
ஒரு கோடை மாலை வேளையில் மலராத மல்லியின் வாசம் நுகர்ந்து நானும் மஞ்சுவும் கண் விழித்தோம். மஞ்சு என் பெரிய அண்ணனின் மகன் வழி பேத்தி. நான் கல்யாணி . மஞ்சு இந்த வீட்டை பொறுத்தவரை என் உளவுத்துறை. மஞ்சுவிற்கு ஐந்து வயது என்பதால் வீட்டின் எல்லா அறையிலும் சுலபமாக சந்தேகத்திற்கு இடமின்றி நுழைய முடியும் அவளால் . யார் என்ன செய்கிறார்கள் , எங்கே செல்கிறார்கள் ,என்ன உடை உடுத்துகிறார்கள் என எல்லோர் ரகசியமும் நான் மஞ்சுவின் மூலமாகவே அறிந்துணர்ந்து கொள்வேன் .
இந்த வீட்டை விட்டு நான் வெளியேறிய பொழுது என் வயது என்ன என்று எனக்கு சரியாக தெரியவில்லை. உறக்கத்திற்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட அர்த்தமில்லாத வாழ்க்கை. இலக்கே இல்லாத பயணம் போல வாழ்க்கை தினம் தினம் விடிந்து மறைந்ததினால் நான் பதினான்கு வயதுக்கு மேல் கணக்கு வைக்க மறந்து விட்டேன். வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டதாகப் பல வருடங்களுக்கு முன் சின்ன அண்ணி சொன்ன ஞாபகம் .
நான் பழைய நினைவுகளுடன் மீண்டும் இந்த வீட்டிற்குள் நுழைவதற்குள் இரண்டு தலைமுறைகள் உயிர் பெற்று விட்டன. இதே வீடு, இதே சுவர்கள் , அதே உணர்வுகள் . காலம் தான் வேறு. உடல் மரிக்கும் நினைவுகளுக்கு மரணமில்லை.
2
கீழ்தளம் , மேல்தளம் , மொட்டை மாடி என எங்கள் வீடு விசாலமாக இருக்கும் . முன்கட்டு, பின்கட்டு என வீட்டில் இரண்டு பகுதிகள் இருக்கும் .ஆண்கள் அதிகமாக முன்கட்டிலும் பெண்கள் பின்கட்டிலும் புழங்குவார்கள். சமையலறை கீழ்தளத்தில் ஒதுக்குபுறமாக இருக்கும். அங்கிருந்து சுருள் வடிவில் இருக்கும் ஒரு மரப்படிக்கட்டு மேல் தளம் நோக்கி செல்லும். பெண்கள் சுலபமாகபத் தங்கள் படுக்கை அறைக்கு சென்றுவர செய்த ஏற்பாடாக இருக்கும். பின்கட்டில் உள்ள மரப்படியில் அமர்ந்து தான் மஞ்சு தினமும் பால் குடிப்பாள் . சமையலறையைப் பார்த்தார் போல் ஒரு அறை உண்டு . யாருக்காவது பிரசவ நேரம் நெருங்கி விட்டால் மட்டும் அந்த அறையைச் திறந்து சுத்தம் செய்வார்கள் . அதற்கு பிரசவ அறை என்றே பேர். ஆஸ்பத்திரிகள் வந்துவிட்டதால் அந்த அறை இப்பொழுதெல்லாம் பூட்டியே இருக்கிறது . வீட்டின் எல்லா மூலைக்கும் சென்று வரும் மஞ்சுவுக்கு இந்த அறையில் மட்டும் அனுமதி இல்லை. நான் நுழையும் சந்தர்ப்பமும் அமையவில்லை . அதனாலேயே மஞ்சுவுக்கு அந்த அறையின் மீது ஆர்வம் . மேல் படியில் உட்கார்ந்தால் மட்டுமே பிரசவ அறையின் ஜன்னல் ஜாலி வழியாக உள்ளே பார்க்க முடியும் . நான் இந்த வீட்டிற்கு திரும்பி வந்ததில் இருந்து மஞ்சுவும் நானும் கூட்டு களவாணிகளானோம் . நானும் மஞ்சுவும் ஓர் உயிர் ஈர் உடல் . நான் நினைத்ததை செய்து முடிப்பாள் . நான் முன்னே சென்றால் மஞ்சு என் பின்னே வருவாள் .
