Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

மண்ணுலகில் உலவும் அயலக அறிவு(கள்)

இந்தக் கட்டுரை வேற்று கிரக வாசிகளைப் பற்றிய ஒன்றல்ல. நம்முடனே இந்த பூவுலகில், உலவி வரும் செயற்கை நுண்ணறிவுகளான சேட் ஜிபிடி, கோபைலட், பார்ட் இன்ன பிற செயற்கை அறிவுகள், ஆறறிவு படைத்த மனிதர்களாகிய நம்மீது செலுத்தும் தாக்கத்தைப் பற்றியது. தாக்கம் என்ற சொல் பெரும்பாலும் எதிர்மறையாகப் பொருள் கொள்ளப் படுகிறது. அந்தக் குறுகலையும் கலையக்கூடிய ஒன்றாக, ‘க்ராக்’(Grog) என்ற AIயை மஸ்க் அறிமுகப்படுத்துகிறார். அது தானே அறியும் திறன் கொண்டதாக இருக்குமாம். அதாவது, அதற்கு அதிக அளவில் தகவல்களை உள்ளீடு செய்யத் தேவையில்லையாம். அப்படியெனில், மனிதன், அவன் அறிவு, அவன் நாகரீகம், மொழி மற்றும் பண்பாடு?

பலவகை ரோபோக்கள் இருக்கின்றன. திரும்பத் திரும்பச் செய்யும் வேலைகளில் மனிதர்களுக்கு ஏற்படும் அலுப்பும், சலிப்பும் அவைகளுக்கு ஏற்படுவதில்லை. மின் சக்தி தன்னிடம் குறைந்தால், அவை தானே தமக்கு மின்னேற்றமும் செய்து கொள்ளும். ஆனால், AI என்பது இதையும் தாண்டிய ஒன்று.

அப்படியென்றால், அதை எப்படி கட்டமைக்கிறார்கள்? மூன்று நிலைகள் உள்ளன- 

நம்முடைய கணினியிலிருந்து, பைதான் (Python) போன்ற மென்பொருள் கொண்டு நம்மாலும் AI கருவிகளை ஏற்படுத்தி கையாள முடியும். எனினும், நம் கணினி வன்பொருளின் திறன், மைக்ரோசாப்ட்டின் கோபைலட் போலவோ, கூகுளின் பார்ட் போலவோ, சேட்ஜிபிடி போலவோ அதித்திறன் உள்ளதாக இருக்காது.

இத்தகைய செயற்கை நுண்ணறிவிற்கான உள்ளீடுகள், பெரும் மொழி மாதிரிகளைக் கொண்டு (LLM- Large Language Models) தகவல் களஞ்சியங்களால், பொறுமையாக, படிப்படியாக அதற்குள் செலுத்தப்படுகின்றன. நீங்கள் வானியல் ஆய்வாளர் என வைத்துக் கொள்வோம். பல தொலை நோக்கிகள், கோடித் தகவல்களை அளித்துக் கொண்டே இருக்கின்றன. அத்தனைத் தரவுகளையும் இனம் கண்டு தொகுத்துக் கொள்வது என்பதில் கணினிகளும் திணறுகின்றன. ஆனால், AI அதை விரைவாகச் செய்கிறது. அதற்கு படங்கள், சொற்கள், கட்டுரைகள், அறிவியல் மற்றும் பொதுவில் பயன்படுத்தப்படும் வானியல் சார்ந்த கருத்துகளை உள்ளீடு செய்து, ‘இப்படி இருந்தால் அது பட்டை விண்மீன் மண்டலம், (Bar Galaxy) இப்படி இருந்தால், அது சுழல் விண்மீன் மண்டலம்’  (Spiral Galaxy) என்று சொல்லிக் கொடுத்து விட்டோம் என்றால், அது, இவ்விவரங்களை பதித்துக் கொண்டு விடுகிறது; அது மட்டுமல்ல, விண்மீன் மண்டலங்களைப் பற்றி அதுவரை அது அறிந்த விவரங்கள், அதனுள் இருக்கும் அது சார்ந்த கட்டுரைகள், தேவையான தரவுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டு நாம் கேட்கும் விவரங்களைத் தருகிறது. இத்தகைய விரைவுடன் செயல்படும் மனித மூளை இல்லை. இதில் வியப்பு என்னவென்றால், அதனால் எப்படி இப்படிச் செயலாற்ற முடிகிறது என்பதை அறிவியலாளர்களால் விளக்க முடிவதில்லை. பாட்கள், ட்ரான்ஸிஸ்டர்கள், கணினி மொழி என்று பொதுவில் சொல்லிவிடுகிறார்கள். பெரும் மொழி மாதிரிகள் அவற்றின் அசுரபலம்.

