Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

வீதித்தாய்களும் பத்துதர்மக்காரியும்

“சனியன், இவ எதுக்கு இங்க குடிவர்றா”? 

“நாசமா போச்சு, போ. எல்லாம் பணம் பண்ற வேலை”

“போங்கு குடும்பம்”

“கிடையில போறவ”

“இவளுக்கு எதுக்கு வீடு குடுத்தாங்க”?

“போலீஸ் கிட்ட கம்பளையின்ட் பண்ணனும்”

“போலீஸ்காரன் எப்படி கம்பளையின்ட் வாங்குவான்? அவனுகளுக்கு பணமே பத்தாதே”

“எதுக்கு போலீஸ்கிட்ட? நம்ம வார்டு மெம்பர்கிட்ட சொல்லி சரி செய்வோம்”

“அவளோட புள்ளை என்ன பண்ணுமோ? எப்படித்தான் வளர்த்தினாளோ?”

“பாவண்டி, அவ மக. இவளுக்கு போய் புள்ளை பொறந்திருக்கு? என்ன பாவமோ?”

“அவ புள்ளைக்கு எவ்வளவு கஸ்டம்”

“அவ புள்ளையை எப்படிரி ஸ்கூல்ல சேர்த்துனா?”

“அவ புள்ளைக்கு அப்பன் பேருன்னு  யாரைக்காட்டுவா”?

“ஓனருக்கு என்ன பணத்தாசையோ”? 

“குடும்ப பொண்ணுங்க இருக்கற தெருவிலே இவளுக்கு வீடு கொடுத்தவனை செருப்பாலா அடிக்கணும்”

“கலிகாலம்பா”

“நாம நம்ம ஆசைப்படி, பூ கூட வைக்கமுடியாதுடி”

“ஆறு மணிக்கு மேல வெளியே போகமுடியுமா?”

“எல்லாரும் நம்மள தப்பா புரிஞ்சுக்கமாட்டாங்க”

“அந்த வீட்டு ஓனரை, பார்த்தா,  நல்லா கேட்கணும்…”  –  

“என்ன தலைச்சனியனோ, நம்ம ஊர்ல வந்து ஆளுது” – இப்படியான பழகிய வசவுகளுடன் கீதா அந்த வீட்டிற்கு மகளுடனும், கணவனுடனும் குடிவந்தாள். மனம் நிறைந்த துயரமகிழ்ச்சியோடு அவள் காரமடைக்கு பக்கத்திலுள்ள ஒரு கிராமத்திற்கு புதிதாக குடி வந்தாள். அவள் வருவதற்கு முன்னே அவளைப் பற்றிய செய்திகள் காற்றில் அலை பாய்ந்து வந்தன. ஒவ்வொரு வீட்டிலும் அது எகிறி எகிறி குதித்து பரவியது. 

இன்னமும் நீங்கள் கோவையிலிருந்து காரமடைக்கு 102-ஏ டவுன் பஸ்ஸில்லோ, அல்லது மேட்டுப்பாளைய வண்டியிலோ, ஏறி வந்தால், பெரியமத்தம்பாளையம், சின்ன மத்தம்பாளையம், பெட்டதாபுரம் தாண்டியதும் ஆரம்பிக்கிறது அந்த ஊர். போர்ஜிங்ஙை கடந்து காரமடை ரயில்வே மேம்பாலம் தாண்டுவதற்கு முன்னால் கோவணஅம்மணத்துடன் இன்னமும் புழுதியைக் காட்டி சிரித்துக் கொண்டிருக்கும். அங்கே, வலதுகை பக்கம், வேப்பமரத்தைத் தாண்டி ஒரு தார் ரோடு ஒன்று பிரியுமே, அதன் வழியாக, ஒரு மைலுக்கு நான்கு என்றிருக்கும்  நாலு ஸ்பீடு பிரேக்கர்களைத் தாண்டி வந்தால், அவளுடைய புதிய ஊரைப் பார்க்கலாம். பரவசமடையலாம்.  