3
கோடை நாட்கள் என்றாலே எங்கள் வீட்டில் குவிந்து கிடப்பது ஒன்று மல்லிகை மற்றொன்று மாம்பழம். பங்கனப்பள்ளி தொடங்கி ருமானி ,மல்கோவா என வரிசையாய் சந்தைக்கு வந்து கோடை முடியும் நேரத்தில் நீலத்தில் வந்து அடங்கும். கூடைகளில் வாங்கி கட்டுபடியாகாது என்பதினால் மூட்டைகளில் வாங்கி ஒரு இருட்டு அறையில் கொட்டிவிடுவார்கள். அந்த அறையைத் திறந்தாலே வெப்பமாக இருக்கும். மஞ்சம்புல் போட்டு மூடிய மாம்பழ மலைகள் இருட்டு அறையில் கன்னம் சிவக்க பழுக்க ஆரம்பிக்கும். தீப்பிடித்த ராக்கெட் வெடியாய் வீட்டு குழந்தைகள் பிய்த்துக் கொண்டு ஓடுவார்கள் அந்த அறையை காண. அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவர்களுக்குப் பொழுது விடிவதே அந்த அறையில் தான். கரி படிந்த பற்களுடன் விரலிலும் வாயிலும் பற்பொடியுடன் அந்த அறையில் பழுத்த மாம்பழங்களை தேடி குட்டி காட்டுமிராண்டிகளாக வேட்டை ஆடுவார்கள். முழங்கையில் சாறு வடிய தங்கள் வேட்டையை நாள் தோறும் தொடர்ந்தார்கள். மஞ்சு மாம்பழத்தைக் கடித்துச் சாப்பிட இன்னும் பழகவில்லை. ஆனால் அவளும் வேட்டையில் கலந்து கொண்டாள். மஞ்சுவுடன் சேர்ந்து இம்முறை நானும் பற்களில் கறையோடு மாம்பழ வேட்டையில் இறங்கினேன். சில நாட்களில் சிறுவர்கள் அந்த அறையைத் தங்கள் விளையாட்டு தலைமையகமாக மாற்றிக்கொண்டார்கள். அந்த அறையே சந்தையாகப் பாவித்தார்கள்
4
.அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. மஞ்சுவின் அண்ணன் ஆனந்த் அறையின் வாசலில் ஒரு நாள் கயிற்றைக் கட்டி பெண்களுக்கு அனுமதி இல்லை என்றான். பழுத்த மாம்பழங்களை விநியோகிக்கும் உரிமை தனக்கே உண்டு என புதிதாக சட்டம் கொண்டுவந்தான். அதிகார மையமாக தன்னை மாற்றிக் கொண்டான். வியாபாரம் நடக்குமிடத்தில் பெண்களுக்கு என்ன வேலை என்று வஞ்சகமாக யோசித்தான். வஞ்சகம் செய்பவர்களை வீழ்த்த காற்றில் நஞ்சைக் கலத்தோம். மாம்பழம் சாப்பிடும் ஆண்களை மோகினிக்கு மிகவும் பிடிக்கும் என்று ஒரு புரளியை அவன் காதுகளுக்குப் போய் சேருமாறு செய்தோம். சில இரவுகளில் மாம்பழங்களைப் பிய்த்தும், நசுக்கியும் மாம்பழ அறையின் வாயிலிலும், மொட்டை மாடியிலும் இறுதியாக அவன் தலையணைக்கு அருகிலும் போட்டு வைத்தோம் . மோகினியின் வேலை என நம்ப ஆரம்பித்தான் ஆனந்த். மாம்பழத்திற்கும் அவனுக்குமான தொடர்பு சில நாட்களில் அறுந்தது. மாம்பழ சந்தை எங்கள் வசமானது.
