
எங்கோ ஓர் மரத்தில் துணைக்காக ஓர் மைனா
நாம் நட்டு முளைத்த விதை
திடீர் கோடை மழை
தென்றலுடன் சில வேளைகளில் கடற்கரையின் மணல் வாசம்
நடு ஜாமத்தில் நகரத்துச் சாலைகள்
இரவின் அமைதியில் எங்கோ ஒலிக்கும் ராஜா
எதிர் ஜன்னலில் கையசைக்கும் யாரோ ஓர் குழந்தை
குதித்துக் குதித்து புவியீர்ப்பு விசையை சோதித்து பார்க்கும் குழந்தைகள்
கோடையின் வருகையை அறிவிக்கும் மரத்தில் சில மாம்பூக்கள்
மதிய வேளையில் அசரீரியாய் காக்கைகள்
அதிசயமாய் நம் பலகனியில் தீடீரென்று ஓர் பச்சைக்கிளி
ஊரும் எறும்பை உற்று நோக்கம் மழலை
மழைக்குப் பின் மொட்டைமாடித் தரை
சொல்லி வைத்தார் போல் மழைக்குப் பின் துளிர்க்கும் செடிகள்
பலமணி நேரம் வானம் வெறித்து நோக்கும் தன்மை
வளர்ந்த பொழுதுகளை நினைவூட்டும் சில நிகழ்வுகள்
எங்கோ பார்த்த முகமாய் நம்மை உற்று நோக்கும் சாலையில் சில மனிதர்கள்
புத்தகத்தில் ஆச்சர்யமாய் சில வரிகள்
ஆடையில் அகப்படும் பெயரே தெரியாத பல வண்டினங்கள்
மழை விட்ட பின் இரவின் அமைதியில் சில்வண்டுகள்
பிஞ்சு விரல்களில் மருதாணி
இரவு நேர ரயில் பயணம்
ஸ்வாரஸ்யங்களை அள்ளித் தருகிறது வாழ்க்கை
ஏனோ நமக்குத்தான் நேரமில்லை
