முதலில் இலக்கிய நண்பர்களின் வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களில் வந்த நூல் வெளியீட்டு விழா அறிவிப்பில் காட்சிப் பிழையாக நாவலின் தலைப்பை ‘கொடை மடம்’ என்பதற்கு பதிலாக ‘கொலை மடம்’ என்றே வாசிக்க நேர்ந்தது. அதுவும் ஒரு வகையில் சரியான தலைப்புகளில் ஒன்று கூட.
அரிட்டாபட்டி சமணப் படுகையில் தொடங்கி அங்கேயே திரும்ப வந்து நிற்கிறது கொடைமடம். இந்தப் பெருங்கதையில் முகுந்தனின் துணை கொண்டு காண்பித்தது .. மாற்றில்லா அரசியல் எனும் தீவிரவாதத்தின் கோர முகத்தை , மதுரையின் அழகை , காதலின் வன்முறையை , மனிதக் கீழ்மையை இவை எல்லாவற்றையும் விட வாசித்து முடித்ததும் மேலெழுந்து நிற்பது இதில் காட்டப்பட்டுள்ள மனித மேன்மையே !
முகுந்தன் இடது சாரி அமைப்புகளுடன் நெருங்கிப் பழகிவருபவன். ஆனால் முழு நேர ஊழியன் அல்லன்.மறைந்த நண்பரும் அந்த அமைப்பொன்றின் ரகசிய ஊழியருமான சின்னானின் இரங்கல் கூட்டத்தில்தான் இவனின் தேய்வழக்கற்ற பேச்சின் மூலம் ஜென்னியும் , ஆதி மனிதன் முதல் இருந்து வரும் அடிப்படை ஈர்ப்பின் காரணமாக முகுந்தனும் ஒருவர் மேல் ஒருவர் ஈர்ப்பு கொள்கின்றனர்.காதலா தேவையா என்று இனம் பிரிக்க முடியாததொரு மனப்போராட்டம் இருவருக்குள்ளும். எதிலும் நின்று நிதானித்து நடைமுறைக்கு உகந்த வகையில் பேசும் முகுந்தன், தான் சொல்வதே வேதம், மார்க்சியம் மட்டுமே தனது வாசிப்பு என முழங்கும் ஜென்னி. ஜென்னியின் கருணை, அழகு,தேவை நேரங்களின் இசைவு என பல காரணிகளால், இயக்கத் தீவிரவாதம் மற்றும் காதல் எனும் பிடிவாதத்தை அவள் கொண்டிருந்தாலும் முகுந்தன் அவளால் ஈர்க்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகிறான். முரண்படுகிறார்கள், உடன்படுகிறார்கள் பின்பு மறுபடியும் முரண்படுகிறார்கள் என முரணியக்கத்தின் ஒரு முகம் இவர்களின் காதல் கதை.
மண்ணின் வளம் குன்றாமல் இருக்க ஊடுபயிரிடுவது போல , மையச்சரடாக இவர்களின் காதல் கதை அதில் ஊடுபாவாக பிண்ணிப் பிணைந்திருப்பது உபகதைகள் என குறிப்பிடப்பட்டிருக்கும் இருபத்தி மூன்று குறுங்கதைகள். மன்னிக்கவும் குறுங்கதைகள் அல்ல. அவை தோழர்களின் கொடுங்கதைகள் என சொன்னால் சரியாக இருக்கும்.