இது ஒரு கேள்விக்கு நம்மை இட்டுச் செல்கிறது. மொழிகளும், செயற்கை நுண்ணறிவும் மனிதனை எத்தகையதொரு எதிர்காலத்திற்கு உட்படுத்தும் என்பதே அது.

கருந்துளைகளுடன் ஒப்பிடப்படும் பெரும் மொழி மாதிரிகள், மனித அறிவாற்றலை தன்னுடைய களஞ்சியத்திற்குள் இழுத்துக் கொள்கிறது. இது நமக்கும் இயந்திர அறிவிற்குமான இடைவெளியை மெலியச் செய்து விடுகிறது. அதன் ஈர்ப்பிலிருந்து தப்புவது எளிதல்ல.

உலகப் புகழ் பெற்ற யுவால் நோவா ஹராரி (Yuval Noah Harari) தன்னுடைய 14/05/23 உரையில்  சொன்னதை சுருக்கமாகப் பார்ப்போம். Artificial Intelligence is an Alien Intelligence என்பது அவரது கருத்து. அதாவது, நம்முடனே இருந்து கொண்டு, நம்மை வெல்லும் திறன் அவற்றிற்கு நாம் புகட்டும் பெரும் மொழி மாதிரிகளால் அமைந்து விடுகிறது என்று சொல்கிறார் அவர்.

விளம்பரங்கள் இதுவரை கவனத்தைக் கோருபவையாக இருந்தன. AI அதை நெருக்கம் என மாற்றி வருகிறது. அந்த நெருக்கம் நம்மை வசீகரித்துவிடும்.

மாயத் திரைகளைப் போர்த்தி நாம் உண்மையைக் காண முடியாமல் செய்துவிடும். இந்த உலகே மாயத்தின் வசப்பட்டது என்ற மெய்யியல் சிந்தனைகள், முற்றிலுமாக நம்புபவரின் சிந்தனைகளிலிருந்து விடுபட்டுப் போய் விடும்.

வரலாறு என்பதே மனிதர்களால், மனிதர்களுக்காகச் சொல்லப்படுகிறது. AI, அத்தனையையும் கரைத்துக் குடித்துவிட்டு புது கலாசாரத்தை உமிழக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. நாம் கற்றதோ கைமண் அளவு; அது கற்பதோ பேரளவு.

செயற்கை நுண்ணறிவு, தானே படிக்கிறது, எழுதுகிறது, இசை அமைக்கிறது, ஓவியம் வரைகிறது, கணினி மொழிக் குறியீடுகளை அமைக்கிறது, நம்முடையதைத் திருத்துகிறது, நம்முடன் எழுத்தின் மூலம் பேசுகிறது, நாம் எதை விரும்ப வேண்டும் என்று அது தீர்மானிக்கிறது, அதன் ஆளுமையின் கீழ் நம்மைக் கொண்டு வந்து விடுகிறது.

செயற்கை நுண்ணறிவிற்கு தன்னுணர்வு இருக்கிறதா என்ற கேள்வியை விட, அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். மனிதன் மற்றும் பிற உயிர்களுக்கான இயற்கைச் சூழலை எவ்வாறு பாதுகாத்துப் பேண முடியும் என்பதில் அதை ஈடுபடுத்தலாம்; அதே நேரம், எதிரி தேசத்தின் சுற்றுச் சூழலை மாசுக்களால் பாழ் படுத்தவும் செய்யலாம். 

