
காலாழ் களர் என்பார் குறளாசான்
புதை சேறு என்றுரைக்கும் அகராதி
படுவம் என்போம் யாம்
சந்தைப் பரத்தையைப் பெருங்கடனாளியைப்
படுவம் என்பது குழூஉக்குறி
காலாழ் களர் வயற்காட்டைப்
படுவப் பத்து என்னும் நாஞ்சில் தமிழ்
எப்பெரும் படுவமும் சுக்காம் பாறையால்
கற்குவியலால் மண்ணால் தூரும்
அரசியல் அதிபர்கள் ஆழ்மனப் படுவமோ
தூர்ந்தே போகா தூர்க்கவும் ஆகா
பாதாளம் ஏழினும் கீழ்
சொல் அழியும் இடத்தில்
அவர்தம் படுவம் இருக்குமோ
தீவு கப்பல் விமானம் விசைப்படகு
சொகுசு வாகனம் வணிக வளாகம்
மருத்துவப் பொறியியல் கலைக் கல்லூரி
மருத்துவமனை வணிக வளாகம் சாராய ஆலை
மாளிகை நட்சத்திர விடுதி
கடலலைகள் கால் கழுவும் பங்களா
சினிமா கொட்டகை காடுகள் தோட்டம் துரவு
வயல் பெருவெளி , மலைத் தோட்டங்கள்
குடங்குடமாய் பொற்காசு
பெட்டி பெட்டியாய் நவமணிப் பூண்கள்
சாக்குச் சாக்காய் பன்னாட்டுக் கரன்சி
வண்டி வண்டியாய் நம் பணக்கட்டுகள்
கணிகையர் வேசியர் பரத்தையர்
விலை முலையாட்டியர் வரைவின் மகளிர்
என எத்தனை எத்தனை கொட்டிச் சொரிந்தும்
தூரவே தூராத படுவமது
கொடு நோயோ முதுமையோ
தூர்க்க முயலலாம் கூற்றுவன் வரவு
சமரசமின்றித் தூர்த்துவிட்டு அகலும் !!
