Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

சொல்லெழும் கல்வனம்

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் வாசலை சென்றடைந்தபோது மழைச்சாரல் முழுவதுமாய் நின்றுவிட்டது. நதியோடிய கூழாங்கல் போல தேவாலயம் ஈரமாய் மின்ன, திடீரென்று ஒலித்த ஆலயமணியும், சிறகடித்த புறாக்களும் மனதுள் அதிர்வுகளை எழுப்பின. ஆலயமும் கல்லறையும் அருகமைந்த வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதி, பிரிட்டன் அரச வம்சத்தின் திருச்சபை வைபவங்களும், சிம்மாசன பதவியேற்புகளும், சவ அடக்கங்களும் நிகழுமிடம். அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவுத்துறைக்கு பங்களித்த மூவாயிரம் மேலோரின் சமாதி இங்குள்ளது. Poets’ corner என்றழைக்கப்படும் இலக்கியவாதிகளின் சமாதி மிக பிரபலமானது. மண்ணில் புதைக்கப்பட்ட படைப்பாளி ஒரு விதையை போன்றவர். அவரது  படைப்புகளோ காலந்தோறும் வாசிப்பவர் மனதில் முளைத்தெழுந்து கிளைவிட்டு வனமாகி வளர்ந்து கொண்டே இருப்பவை.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் பிரம்மாண்டமான வாசல் கதவுகள் திறந்ததும் கட்டண ரசீதை காண்பித்து உள்ளே நுழைந்தேன். ஆலயக் கதவுகள் திறந்ததையடுத்து இலக்கிய திறப்புகளும் நிகழ்ந்துவிடுமென்ற நம்பிக்கையில் பரவசமானேன். உயரமான கோபுரக் கூரைகளில் நுண்வேலைப்பாடுகளும், சுவர்களில் தீட்டப்பட்டிருந்த வண்ண சித்திரங்களும் பிரமிக்க வைத்தன. அருகருகே இருந்த இரண்டு பெரிய தூண்களின் கீழே ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தி சரங்களின் சுடரொளியில் அன்னை மேரியும், சிலுவை இயேசுவும் பிரகாசித்தனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் கட்டிடமே ஒரு நீண்ட வரலாற்றின் காலகட்டத்தை விவரிப்பது போல, அதன் நுழைவாயில் (கற்பனாவாத காலம்), நடுப்பகுதி (விக்டோரியன் காலம்), வெளியேறும் பகுதி (நவீனத்துவம் & பின்நவீனத்துவம்) என்று அமைந்துள்ளதோ என எண்ணும்படி இருந்தது.

கற்பனாவாத காலம் (The Romantic Era)

பல்வேறு காலகட்டத்தில் ஆட்சி புரிந்த ராஜாக்கள், ராணிகள், அரச வம்சத்தினர் தத்தமது கல்சவப்பெட்டியின் மீது சயன கோலத்தில் காட்சியளித்தனர். ராணி மேரி (கத்தோலிக்கம்), ராணி எலிஸபெத் (சீர்திருத்தம்), சகோதரிகள் இருவரும் புன்னகை ததும்பிய முகத்துடன் துயில, சற்று தள்ளி அவர்களது தந்தை எட்டாம் ஹென்றியின் கல்சமாதி. கிறிஸ்தவ மதம் விவாகரத்தையோ மறுமணத்தையோ ஆதரிப்பதில்லை. மதத்தின் பெயரால் இங்கிலாந்து அரசியலுக்கு நெருக்கடி கொடுத்த ரோம் வாட்டிகன் சர்ச்சுடன் (கத்தோலிக்கம்), உறவுகளை முறித்துக்கொண்டு, தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் புரிந்தவர் மன்னர் எட்டாம் ஹென்றி. அவரது முடிவுகளால் இங்கிலாந்து தேசம் வாட்டிகனிலிருந்து முற்றாக விடுபட்டு தடம் மாற்றி  சீர்திருத்தம் (Protestant) பாதையில் பயணிக்க, அதனால் ஏற்பட்ட உள்நாட்டு கலவரங்களால் நாடே தீ பற்றி எரிந்தது.