தினமும் பெரிய அண்ணன் கடையில் வியாபாரம் முடித்து காசுகளை மேல் துண்டில் முடிந்து வீட்டிற்கு எடுத்து வருவார். பருவ வயதில் பலமுறை “அண்ணா எனக்குக் கொஞ்சம் காசு வேண்டும்” என கேட்பேன் . “உனக்கு என்னம்மா செலவு இருக்கு” என நகர்ந்து விடுவார் . இவர்களின் பாவக் கணக்கை நான் அன்று தான் எழுத ஆரம்பித்தேன்.
5
இன்று எனக்கு வேண்டும் என மஞ்சு அவரிடம் காசு கேட்டாள் . எனக்கு வந்த அதே பதில் இன்று மஞ்சுவுக்கும் . அறையில் அமர்ந்து கணக்கு பார்த்து பீரோவில் என்னமோ பூட்டி தான் வைப்பார், ஆனால் மஞ்சுவுக்குத் தான் சாவி இருக்கும் இடம் தெரியுமே. நான் மஞ்சுவிற்குக் கள்ள சாவி போடக் கற்றுக்கொடுத்தேன்.
அன்று மொட்டை மாடியில் ஒரே பரபரப்பு . பட்டம் விடும் போட்டி இரு குழுக்களுக்கு இடையே நடக்கிறது போலும் . நானும் மஞ்சுவும் மொட்டை மாடிக்கு சென்றோம். ஒரேயொரு முறை சிறு வயதில் சின்ன அண்ணன் காற்றாடியின் நூலை என் கையில் கொடுத்து விட்டு கீழே அவசரமாக நூல் எடுக்க சென்றார் . விரல்களின் இடையில் காற்றின் அழுத்தம் . உயரே பறக்கும் பறவையின் சிறகுகள் உணரும் காற்றின் வேகத்தை விரல்களில் உணர்ந்தேன் . வாழ்க்கையில் அந்த ஒரேயொரு முறைதான் பறந்தேன் . இன்று கோடையில் நீளவானமெங்கும் சிறுவர்களும் , ஆண்களும் பல வண்ணங்களில் வால் வைத்த பட்டங்களை வீட்டுக் கொண்டிருந்தார்கள் . எல்லோர் முகத்திலும் கிளர்ச்சி . தாங்களே வானத்தில் சிறகடிப்பது போல .மஞ்சு எவ்வளவு கெஞ்சியும் யாரும் அவளை நூல் பிடிக்க அனுமதிக்கவில்லை . கண்ணாடி தூள்கள் கை அறுக்கும் எனச் சொல்லி மறுத்துவிட்டார்கள். இன்று இவர்கள் மானம் காற்றில் பறக்கவிடப்படும் என முடிவு செய்தோம் .எஸ் .எஸ் .எல் .சி படிக்கும் கர்ணனின் சிகரெட் துண்டுகள் , பள்ளிக்கு மட்டம் அடித்துவிட்டு சினிமா பார்க்கச்சென்ற சுப்பு ,
6
எப்பொழுதும் ரோட்டில் கோலி விளையாடும் வெங்கி என அனைவரின் ரகசியங்களும் அன்று நடு வீட்டில் உயரே பறந்தது .
அடுத்து எங்கள் பார்வை மஞ்சுவின் அத்தை நளினாவின் ஆடைகள் மீது விழுந்தது . இவள் படிப்பு மட்டும் பாதியில் நிறுத்தப்படவில்லை . இவள் என் பருவவயது போல் புடவை , நகை அணிவது இல்லை . புதுசு புதுசாக ஏதேதோ உடைகள் அணிகிறாள் . “அத்த்த உன்னோட டிரஸ் ஒன்னு எனக்கு தருவியா ? ” என மஞ்சு கேட்டாள் . ” போடி இதெல்லாம் உனக்குப் பத்தாது” எனப் பதில் வந்தது. கொடியில் காய்ந்த நளினாவின் ஆடைகளை ஆடு மாடுகளுக்குப் போர்த்திவிட்டோம்.
