிழாக்கம்: மைத்ரேயன் (மே 2023)
இந்தக் கதையைப் படித்து ஒலிப்பதிவாக்கிக் கொடுப்பதை, மேரி கெயிட்ஸ்கில் என்ற ஒரு பிரசித்தி பெற்ற அமெரிக்க எழுத்தாளர் செய்திருக்கிறார். அவருடைய குரலில் இந்தக் கதையைக் கேட்கச் செல்ல வேண்டிய வலை முகவரி இது:
https://esl-bits.eu/ESL.English.Listening.Short.Stories/5-48/01/default.html
