Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

நானே நானா, யாரோ தானா? – 2

முதல் பகுதி

ஒரு கணம் முன்னர் ஓக்லஹோமாவில் புதையுண்ட நான், ஹூஸ்டனில் உடலற்றவனானேன். இந்தப் புது நிலையை நான் உடனடியாக உணரவில்லை. இதய மாற்று அறுவை சிகிச்சையில், இதய தானம் செய்தவர் பிணம் போலக் கிடப்பது போல், இனிப் பயனாகாத, உடைந்த மின்னணு சாதனங்கள் நிரம்பிய மண்டை ஓட்டுடன் என் உடல் பூமியில் புதைவதும், என் இதயமும், நுரையீரல்களும் வெகு வேகமாக இயங்குவதும் பல பதட்ட நிமிடங்களுக்குப் பிறகே எனக்குத் தெளிவானது. எந்தக் கண்ணோட்ட மாறுபாட்டிற்காக என்னை நானே முன்னர் பயிற்றுவிக்க முயன்றேனோ, எது கிட்டத்தட்ட இயலாத ஒன்றென்று நினைத்தேனோ, அது எளிதில் இப்போது வசப்பட்டது. துல்சாவின் ஆழ் குழியில் இருக்கும் என் உடலுக்குச் செல்வதைப் பற்றி என்னால் இப்போது நினைக்க முடிந்ததென்றாலும், அந்தத் தோற்ற மயக்கம் சில கணங்களே நீடித்தது. இன்னமும் நான் ஓக்லஹோமாவில் இருப்பதாக நினைப்பது மாயையன்றி வேறில்லை. என் உடலுடன் எனக்கு எவ்விதத் தொடர்புகளுமில்லை.

ஆம், ஐயத்திற்குரியதுதான், இத்தகு வெளிப்பாடுகள் விரைந்து வருகையில், இயற்பியலாளர்கள் புறந்தள்ளும் அந்தத் தத்துவத்தை, அதாவது ஆத்மா என்ற கருதுகோளை, நான் எதேச்சையாக, அழகும் ஈர்ப்பும் கொண்ட நிகழ்வின் மூலம் அறிந்து கொண்டுவிட்டேன் அல்லவா? துல்சாவிற்கும், ஹூஸ்டனுக்கும் இடையில் செயல்பட்ட அந்த வானொலிச் சமிக்ஞை இறந்துபட்ட போது நான் என் இருப்பிடத்தை ஒளி வேகத்தில் துல்சாவிலிருந்து ஓக்லஹோமாவிற்கு மாற்றிக் கொண்டேனே, இது சிறந்த அத்தாட்சி இல்லையா? நிறையில் எந்தவித அதிகரிப்புமின்றி இதை நான் செய்யவில்லையா, என்ன? ‘அ’ விலிருந்து ‘ஆ’விற்கு நான் அல்லது எனது மனம் அல்லது ஆன்மா- எடையற்ற, என் அந்தத் தன்னுணர்வு, நான் என்பதின் மையம்- இவைகள் தானே செயல்பட்டன? என் கண்ணோட்டம் சற்று பின்தங்கினாலும், இருப்பிடத்திற்கு அதில் மறைமுகத் தாக்கம் இருக்கிறது என்பது தெளிவானது. தான், தன் என்ற இதை மறுதளிக்கக்கூடிய மெய்யியல் இயற்பியலாளர்கள், உள்ளுணர்விற்குப் புறம்பாகத்தான் அதைச் சொல்ல முடியும் எனத் தோன்றுகிறது. ஒவ்வொருவரின் உலகக் கண்ணோட்டத்திலும் ‘தான்’ ‘தன் ஆளுமை’ என்பது பதிந்திருக்கிறது, அப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது. அதை மறுப்பது அவ்வளவு ஏற்புடையதில்லை, நேர்மையற்றது, கார்டீசியன் மறுப்பை ஒத்து ‘தொகை இல்லை’ போன்றது.

என் கையறு நிலையும் எனக்குப் புரிந்தது. மயக்கம், கலக்கம் என்னைப் பீடித்தது. நிகழ்வியல் உணர்த்தும் உடல் இல்லாத இந்த நிலை என்னை அச்சுறுத்தியது. காயம் பட்ட கைகளுக்கு அட்ரீனல் விரையவில்லை; இதயம் பயங்கரமாகத் துடிக்கவில்லை; முன்னெச்சரிக்கை உமிழ் நீர் சுரப்பில்லை. ஆனால், மூழ்குவதான உணர்வு என் குடலில் ஒரு கணம் ஏற்பட்டது. இந்த உணர்ச்சியால், நான் தந்திரமான பொய் நம்பிக்கைக்கும் ஆட்பட்டேன்- அதாவது, உடலற்ற நிலையிலிருந்து படிப்படியாக உடலுள்ள நிலைக்கு வருவதாகவும் நினைத்தேன். தன் அங்கத்தை இழக்கும் ஒருவருக்கு ஏற்படும் அந்தச் சிந்தனையை ஒத்து, நான் உணர்ந்த சுரீர்வலி, பேய் உடலின் மாயத் தோற்றம் தரும் ஒரு உணர்வே என்று அறிந்தேன்.