இடதுசாரி அமைப்பின் தீவிர உறுப்பினர்களை நண்பர்களாய் கொண்டுள்ளவன் முகுந்தன். ஆனால் தன்னை அதில் இணைத்துக்கொள்ளாமல் வெளியில் இருந்து பார்க்கும் சாட்சியாய் இருக்கிறான் . அவனின் பார்வையில் அந்த அமைப்புகளில் எப்படி உறுப்பினர்கள் சுரண்டப்படுகிறார்கள், அதன் கொள்கையிலேயே உள்ள அபத்தம் அல்லது பெரிய முரண் என்ன, அங்கு எப்படி இந்திய மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்க அவர்களால் முடிந்த வரையில் நுண்ணிய முறையில் தனிமனித சுதந்திரத்துக்கும், காதலுக்கும் மற்றும் திருமணத்திற்கும் மெய்நிகர் காண்டம் போட்டு துணை புரிய முடிகிறது என 360 டிகிரியில் அலசி ஆராய்கிறது இந்நாவல் . இன்றும் இந்த தீவிரத்துடன் இயங்கும் (இயங்கிக்கொண்டிருந்தால் ?) எந்த அமைப்பிற்கும் ரகசியக் கையேடாகவேனும் இதை பரிந்துரைக்கலாம்.
மனிதர்கள் மீது சகா மனிதர்கள் கொள்ளும் அபிப்பிராயத்தை(தோற்றத்தை, பின்புலத்தை, பணப்புலத்தைக் கொண்டு) மறு விசாரணை செய்ய சொல்லும் தருணங்கள் விரவிக்கிடக்கிறது இந்நாவலில். அது முகுந்தன் வாழ்பனுபவமாக பெற்றதைக் கொண்டு வெளிச்சம் பாய்ச்சுகிறது வாசகனிடம்.
ஒவ்வொரு நிகழ்வுகளைச் சொல்லும் பொருட்டு அதில் தொடர்புள்ள மனிதர்களை மட்டும் காட்டாமல் அந்த இடத்தை அதோடு இயைந்த இயற்கைக் காட்சிகளை பருந்துப் பார்வை கொண்டு வாசிப்பின் போது உறுத்தா வண்ணம் உள்ளது உள்ளபடியாய் கண்முன் நிறுத்துவது தனித்துவமான ஒன்று. கதையில் நாம் ஆழ்ந்திருந்தாலும் இந்தத் தருணங்களையும் தவற விடாது ரசிக்க வைக்கிறது. வாழ்வில் எவ்வளவு துயரும் களிப்பும் இருந்தாலும் இவை தவறவிடக்கூடாத ஒன்றென நம்மை அறிவுறுத்தாமல் அறிவுறுத்துகிறது.
முகுந்தன் ஜென்னி காதலையும் அவ்வாறே எந்த சமரசமுமின்றி முகுந்தனின் பார்வையில் அதே நேரத்தில் முகுந்தனின் பக்கம் மட்டும் பேசாமல், முகுந்தன் மூலம் ஜென்னியையும் மனதில் வைத்து பேசுகிறது அக்காதல் கதை. இருந்தாலும் முகுந்தன் முகுந்த் என அழைக்கப்பட்டபோது ‘அவன் நானில்லை’ என சொல்லி மாடிப் படிகள் அருகே அவன் செல்லாமல் இருந்திருக்கலாம் என நம் உள்ளுணர்வு சொல்லாமலுமில்லை. ஆனால் ஆதி இச்சைக்கு அவசரமே வாகனம் என நாம் அறிந்திருக்கிறோமே! முகுந்தன் மீண்டும் அரிட்டாபட்டியில் முகுந்தில் இருந்து முகுந்தனாய் மாறிய தருணத்தில் அறிந்ததைப் போல!
மையக்கதையில் முகுந்தன் ஜென்னியுடனான காதலுடன் அவர்கள் இருவர் பார்வையில் புரட்சி, அமைப்பு, கொள்கை, தீவிரம் , ஒழுக்க விதிகள், எது இலக்கியம் எது இலக்கியம் அல்ல என ஒரு அறிவார்ந்த தர்க்கங்களும் விவாதங்களும் நடக்கின்றன. அவர்களின் காரசார விவாதமொன்றுக்கு ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலும் கூட காரணமாய் அமைகிறது.
தோழர்கள் மற்றும் அவர்தம் அமைப்புகளை பட்டவர்த்தனமாக காண்பிக்கும் உபகதைகள் நம்ம உலுக்குகின்றன.