அடுத்து என் நகைகளையும் பட்டு புடவைகளையும் தேட ஆரம்பித்தோம். குறிப்பாக என் நகைகள் . வீட்டில் சின்ன அண்ணியின் அலமாரியில் என் ஒட்டியாணம் ,பெரிய அண்ணியின் அலமாரியில் என் உச்சிபில்லை என எல்லாப் பெண்களின் அலமாரிகளிலும் என் உடைமைகள் . இவர்கள் எப்படி பங்குபோட்டிருப்பார்கள் என நினைத்தாலே அருவருப்பாய் இருக்கிறது . உறவுகளை விட்டு செல்கையில் நினைவுகளையும் சந்தோஷங்களையும் விட்டு செல்வார்கள் நானோ என் பட்டு புடவைகளையும் நகைகளையுமே விட்டு சென்றேன். எனக்கு வாழ்க்கையில் சேர்ந்தவை இவை மட்டுமே . இன்று அதையும் மற்றவர்கள் உரிமை கொண்டாடுவதா ?
7
அலமாரியில் இருக்கும் என் நகைகளைக் கன்னமிட நினைத்தோம் . மீட்ட அனைத்தும் பிரசவ அறையில் ஒளித்து வைப்பது என திட்டமிட்டோம் .
சுப முகூர்த்த நாட்கள் வரும்பொழுதே எங்கள் கிராமத்துச் சொந்தங்களையும் உடன் அழைத்து வரும் . ஊரில் இருந்து காஞ்சனா சித்தி வந்திறங்கினாள் எதோ விசேஷத்திற்காக . அவள் வந்திறங்கிவிட்டால் மொத்த வீட்டின் மையமாகிப்போவாள் . ஊர் கதைகளைக் கேட்கவே அவளைச் சுற்றி கூட்டம் கூடிவிடும். முதலில் சமையலறையின் டப்பாக்களை அதிரசங்களால் நிரப்பிவிடுவாள் .ஒன்றில் வெல்லம் மற்றொண்டில் சர்க்கரை . நானும் மஞ்சுவும் இதற்காகவே சீக்கிரம் எழுந்து விட்டோம் . எல்லா அதிரசத்திலும் எங்கள் பெயர் எழுதி இருப்பது போலவே கற்பனை செய்து சிரித்துக்கொண்டோம் . சித்தி அசை போடும் கதைகளைக் கேட்டு எங்கள் உளவுத்துறையே சற்று கண்ணயர்ந்துவிட்டது. எங்கள் திட்டங்களைச் சற்று தள்ளி வைத்துவிட்டு அதிரசம் திருடும் எலிகளானோம் .
யார் வீட்டு விசேஷத்திற்காகவோ இந்த வீட்டுப்பெண்கள் அலப்பறை செய்துகொண்டிருந்தார்கள் . பெரிய அண்ணி கூட தன் சவுரியை சீயக்காய் பொடி போட்டு கழுவி காய வைத்துவிட்டாள் . இவர்கள் கூந்தல் அலங்கரிக்க மதியமே மொக்கு மல்லி வெராண்டாவில் சிறு குன்று போல குவித்து வைக்கப்பட்டிருந்தது . காஞ்சனா சித்தி நீர் தெளித்துத் தொடுக்க ஆரம்பித்தால் வீட்டில் உள்ள அத்தனை பெண்களும் சரம் சரமாக கூந்தலில் தொங்க விடுவார்கள் .