ராணி மேரியின் (கத்தோலிக்கம்) மரணத்துக்கு பின், ராணி எலிஸபெத் (சீர்திருத்தம்), முடிசூடி சிம்மாசனம் ஏறிய பிறகே பிரிட்டிஷ் இலக்கியத்தின் பொற்காலம் துவங்கியது எனலாம். ராணியின் ஆசி பெற்ற வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது அபார திறமையின் மூலம் இயல் இசை நாடகத்தை சிறப்பாக வளர்த்தெடுத்தார்.  16ம் நூற்றாண்டில் விதைக்கப்பட்ட கலை செழித்து 18ம் நூற்றாண்டின் இறுதியில் கற்பனாவாதமாக மலர்ந்தது.

கற்பனாவாதத்தின் துவக்கப்புள்ளியாக வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் கவிதைகளை கூறலாம். பணம், பதவி, அதிகாரம், அந்தஸ்து நோக்கி பிணைந்திருந்த புறம் வயமான சமூக மனங்களை கூர் தீட்டி, அகம் சார்ந்த தேடல்களை தூண்டியது இவரது கவிதைகள். புகழ்பெற்ற ‘The Daffodils’ கவிதையில் இயற்கையின் புற அழகினை விவரித்தபடி சட்டென்று ‘They flash upon that inward eye’ என்ற வரியில் நமது அக விழிகளை திறந்து விடுகிறார். மனிதனின் கால்தடம் படாத கன்னி நிலத்தின் இயற்கை எழில் நிறைந்த கன்னிமையை, சமூக அன்றாடங்களின் இறுகிப்போன சட்டகத்துள் சிக்கிக் கொள்ளாத குழந்தமையை பற்றிக் கொண்டு எழும்பியது கற்பனாவாத அலை. இந்த இலக்கிய அலை ஷெல்லி, பைரன், கீட்ஸ் கவிதைளுடன் இணைந்து பேரலையாகி அதன் உச்சத்தை தொட்டது.

இதே காலகட்டத்தில் அமெரிக்க புரட்சியும், ஃபிரெஞ்சு புரட்சியும் வெடித்தன. Romanticism என்பது ரொமான்ஸ் அல்ல. அது சமூகத்திலும் இலக்கியத்திலும் நிகழ்ந்த விடுதலை புரட்சி என்கிறார் விக்டர் ஹியூகோ. ழான் ழாக் ருசோவின் ‘The Social Contract’, எட்மண்ட் பர்க்கின்  ‘Revolution in France’, தாமஸ் பெயினின் ‘The Rights of Man’ அனைத்தும் தனி மனித உரிமைகளுக்கான அறைகூவலை விடுத்தன. ஒடுக்கப்பட்ட குரல்களின் வேதனைகள் கவிதையாக பொங்கியெழ (William Blake), அடக்கி வைத்து ஆளப்பட்ட பெண் சமூகத்தின் ஆழ்மன விருப்பங்கள் Frankenstein பூதமாக வெளிவர (Mary Shelly), அடிமையாக வாழ்ந்த இனம் சங்கிலியை உடைத்து கிளர்ந்தெழ (Charlotte Smith), கண்களில் கனவுகளை ஏந்தி, கவிதைகளில் கற்பனையை சுமந்து, சமூக நீதிக்கு ஏங்கியபடி கற்பனாவாதத்தின் காலம் நிறைவுற்றது.

விக்டோரியன் காலம் (The Victorian Era)

விஸ்ரூபம் என்றால் என்ன? அது தெய்வங்களுக்கு மட்டுமே உரிய ஒன்றா? மண், மரம், மனிதர்களை விஸ்வரூபம் எடுக்க தூண்டுவது எது? கடுகளவு ஆல் விதைதான் ஆலமரமாகி விழுதுகள் மூலம் பரவுகிறது. மனித ஆத்மா தன்னை உணர்ந்த பின் மகாத்மா ஆகி விடுகிறது. வலசை பறவைகள் கண்டங்கள் தாண்டி பறந்து விசும்பின் எல்லையை அளந்து விட துடிக்கின்றன. குட்டி தீவாக இருந்த பிரிட்டிஷ் தேசம் உலகெங்கும் பரவி விரிந்தது விக்டோரியா மகாராணி ஆட்சியில் தான். “The sun never sets on the British Empire” மிக புகழ்பெற்ற சொலவடை.