குழப்பத்தில் ஆழ்ந்தேன்- ஒரு புறம் மகிழ்ச்சியில் மிதந்த நான் என் தத்துவக் கண்டுபிடிப்பை எவ்விதம் இதழியலாளர்களுக்குத் தெரியப் படுத்துவேன் என்று மூளையைக் கசக்கிக் கொண்டேன்; மறு புறத்திலோ, பயந்து கொண்டு, தனியாக, நிச்சயமற்று, கசந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை, இது நீடிக்கவில்லை. தொழில் நுட்பக் குழு எனக்கு மயக்க மருந்து கொடுத்து கனவுகளற்ற ஆழ் தூக்கத்தில் ஆழ்த்தியது. ‘ப்ராம்ஸ் மூவர்’ வாசித்திருந்த அந்த அற்புதமான பியானோ இசையில் கண்விழித்தேன். அவர்கள் ஏன் என் இசை இரசனை முதற்கொண்டு கேட்டுப் பதிவு செய்தார்கள் என்பது இப்போது விளங்கியது. காதுகள் இல்லாமல் இந்த இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு விளங்கி விட்டது. என் கேட்கும் நரம்புகளுடன், சில விநோத முறையில் மின்னணுத் தொடர் இணைப்பால் அந்த இசையை என்னால் கேட்க முடிந்திருக்கிறது. இந்த அற்புத இசை எந்த ஸ்டீரியோ நேசனுக்கும் இன்பமூட்டவல்லது. இதன் முடிவில், என் செயற்கைக் காதுகளில், திட்ட இயக்குனர், எனக்குத் தெம்பளிக்கும் விதமாகப் பேசினார். ‘என்ன தவறு நடந்ததென்று நீங்கள் பகுப்பாய்வு செய்தது சரியே; விரைவில் நீங்கள் உடலைப் பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன’ என்றார். அவர் விரிவாகச் சொல்லவில்லை, சில பதிவுகளுக்குப் பிறகு நான் துயில் கொண்டேன். வருடத்தின் பெரும்பாலான நாட்கள் நான் தூக்கத்தில் தான் இருந்திருக்கிறேன்- கண்விழித்த போது என் அனைத்து உணர்வுகளும் முழுதும் திரும்பியிருந்தன. ஆனால், கண்ணாடியில் பார்த்த போது என் முகம்- இது என் முகமா?- தாடியுடன், கனமாக, ஆனால், என் முந்தைய முகத்துடன் குடும்பத் தொடர்புள்ளதான, அறிவுக் களையும், உறுதியும் மிக்கதான, ஆனால், புதிய முகம். சுயமாகச் சிந்தித்து இது புது உடல் எனப் புரிந்து கொண்டேன். திட்ட இயக்குனரும் உங்கள் ஊகம் சரியே என்றார். என் புது உடலின் பழைய வரலாற்றைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. நல்ல வேளையாக நானும் கேட்கவில்லை. என் வாதைகளை அறியாத இன்றைய மெய்யியலாளர்கள், புது உடல் பெற்றாலும், ஒரு மனிதனின் ‘தான்’ என்பது போவதில்லை என்று சொல்கிறார்கள். புதுக் குரல், வலிமை, மற்றும் வலுவற்றதான தசைகள் இவற்றிற்கெல்லாம் நாம் ஒருவாறு பொருந்திப் போகக் காலம் வேண்டும்; ஏறத்தாழ அவரது ஆளுமை பாதுகாக்கப்படும். பலமுறை அல்லது விரிவாக ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ளும் மனிதரின் ஆளுமை, மாறுபாடு அடைவதைப் பற்றி பலர் அறிவார்கள். பாலின மாற்று அறுவை செய்து கொண்டவர்களுக்கு இது சிக்கலான ஆளுமையாகக் கூட உருவெடுக்கலாம். இவற்றிலெல்லாம் மனிதர்கள் பிழைத்திருக்கிறார்கள் என்பது ஒப்புக் கொள்ளக் கூடியதே. விரைவில் என் புது உடலுக்குப் பழகிப் போனேன். விந்தை என்னவென்றால், அதன் புதுமைகளை என் நினைவிலோ, அல்லது தன்னுணர்விலோ நிலை நிறுத்த என்னால் முடியவில்லை. கண்ணாடியில் பார்க்கும் பிம்பம் பழகிவிட்டது. அதில் என் தலையிலுள்ள உணர் கொம்புகள் தெரிந்தன. என் மூளை, உயிர்காப்பு ஆய்வகத்தில் தொட்டியில் மிதந்து கொண்டிருக்கிறது எனப் புரிந்து கொண்டேன். யோரிக்கை (தொட்டி மூளை) சென்று பார்க்க முடிவு செய்தேன். நானும் என் புது உடலான ஃபோர்டின்ப்ராசும், (Fortinbras) ஒரு சிறு நடைப் பயணத்தில், மிகுந்த கரகோஷத்துடன் வரவேற்கப்பட்டோம்- அது அவர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடிய ஒன்று, எனக்கானதல்ல! தொட்டியின் முன் எனது ஏழை யோரிக்கை இப்போது பார்க்கும் நான், அதன் வெளிக்கடத்தி ஸ்விட்சை முன்னர் செய்ததைப் போல அணைத்தேன். என்னவொரு வியப்பு- மயக்கம் வரவில்லை, தடுமாறவில்லை அசாதாரணமாக ஒன்றும் நடக்கவில்லை. ஒருவர் உடனடியாக அந்த ஸ்விட்சை முந்தைய நிலைக்குக் கொண்டு வந்தார். ஆனால், நான் எதையும் உணரவில்லை. இதை விளக்குங்கள் என்று கேட்ட போது திட்ட இயக்குனர் சொன்னார்: “உங்கள் மூளையை அகற்றுவதற்கு முன்னரே அதன் வேகம், தகவல்களை வாங்கி வெளிப்படுத்தும் செயல்பாடுகள், இத்யாதிகளை மிகப் பெரிய நிரல் கொண்டு பெருங் கணினியில் அமைத்தோம்.” மூளை அறுவை சிகிச்சைக்குப் பின்னர், என்னை அந்த ஆபத்தான பணிக்கு அனுப்பும் முன்னர் இரண்டையும் சோதித்துப் பார்த்திருக்கிறார்கள். என் உடலான ஹேம்லெட்டிலிருந்து வரும் சமிக்ஞைகளை, ஒரே  சமயத்தில் யோரிக்கின் பரிமாற்றிகளுக்கும், கணினிக்கும் அனுப்பியிருக்கிறார்கள். யோரிக் தரும் வெளியீட்டுக் குறிகளை என் உடலுக்கு அனுப்புவதோடு, அவற்றைப் பதிவு செய்து, அதை ‘ஹ்யூபர்ட்’ என்று அவர்கள் அழைக்கும் கணினி, உள்ளீட்டுத் தகவலுக்கு தரும் வெளியீட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறர்கள். (ஆமாம், அதற்கு ஏன் ஹ்யூபர்ட் எனப் பெயரிட்டார்களாம்?) பல நாட்களாக, பல வாரங்களாக இரண்டும் ஒத்திசைவுடன் ஒரே மாதிரி இருந்ததால் அவர்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது. அதற்காக அவர்கள் மூளையின் செயல்பாட்டுத் திறனை கணினியில் கொண்டு வந்து விட்டார்கள் என்பது பொருளல்ல; ஆனால், இந்த அனுபவப்பூர்வ நிகழ்ச்சி ஊக்குவிப்பதாக இருந்தது.