8
அன்று அத்தனை பெண்களும் மேல்தளத்தில் காஞ்சனா சித்தியுடன் கூடத்தில் உருண்டுகொண்டே சொந்தங்களின் கதைகளைப் போன வருடம் விட்ட இடத்திலிருந்து தொடங்கினர் . மரப்படிகளின் வழியாக மலர் குவியலை நோக்கி நாங்கள் இருவரும் நகர்ந்தோம். மல்லிகையின் வாசம் ஒன்று போல் இருப்பதில்லை . மாலை நேரத்து மல்லியின் மொக்கு புயலுக்கு முன்பான அறிகுறி . இரவு மலர்ந்த பின் சூறாவளி . விடிந்த பின் மழை ஓய்ந்த ஈர நிலம் . இவ்வளவு பூக்களுடன் நாங்கள் தனியாக இருந்ததே இல்லை .ஓவ்வொரு மொக்கும் ஒரு அணுகுண்டு போல இருந்தது. மஞ்சு தலையை தடவினாள் . மஞ்சுவிற்கு இன்னும் மொட்டைப் போடாததால் பூனை முடி போல ஏதோ மண்டையில் இருக்கும். பருக முடியாத அமிர்தத்தை வைத்து நாங்கள் என்ன செய்ய ? சற்று நேரத்தில் எங்கள் உடலெங்கும் மல்லிகை வாசம் படர உருண்டு புரண்டோம் . வாசம் தொலைத்த பூக்கள் இனி யார் கூந்தல் ஏறினால் என்ன ?
என் இளவயதில் ஒரு பெரிய மர அலமாரி என் அறையில் இருக்கும் . உள்ளே சின்னச்சின்னதாய் சில கள்ள அறைகள் இருக்கும் .ஒவ்வொரு கள்ள அறைக்குள்ளும் ஒரு உலகத்தை ஒளித்துவைத்திருப்பேன். மந்திரவாதியின் மாயக்கண்ணாடி அது . எந்த உலகத்தைப் பார்க்க வேண்டுமோ அந்த அறையைத் திறக்க வேண்டும் . அகண்ட விண்வெளி காணவேண்டுமென்றால் சூர்யப்பிறையும்,சந்திரப்பிறையும் ஜடையில்
9
கோர்க்கும் திருப்பில்லை நட்சத்திரங்களையும் கொண்ட அறையைத் திறக்க வேண்டும் . கார்காலக் கானகத்தை காணவேண்டுமென்றால் நீல கற்களாலான மயில்கள் தோகைவிரித்து ஆடும் என் உச்சிபில்லை அறையைth திறக்க வேண்டும் . விஞ்ஞானத்தின் புதுமைகளைக் காண வேண்டுமென்றால் என் ஒட்டியாணம் வைத்திருக்கும் அறையை நீங்கள் திறக்கத்தான் வேண்டும் . என் ஒட்டியாணம் பக்கவாட்டில் கோர்க்கப்பட்ட ரயில் பெட்டிகள் போல பல சதுரங்க கட்டங்கள் கோர்க்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் ஒவ்வொரு தோரணையில் நடனம் ஆடிக்கொண்டிருப்பர் . என் ஒட்டியாணத்தை ஒரு புகைபடச்சுருள் போல வேகமாகச் சுழல விட்டால் திரையில் வரும் ஒரு நடன காட்சியமைப்பு போல இருக்கும். அது மட்டுமா ? சரிகை மீன்களும் , தாமரையும் பட்டில் மின்னும் ஒரு சிறு குளத்தையல்லவா என் அலமாரியில் அடுக்கி வைத்திருந்தேன்.
காஞ்சனா சித்தி விசேஷம் முடிந்து ஊர் திரும்பியதும் எல்லா குருவிகளும் தங்கள் அறைக்குள் அடைந்தன . ஆனால் நானும் மஞ்சுவும் மட்டும் அதிர்ச்சியில் விழித்தே கிடந்தோம் . விசேஷத்தில் என் உச்சிபில்லையை நளினா கழுத்துச்சங்கிலியில் பதக்கம் போல கோர்த்து அணிந்திருந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை . என்னுடையது என்று மஞ்சு போய் கேட்டும் நளினா கொடுக்க மறுத்துவிட்டாள் .அதற்கான தண்டனையை அவள் அனுபவித்தே தீரவேண்டும்.