தேன் கூடு போன்ற பிரிட்டன் தேசத்தில் அமர்ந்தபடி விக்டோரியா அவர்கள் ராணி தேனீயாய் ஆட்சி புரிய, தொழிலாளி தேனீக்கள் மற்ற தேசத்தின் மலர்களில் உள்ள தேனை எல்லாம் உறிஞ்சி கொணர்ந்திங்கு சேர்த்தனர். கிழக்கு இந்திய கம்பெனியில் வேலை செய்த லார்டுகளின் சிலைகள், மோவாயை தூக்கிக்கொண்டு நெஞ்சை நிமிர்த்தியபடி கம்பீரமாய் நின்றன. தங்கள் கீழேயுள்ள சேவகர்களுக்கு ஆணை பிறப்பித்தே பழகியவர்கள். மேலே உள்ள எஜமானர்களுக்கு வளைந்து பணிந்தவர்கள். லார்டு தளவுசி, லார்டு இர்வின், லார்டு கர்ஸன் என வரிசை நீண்டு செல்ல, நான் புன்னகையுடன் அந்த சிலைகளை கடந்து சென்றேன்.

விக்டோரியன் காலத்தில் தனி மனித உணர்வுகளும்  கற்பனாவாதமும் பின்னுக்கு  தள்ளப்பட்டன. சமுதாயத்துக்கு பயன் தராத படைப்புகள் யாவும் தேவையற்றதாக முத்திரையிட்டு நிராகரிக்கப்பட்டன. சமூக லட்சியங்களும் அதற்கான  தியாகங்களும் முன்னிலை பெற்று, படைப்புகள் வெளிவந்தன. இதே காலகட்டத்தில் அறிவியலின் அசுர பாய்ச்சலால், பல்வேறு அறிவுத்துறைகள் இணைந்து மதங்களின் அஸ்திவாரத்தை தகர்த்தன. மனிதன் தோன்றியது குரங்கிலிருந்து என்றார் சார்லஸ் டார்வின். கடவுளாக பார்க்காமல் யேசு கிறிஸ்துவை மனித நோக்கில் ஆராய்ந்து கட்டுரைகள் வந்தன. அறிவியல் தொடுத்த தாக்குதலால் சீர்திருத்த கிறிஸ்துவம் வலுவிழக்க, கிடைத்த வாய்ப்பினை  பயன்படுத்தி கொண்டு கத்தோலிக்க கிறிஸ்துவம் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற முயன்றது. அறிவியலா, அறவியலா, அரசியலா, அழகியலா, இதில் எதை பற்றிக் கொள்வதென்று குழம்பி இலக்கியம் ஸ்தம்பித்தது.