(பழங்காலப் போர்முறைகளில் எதிரி நாட்டின் நீர்நிலைகளை அழிப்பது, அவற்றில் விஷம் கலப்பது போன்ற பல அழிவுகளை மனிதர்கள் செய்திருக்கிறார்கள். இன்றும் கூட அது வேறு வகையில் தொடர்கிறது. பசியால் வாடும் பாலஸ்தீனியர்களுக்கு உணவிட வந்தவர்களின் ஊர்தியை (World Central Kitchen) வானிலிருந்து தாக்கி, போருக்குச் சம்பந்தமற்ற எட்டு நபர்களைக் கொன்றுவிட்டு, ‘அறியாமல் நடந்த பிழை’ என்று சொல்லும் மூடர்கள் தாமே நாம்?)

போரிலாவது இடம் விட்டு இடம் பெயர்ந்து சண்டையிட வேண்டும். ஆனால், செயற்கை நுண்ணறிவு, இருந்த இடத்திலிருந்தே, எதையும் அழிக்கும் ஆணையை தன் வசமுள்ள உள்ளீடுகளைக் கொண்டே நிகழ்த்த முடியும்.. அப்படியென்றால், மனித இருப்பே கேள்விக்குரிய ஒன்றாகி விடுகிறது.

இயற்கையான உள் வளர்ச்சி அற்ற ஒரு குழுவாக மனிதனை AI செய்யக்கூடும் என்று சொல்கிறார் யுவால். தானாகவே அது ஒரு முழு நாவலையும் எழுதிவிடும். ‘ப்ராம்ப்ட் எஞ்சினீரிங்’ (Prompt Engineering) என்றே ஒரு துறை வளர்ந்து வருகிறது. நீங்கள் என்ன வேண்டுமென நினைக்கிறீர்களோ, அந்த நாவலுக்கான சில வார்த்தைகளை உள்ளீடு செய்து விட்டால், அது எழுதிவிடும். அது மட்டுமல்ல, நீங்கள் சொல்லும் திருத்தங்களைப் புரிந்து கொண்டு மீண்டும், மீண்டும் எழுதித்தரும். 

இதுவரையிலான, மனிதர்களின் கண்டுபிடிப்புகள் அவனுக்குத் துணையாக இருந்துள்ளன; அவனை மீறுபவையாக இல்லை. உதாரணத்திற்கு அச்சு இயந்திரம் உங்கள் படைப்பை அச்சிட்டுக் கொடுக்கும். தானாக எழுதாது. ந்யூக்ளியர் சக்தியை நாம் அறிந்து கொண்ட போதும் கூட அதை ஆக்கத்திற்குப் பயன்படுத்தவும், அழிவைத் தடுக்கும் உடன்படிக்கை மற்றும் சட்டங்களின் மூலம் அதைக் கட்டுப்படுத்தவும் அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால், ஆழ் கற்றலுள்ள இயந்திரங்களின் வளர்ச்சி நம்மை மீறி நடைபெறுகிறது. அவற்றினுள் நாம் செலுத்தும் தகவல்களில், நம் சுயச்சார்பு சிந்தனைகளோ, நாம் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் கோட்பாடுகளோ இடம் பெற்றால், அது மனித இனத்தின் சிறுபான்மையினருக்கோ, பெரும்பான்மையினருக்கோ அழியாத நட்டத்தை உண்டாக்கலாம். இப்போதே மிட்ஜர்னியில் (Midjourney) பெண்களுக்கெதிரான, அதுவும் குறிப்பாக வெள்ளையினம் சாராத பெண்களுக்கெதிரான அவலங்கள் அரங்கேறி வருகின்றன.