அந்த ஊரில் தமிழ்க்கொங்கு மண்வாசம் அடிக்கும், கொஞ்சம் தூக்கலாக. மண்வாசனையில் எவ்வளவோ வரலாறுகள் புதைந்து கடந்துள்ளன. என் சொந்தஊர்க் காதல்மனம்  அவைகளைப் பற்றிக் கேட்பதற்கு அடித்துக் கொள்ளும். அதுவும் தமிழ் வரலாற்று வாசனை வீசும் பல ஊர்களுக்கு சொந்தக்காரர்கள் தங்கி நிறைந்த மனதுடன் வாழும் வாழவைக்கும் ஊர் – காரமடைக்கு பக்கத்திலுள்ள அந்த ஊர். அது ராசுக்கண்ணுவின் சொந்த ஊர், கூட. 

அந்த ராசுக்கண்ணுவின் ஊரில் எண்பது சதவீதம் செங்கல்லும், ஓடும் வேய்ந்தவை. இப்போதும். அதுவும்  ‘மணி’ என்று ஒரு பக்கம் ஆங்கிலத்திலும், இன்னொரு பக்கம்  தமிழிலும் எழுதியிருக்கும். செங்கல்களில், ஓடுகளில்,  எல்லாம் தொண்டாமுத்தூர் மணிமொழி செங்கல் சூளையிலிருந்து வந்தவை என்பதற்கான அடையாளமாக அவருடைய பெயர் இருக்கும். அவர்தான், பார்க்கவேண்டியவர்களைப் பார்த்து, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து செம்மண்ணை சுட்டு செங்கல்லாக மாற்றியவர். அவர் வாழ்க்கை அவர் கையில் எப்போதுமில்லை என்பதற்கு அவருடைய செங்கல் சூளையே ஒரு நல்ல  அடையாளம்.  

எப்போது போன் செய்தாலும், “சொல்றா”, “எப்படியோ ஓடுதுறா”, “வியாபாரம் ஒன்னும் சரியில்லை”, “சனிக்கிழமை சம்பளம் கொடுக்கனும், அப்புறமா பேசறேன்”, “சிமெண்ட் ப்ளாக்ஸை வைச்சு வீடு கட்ட ஆரம்பிச்ச பிறகு என்னடா வியாபாரம்”,  – தினசரி வாக்கியங்களைச் சொன்னவர் அறுபது வயதிலும் வேலை செய்கிறார் – கோவை அரசுக்கல்லூரியில் படித்தவராயிற்றே. அவருடைய பரம்பரை வீடுதான் இந்த ஊரில் மிகப்பெரிய வீடு.  

இன்னும் ஒரு சில வீடுகள் மண்சுவற்றில், மேலே தென்னைக்கூரைகளுடன், வரலாற்றுத் தொச்சங்களாக காட்சியளிக்கும். இன்னும் ஒரு சில வீடுகள் பனை ஓலைகளைக்கொண்டவை. அவள் வீடு கிழக்கு ரத வீதியில். பனை ஓலையுடன். அங்கே ஒரு தேர் இருக்கும். 

வருடத்திற்கு ஒரு முறை அந்த தேருக்கு உயிர்வந்து கடவுளை ஏற்றிக்கொண்டு வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு வீதிகளில் சுற்றிவிட்டு ஓய்வெடுக்கும். வருடஉயிர் வரும்வரை பஞ்சபூதங்களும் அதைக் காப்பாற்றிவைத்திருக்கும். இந்த ஊரில்தான் கீதா குடிவந்தாள். 

யாரும் அவள் வீட்டு பால்காய்ச்சலுக்கு வரவில்லை. அவர்கள் குடும்பமும் அதைப்பற்றி எதுவும் கவலைப்படவில்லை. வந்தவர்களுக்கு ஒரு ஸ்வீட், காரம், காபி, குங்குமம். வராதவர்களால் தனக்கு பணம் மிச்சம் – அவர்களின் பணக்கொள்கைபடி வாழ்கிறார்கள்.

மேட்டுப்பாளையம் யூபில் கம்பனிக்கு பக்கத்தில் ஓடும் பவானி ஆற்றங்கரையில் ரயில்வே கேட்டுக்கு கீழ் தான்  தன் சுயதொழிலை நடத்துபவள் – கீதா. அவளுடைய கஸ்டமர்கள் பெரும்பாலும் அருகிலுள்ள கிழங்கு மண்டி ஊழியர்கள். அவளுடைய கணவன் இரு கால்களையும் கைகளையும் இழந்தவன். கிடப்பில், கிடையில் இருக்கிறான். மிக நீண்ட கழுத்து. வாகுவான உடல். மஞ்சள் பூசிய ஒரு மாநிறமுகம். புங்கைமரத்துக்கு சொந்தக்காரி.