விக்டோரியா காலத்தின் முதல் பகுதி, ஒளிமயமான இலக்கை நோக்கி நகர்வது போன்ற பிம்பத்தை சமூகத்தில் ஏற்படுத்தினாலும் அதன் இரண்டாம் பகுதி இருள் நிறைந்த முடிவையே சென்றடைந்தது. செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆனார்கள். ஏழைகள் பரம ஏழைகளாயினர். ஒழுக்கத்தின் ஏணியில் புனிதர்கள் மேலே செல்ல, மறுமுனையில் விபச்சாரம் தழைத்து விபச்சாரிகள் பெருகினர். சமூக அடுக்குகளில் அதிகரித்த இடைவெளியை, நிலவிய அவலங்களை மிக நுணுக்கமாக சித்தரித்தார் சார்லஸ் டிக்கன்ஸ்.  ப்ராண்டே சகோதரிகள் (சார்லட் , எமிலி, அன்னே),  ஜார்ஜ் எலியட் ஆகியோர் சிசுக்கொலை, பெண்ணடிமை, மற்றும் விக்டோரிய ஒழுக்கவியல் மீதான தங்கள் விமர்சனங்களை கடுமையாக முன்வைத்தனர். பெண் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை ஆண் பெயரில்தான் பிரசுரிக்க வேண்டியிருந்தது. ருட்யார்டு கிப்ளிங் ப்ரிட்டிஷ் இந்தியாவில் பிறந்தவர். இந்திய மண்ணின் தாக்கம் அவரது எழுத்தில் எதிரொலித்தாலும், அவரது சிந்தனையும் செயல்பாடுகளும் விக்டோரியன் கொள்கைக்கு கட்டுப்பட்டதாகவே இருந்தன. விக்டோரியன் சமூகத்தை போலவே இரட்டை வாழ்க்கை வாழ்ந்த ஆஸ்கார் ஒயில்டு மீது ஓரினச்சேர்க்கை குற்றம் சுமத்தப்பட்டு அவர் பிரான்சுக்கு தப்பியோடினார். தேசத்தின் பொருளாதாரம் வீழ்ச்சியடைய, சமூகத்தில் பேராசையும், அதிருப்தியும் கரை புரண்டு ஓட, விக்டோரியன் காலம் மெதுவாக முதல் உலகப் போர் நோக்கி நகர்ந்தது.

நவீனத்துவம் (Modernism)

லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் அதிமானுடர்களின் கல்சமாதிகள் மட்டுமே இதுவரை தென்பட்டதால், திடீரென பெயரற்ற முகமற்ற ஒரு போர் வீரனின் கல்லறையை கண்டதும் வியப்பில் நின்று விட்டேன். முதல் உலகப்போரில் சண்டையிட்டு யுத்த களத்தில் உயிரழந்த அந்த போர் வீரனின் கல்லறையை சுற்றி சிகப்பு பாப்பி (Poppy) பூக்களும், மலர்வளையங்களும் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. மிக உயர்ந்த நோக்கங்களுக்காக யுத்தகளத்தில் அதிமானுடர்கள் போரிடுகையில், அதில் ஒரு சாதாரண பிரஜையின் பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும் என்பது ராமாயணம், மகாபாரதம் காலந்தொட்டே எழுகின்ற கேள்வி.

இரண்டாயிரம் ஆண்டுகளாக ஐரோப்பாவை ஆட்டிப் படைத்து கொண்டிருந்த கிறிஸ்துவ மதத்தையும், போலி விழுமியங்களால் இறுகிப் போயிருந்த விக்டோரியன் சமூகத்தையும் கேள்வி கேட்பதின் மூலம் துவங்குகிறது நவீனத்துவம் (Modernism). சோஷியலிச கேள்விகள் (கார்ல் மார்க்ஸ்), உளவியல் கேள்விகள் (சிக்மண்ட் பிராய்ட்), தத்துவ கேள்விகள் (நீட்ஷே) என பல்வேறு அறிவுத்துறைகளின் கேள்விக் கணைகளால் விக்டோரியன் காலத்து கொள்கைகளும் கோட்பாடுகளும் நொறுங்கி விழுந்தன.

உலகையே வென்ற ஆங்கிலேயர்கள், அவர்கள் கைப்பற்றிய காலனி தேசங்களில் வசித்த காட்டுமிராண்டிகளின் வாழ்விலே ஒளியேற்றும் சுமையினை (whiteman’s burden) தாங்களாகவே நிர்ணியித்துக் கொண்டனர். அதே சமயம் அதீத பேராசையால், கீழ்மையின் உச்சத்தால் உந்தப்பட்டு காட்டுமிராண்டிகளை விட மிகக் கொடூரமாக உலகப் போர்களில் ஈடுபட்டனர். மிக விசித்திரமான முரண் அது. 