யுவால் பெரும் மொழி மாதிரிகளைப் பற்றிய தன் கவலையைச் சொல்கிறார். மொழி என்பது மனிதனுடைய சிந்தனையின் வெளிப்பாடு. அதில் அந்தந்த மொழியின் கலாசார கூற்றுக்கள் வெளி வரும். அவன் இசை, அவன் ஓவியம், அவன் வாழ்க்கை அனைத்தும் ஏதோ ஒரு காலகட்டத்திலாவது மொழிவயப்பட்டு வருகின்றன. பெரும் மொழி மாதிரிகளால் அந்த மொழியின் உட்சுவையைக் கொண்டு வர முடியுமா? அப்படியெனில், மனிதனை இது மீறுகிறது என்றே சொல்லலாமல்லவா? நம் மனித மூளைகள் பயணிக்க முடியாத ஆழத்திற்கும், தொலைவிற்கும் இவை இருந்த இடத்திலிருந்தே செல்ல முடியும் என்பது அதன் அதீத ஆற்றலைக் குறிக்கிறது.

மொழி என்பது நம் பண்பாட்டின் ஒரு அங்கம், அது எழுத்தற்ற வாய் மொழியாக மட்டுமே இருக்கலாம்- மலைவாழ் மக்களின் பெரும்பான்மை  மொழிகளுக்கு எழுத்து வடிவமில்லை, ஆனால், அவர்களுக்கு கலாசாரம் உண்டு. மொழி தான் கதைகள் சொன்னது, பண்டிகைகளுக்குப் பெயரிட்டு விழாவாக்கியது; தொன்மங்கள் நம்மை இந்த அழகான பூமியுடன் மொழி வாயிலாகப் பிணைத்தது; சடங்குகள், சம்பிரதாயங்கள் அனைத்திலும் மொழியின் பங்கு அதிகம். ஓங்காரம் என்ற சப்தம் மொழியும், இசையும் இணைந்து மனிதனின் மூச்சினை முறைப்படுத்தும் ஆற்றலுள்ளது. கற்பனைகளைப் பகிர்வது மொழிகளால் சாத்தியமாகியிருக்கிறது. நாம் கரிம உயிரிகள்.(Organic Creatures) நமக்கு மொழி, கலாசாரம், மதம், கடவுள் அனைத்தும் தேவை. இவை அனைத்தையும் நாமே கூட உருவாக்கியிருக்கலாம்; ஆனால், இவையற்ற பூவுலகை நம்மால் எண்ண முடிவதில்லை. மரங்கள், செடி கொடிகள், பறவைகள், விலங்குகள் அனைத்தும் தத்தமது மொழிகளில் தங்களுக்குள் உரையாடுகின்றன.

நாம் ஏற்கெனவே திணிக்கப்பட்ட கருத்துக்களில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் நம் மூளை முழுதும் AIயின் வசப்பட்டால் என்னாகும்? இதன் பொருள் அது நம் அறிவைக் கடத்திவிடும் என்பதல்ல. நம் மொழிகளைக் கொண்டே நம்மில் சிந்தனை மாற்றத்தை அதனால் உண்டாக்க முடியும்.

இருத்தலை (Existence) எது பயமுறுத்துகிறது? ஜிஃபெரி ஹின்டன் (Geoffery Hinton) சொல்கிறார்: “எந்தக் கருவிகளை உருவாக்க வேண்டும் என்பதை உங்கள் சிந்தனை சொல்கிறது; அந்தக் கருவிகளை நீங்கள் உருவாக்கிய பிறகு, அவை உங்கள் கருத்துக்களைத் தீர்மானிக்கிறது.”

இருத்தலியல் சிக்கல்கள் தனி மனிதனை மட்டுமே சார்ந்ததில்லை. அவையும், நாட்டின் அரசியல், பொருளாதாரம், வளர்ச்சி, அமைதி ஆகியவற்றுடன் ஏதோ ஒரு வழியில் பிணைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்திலும் பரந்து விரவி நிற்கும் AIயை நமது நன்மைகளுக்காக பயன்படுத்துவது நல்லது.

