
1. திடீர் மழை
சின்னஞ்சிறு மேகம் ஒன்று
தன் கிலுகிலுப்பையை
ஆட்டியது
கண நேரம்
பெய்தது
கவிதை ஒன்று
மனதை நிறைத்துக்
கொண்டு
2. மழைக்குப் பின்
வெயில் வந்து விட்டது
மின்சாரம் திரும்பி விட்டதால்
சுடு தண்ணீர் தயாரித்து விட்டது ‘கீசர்’
கடமை உணர்வுடன்
ஒரு சிறு தும்மல் கூட வர மறுக்கிறது
என்ன சாக்கு சொல்வது
எண்ணெய்க் குப்பியுடன்
எனக்கு அம்மாவாகி
எதிரில் நிற்கும்
எனது ஐம்பது வயது மகளிடம்
இன்றும்
எண்ணெய்க்குளியை
தவிர்ப்பதற்கு?