மாலை ஆறு மணிக்கு மேல், நீங்கள் யூபில் கம்பனிக்கு பக்கத்தில் நடந்து சென்றால், உங்களை தன் கண்களால் கசிய வைப்பாள். தலை நிறைய மல்லிகைப்பூ தெளிவாகத்தெரியும். உதடும் கண்ணும் உடலும் அவளின் ஈர்ப்பு முதலீடுகள். தேவைப்படுபவர்களுக்கு மட்டும் அவள் தேவையாகயிருப்பாள். கண்ணியக்காரி. 

அவள் தன்னுடைய தொழிலுக்கு சென்று ஒரு வருடம் அய்ந்து மாதம் ஆகிவிட்டது. இனிமேல் செல்ல மாட்டாள். தொழிலை விட்டுவிட்டாள். அவள் ‘முன்னாள் பாலியியல் தொழிலாளி’ – சமூக நிலையை அடைய ஒரு ஆறு மாதம் தான் வீட்டில் இருப்பதை மற்றவர்களுக்கு கண்ணில் காட்டி படவேண்டும். பணத்திற்கு மகள் படித்துவிட்டு லாயராக இருப்பதால் பிரச்சனையில்லை. 

இங்கே குடிவந்ததுக்கு முக்கிய காரணமே அவள் மகளின் திருமணம். எக்காரணத்தைக் கொண்டும், தன்னால், அவள் திருமணம் தள்ளிப்போகக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தாள். அவளுக்கு என்று சில தொழில் தர்மங்கள் உள்ளன. முதலில் அவளுடைய உண்மையான பெயர் யாருக்கும் தெரியக்கூடாது. தெரியாது. இன்றைய பெயர் கீதா. நாளை. ஜாதா. நாளை மறுநாள் டாதா. மாறிக்கொண்டே இருக்கும். 

இரண்டாவது தர்மம்: தன்னை யாரும் பின்தொடர்ந்து ரொம்ப நேரம் வரக்கூடாது. அப்படி யாராவது தொடர்ந்து வந்தால், அவள் தன்னை மறைத்துக்கொள்ள ஒரு தோதுவான இடத்தை சணல் செடிகளுக்கு நடுவே வைத்திருக்கிறாள். தன்னை யாரும் கண்டுபிடிக்கவில்லை என்பதை நினைத்து மிகப்பெருமைப்படுவாள். டக்கென்று மறைந்து விடக்கூடிய இடம். யாராலும் கணிக்க முடியாது. 

மூன்றாவது தர்மம்: தன் வீட்டுக்கு யாரும் வந்துவிடக்கூடாது. வேலை முடிந்ததும் தன்னை யாராவது தொடர்ந்து வருகிறார்களா என்று பார்த்துவிட்டு தான் காரமடை பஸ்ஸில் ஏறுவாள். யாராவது பின் தொடர்வது தெரிந்தால், குட்டையூர், டீச்சர்ஸ் காலனி, காரமடை, பெட்டதாபுரம், பெரியநாயக்கன் பாளையம் – இறங்கவேண்டிய இடம் மாறிக்கொண்டேயிருக்கும் – நம்பிக்கை ஏற்படும் வரை. 

நான்காவது தர்மம்: தன் வீட்டைப்பற்றி யாருக்கும், எப்போதும் எந்த ஒரு சின்ன விசயமும் கூட மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதில் மிககவனமாக இருப்பாள். அவளுடைய கூடப்பிறந்தவர்கள், கணவன், குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள் யாரைப்பற்றியும் எதுவும் சொல்ல மாட்டாள். பெயர்கூட சொல்ல மாட்டாள். 

அய்ந்தாவது தர்மம்: பணம். பணத்தை வாங்கி எண்ணி பார்த்து விட்டு சரியாக இருந்தால் மட்டுமே,  தன்னிடம் வேலை செய்யமுடியும். இதில் அவள் ரொம்ப ஸ்டிரிக்ட். அப்படி நடக்காதவர்கள், அவளின் உடல் பலத்தை பட்டு தெரிந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆறாவது தர்மம்: மாதம் ஒருமுறை கலானி டாக்டரை சந்தித்து தன் உடலைக் காட்டி சரிசெய்து கொள்வாள். இதில் தவறியதேயில்லை. 