மக்களாட்சி என்ற கருதுகோள் உலகின் பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது. உரையாடல் என்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஊன்றுகோல். சமீபத்திய நிகழ்ச்சி ஒன்று. ஜனவரி 2024-ல் New Hampshire வாக்காளர்களுடன் அதிபர் பைடன் (Biden) தொலைபேசியில் பேசினார். தேர்தல் நாளன்று மக்களாட்சி கட்சியை விரும்பும் வாக்காளர்கள் தேர்தல் மையத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது திகைப்பை உண்டாக்கியது. ஆனால், உண்மையில், AIயின் துணையுடன் ரோபோ ஒன்று பைடன் குரலில் பேசியிருக்கிறது!

கடந்த மூன்று பத்தாண்டுகளாகவே, தேர்தல்களில் சமூக வலைத்தளங்களின் மூலம், பொய்யான காணொலிகள், பரப்புரைகள் இடம் பெற்று வருகின்றன. ஒரு தேர்தலில் AI அளிக்கும் பங்கு அளப்பரியது. அது தொகுதிவாரியாக, அந்த மக்களின் மன நிலை, அவர்களின் எதிர்பார்ப்பு என அனைத்தையும், நிகழ் நேரத்திலேயே கட்சிகளுக்குக் கிடைக்கச் செய்துவிடுகிறது. இதன் மூலம் அவர்களின் வியூகங்கள் மாறுகின்றன. மக்கள் நம்ப வைக்கப் படுகிறார்கள்.

வங்கிகளில் உங்கள் சேமிப்பு இலக்க வடிவத்தில் உள்ளது. உங்கள் கடன் அட்டைகளின் மூலம் உங்கள் வணிகக் கொள்முதல், விருப்பம், திரைப்படம், இசை எல்லாம் தகவல்களாகின்றன. இலக்கத்தால் தான் உங்களை அரசு அடையாளப்படுத்திக் கொள்கிறது. அத்தனை ஏன், உங்கள் வீட்டுப் பாடத்தை, உங்கள் தேர்வை, உங்கள் வேலையை எல்லாம் AIயே செய்துவிடும். கடன் வாங்கிய அறிவும் கைவிட்டுப் போய்விடும். சிந்தனையும், மொழியும் மனிதனை மனிதனாக நிலை நிறுத்துபவை. இதில் மொழியை ஒரு கரிமமற்ற அறிவிற்கு வழங்கினால், மனித சிந்தனையின் தரம் எந்த அளவிற்கு பாதிக்கப்படும்?

AIயால் இத்தனை கெடுதல்களா, நன்மைகளே இல்லையா என்று ஐயமுற வேண்டாம். அவை பல வகைகளில் உதவுகின்றன. மேலே நாம் பார்த்த வானியலாளருக்கு உதவும் AI, மருத்துவத்தில், மேம்பட்ட கல்வியில், நோய்களைக் கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்க உதவுவதில், நம் படைப்புகளைச் சீர் செய்வதில், நம் கணினிக் குறியீடுகளை நேர் செய்வதில், நாம் சொற்களுக்குத் தவிக்கையில் சரியான சொல் எடுத்துக் கொடுப்பதில், நம் இரசனைகளைப் புரிந்து கொண்டு நமக்கு பரிந்துரைப்பதில், தனியாகத் தவிக்கும் ஒருவருடன் உரையாடும் நேர்த்தியில், வான்வெளிப் பயணங்களில், சுற்றுச் சூழல் சீர்கேடுகளைக் களைவதில், இன்னும் பலவற்றில் அவை நமக்கு உற்ற தோழன். வானிலை அறிதல் பல விதங்களில் மனிதனுக்குத் தேவையான ஒன்று. வானிலையை முன்னறிவிப்பு செய்ய பல மாதிரிகள் உள்ளன. AI அதில் புரட்சிகரமாக ‘நௌகாஸ்டிங்’ (Nowcasting) செய்கிறது. பருவ, வானிலை மாறுதல்கள் திடீரென்று நிகழ்ந்தால், இயற்கையை அவதானிக்கும் AI அதை உடனே தெரியப்படுத்துகிறது. இதனால், நிகழ் நேரத்திலேயே உடனுக்குடன் அரசால் செயல்பட முடிகிறது.