நான் உடலற்று இருந்த காலங்களில். ஹ்யூபர்ட்டின் உள்ளீடுகளும், செயல்பாடுகளும், யோரிக்கிற்கு இணையாகச் செயல்பட்டிருக்கின்றன. இதை நிரூபிப்பதற்காக, எனது தற்போதைய உடலான ஃபோர்டின்ப்ராசிற்கு, ஹ்யூபர்ட்டை முதன்மை நேரலை கட்டுப்பாட்டாளராக இயங்கச் செய்திருக்கிறார்கள். ஹேம்லெட், எனது பழைய உடல், நிலத்தடி சமாதியிலிருந்து மீட்கப்படவில்லை; தற்போது அது தூசியாகியிருக்கும். எனது கல்லறையின் மேல், ‘ஸ்டெட்’ என்ற எழுத்து அழுத்தமாகப் பொறிக்கப்பட்ட அந்த மாபெரும் கருவியின் பெரும் வடிவங்கள் அமர்ந்திருக்கின்றன. அடுத்த நூற்றாண்டின் அகழ்வாராய்ச்சியாளர்கள், தங்கள் முன்னோர்களின் சவ அடக்க முறைமைகள் பற்றி வியப்பு கொள்வார்கள்!

ஆய்வகத்தில், தொழில் நுட்ப வல்லுனர்கள், அந்த முதன்மை மின்விசை மாற்றுக் குமிழைக் காட்டினார்கள். அதற்கு இரு நிலைகள் இருந்தன. அதில் ‘ஹெச்- ஹ்யூபர்ட்’(H) மற்றும் ‘பி- ப்ரைய்ன்-(B) மூளை என்ற குறியீடுகள் இருந்தன. அந்த ஸ்விட்ச் தற்சமயம் ‘ஹெச்சில்’ இருந்தது; நான்  விரும்பினால், அதை B மூளைக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். இதயம் படபடவென்று அடித்துக் கொண்டது; என் மூளையோ தொட்டியில் மிதந்து கொண்டிருக்கிறது. நான் ஸ்விட்சை ‘B’க்கு மாற்றினேன்; ஒரு மாறுபாடுமில்லை. அவர்கள் சொல்வதைச் சரிபார்ப்பதற்காக, முதன்மை ஸ்விட்ச் ‘பி’(B) யில் இருக்கும் நிலையில், தொட்டியின் வெளிக்கடத்தி ஸ்விட்சை அணைத்தேன். நிச்சயமாக மயங்கினேன். அந்த வெளிக்கடத்தி குமிழை மீண்டும் இயங்கு நிலைக்குக் கொண்டு வந்ததும், நான் இந்த முதன்மை கட்டுப்பாட்டுக் குமிழை ஏற்றியும், அணைத்தும் விளையாட்டு போல் செய்தேன். இந்தக் குமிழ் மாற்றில், மாற்றும் ஓசை கேட்டாலும், வேறெதுவும் மாறவில்லை. பாதிப் பேச்சில், உரையாடலை ‘B’ யிலிருந்து ‘ஹெச்’ சிற்கு மாற்றினாலும், தடைகள் எதுவும் இல்லாமல், பேச்சு இயல்பாகத் தொடர்ந்தது. எனக்கு உபரியாக ஒரு மூளை கிடைத்துள்ளது. ஒரு செயற்கை உறுப்பு, என்னைப் பேணும் ஒன்று, ஏதேனும் துர் நிகழ்வு யோரிக்கிற்கு ஏற்பட்டாலும், மாற்று மூளை கைவசம் இருக்கிறது. அல்லது யோரிக்கை உபரியாக வைத்துக் கொண்டு, ஹ்யூபர்ட்டை நான் பயன்படுத்தலாம். இவ்விரண்டிற்கும் வேறுபாடுகளில்லை- ஏனெனில், என் உடல் தளர்ச்சியுற்றாலும், அது என் இரு மூளைகளையும் பலவீனப்படுத்தாது. அதன் செயல்பாடுகள் என் உடல் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கலாம், அல்லது காற்றில் மறையலாம்.