ஏழாவது தர்மம்: போலீஸிடம் மாட்டினால், அழுவது, கத்துவது எல்லாம் கிடையாது. “ஆமா சார் ” என்ற அடக்க பதிலோடு சரணடைவாள். எதிர்த்து பேச மாட்டாள். கோள் வைக்கமாட்டாள். கஸ்டமரை காட்டிக்கொடுக்க மாட்டாள். அவர்களுக்கும் சேர்த்து பணம் கட்டுவாள். ஆர்பாட்டம் செய்ய மாட்டாள்.

எட்டாவது தர்மம்: பக்கத்து வீட்டுக்காரர்களிடம் மருந்துக்குக்கூட பேசமாட்டாள். கேட்டாலும், அழைத்தாலும், பேசினாலும், பேச்சில்லை. அவ்வளவுதான். 

ஒண்பதாவது தர்மம்: புருசனை அப்படித் தாங்குவாள். அவனுக்கு கையும் காலும் மட்டுமல்ல, உயிரும் இவள் தான். 

பத்தாவது தர்மம்: தான் குடியிருந்த, குடியிருக்கும் வீதிகளில் உள்ள மற்ற எந்த ஆண்களிடம் பேசியதில்லை. அதில் ஒரு ஒழுங்கு காட்டுவாள். 

இந்த பத்து தர்மக்காரிதான் ராசுக்கண்ணு வீட்டுக்கு அடுத்த வீட்டுக்கு குடிவந்திருக்கிறாள். இரு வீட்டுக்கும் ஒரே காம்பவுண்டு. இடது புறம் எட்டிப்பார்த்தால் அவள் வீட்டில் நடப்பது எல்லாம் தெரியும். அவள் தன் கணவனை தூக்கிக்கொண்டு போய் குளிக்க வைக்கப்போகும் போது அவனை ராசுக்கண்ணு பார்த்திருக்கிறான்.  ஒல்லியான உடல். எலும்பும் தோலுமாக தெரிந்தது. 

அப்படித்தான், அன்றைக்கு காபி சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது, அவளின் மகள், லாவண்யா தள்ளுவண்டிக்காரனிடம் காய்கறி வாங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்தில் ராசுக்கண்ணு வின் மனைவியுடன் வீதியின் மற்ற பெண்களும். 

லாவண்யாவை அவள் அம்மா வெளியே வந்து அழைத்தபோது, எல்லா பெண்களும் மூஞ்சியை கடுப்புடன் திருப்பிக்கொண்டார்கள். அதை பார்த்துவிட்டு அவளுடைய மகள் ஒரு குமட்டுச்சிரிப்பு சிரித்தாள். அந்த குமட்டுச்சிரிப்பு  “நான் அவமான வாழ்க்கையின் ஒவ்வொரு அர்த்தத்தையும் பொருளையும் அனுபவித்தவள், என்னிடமா உங்கள் பம்மாத்து” – காட்டிச் சொல்வது போல இருந்தது. 

ராசாத்தியைப் பார்த்து, “ஆன்டி, எங்கம்மா” – லாவண்யா சொல்லியதை காதில் வாங்காதது போல, “ஓ. அப்படியா”, என்பதைப்போல ராசாத்தியுடன் சேர்ந்து எல்லோரும் மூஞ்சியை காட்டினார்கள். 

“முதல்ல அவளுக்கு கொடுத்தனுப்பு” – தள்ளுவண்டிக்காரனிடம் கறார் காட்டிவிட்டார்கள். தபால்காரன் வந்தால், “தெரியாது, அந்த பேரில் யாருமில்லை” – பதில்களுடன்,  பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்க லாவண்யா வலது புறமாக வந்தால், இடது புறமாக மூஞ்சியை திருப்பிக் காட்டிக் கொண்டு, பக்கத்திலிருந்த பெண்களிடம் “என்ன, உங்க வீட்டுக்காரன் வேலைக்கு போகலையா? சோறு என்ன? என்ன சமைச்சே? ”  மொக்கக்கேள்விகளை கேட்டு மெளனப்போர் செய்தார்கள். 