யுத்தத்தால் உலகத்தின் புத்தி பேதலித்தது. மதக் கொள்கைகளை, சமூக ஒழுக்கவியலை, மரபிலக்கியத்தை மீறிச்சென்று நவீன வகை எழுத்து தோன்றியது. ‘Stream of consciousness’ அதாவது படைப்பாளியின் பிரக்ஞை, ஒரு புனல் போல எல்லா திசையிலும் வழிந்தோடி படைப்பில் ப்ரதிபலித்தது. கட்டற்ற காமத்தின் வெளிப்பாடாக (டி.எச். லாரன்ஸ்), சுய வதையின் விவரணையாக (வர்ஜினியா வுல்ப்), சாகச பயணங்கள் வழியாக (ஜேம்ஸ் ஜாய்ஸ்), நவீனத்துவ எழுத்தாளர்கள் தோன்றி, தங்கள் புதினங்களை புதிய வகையில் புனைந்தனர்.

இதே கால கட்டத்தில் ரஷ்ய புரட்சி வெடித்தது. மன்னராட்சி கவிழ்ந்து மக்களாட்சி மலரும் என்ற நம்பிக்கை பொய்த்து, சர்வாதிகாரிகள் தோன்றினர். ஹிட்லர் (ஜெர்மனி), முசோலினி (இத்தாலி), ஃபிரான்கோ (ஸ்பெயின்) ஆகியோர் இணைந்து மற்ற ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுத்தனர். வதை முகாம்களில் யூதர்களை கொன்று குவித்தனர்.  ஜப்பான் ப்யர்ல் துறைமுகத்தை தாக்க, பதிலுக்கு அணுகுண்டை வீசியது அமெரிக்கா. குரங்கு கையில் பூமாலை போன்று மானுடத்தின் கையில் சிக்கி சீரழிந்தது பூமிப்பந்து.

பின்நவீனத்துவம் (Postmodernism)

நவீனத்துவம் ஒரு படி முன்னே சென்று பின்நவீனத்துவமாக (Postmodernism) பரிணாமம் அடைந்தது. பூமாலையில் இருந்த பூக்களை உருவி பிரபஞ்சத்தை நோக்கி சிதறியடித்து அவற்றை நட்சத்திரங்களாக்கியது. (Maximalism). பூமாலையை நசுக்கி பிழிந்து ஒரு சொட்டு துளியாக காண்பித்தது. (Minimalism). தலைகீழாக்கம், சிதறல்தன்மை, அதீத பகடி, மாய யதார்த்தம் என பரிசோதனைகள் செய்தது. படைப்பாளி-படைப்பு-வாசகர் எனும் சரடு அறுந்து, மையங்கள் சிதறி, சுயங்கள் அழிந்து, அரிதாரங்களை கலைத்து பூசி, அவதாரங்களை மாற்றி, படைப்பாளியையும் வாசகரையும் இரு கைகளால் அணைத்தபடி பின்நவீனத்துவ படைப்புகள் மேலெழுந்தன.

ஒரு காலத்தில் சூரிய அஸ்தமனமே காணாமல் இருந்த பிரிட்டிஷ் பேரரசு, தனது ஆதிக்கத்தில் இருந்த நாடுகளுக்கு சுதந்திரத்தை அளித்து வெளியேறி, பின்னர் ஐரோப்பிய நாடுகளுடன் இருந்த தனது வர்த்தக உறவுகளை முறித்துக்கொண்டு (Brexit), இன்று மேலும் மேலும் தன்னை நோக்கிய அகப்பயணத்தில் உள்ளது. தன்னை அறிந்து, தன்னை இழத்தலும் ஒரு வகையில் விஸ்வரூபமே.