இந்த நாவலை வாசிக்க ஆரம்பித்து, சில பக்கங்கள் கடக்கும் வரை ஒவ்வொரு பக்கம் கடக்கும்போதும் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும்படி ஆனது, வீட்டில் அனைவரும் திரும்பி பார்க்கும் வண்ணம்!
அப்போது மின்னல் போல ஒன்று மனதில் தோன்றியது ‘அதுபோல சிரித்தே பல நாட்கள் கடந்துவிட்டிருந்தது’ என! பின்பு உபகதை ஒன்றை வாசித்தபோது அதில் வரும் தோழர் போலதான் நாமும் சிரிக்காமல் ரசிக்காமல் நாமே அறியா இறுக்கத்தை வளர்த்து எதை நோக்கியோ ஓடிக்கொண்டிருக்கிறோமா எனத் துணுக்குற வைத்தது.
கொடை மடம் எப்படி வாய்விட்டு நம்மை சிரிக்க வைத்ததோ அதே போல வாய்விட்டு அழவும் வைத்தது ‘தோழர் ஆர்.கே எனும் சுதாகர் ‘ கதையை படித்து (இது உண்மை!!!). தல்ஸ்தோய் வரியென ஒரு கட்டுரையில் வாசித்ததாக நினைவு ‘ சந்தோஷம் கொண்ட குடும்பங்கள் ஒன்று போல உள்ளன. துயரமிக்க குடும்பங்கள் ஒவ்வொன்றும் அவை அவை வகையில் துயரமாக உள்ளன’ என. அதுபோல இவர்கள் எல்லோரும் இடதுசாரி அமைப்பின் தோழர்கள் தான், ஆனால் அவர்கள் கொண்ட துயரம் ஒவ்வொன்றும் தனித்துவமானது. உபகதைகளையே விரித்தெடுத்தால் ஒவ்வொன்றும் தனித்தனி நாவலாகும்.
மேலே சொன்ன சில வரிகள்போக.. இந்த நாவலை வாசித்து முடித்ததும் இது என்ன கொடுத்தது எனத் தொகுக்க முயற்சித்ததில் கீழ் கண்ட வரிகள் தட்டச்சில் தானாகத் திரண்டு வந்தன.
1] அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை, இருப்பதைக் கொண்டு எந்த நேரத்திலும் சமநிலையை மீட்டிக்கொள்ள (இதை வெவ்வேறு இடங்களில் வாசித்து இருந்தாலும்) வாழ்வனுபவத்தைக் காண்பித்து அறிவுறுத்தியது .
2) கடந்த ஏழு நாட்களில் சிரித்தது எத்தனை தடவை, சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைத்தது எத்தனை தடவை என எழுதியதில் . துயர்மிகு உண்மையே முன் வந்து நின்றது.
3) சில நேரத்தில் சின்னஞ்சிறு இடர்கள் வரும்போது கூட மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாவது இயல்பு. ஆனால் அந்த அளவுக்கு நீ பெரிய ஆள் இல்ல தம்பி என உபகதைகள் வழி உரக்க அறிவிக்கப்பட்டது.
4) எல்லா இடதுசாரிகளும் சிவப்பு சால்வை மடிப்பு கலையாமல் தோளில் போட்டு, கூடவே ‘சார்லி’ அல்லது ‘பாஸ்’ perfume அடித்துக்கொண்டு வாக்கு கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் கூடும் விருந்ததுண்ணிகள், தான் அப்படி அல்ல என விரிவாக உணர வைத்தது.
5) வார்த்தைகளும்/அரசியல் பார்வைகளும் பல ஞாபகங்களை தருணங்களை நினைவுறுத்தின.
(சில உ.தா : ‘தட்டுவாணி’, ‘கெச்சல் ‘, ‘இன்று இருக்கும் காவி கழுவினாலும் அவ்வளவு சீக்கிரம் போவதல்ல’, ‘நாத்திகன் அல்ல , நம்பிக்கையை கேலி செய்பவனும் அல்ல’ )
6) காட்சி வர்ணனைகள் அப்படியே அந்த இடத்தில் நம்மை கொண்டுசென்று நிறுத்துகின்றன. நிச்சயமாக நம் வாழ்நாளில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களுக்கு அதே வடிவத்தில் சென்று காணமுடியாது, ஆனால் அப்படிக் கண்டுவிட்ட சிறு உணர்வை அளிக்கிறது.
