
தன் வரியின் இறுதி வார்த்தையை
இறைந்து பரப்பியபடி
ஈரமணலை அடைந்தது அந்த அலை.
மேலும் வந்தபடியிருந்தன
வரிகளைத் தாங்கிய அலைகள்.
மந்திரஸ்தாயியில் ஒற்றைவரியாய்
மாறியிருந்தது அலையோசை.
அலைகளின் இடைவெளியில்
விரைந்து வளைபுகும் சிறுநண்டுகள்.
அப்போதுதான் உணர்ந்தேன்
அலை கொணரும் வரிகள்
வேறு வேறென!
ஆமென்று ஆர்ப்பரித்து
ஆடை நனைத்துச் சென்றது ஓரலை.
வரிகள் வேறாயினும் ஒன்றெனத் தோன்றிய
விந்தையில் லயித்தது என் மனம்.
தொலைவில் கரும் பரப்பாய்
சொல்லற்ற பேரமைதியிலிருந்தது
அப்பெருங்கடல்!