இந்த இரு குமிழ் அமைப்பு எனக்குப் பிடித்திருந்தாலும், அதன் ஒரு தன்மை என்னைத் தவிப்பான சிந்தையில் ஆழ்த்தியது. யாரேனும் ஒருவர் என் உடலிலிருந்து, உபரிகளில் ஒன்றை, அது யோரிக்கோ, ஹ்யூபர்ட்டோ, எடுத்துவிட்டு மற்றொரு உடலில்- (ஜானி, ரோசன்க்ரேன்ட்ஸ், கில்டன்ஸ்டெர்ன்?) அதைப் பொருத்தும்  சாத்தியங்கள் உள்ளனவே? முன்னர் இல்லாதிருந்தாலும், இப்போது இருநபருக்கான வாய்ப்பு உள்ளதல்லவா? ஒரு உடல் என்னுடையதாக, மற்றொன்று என் இனிய இரட்டையின் உடலாக இருக்கும். இந்த நிலையில், யோரிக்கின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடலா, அல்லது ஹ்யூபர்ட்டின் கட்டுப்பாட்டில் இருக்கும் உடலா, உலகோரால் டென்னெட் என்று ஏற்கப்படும்? உலகம் தீர்மானிப்பது கிடக்கட்டும், நான், இவ்விரண்டில் யார்? யோரிக் முன்னர் வசித்த முந்தைய உடலான ஹேம்லெட்டில், தற்போதைய ஃபோர்டின்ப்ராஸ் என்ற உடலின் செயல்பாடுகளை இயக்கும் யோரிக் சம்பந்தமுள்ள நானா? இது ஒரு வழியில் சட்டப்படி முறையானதுதான்; மனோதத்துவ வழியிலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். மற்றொரு வழியில் மீயியல் பொருண்மையுடன் இதன் அமைப்பு? அதாவது குருதியுடன், தன்னிச்சைத் தன்மையுடன், அதன் வாசத்துடன், சட்ட உரிமையை எப்படிப் பொருத்துவது?  இப்படி நினைத்துப் பாருங்கள்- இரண்டாவது உடல் நிகழ்விடத்திற்கு வருவதற்கு முன்னால், நான் யோரிக்கை உபரியாக வைத்துக் கொண்டு, ஹ்யூபர்ட்டின் வெளிக்கட்டளைகள் படி என் உடலான ஃபோர்டின்ப்ராசை இயக்கி வந்தேன் என்றால், இந்த ஹ்யூபர்ட், உடல் இணையர்கள், ஒரு சட்ட உள்ளுணர்வை மற்றொரு சட்ட உள்ளுணர்வால் எதிர் கொள்ளும் மரபை ஒட்டி, அமர்ந்திருப்பவனுக்கு ஆசனம் என்பது போல், எதெல்லாம் டென்னெட்டிற்குச் சொந்தமாக இருந்ததோ அதெல்லாம் இந்த இணையர்களுக்கு வம்ச வழியில் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறதல்லவா? இந்தக் கேள்வி சுவாரசியமானது, ஆனால், இதைவிட சிக்கலான கேள்வி ஒன்றிருக்கிறது. விபரீதங்கள் எதுவும் ஏற்படுமாயின், இரு மூளை, ஓரு உடலிற்கு இருப்பதால் (ஒரு மூளை மட்டுமே இயங்கும்- குமிழை மாற்றினால் மற்றொன்று செயல்பாட்டிற்கு வரும்) இரண்டில் ஒன்று எப்படியும் கைகொடுத்துவிடும் என்பதை என் உள்ளுணர்வு வலுவாக நம்பியது. ஆனால், இரண்டுமே இருக்க வேண்டுமா என்பதில் எனக்குக் கலவையான உணர்ச்சிகளே இருந்தன.

