
நூலாசிரியர் லோகமாதேவியின் முன்னுரை:
தாவரவியல் பேராசிரியையாக 20 ஆண்டுகள் கற்பித்தலும், உடன் கற்றலுமாக கழிந்திருக்கிறது. வகுப்பறையில் தாவரங்களை குறித்து கற்றுக் கொடுத்தற்கு இணையாகவே தமிழில் தாவரவியலை தொடர்ந்து எழுதுவதிலும் பெரும் நிறைவடைகிறேன்.
மென்மொழிகள் என்னும் எனது வலைப்பூவில் தாவரவியல் அகராதிக்கான முன்னெடுப்புக்களை பல ஆண்டுகளுக்கு முன்பு துவங்கியபோது தாவர அறிவியல் கலைச்சொற்களை தமிழில் எழுதுவது பெரும் சவாலாக இருந்தது. ஆனாலும் பல்லாண்டு கால கல்விச் சூழலும் தமிழிலக்கிய பரிச்சயமும் எனக்கு உதவியாக இருந்தது.
மாணவர்களுக்கு தாவரங்களின் லத்தீன் பெயர்களை அவற்றின் பொருளை அறிந்து நினைவில் வைத்துக் கொள்வதற்காக பயிற்சியளிக்கையில் தமிழில் அவற்றின் பொருளை சொல்லுவது பெரிதும் பயனளித்தது. கூடவே இந்த துறையின் பல சுவாரஸ்யங்களை பல புதிய தகவல்களை எல்லாம் இணைத்து சொல்லுகையில் வகுப்பறையின் இறுக்கமான சூழல்மாறி, இரு மொழிகளிலான கற்பித்தலும் கற்றலும் எளிதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருந்தது.
என் வலைப்பூவில் தமிழில் கட்டுரைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கையில் 2016-லிருந்து தினமலர் பட்டம் இதழில் மாணவர்களுக்கு சிறு சிறு கட்டுரைகள் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அக்கட்டுரைகளுக்கு கிடைத்த வரவேற்பு மேலும் மேலுமென என்னை எழுத தூண்டியது. பல தாவரங்களுக்கு புதிய தமிழ் பெயர்களும், தாவர அறிவியல் கலைச்சொற்களும் கட்டுரைகளில் வெளியானபோது பொதுவெளியில் அவை ஏற்றுகொள்ளப்பட்டு புழக்கத்தில் வந்தது பெரும் அங்கீகாரமளித்தது.
பல பள்ளிகளில் எனது தினமலர் பட்டம் கட்டுரைகளை தகவல் பலகையில் ஒட்டிவைத்து வாசிக்கப்பட்டன, தொடர்ந்து கட்டுரைகளுக்கான எதிர்வினைகள் மாணவர்களிடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் தனிப்பட்ட முறையிலும் தினமலர் அலுவலகம் வாயிலாகவும் வந்தன.
திரு ஜெயமோகன் அவர்கள் தளத்தில் வெண்முரசு நாவல் நிரையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரங்கள் குறித்த கட்டுரைகள் வெளியானபோது அவை பரவலாக வாசிக்கப்பட்டன. தொடர்ந்து வெளியான சீமைக்கருவேலம் மூங்கில் மிகைமலர்வு ஆகிய கட்டுரைகளும் கவனிக்கப்பட்டன.
வெண்முரசில் மகரந்தம், தர்ப்பை, சோமம் ஆகிய கட்டுரைகள் தமிழில் தாவரவியல் கட்டுரைகள் எழுதுபவளாக என்னை அடையாளம் காட்டின.
தொடர்ந்து இணைய இதழ்களில் தாவரவியல் கட்டுரைகளை எழுதிக்கொண்டே இருக்கிறேன்.
மலர்களின் அல்லியும் புல்லியும் சேர்ந்த பகுதியான டெப்பல் என்னும் பாகத்திற்கான ஆங்கில பதத்திற்கு இணையான தமிழ்ச்சொல்லை பல்லாண்டுகள் தேடிக்கொண்டிருக்கையில். சங்க இலக்கியதில் அதற்கான அதழ் எனும் சொல்லை கண்டடைந்தபோது நானடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, அதன்பிறகே தீவிரமாக தாவரவியல் சொற்களுக்கான அகராதியை உருவாக்க துவங்கினேன்.
இக்கட்டுரைகளில் சிலவற்றை எழுத பல வாரங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன், மாணவர்களுக்கான சிறிய கட்டுரைகளுக்கும் புதிய விஷயங்களை சுவராஸ்யமாக சொல்ல மிகுந்த கவனம் எடுத்துக் கொள்கிறேன் தகவல்களை சரியாக சொல்லுவதிலும் அதிக சிரத்தையுடன் இருக்கிறேன். தாவரவியல் துறையின் முக்கியத்துவம் குறைந்துகொண்டு வருவதன் ஆதங்கமே இந்த கட்டுரைகள் அனைத்திலும் இழையோடிக்கொண்டிருக்கும் .
இப்போது தாவரவியல் துறை சார்ந்த படைப்புகளை மொழியாக்கம் செய்வதற்கு இந்த இக்கட்டுரைகளை எழுதிய அனுபவங்கள் மிகுந்த உதவியாக இருக்கின்றன.
இங்கிலாந்தின் பிரபல அறிவியல் சஞ்சிகை ஒன்றில் ஒரே சமயத்தில் வெளியான எனது 6 ஆங்கில கட்டுரைகளும் வெகு சிலரால் மட்டுமே வாசிக்கப்பட்டன. ஆனால் தமிழில் வெளியான கட்டுரைகள் பலரை சென்று சேர்ந்திருக்கின்றன, அதிகம் வாசிக்க பட்டிருக்கின்றன தொடந்து அவற்றை குறித்த எதிர்வினைகளும் வருகின்றன.
சொல்வனம், ஆனந்த சந்திரிகை உள்ளிட்ட இணைய இதழ்களிலும் ஜெயமோகன் அவர்களின் தளத்திலும் வெளியான தாவரவியல் கட்டுரைகளின் தொகுப்பே அகநி பதிப்பகத்தாரால் நூல்வடிவில் வெளியாகி இருக்கின்றன
அகநி பதிப்பகத்தாருக்கு என் அன்பும் நன்றியும்
இக்கட்டுரைகளை பிழை திருத்திய. செம்மைப்படுத்திய , மேம்படுத்திய, விமர்சித்த, பிரசுரித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.
ஒரு மரம் நடப்படுகையில் அதனுடன் நம்பிக்கையும் நடப்படுகிறது என்றொரு முதுமொழி உண்டு, இக்கட்டுரைகள் நூல்வடிவம் பெறுவதும் தாவரவியல் துறை மேலும் பரவலாக அறியப்படும் எனும் நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.
கட்டுரைகளை வார்த்தை உச்ச வரம்பிற்குள் எழுதப் பயிற்சியளித்த திரு.பொன்வாசுதேவன், பலமுக்கிய கட்டுரைகளை சொல்வனத்தில் எழுத காரணமாயிருந்த ஆஸ்டின் செளந்தர், தொடர்ந்து வாசித்து உடனுக்குடன் எதிர்வினையாற்றும் சரண், தருண், டெய்ஸி, விஜி மற்றும் சக்திவேலுக்கும் என் தனித்த பிரியங்கள்
அன்புடன்
லோகமாதேவி