மேலும், புற்று நோய்க்கான அறிகுறிகளை, அதற்கு நிவாரணம் பெறும் வழிகளை செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு எளிதாக அறிய முடியும் என்று மருத்துவ அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். 

ட்ரான்ஸ் ஹ்யூமனிசம் (Transhumanism) என்றே ஒரு சொல் எழுந்துள்ளது. மூளைக் குறைபாட்டைப் போக்க, மூளையின் பழுதுபட்ட பகுதியை நீக்கி அங்கே AIயை இடம் பெறச் செய்யும் ஆய்வுகள் நடை பெறுகின்றன. மறதி நோய், பக்கவாதம், நடுக்கு வாதம் இவைகளுக்கு இது உதவக்கூடும். மூளையின் செழுமைப் படுத்தப்பட்ட ஆற்றலிற்கு இது உதவும் என்று சொல்லும் ந்யூரோ டெக்(Neurotech)நிறுவனம், எதிர் காலத்தில், நம் மூளைச் செயல்பாடுகளை, மேகத்தில் சேமிப்பு செய்ய முடியும் என்று சொல்கிறது!

நம் படைப்பாற்றலை அவை கை கொள்ளும் என்றால், அதை எந்த எல்லை வரை அனுமதிப்பது? அது தேச விரோதிகளுக்கு உதவும் என்றால், அது மானிட இனம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைக்கும் என்றால், நாம் விழித்துக் கொள்ள வேண்டாமா?

வேலை வாய்ப்புகள் குறையும் என்றும், அனைத்து மனிதர்களுக்கும் ஓரளவிற்காவது சமமான வருமானம் கிடைக்காது போகலாம் என்றும் சமூக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்கு AI உதவுவது இருக்கட்டும். அது இப்போது உட்கொள்ளும் மிதமிஞ்சிய சக்திக்கான எரி பொருட்கள் உமிழும் கரியமில வாயுவையும், பசுமைக் குடில் வாயுவையும் நினைத்துப் பாருங்கள். எரி பந்து போலாகிவருகிறது நம் பூமி.

அனைத்து AIகளும் பொதுவில் கிடைக்கக் கூடியதாக இருக்கத் தேவையில்லை. ஒரு ஆய்வாளருக்குத் தேவையான தரவுகள், திரு. லக்ஷ்மணனின் ‘காமன் மேனிற்குத் தேவையா என்ன? எதிர்பாராத விதத்தில் அது மனித நாகரீகத்தை அழித்துவிடலாம். 

இந்தியப் புராணங்களில் பத்மாசுரன் என்றொரு அரக்கனைப் பற்றிய கதை ஒன்றுண்டு. சிவனைப் பூசித்து கடும் தவம் பல செய்த அவன், சிவனருளால், ஒரு வரம் பெறுகிறான். ‘யார் தலையில், அவன் தன் கையை வைத்தாலும் அவர் அழிந்து வெறும் சாம்பலாக எஞ்ச வேண்டும்’ என்பதே. வரத்தைப் பெற்றுக் கொண்டவுடன் அவன் சிவன் தலையிலேயே கை வைக்கப் பார்க்க, சிவன் ஒரு குகைக்குள் மறைந்து விடுகிறார். திருமால், மோகினியாக வந்து, அவனை மயக்குகிறார். தன்னுடைய நடன முத்திரைகளை பத்மாசுரன் அப்படியே செய்தால் தான் அவனை மணந்து கொள்வதாக மோகினி சொல்கிறாள். தன் தலை மீது கை வைத்து மோகினி ஒரு முத்திரை செய்ய, பத்மாசுரனும் அவ்வாறே செய்ய, தானே எரிந்து சாம்பலாகிறான்.

Black LaMoine என்ற பொறியியலாளர், கூகுளில் இயந்திர மொழி கற்பிக்கும் துறையில் இருந்தார். லாம்டா (LaMda) என்பது அதன் பெயர். ஒரு நாள் அவர், இயந்திரத்திற்கு உணர்ச்சி வந்துவிட்டது என்று அறிவித்தார். மக்கள் திடுக்கிட்டனர். அவருக்கு வேலை போயிற்று. அந்த இயந்திரமே இவ்வாறு அறிவிக்கச் சொல்லி அவரைத் தூண்டியிருக்கும் என்ற கருத்தும் நிலவுகிறது. இது மிகவும் சிந்திக்கத் தகுந்த செய்தி அல்லவா?