என் கவலைகளை திட்ட இயக்குனருடனும், அறிஞர்களுடனும் பகிர்ந்து கொண்டேன். சமூகக் காரணங்களுக்காக நான் ‘இரு டென்னெட்’ என்பதை அருவெறுத்தேன். நானே என் மனையின் அன்பிற்கு பகையாளியாக வரலாமா? மிதமான என் பேராசிரியர் வருவாயை மற்றொரு டென்னெட்டோடு பகிர முடியுமா? இதை விடவும், தலை சுற்றுவதும், ருசியற்றதுமான ஒன்றிருக்கிறது- நாங்கள் ஒருவரையொருவர் இவ்வளவு அந்தரங்கமாக அறிய நேருமே, அது எத்தனை சங்கடம்?

ஆய்வகத்தினரின் கருத்து வேறுவிதமாக இருந்தது. இதன் வெளிச்சப் பகுதிகளை எடுத்துச் சொன்னார்கள். “பல செயல்களைச் செய்ய நான் ஆசைப்படவில்லையா, ஒரே ஒருவனாக இருந்ததால், அதைச் செய்ய முடியாமல் போன ஏக்கம் எனக்கில்லையா? ஒரு டென்னெட், பேராசிரியராக, குடும்பத்தில் இருந்து கொண்டு இனிமையாக வாழலாம்; மற்றொருவர், குடும்பத்தில் இருக்க முடியாதென்றாலும், பயணங்கள் செய்யலாம், சாகசங்களில் ஈடுபடலாம். இப்படி ஊர் சுற்றும் டென்னெடிற்கு குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள ஒருவர் இருக்கிறார் என்பது மன நிறைவைத் தரும். நான் ஒரே நேரத்தில் நம்பிக்கைக்கு உரியவனாகவும், கபடனாகவும் இருக்க முடியும். என் அதீதக் கற்பனைகளில் மென்மேலும் அவர்கள் தரும் தெளிவற்ற சாத்தியக்கூறுகளை நான் செவிமடுக்காமலும் இருக்கலாம்!” ஆனால், ஒக்லஹோமாவில் (அல்லது ஹூஸ்டனிலா?) நான் பட்ட சிரமங்களால், நான் சாகசத்தை விரும்பவில்லை. (ஒரு வேளை இப்படியான ஒரு அம்சத்தை அவர்கள் சொன்னர்களா என்பதிலும் எனக்கு உறுதியில்லை.)