10
நளினா அடிக்கடி தனிமையில் தன் அறையில் முத்தமிடும் கடிதங்கள் இனி அம்பலமேறும் . இந்த வீட்டின் இன்னோர் முகத்தை இனி இவள் காணப்போகிறாள் . நளினாவின் கடிதங்கள் என் கைக்கு கிடைத்தது. நான் இது போன்ற கடிதங்களை ஸ்பரிசித்ததே இல்லை .சற்று நேரத்தில் என் கைகள் நடுங்கின. மஞ்சுவிற்கு தெரியாமல் நானும் அந்த கடிதங்களை முத்தமிட்டேன். பன்னீர் தெளித்திருப்பார்கள் போலும் வாசனை ரம்யமாக இருந்தது. என் நாசியில் நீண்ட நேரம் நீடித்தது அந்த ரம்யம். மஞ்சுவின் தயவால் கடிதங்கள் கைமாறியது . பூகம்பத்துக்கு நாள் குறித்து நானும் மஞ்சுவும் காத்திருந்தோம் . ஆனால் நடந்ததோ வேறு . ஒரு நாள் வீட்டுப் பெரியவர்கள் கூடி இருக்க ஒரு வாலிபன் கூடத்தில் தன் குடும்பத்துடன் அமர்ந்திருந்தான் . நளினாவின் முகத்தில் வெட்கச் சிவப்பு . சில மாதங்களில் இதே வீட்டை விட்டு நளினா சென்றாள் . நல் நினைவுகளுடன். என் நகைகளும் நளினாவுடன் சென்றது .நானும் மஞ்சுவும் மாடி சாளரத்தின் கம்பியில் முகம் புதைத்து அழுதோம்.
என் சிறு வயதில் ஒரு காலை பொழுதில் வீட்டுப் பெண்கள் என் அறைக்கு வந்து என்னை அலங்கரிக்க ஆரம்பித்தார்கள் .பின்பு அவர் இருக்கும் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அவர் சில மாதங்களாக எங்கள் வீட்டிலேயே தான் தங்கி இருக்கிறார். அவர் எப்பொழுதும் அந்த அறையை விட்டு வெளியே வருவதே இல்லை .படுக்கையில் தான் இருப்பார். என் திருமணம் முடிந்தவுடன் சில
11
வருடங்கள் கழித்து அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவேன் என்று சொன்னார்கள். ஆனால் ஒரு வருடம் முடியும் முன்பே அவருக்கு ஏதோ உடல் நலம் சரியில்லை என்று எங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார்கள். என்னை சற்று நேரம் அவர் முன் அமரச் செய்தார்கள் .நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். எனக்கு மாடிப் படியின் கீழே இருக்கும் பூனை குட்டிகளின் ஞாபகமாகவே இருந்தது . பின்பு ஒவ்வொருவராக அந்த அறையை விட்டு வெளியேறினார்கள் .நானும் எழ முயன்ற பொழுது என் தோள் பட்டையை அழுத்தி அமர செய்து விட்டார்கள் .”நீ இங்கேயே சற்று நேரம் இரு பின் வந்து கூட்டி செல்கிறோம் ” என்று சொல்லி விட்டு சென்றார்கள். அவர் வெகு நேரம் என்னைப் பார்க்காமல் ஜன்னல் வழியே வானத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். எனக்குப் பசி வேறு எடுக்க ஆரம்பித்துவிட்டது. என் கிட்ட இந்த மாதிரி மூன்று பாவாடை இருக்கு என்று இவரிடம் சொல்லலாமா? என்று நினைத்தேன். கட்டிலுக்கு அருகே இருந்த மேசையில் சில ஆங்கில புத்தகங்கள் இருந்தன . அவர் நிறைய படித்தவர் என வீட்டில் என் திருமணத்தின் பொழுது எல்லோரும் பேசிக்கொண்டார்கள்.