அவளுடைய மகளுக்கு இப்போது இருபத்தைந்து வயது இருக்கலாம். பார்ப்பதற்கு அவள் அவள் அப்பாவின் ஜாடையில் ஏகமட்டுக்கு இருந்தாள். கண், மூக்கு, கை, முகம், தலை எல்லாம் அவள் அப்பாதான்.  

மெல்ல புரிந்தது: வெளியே கடைக்குக்கூட கீதா வரமாட்டாள். எல்லாம் மகள், லாவண்யா,  மட்டுமே – அரிசியிலிருந்து பூண்டு வாங்கி வரும் வரைக்கும். இவள் சென்றதில்லை. சொன்னதில்லை. நேர்மை. நேர்த்தி. ஒழுங்கு. அவள் வீடு. அவள் கணவன். அவள் மகள். அவளுடைய வேலை. நேரம், பயணம். அவ்வளவுதான் அவளுடைய தினசரி வாழ்க்கை. 

ஒரு நாள் எல்லோரும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். லாவண்யாவின் தோளைத்தொட்டு ராசுக் கண்ணுவின் மனைவி, ராசாத்தி, எதோ சொல்ல, அவள் ராசாத்தியின் கையைப் பிடித்து ஏதோ சொல்லி சிரித்தாள். பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், ராசுக்கண்ணுவின்  மனம் ஒத்துக்கொள்ள மறுத்தது. 

“என்ன புதுசொந்தம், பேர் என்ன, யார் இவங்க”? – தெரியாதது போல கேட்டான். 

ஓ. அதுவா, புள்ளை பேரு லாவண்யா. பக்கத்துவீடு. கல்யாண வயசு. மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருக்காங்களாம்”. 

ஒரு நாள், ராசாத்தி காய்கறி வாங்கிக்கொண்டு உள்ளே வந்தபோது, “டெய்லி, அவ கூட என்னடி பேச்சு? அவங்களைத்தான வேண்டாத குடும்பம், ஆகாத குடும்பம், அசிங்கமான குடும்பம், போலீஸ்ல புகார் சொல்லுவோம்”-ன்னு சொல்லிச்சொல்லி செத்திங்களே, சாவடிச்சிங்களே. இப்ப எதுக்கு அப்படி பேசறே? பழகறே,  ஒன்னுமே புரியல, எனக்கு – ராசுக்கண்ணுவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் உள்ளே சென்றாள். 

முப்பத்தைந்து ஆண்டு குடும்ப வாழ்க்கையில், அவளுடைய மவுனம் அவனுக்கு புரியவில்லை. இதே காட்சிதான் தினசரி பார்க்க நேர்ந்தது. நடந்தது. காலையில், மாலையில் தள்ளுவண்டிக்காரன் வரும்போதெல்லாம், அவள் ராசாத்தியை “ஆன்டி”, “அக்கா”, “அம்மா” வாய்க்கு தோணியபடி, வந்தபடி கூப்பிட ஆரம்பித்தாள். 

ராசாத்தியும் அவள் அழைப்பை ஏற்று “தங்கம், செல்லம்” அழைக்க ஆரம்பித்து, ஒரு வருடம் ஆகிவிட்டது. கொழம்பு கொடுத்து எடுத்துச்செல்லும் அளவுக்கு பழகிவிட்டார்கள். அவள் இல்லாமல் ராசாத்திக்கு பொழுது போகாமல் இருந்தது. அவ்வளவு நெருக்கமாகிவிட்டாள்.

இவர்களுடன் எல்லா பெண்களும் சேர்ந்து வீட்டு திண்ணையில் உட்கார ஆரம்பித்து, அரட்டை அடிக்க ஆரம்பித்தார்கள். பத்துதர்மக்காரி வெளியே வந்ததுமில்லை. அவள் வீட்டுக்கு யாரும் போனதுமில்லை. பேசியதுமில்லை. லாவண்யாவிடம் மட்டும். ஆனால், எல்லாம் ராசுக்கண்ணு வீட்டில். 

அப்படித்தான் ஒரு நாள் சிரித்துப்பேசிக்கொண்டிருந்த போது, ராசுக்கண்ணு, தன் மனைவியை உள்ளே அழைத்து, குசுகுசுவென்று, “ஏண்டி, எருமை, இப்படியா பேசிட்டிருப்பே, கண்டவங்களோட, கண்ட கண்ட நாய்களோட உனக்கென்ன பேச்சு, வெளிய அனுப்படி”  ராசாத்தியைப் பார்த்துக் கேட்டான்.