Poets’ Corner

இறுதியில் நான் Poets’ Corner பகுதியை கண்டுபிடித்து விட்டேன். தரையில் பதிக்கப்பட்ட ஒவ்வொரு கல்லிலும் இருந்த இலக்கியவாதிகளின் பெயரை வாசித்து பெரும் கிளர்ச்சியடைந்தேன். பைரன், எலியட், டிலான், டென்னிஸன், ப்ரவுனிங், டி.எச்.லாரன்ஸ் என்று கல்வனம் நீண்டு சென்றது. சிறிய பீடத்தில் வில்லியம் ப்ளேக் கவிஞனின் மார்பளவு சிலை. ஜேன் ஆஸ்டன், சார்லஸ் டிக்கன்ஸ், ருட்யார்ட் கிப்ளிங் தாண்டி, ஒய்யாரமாய் நின்றபடி ஷேக்ஸ்பியரின் முழு உருவச் சிலை. அவரருகே வில்லியம் வேர்ட்ஸ்வர்த். உயரமான பீடத்தில் சிம்பொனி இசைக்கலைஞன் ஹான்டல் சிலை. பிரிட்டிஷ் கவிதைகள், இலக்கியங்கள், சிம்பொனிகள் அனைத்தும் எனக்குள் மின்சாரமாய் பாய்ந்து எனது நரம்புகளை அதிர வைத்து ஒரு வித பித்து நிலையில் மிதந்தேன்.

பிஞ்சு மழலையொன்று இலக்கியவாதிகளின் சமாதி கற்களின் மீது தவழ்ந்தும் தத்தி தாவியும் ஓடியது. ராமனின் பாதம் பட்டு கல்லாக இருந்த அகலிகை உயிர் பெற்று எழுந்தது போல், அந்த மழலையின் கால் தீண்டி அத்தனை படைப்பாளிகளும் எழுந்துவிட மாட்டார்களா என்று ஏங்கினேன். அப்படி அவர்கள் உயிர்பெற்று எழுந்தால் முதலில் ஒரு கொத்து Daffodils மலர்களை வேர்ட்ஸ்வர்த் கைகளில் திணித்து வரவேற்பேன். ஒரு அழகிய நாய்குட்டியை பைரனுக்கு பரிசளிப்பேன். ஜேன் ஆஸ்டினுடன் தேநீர் குடிப்பேன்.  Sarabande இசைக்க ஹான்டலிடம் மன்றாடுவேன்.

என் மனதுக்கு நெருக்கமான ஆங்கில இலக்கியவாதிகளின் நினைவிடத்தில் நின்றது வாழ்வின் முக்கிய தருணங்கள். தமிழ் இலக்கியத்துக்கு இரண்டாயிரம் வருட சரித்திரம் உள்ளது. அவர்களையெல்லாம் இணைத்து தமிழகத்தில் ஒரு நினைவகம் உள்ளதா என்ற கேள்வியும் ஏக்கமும் மனதில் தோன்றியது. ‘நான்’, ‘கல்’ என்பதெல்லாம் சிறிய சொற்கள் மட்டுமே. ‘நான்’ என்கிற சிறிய ‘கூழாங்கல்லை’ வாழ்நாள் முழுவதும் இறுகப் பற்றிக் கொள்வதை விட, அந்த கல்லை சமூகத்துக்கு தானமாக அளித்துவிட்டால், அது மற்ற கற்களுடன் இணைந்து தஞ்சை பெரிய கோவில் போல ஒன்றாகி பல காலத்துக்கும் அழியாமல் நிற்கும். வள்ளலாரும் பாரதியும் அப்படி வாழ்ந்து காட்டியவர்கள். தமிழகத்தில் வள்ளுவன், ஒளவை, கம்பன், ஆண்டாள், வள்ளலார், பாரதி, புதுமைப்பித்தன், தி.ஜா, லா.ச.ரா, ஜெயகாந்தன், கி.ரா போன்ற படைப்பாளிகள் அனைவருக்கும், ஒரே கூரையின் கீழ் ஒரு நினைவகம் அமைய வேண்டும். இனி வரப்போகும் தலைமுறைகளின் பிஞ்சு பாதங்கள் பட்டு அந்த மாபெரும் படைப்பாளிகள் எழுந்து வர வேண்டும். அவர்களது படைப்புகள் அவர்கள் வாழ்ந்த சமகாலத்தையும் தாண்டி எக்காலத்துக்கும் உரியது என்பதால் அவர்களின் சொற்கள் மீண்டும் மீண்டும் சுழன்று வந்தபடிதான் இருக்கும். ஆம். கனவு மெய்ப்பட வேண்டும்.

Exit mobile version