ஏற்றுக் கொள்ள முடியாத இன்னொரு சாத்தியமும் உள்ளது- ஃபோர்டின்ப்ராசிலிருந்து வரும் உள்ளீடுகளை, யோரிக்கிற்கோ, ஹ்யூபர்டிற்கோ, செலுத்துவதை தடை செய்துவிட்டால், இரு டென்னெட்டுகள், அந்தப் பெயருக்கு உரிமை கோரும் டென்னட்டுகள் இருப்பார்கள்; ஒருவர்,ஃபோர்டின்ப்ராஸ் உடலுடன் இருக்க மற்றவர் சிதைவுற்று, உடலற்று இருப்பார். இது நடக்காமல் தடுக்க என்ன வழி என்று என் சுய நலத்தாலும், பரோபகார எண்ணத்தாலும் யோசித்தேன். யாரும், எப்போதும், முதன்மைக் குமிழ்களை என்னுடைய (எங்களுடைய… இல்லையில்லை…. என்னுடைய) அனுமதி, சம்மதமின்றி இயக்காமலிருப்பதற்கும், பரிமாற்றி இணைப்புகளை பாழாக்கவோ, துண்டிக்கவோ செய்யாமல் இருப்பதற்கும் என்ன செய்ய முடியும் என்று கேட்டேன். ஹூஸ்டனில் இருக்கும் இந்தக் கருவியை என்னால் வாழ் நாள் முழுவதும் பாதுகாக்க முடியாது. எனவே நாங்கள் சம்மதித்து ஒரு முடிவிற்கு வந்தோம்- ஆய்வகத்திலுள்ள மின்னணு இணைப்புகளைக் கவனமாகப் பூட்ட வேண்டும்; அதாவது, யோரிக்கிற்காக வைக்கப்பட்டுள்ள உயிர் காப்பு சாதன மின் இணைப்புகள், ஹ்யுபர்ட்டிற்குச் செல்லும் மின் இணைப்புகள், எந்தக் கட்டத்திலும் செயல்படாமல் ஆகக் கூடாது- அவற்றிற்கான பாதுகாப்பு கவசம் தேவை. தொலைவிலிருந்து இயக்கும் வசதியுடன் கூடிய வானொலி இணைக்கப்பட்ட குமிழை மட்டும் நான் என்னுடன் எடுத்துச் செல்வேன். என் இடுப்பைச் சுற்றி நான் அதை அணிந்துள்ளேன். இதோ, இங்கிருக்கிறது பாருங்கள்.  சூழ்நிலையை எடைபோட்டு சில மாதங்களுக்கு ஒருமுறை மாற்றுக் குமிழிற்கு மாற்றுவேன். நிச்சயமாக, என் நண்பர்கள் உடனிருக்கையில் தான் இதைச் செய்வேன்- கடவுள் அருளால் அப்படி நடக்க வேண்டாம் தான்- நான் ‘பி’யிலிருந்து, ‘ஹெச்’ அல்லது ‘ஹெச்’லிருந்து ‘பி’க்கு வருகையில், அது செயலற்றுப் போயிருந்தாலோ, அல்லது வேறு வகைப் பயன்பாட்டில் இருந்தாலோ, நான் சூன்யத்திற்கல்லவா போவேன்? அதைத் தடுக்கும் முகமாக, என் நலன் விரும்பும் நண்பர்கள் முன்னிலையில் தான் நான் இதைச் செய்வேன். அவர்கள் உடனுக்குடன் குமிழை மாற்றி என்னைக் காப்பாற்றிவிடுவார்கள். என்னால், என் உடலில் ஏற்படும் அதீதங்களை, பார்க்க, கேட்க, உணர முடிந்தாலும், அந்தக் குமிழை கட்டுப்படுத்த முடியாது. மேலும், இந்தக் குமிழில் அது யோரிக்கா, ஹ்யூபர்டா என்ற குறிகள் கிடையாது. (இந்தச் சூழ்நிலையில், உங்களில் சிலர், நான் யாரென்று எனக்கே தெரியாது என்று நினைப்பீர்கள்; பிறகென்ன எங்கிருக்கிறேன் என்ற கேள்வி? ஆனால், இந்தப் பிரதிபலிப்புகள், என்னுடைய ‘டென்னட் தன்மையில்’ பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை; நான் யார் என்ற உணர்வில் மாறுதல் இல்லை. ஒரு வகையில், நான் யாரென்று எனக்குத் தெரியவில்லை என நீங்கள் நினைத்தால், மறு வகையில், அது, உங்கள் தத்துவ உண்மைகளின் குறைந்த முக்கியத்துவமும் ஆகும்.)

எப்படியிருந்தாலும், இதுவரை குமிழை நான் மாற்றும் போதெல்லாம் எனக்கு தவறாக ஒன்றும் நடக்கவில்லை. இப்போது முயற்சிப்போமா?

கடவுளுக்கு நன்றி. உண்மையில் நீங்கள் குமிழை இயக்குவீர்கள் என்றே நினைக்கவில்லை. கடந்த இரு வாரங்களும் எவ்வளவு மோசமாக இருந்தன என்று உங்களால் கற்பனை செய்ய முடியாது.  இப்போது என்னைப் புனிதப்படுத்துவது உங்கள் முறை. இந்தத் தருணத்திற்காக நான் எவ்வளவு ஆசைப்பட்டேன்? பெண்களே, கனவான்களே, மன்னியுங்கள், இதை நான் என் சகோதரருக்குச் சொல்லியாக வேண்டும்; சகோதரர் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்- அவர் சற்று முன்னர் உங்களிடம் சொன்ன உண்மையை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்; இரு வாரங்களுக்கு முன் எங்கள் இரு மூளைகளும் ஒத்திசைவிலிருந்து சற்று விலகியது. நீங்கள் அறியாதது போலவே, இந்த என் மூளை யோரிக்கினுடையதா, ஹ்யூபர்ட் மூளையா என்பது எனக்கும் தெரியாது. விலகிச் செல்லும் போது, நாங்கள் இருவரும் பெற்ற உள்ளீடுகளை நான் எடுத்துக்கொண்ட விதம் மாறுபட்டது; அது பெரும் பனிப்பந்தானது. என் உடல்- எங்கள் உடல்- என் கட்டுப்பாட்டில் என்ற மாயை சிதறுண்டது. நான் செய்வதற்க்கு ஒன்றுமில்லை- உங்களைக் கூப்பிடவும் முடியாது. நான் இருந்தேன் என்பதே உங்களுக்குத் தெரியாது. கூண்டுக்குள் அடைபட்டது போல, அல்லது, ஆட்கொள்ளப்பட்டதைப் போல, நான் சொல்ல நினைக்காதவைகளைச் சொல்லி, என் காதுகளால், என் குரலில் அதைக் கேட்டுக் கொண்டு, நான் செய்ய நினைக்காத செயல்களை என் கைகள் செய்வதை விரக்தியுடன் பார்த்துக் கொண்டு.. என்னதிது? நான் என்னைக் கையாளும் விதத்தில் நீ என்னைக் கையாளவில்லை. நீ சுண்டுவதும், திருப்புவதுமாக என்னை விழிப்பிலேயே வைத்திருக்கிறாய். நான் முழுதும் சோர்ந்து விட்டேன், நரம்புத் தளர்ச்சி நெருங்கிக் கொண்டிருக்கிறது, உன் வெறித்தனமான செயல்பாடுகளில் விருப்பமற்று ஈடுபட்டுள்ளேன். ஒரு நாள் அந்தக் குமிழை நீ எறிந்து விடுவாய் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.”