உள்ளே வந்தவள், கோபமாக, “எத்தனை முறை சொல்றது? அன்னைக்கே நான் இந்த பஞ்சாயத்தை முடிச்சுட்டனில்லை. சும்மா, அதையே பேசிட்டிருக்கீங்க, விடமாட்டாங்கிளா? அவ மக லாவண்யா என்ன நம்ம வீட்டுக்கு உள்ளையா வந்துட்டா? நம்ம திண்ணையில நின்னு பேசறா. வெளியேவே நின்னு எல்லார்கிட்டயும் பேசிட்டுபோறா. நான் என்ன அவ வீட்டுக்கு போய்ட்டனா? இல்லையே, அவ அம்மாகூட தான் பேசறனா? இல்லை போறனா? நீங்க உங்க வேலையைப் பாருங்க, பொம்பளைங்க மேட்டர்ல தலையிடாதிங்க” – பதில் சொல்லியே விட்டாள். 

ராசாத்தி அப்படி பதில் பேசிய போது அவளை ‘எட்டி-உதைக்க-வேண்டிய-கோபம்’ வந்தது – ராசுக்கண்ணுவிற்கு. அடக்கிக்கொண்டான். “சமயம் வரட்டும்” – காத்திருந்தான். அவனுக்கு தெரியுமா – நடக்கப்போவது என்னவென்று? 

ஒரு நாள் லாவண்யா வீட்டுக்குள் வந்தாள் தனியாக  தாம்பூலத் தட்டை கையில் ஏந்திக் கொண்டு. அதில், ஒரு கல்யாணபத்திரிக்கை. தாம்பூலத்தட்டில், ஒரு சீப்பு வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, ஒரு பேண்ட், சர்ட், ஒரு பட்டுப்புடவை, ஜாக்கெட், பணம் ஒரு ஆயிரம் – இருந்தன. 

எங்கள் இருவரையும் – “அம்மா, அப்பா,ரெண்டுபேரும் கிழக்க பார்த்து நில்லுங்க, என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” சொல்லிவிட்டு காலில் விழுந்தாள். ராசுக்கண்ணுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. வாயில்வந்தபடி, சகட்டுமேனிக்கு திட்டியவன் ஆசிர்வாதம் பண்ணவேண்டிய ஒரு சூழ்நிலை. இறுக்கத்துடன் “நல்லாயிரும்மா” – சொல்லிவிட்டு மாப்பிள்ளைப்பற்றி கேட்டான்,

“அப்பா, அவரு அப்பா போலிஸ்கார்ப்பா. அவங்க அப்பாவும் என்னோட அம்மாவும் நல்லா பழகணுவுங்க – நல்லா பழக்கம்பா. அவர்தான் டபுள் ஒகே சொன்னாரு. அய்யோ பாருங்க, அவர் வக்கீல் வேலை செய்றாரு. என்னை பொண்ணு பார்க்க வந்தப்ப, அம்மா செஞ்ச உதவியெல்லாம் கொஞ்ச நஞ்சமல்ல. மறக்கக்கூடாது. அவ்வளவு உதவி பண்ணாங்க. அதுக்குத்தான் மரியாதை. கண்டிப்பா வாங்கப்பா. அம்மாவையும் அனுப்புங்க – கேட்டுவிட்டு,

“அம்மா, அப்பா உங்களை அனுப்பலேன்னா, சொல்லுங்க, சும்மா கோர்ட்ல இழுத்து நாலு கேள்வி கேட்போம்” சொல்லிவிட்டு நாக்கை நீட்டி அழகு காட்டினாள்.  

அவள் சென்ற பின்னால், “என்னடி, இதெல்லாம் நடக்கற காரியமா, இது? உண்மையா? டுபுக்கு எதுவுமில்லையே? அதுவும் போலீஸ்காரன் வீட்ல…” ராசுக்கண்ணு இழுத்தான். 

“பத்திரிக்கையை பாருங்க”, சொல்லிவிட்டு காபிகிளாஸை கழுவச்சென்றாள். பத்திரிக்கையில், அவளின் உண்மையான பெயர் இருந்தது. 