“இதையெல்லாமா படிச்சிருக்கீங்க ” என நான் கேட்ட பொழுது திடீரென்று என் பக்கம் திரும்பிப் பார்த்தார். பதில் ஏதும் வரவில்லை .உச்சந்தலை முதல் பாதம், வரை என்னையே பார்த்தார். அவர்
12
கண்களில் இருந்து தானாகவே கண்ணீர் வடிந்தது. பெரியவர்கள் கூட அழுவார்கள் போலும். எனக்குச் சற்று பயம் பீடிக்க ஆரம்பித்தது. “நீங்கள் ஏன் இந்த அறையிலேயே இருக்கிறீர்கள் ? உங்களுக்கு உடம்பு சுகம் இல்லையா ?” என கேட்டேன் .அதற்கும் பதில் இல்லை .”நீ இன்னைக்குப் பள்ளிக்கூடம் போகலையா? “ என்று மட்டும் கேட்டார் . “உங்களை இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கப்புறம் என்ன பள்ளிக்கு அனுப்பவேயில்லை “. நீண்ட மௌனத்திற்குப் பிறகு அவர் கேட்டார், “உனக்கு எதாவது ஆசை இருக்கா ?”நான் விழித்தேன் .
“இல்ல உனக்கு எதாவது வேணுமா…..?
” என் கிட்டதான் எல்லாம் இருக்கே ! ”
” சரி நீ பெருசானா என்னவாகப் போற ?”
“தெரியலியே ?”
“ஆஹ் நான் ஏதோ விதவை ஆகப்போறேன்னு எல்லோரும் பேசிக்கறாங்க. அது என்ன ரொம்ப ஒசத்தியான வேலையோ?”
அடிபட்ட யானையின் பிளிறல் போல் அவரின் உடலில் இருந்து ஒரு சப்தம். எனக்கு பயத்தில் உடல் முழுவதும் வெப்பமாக எதோ பரவ ஆரம்பித்தது. சப்தம் கேட்டு மற்றவர்கள் அறைக்குள் பதறியடித்து ஓடி வந்தார்கள். பயத்தில் என் அறைக்குள் ஓடி கட்டிலின் அடியே ஒளிந்து
13
கொண்டேன். எனக்கு பயத்திலும் பசியிலும் அழுகையாக வந்தது. நடந்த கலவரத்தில் என்னை மறந்து விட்டார்கள் போலும். அப்படியே உறங்கியும் போனேன். பிறகு என்னை வீடெங்கும் தேடி கட்டிலுக்கடியில் கண்டுபிடித்தார்கள். அதற்குள் மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. அவர் கூடத்தில் படுத்திருந்தார். வீட்டில் ஒரே கூச்சலும் அழுகையுமாய் இருந்தது. அவரைச் சுற்றி சொந்தங்கள். வளர்ந்த பின்பு தான் புரிந்தது அவை யாவும் மரண ஓலங்கள் என்று .அடுத்த நாள் என்னை மீண்டும் அலங்கரித்தனர் வீட்டுப் பெண்கள் அழுதுகொண்டே. அதன் பிறகு என் வாழ்க்கையில் அலங்காரத்திற்கு மட்டும் என்றுமே தடையில்லை. எனக்கு வயது அப்பொழுது பதினான்கு என எல்லோரும் மீண்டும் மீண்டும் சொன்னது ஆழ்மனதில் பதிந்து விட்டது. பிறகு என் வயதைப் பற்றிய பேச்சுக்கே தேவை இல்லாமல் போனது . எப்போதும் அலங்காரமாய் தோற்றமளிக்கும் கொலு பொம்மை ஆகிப்போனேன். பொம்மைகளுக்கு வயதாவதே இல்லை. என் பள்ளி நாட்கள் அன்றோடு நிரந்தரமாக நின்று போனது. பள்ளி செல்வது என்பது கல்வி கற்க மட்டும் அல்ல. ஒரு மழலையை இந்தச் சமூக காட்டில் விடுவதற்கு முன்னால் செய்யப்படும் ஒத்திகை. மிரட்சியுடன் நுழைந்து, பின்பு நட்பு பாராட்டி, பிறருடன் சண்டையிட்டு, உணவை பகிர்ந்து, சிலரைப் பிடித்து, சிலரை வெறுத்து, அழுது, சிரித்து, விளையாடி ………ஒரு சிறிய வகுப்பறைக்குள் மேம்படும் மழலை. அந்த
14
ஒத்திகைக்கான தேவையே இல்லாமல் போனது எனக்கு. வெளி உலகின் வாசல்கள் நிரந்தரமாக மூடப்பட்டன.