7) நிறைய இடத்தில் முகுந்தனின் மேல் பொறாமை கொள்ள வைத்தது அவரின் அனுபவங்களும் பகடிகளும்.
ஆனால் அந்த அனுபவத்தின் விலையாக அவர் கொடுத்ததை நினைக்காமலும் இல்லை.
8) உவமைகள்: நாவலில் உறுத்தாத உவமைகளுக்கு பஞ்சமே இல்லை . ‘நிலவொளி பட்டு சிறுநீர் பொன்னிறமாக மாறியது’ , ‘நாம் ஏன் எதையோ இழந்தது போல அல்லது எதையும் இழக்கக்கூடாதவர்கள் போல’ என்பதெல்லாம் உச்சம் .
9) புரட்சியில் புதையுண்டவர்கள்/ நினைவில் மேலெழுபவர்கள் : வர்கீஸ், கலைக்கோ, சுதாகர், தாமஸ், செம்முகில், சையது அண்ணன், அரிஸ்டாட்டில், மாக்கான், பரமேஸ்வரன், பாபு என நிறைய பேர். நிஜ உதாரணமாக 60 களின் ‘கேரளத்து அஜிதா’ க்களும் !
10) உதாரணங்கள்/மேற்கோள்கள்: நிறைய இடத்தில் அந்த சம்பவத்தை, நிகழ்வைச் சொல்லும்போது அதற்கு மேற்கோளாக முகுந்தன் படித்த நாவலையோ பார்த்த திரைப்படத்தையோ சொல்வது நம்மை அங்கும் இழுத்து சென்று சிந்திக்க வைக்கிறது. சில நேரங்களில் நண்பர்களுடனான பேச்சுகளில் அப்படி நமது முந்தைய அனுபவத்தை / கல்லூரி நாட்களை மேற்கோள் காட்டுவது போல.
‘எல்லாம் கிடைக்கப்பெற்று’ இப்படி மனிதத்தின் மீது அன்பு செலுத்த முகுந்தன் நம்மிடம் சொல்லவில்லை . எதுவுமில்லாமல் அப்படிச் சொல்கிறார் என்பதே இந்நாவலின் சிறப்பு. முகுந்தனா இந்நாவலின் நாயகன் என்றால் இல்லை, அது காலமே என்கிறார் சாம்ராஜ்.
அதை வெறும் போதனையாய் சொல்லாமல் அவருக்கே உரிய பகடியுடன் வாசிப்பறிவுடன் அடுத்தவர் புண்படா மெல்லியத் தர்க்கத்துடன் முக்கியமாக அன்றாட வாழ்வின் போக்குடன் சொல்கிறார் . நீர் வழிப் படூஉம் புணை போல ..வாழ்வை அதன் போக்கில் எதிர்கொள்கிறார் எந்த முன்முடிவுமன்றி அளவுகோளுமன்றி !
நாவலின் தலைப்பான புறநானூற்று சொல் ‘கொடைமடம்’, கிருஷ்ணனின் பெயர்களில் ஒன்றான ‘முகுந்தன்’ , மூலதனத்தின் ஆசிரியர் கார்ல் மார்க்ஸின் மனைவியின் பெயரான ‘ஜென்னி’ என ஒவ்வொன்றிலும் ஒரு வரலாற்றுக் கதை ஒளித்து வைக்கப்பட்டுள்ளது .
மதுரை பின்னணியில் ஒரு நாவல் எழுத ஜெயமோகன் சொன்னதாக நாவலின் தொடக்கத்தில் நாவலாசிரியரால் குறிப்பிடப்பட்டிருந்தது . அது செவ்வனே நிறைவேற்றப்பட்டுள்ளது என்றே படுகிறது.