அதைக் காட்டியவள், “என்னங்க, ஊரு உலகத்தில நடக்காத புதுசு ஒண்ணுமில்லையே. அவங்கம்மா காசுக்கு மட்டும் பல பேர்கிட்ட உடம்பை வித்தாங்க. அது அவங்க சூழ்நிலை. பாவம், யாருக்கும் வரக்கூடாது. எல்லாருக்கும் தெரிஞ்ச உண்மைதானே. அது அவளோட வேலை. அதுவும் இங்க வந்ததிலிருந்து வெளியேவே போகலை. மனச யார்கிட்டயும் விற்கலையே. மனசு ஒரு ஆளுக்கு மட்டுமே சொந்தம். எனக்கு மட்டுமல்ல நம்ம வீதிக்கே அது தெரியும். நாங்க சாட்சியும் கூட. சாட்சி என்ற போது பஞ்சபூதங்களும் அந்த ஒரே ஒரு சொல்லை அவள் வாயில் சொன்னதாக அவனுக்கு தோன்றியது. பட்டது. அவ புருசனை ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோனப்ப, அவ பட்ட பாடு. அய்யோ பாவம். அவங்கம்மா மனசை அவங்கப்பா கிட்ட மட்டும் தான் கொடுத்தாங்க. அதுவும் பத்தினி வாழ்க்கைங்க. 

“சிலபேரு மனசை மட்டும் கொடுப்பாங்க. ஒடம்பை கொடுக்கமாட்டாங்க. உங்க அக்கா, என்னோட தங்கச்சி மாதிரி, இதுவும் பத்தினித்தனத்திற்கு கீழ வருதுங்க” – சொல்லியபோது நெளிந்தான். “தெரியாமல் கோபத்தில் சொத்து பங்கீட்டு சண்டையில் அக்காவை திட்டியபோது சொல்லித் தொலைத்த சொல். செய்தி. 

‘எப்படி திரும்பி அடிக்கிறது. நல்லவேளை, அவள் தங்கையையும் சேர்த்துக்கொண்டாள்’ – மனதிற்குள் நினைத்துக் கொண்டான். சொன்னவள், தொடர்ச்சியாக, “இன்னும் சிலபேரு மனசையும், உடம்பையும் ஒரு ஆளுக்கு மட்டும் கொடுப்பாங்க – என்னை மாதிரி- உங்களுக்கு மட்டும் சொந்தம்” – புதுக்கல்யாண அழகு காட்டினாள். 

அழகு காட்டியவள், “நாம என்ன பிறக்கறப்பவே பணத்தோடவா பொறந்தோம். கட்டிடம் கட்றயிடத்தில ஒரு சித்தாளா தானே நான் ஆரம்பிச்சேன். அப்பல்லாம், எத்தனை பேரு எத்தனை விதமா என்னைக் கூப்பிட்டிருப்பாங்க. பேசியிருக்காங்க. ஒரு பொம்பளை வாழ்க்கையில் அவளுக்குன்னு சுயமா என்ன இடமிருக்கு? எல்லாம் சேர்ந்து வாழனும். தனியா வாழவே முடியாது. ஒரு ஆம்பிள்ளை துணையில்லாம கூட வாழலாம். ஆனா, ஒரு பொம்பளை துணை இல்லாம இன்னொரு பொம்பளை வாழவே முடியாது, இல்லேன்னா, தனிமைதான் – நம்ம லூர்தம்மா மாதிரி, யாருமே இல்லாம, யார் கூடயும் பேசாம”. 

“எல்லா இடங்களிலும் பெண்கள், பெண்களின் உலகம். என்ன பொறப்போ? அமைப்போ?  புரியலைங்க. இதைவிட ஆம்பிளங்க பொழப்பு இன்னும் ரொம்ப மோசம். கேடு கெட்டதும், கூட.  சுய இடமில்லாத ஒரு பெண்ணோட ஒரு ஆம்பிளை அவனோட வயசான காலத்தில அந்த பெண்ணோட சேர்ந்து அண்டி வாழணும் -உங்க மாதிரி”

இங்க பாருங்க. எனக்கு அவங்கம்மாவை தெரியுங்க. முப்பது வருசத்துக்கு முன்னாடி நாங்க கே.ஆர்.ஜி. காபி ஒர்க்ஸ்ல ஒன்னா வேலை செஞ்சோம். இதுவே எனக்கே கொஞ்ச நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது. அப்பகூட அவ எங்கூட பேசலை. மக மூலம்தான் சொன்னா. ரொம்ப நல்லவ. அவ புருசனும், அங்க வேலைசெஞ்சவங்கதானே. அதில சாரம் அறுந்து விழுந்து அவ புருசனுக்கு அடிபட்டு, கைகால் போயி, இந்த வேண்டாத வேலைக்கு அவளை தள்ளிவிட்ட போலீஸ்காரன்தானே அவளுக்கே சம்பந்தியா வந்திருக்கான். 