“இப்போது உன் முறை. நீ இருக்கிறாய் என்பதை நான் அறிந்திருக்கிறேன் என்பது உன்னை ஆசுவாசப்படுத்தும். பிரசவத்தை எதிர்பார்க்கும் தாயைப் போல, நான் இருவருக்குமாக உண்கிறேன்- அல்லது சுவைக்கிறேன், பார்க்கிறேன், முகர்கிறேன் இருவருக்காக. கவலைப்படாதே, உனக்காக எளிதாக்க முயல்கிறேன். இந்த உரையாடல் முடிந்தவுடன் நாம் ஹூஸ்டனுக்குப் பறந்து சென்று, நம் இருவரில் ஒருவருக்கான மாற்று உடலைக் கேட்போம். உனக்கு ஒரு பெண் உடல் கிடைக்கலாம்- எந்த நிறத்தில் வேண்டுமோ, அப்படியே பெறலாம். ஆனால், இதைப் பற்றி நாம் சிந்திப்போம். இருவருக்குமே இந்த உடல் வேண்டுமென்றால், நாம், நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமில்லையா? நான் திட்ட இயக்குனரை ஒரு நாணயத்தைச் சுண்டி நம் இருவரில் எவருக்கு இந்த உடல் என்று தீர்மானிக்கச் சொல்லுவோம். புது உடல் யார் பெறப் போகிறார்கள் என்பது தெளிவாகிவிடும். இவர்கள் சாட்சியாக உன் நலனை நான் பாதுகாப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.” 

இனிய பெண்களே, மாமனிதர்களே, நாம் இப்போது கேட்ட உரை இப்படித்தான் என்னால் பேசப்பட்டிருக்கும் எனச் சொல்ல மாட்டேன். ஆனால், அவர் சொன்னது அனைத்தும் சத்தியமான உண்மை. நான், இல்லை, நாங்கள், உங்கள் அனுமதியுடன் அமர்கிறோம்.”

‘மூளைப்புயல்கள்’ உட்பட பல புத்தகங்கள் எழுதியுள்ள டேனியல் டென்னட் அமெரிக்காவின் புகழ் பெற்ற அறிவாற்றல் விஞ்ஞானி மற்றும் மெய்யியலாளர்.

உசாவி:

https://thereader.mitpress.mit.edu/daniel-dennett-where-am-i

இந்தியா

பரசுராமர் தன் தந்தையான ஜமதக்னி முனிவரின் கட்டளைப்படி, தன் தாய் ரேணுகாவின் தலையை வெட்டினார்; அதற்கு வரமாக, அன்னை மீண்டும் உயிருடன் வர வேண்டும் எனக் கேட்டார். வெட்டுண்ட தலை மீண்டும் உடலில் பொருத்தப்பட அன்னை உயிர்த்தெழுந்தாள்.

டென்னெட்டின் சிந்தனைக் கட்டுரை ஒரு கதையாடலாக விரிந்து மனதைக் கொள்ளை கொள்கிறது. மூளை என்பதில் அவர் ‘சுயம்’ என்பதைக் காண்கிறார். 

அரிஸ்டாட்டில், மூளையை, உடலைக் குளிர்விக்கும் சாதனம் என்றார். பினியல் சுரப்பியில் தான் ‘உணர்வு’ இருக்கிறதென்று சில அறிவியலாளர்கள் சொன்னார்கள். மனிதப் பரிணாம வளர்ச்சியின் குவாண்ட விளைவு ‘தன்னுணர்வு’ என்று ராபர்ட் பென்ரோஸ் சொன்னார். பல தத்துவங்கள், கோட்பாடுகள், பரிசோதனைகள் தன்னுணர்வு, தூய உணர்வு இவை குறித்து வந்துள்ளன, வந்து கொண்டும் இருக்கின்றன. பேன்சைசிசம், (Panpsycism) இலட்சியவாதம் (Idealisam) எல்லாமும் இதை விளக்க முயன்றாலும், கிட்டத்தட்ட பாதிக் கிணறு தாண்டிய நிலையில் தான் தற்சமயம் உள்ளன. டேவிட் சால்மர்ஸ்  (David Chalmers) துணிவாகச் சொன்னார்: உணர்வை, உடல் பாகமாகவோ, உள் உறுப்பாகவோ, மூளையாகவோ, மூளை, மனம் என்பதன் பகுதியாகவோ நிரூபிப்பது கடினமான ஒன்று. (Hard Problem of Consciousness)