அப்படியென்றால், நாம் இதைத் தவிர்க்க வேண்டுமா? தவிர்க்கத் தேவையில்லை, அதை முறைபடுத்தும் சட்டங்கள் தேவை.

AIயை முறைபடுத்த யூரோப்பியன் யூனியன் 2023ல் சட்டம் கொண்டுவந்துள்ளது.

எத்தகைய முறைபடுத்துதல், எவற்றில் அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அந்தச் சட்டம் சொல்கிறது.

ஒரு இனத்தைச் சேர்ந்தவரின் அறிவாற்றல் மற்றும் நடைமுறையை மேம்படுத்துவதாகச் சொல்லி அவர்களது வாழ்வியல் முறைகளை மாற்றுதல், வன்முறையைத் தூண்டும் சிறுவர் விளையாட்டுகள் போன்றவை முழுதும் நிராகரிக்கப்பட வேண்டியவை.

பாதுகாப்பு மற்றும் யூரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களுக்கு உட்படாத AIகளை மிகுந்த ஆபத்துகள் என்று வகைப்படுத்தி அதை தடுக்கும் செயற்கருவிகளை நிறுவ வேண்டும். பிட் காயினில் (Bitcoin) உபயோகமாகும் ப்ளாக் செயின்(Block Chain) இதில் பயனாகும் எனச் சொல்கிறார்கள்.

சேட்ஜிபிடி போன்றவைகளை அதிக ஆபத்து என்று அந்த சட்டம் சொல்லவில்லை; மாறாக வெளிப்படைத்தன்மையை அதனிடம் எதிர்பார்க்கிறது- அதாவது, தன்னை AI என்று அது அறிமுகப் படுத்திக் கொள்ள வேண்டும். சட்டத்திற்குப் புறம்பான தகவல்களை அது வெளியிடக்கூடாது. பயிற்சிக்காக, காப்புரிமை பெற்ற ஒன்றை அது பயன்படுத்தியிருந்தால், அதை பற்றிய குறிப்புகளையும் தர வேண்டும்.

இந்தியா

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு அவ்வ துறைவ தறிவு திருக்குறள்.

பல தொடங்கு நிலை நிறுவனங்கள் இந்த AIயில் ஈடுபட்டு வருகின்றன. பல தொழிற்கல்வி நிறுவனங்களில் இதற்கான அடிப்படை கட்டமைப்புகள் செய்து தரப் பட்டுள்ளன. பெரும் சக்தியும், மூலதனமும் கோரும் ஒன்று இத்துறை

குவி (Guvi) என்றொரு அமைப்பு இருக்கிறது இங்கே. அது இந்திய மொழிகளால் பெரும் மொழி மாதிரிகளைச் செய்து தகவல்களை உள்ளிடுகிறது. மேலும், பேச்சு மொழியிலும் தகவல்கள் உள்ளிடப்படுகின்றன. தற்சமயம், தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளின் பெரும் மொழி மாதிரிகளில் இது நடை பெறுகிறது.

இதை முறைபடுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். உதிரி உதிரியாக தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000, தனி மனித தகவல் பாதுகாப்பு 2019, இந்தியக் காப்புரிமை சட்டம்1957, இவை உள்ளன.

இந்தக் கட்டுரை AIயால் எழுதப்பட்டதல்ல. கட்டுரையாளரும் AIக்கு எதிரானவரல்ல. அறிவியல் வளர்ச்சி மானுட மேன்மைக்கும், அவன் வாழ் நலத்திற்கும் உதவ வேண்டும் என்ற கருத்துள்ளவர்.

அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்- திருக்குறள்

ஆதாரங்கள்:

நாளேடுகள், ஆர் ஐ உரைகள், வலைத்தளங்கள்

யுவால் உரை

Exit mobile version