அவனோட பாவம், அவனோட மகன் மூலமா கழுவறான். இவளை அந்த தொழில்ல தள்ள அவன் பண்ண பாவமெல்லாம் பாபநாசம் போனாலும் கரையாதுங்க. அவ்வளவு கொடுமைபண்ணி அவளை தள்ளினான். இப்ப பாவநாசத்திற்கு மகனை கொடுக்கறான். 

போலீஸ்காரன் பொண்டாட்டியே பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு மனசார ஒத்துக்கிட்டா. சம்பந்தியா வந்தாலும் பாவத்தைக் கழுவமுடியாதுன்னு சொல்லி அழுதா- அஞ்சு கொழந்தைகளை பெத்து, இவளைக் கட்டிக்கற மாப்பிள்ளைத் தவிர யாரும் உயிரோட இல்லையாமா.  வீடு முழுக்க, முழங்க, எல்லாமே புத்திர சோகம். அவனுக்கும் கிட்னி பெய்லியராமா. சாகக் கிடக்கறனாமா. இவளுக்கும் பக்கவாதமாம் – இழுத்து இழுத்து நடந்தா, நடக்கிறா. இவளை கொடுஞ்செயல்ல தள்ளப் போயி, அவங்க குடும்பம் பட்ட பாடு. அவதான் சொன்ன, “பாவமும், பழியும் ஒரே இடத்தில இருந்தா, குலம் நாசங்க-ன்னு” அனுபவிச்சுவங்க சொன்னாங்க. “அவங்க குடும்பத்துக்கே தெரியும். அதான் ஒத்துகிட்டாங்க. மனசார ஒத்துக்கிட்டாங்க” . 

“அவ வேலை தானே, உங்களுக்கு பிரச்சனை? அது கிடக்கட்டும். எல்லாரும் தொழில்ல ரொம்ப யோக்கியமாவா செய்றாங்க? ஆனா, இவ ரொம்ப கர்மசிருத்தையா தொழில் செஞ்சவ. போலீஸ்காரன் பொண்டாட்டி அவ்வளவு பெருமையா சொன்னா. ஏன்ன, இவ தன் பத்துக்கட்டளைக்கும் மட்டும் உட்பட்டவளாச்சே. எனக்கு நல்லாத் தெரியும்- நீங்க அவளைப் பார்த்து பேசியிருக்கீங்களா, இல்லையல்ல ” – சொல்லிவிட்டு போதுமா என்பதைப் போல பார்வை பார்த்தாள். 

இப்போது புரிந்தது ராசுக்கண்ணுவுக்கு. லாவண்யா ஒரு பெண். அவளுக்கும் அவளுடைய அம்மாவுக்கும் சம்பந்தமில்லை. வாயும், வயிறும் வேறு. லாவண்யாவை வாழவைக்கவேண்டும். இவள் ஒரு பெண். தாய்குணத்தைக்காட்டியிருக்கிறாள். இவளைப்போலவே, வீதிப்பெண்களே முடிவு கட்டி வேலை செய்திருக்கிறார்கள். 

ராசாத்தியைப்போல வீதி முழுக்க உள்ளவர்கள், தாய்த்தனம் காட்டியதால் அவள் திருமணம் ‘ஜே-ஜே’ என்று எம்.பி.பி. கல்யாண மண்டபத்தில் நடந்தது. பத்துதர்மக்காரியை மட்டும் கல்யாணத்தில் அதிகமாக காணவில்லை. நிச்சயமாக தனது திரைக்குள் ஒளிந்திருப்பாள். அவளுக்கென்ன, கொடுத்து வைத்தவள் – யாருக்கும் கிடைக்காத பாக்கியம்: அவள் மகளுக்குத் தான் வீதிமுழுக்க அம்மாக்கள் உள்ளனரே.

Exit mobile version