நம் வேதாந்தங்கள், குறிப்பாக அத்வைதம், உணர்வை, ஒரு அடிப்படைக் காரணியாகச் சொல்கிறது. இந்த உலகின் அடிப்படைகள், பொருள், மற்றும், சக்தி தான் என்று இயற்பியல் சொல்கிறது. பேருணர்வின் வேறுபட்டத் தோற்றங்கள் பொருளாகவும், சக்தியாகவும் உணரப்படுகின்றன என்றும், அந்த உணர்வே ‘ப்ரும்மத்தினால்’ ஏற்படுகிறது என்றும் நம் வேதாந்தங்கள் சொல்கின்றன. இயற்பியல் ‘வெளியே பார், நிரூபி’ என்று சொல்கையில் ‘உள்ளே பார், உணர்ந்து விடு’ எனச் சொல்கிறது வேதாந்தம். மூளையை உடலியக்கத்தைக் கட்டுப்படுத்தும் சாதனமாக மட்டுமே நாம் பார்க்கிறோம். நம் கோட்பாடு ‘சத்யம், ஞானம், அனந்தம்;- உண்மை, தெளிவுற அறிதல், எல்லையற்ற பரம்’

“இந்த அகிலம் பரந்து விரிந்திருக்கிறது. நம் நவீன அறிவியல் சாதனங்களாலும் இன்று வரை அறிய முடியாத பல விண்மண்டலங்கள் இருக்கின்றன. இத்தகையதொரு பிரும்மாண்டத்தை படைத்துள்ள ‘ப்ரும்மம்’ எல்லையற்ற ஒன்றாகத்தான் இருக்க முடியும் எனக் கருதுகிறோம். உணர்வு என்பது உணர்பவரைச் சார்ந்தது, உணரப்படும் பொருளைச் சார்ந்ததில்லை என்பது உபநிஷத்தின் கருத்து. அண்டத்தில் இருப்பது பிண்டத்திலும் இருக்கிறது என்றும், நம் உள்ளே உறையும் அந்தத் தூய்மையை ஐந்து கவசங்கள் மூடியிருக்கின்றன என்றும் சொல்லும் தைத்ரேய உபனிஷத் இப்படியாக வரிசைப் படுத்துகிறது.

1 உடல்- தோல் போர்த்திய இந்த உடலை நான் பார்க்கிறேன், அனுபவம் கொள்கிறேன். ஆனால், உடல் என்னைப் பார்ப்பதில்லை, அதற்கு அந்த உணர்வு கிடையாது.

2 மூச்சு- அது என் சுவாசமாக இருப்பதை நான் உணர்கிறேன், மெது மூச்சிலோ, ஆழ் மூச்சிலோ நான் அதை அறிவேன், அது அறியாது.

3.மனம்- என் உணர்ச்சிகளை நான் கவனிக்கிறேன். அது பயணம் செல்லும் இடங்களை நான் உணர்ந்திருக்கிறேன், அது உணர்வதில்லை.

4. புத்தி- என் ஆற்றல், சேகரம், நினைவு எல்லாமும் எனக்குத் தெரியும்; அது அறிவதில்லை

5. காரண சரீரம்- அனைத்தையும் தன்னகத்தே கொண்டுள்ள இதை நான் உணர்கிறேன்- அதனால், உணர இயலாது.

சுருக்கமாக, பார்ப்பவன் மட்டுமே விழிப்புணர்வாக இருக்க, பார்க்கப்படுபவை அனைத்தும் அதைப் பற்றிய உணர்வற்று இருக்கிறது. (ஸ்வாமி ததாத்மானந்தா, ஸ்வாமி சர்வப்ரியானந்தா)”

பல இரகசியங்களை உள்ளடக்கிய ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் ‘கலா மாலா’ என்று ஒரு நாமாவளி வருகிறது. தாந்திரீகத்தில்,  உறுப்புக்களை மாலையாக்கி உணர்வூட்டுபவள் அன்னை என்று சொல்கிறார்கள். பல   நூற்றாண்டுகளுக்கு முன்னர் ‘கலா மாலா’ உபாசகர்கள், பழுதடைந்த உறுப்பை நீக்கி. புது உறுப்பை அவ்விடத்தில் பொருத்தியிருக்கிறார்கள். இது செயற்கை உறுப்பல்ல, பாதிக்கப்பட்ட மனிதரின் இயற்கை உறுப்பு, ஆனால், புதிதாகச் செய்யப்பட்டது, (ஸ்ரீ ராஜசேகர சிவாச்சாரியார்- சகஸ்ரநாம விளக்கச் சொற்பொழிவு)

மொழிக்கும், நினைவிற்கும் அப்பாற்பட்டதான ஒன்று; புரிந்து கொள்ள முயல்வோம். விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்தே வளரட்டுமே!

Exit mobile version