பல வருடங்களுக்கு முன் எனக்கு இடப்பட்ட சமூக கட்டுப்பாடுகள் ஏன் நளினாவுக்கு இல்லை ? அவளின் சுதந்திரம் பறி போகும் என நினைத்தோம் ஆனால் சந்தோஷத்தை ஏன் கொடுத்தார்கள் ? பதினான்கு வயது கைம்பெண் கல்யாணியை அலங்காரங்கள் செய்துகொள்ள அனுமதித்தது இந்தச் சமூகத்தின் கேலிக்கூத்துக்களா ? குமுறும் எரிமலையாய் உணர்வுகள் கொந்தளிக்க அன்று என் கையில் குச்சி மிட்டாயையா கொடுத்தார்கள் . எனக்கு கொடுக்கப்பட்ட மிட்டாய்கள் ஏன் நளினாவிற்குக் கொடுக்கப்படவில்லை ? காலனுடன் கை கோர்த்து இந்த வீட்டைப் பிரிந்து சென்றாலும் கணக்கை முடிக்க புது உடல் தரித்து நான் காலத்திடம் ஒப்பந்தம் போட்டல்லவா மீண்டும் பிறந்தேன் ? மஞ்சுவாக இந்த வீட்டில் மீண்டும் பிறந்தது இவர்களிடம் தோற்க்கவா ? இந்த முறை என் கை ஓங்கி இருக்க வேண்டும் என நினைத்துத் தயாராக வந்தேனே ? இவர்கள் சமூகச் சட்டங்களை மாற்றி எழுதி என்னை தோற்கடித்து விட்டார்களே ? தோற்றது உண்மையில் கல்யாணியா ? மஞ்சுவா ? இல்லையேல் காலம் என்னை தோற்கடித்ததா ?
பிறந்த சூழ்நிலை பெரும்பாலும் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்றால் என் வாழ்க்கையில் நான் பிறந்த காலமே என் விதியை
15
நிர்ணயித்தது போலும் . ஒரு தலைமுறை தவறி பிறந்திருந்தால் காலம் என் மீது கருணை காட்டி இருக்குமோ?
நானும் மஞ்சுவும் இப்பொழுதெல்லாம் தாமதமாகவே எழுகிறோம் . மஞ்சு மரப்படியில் தூக்கம் கலையாமல் கையில் பாலுடன் அமர்ந்திருந்தாள் . நாங்கள் பேசிக்கொள்வதே குறைந்துவிட்டது . பல வருடங்கள் கழித்து இன்று மீண்டும் பிரசவ அறையைத் திறந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். மஞ்சு வேடிக்கை பார்க்க உள்ளே சென்றாள் . மஞ்சுவின் உடலுக்கு இனி பழைய நினைவுகள் தேவையில்லை . இன்று முதல் முறையாக மஞ்சுவை முன்செல்லவிட்டு நான் வாயிலின் வெளியேயே நின்றுவிட்டேன் .
