Site icon சொல்வனம் | இதழ் 318 | 12 மே 2024

ஆக்கவோ அழிக்கவோ

ஒத்தத் தன்மையால் விலகியும்

அதே தன்மையால் விடாமலும்

ஒன்றின் இரண்டாய் நிற்கிறோம்….

துருவங்கள் நாம்.

எப்போதும் நாம் நம்மை

அறிவதில் லயித்திருக்கிறாம்…

முடிவிலாதேடல் நாம்.

அனைவருக்கும்

நாம் யார் யாரோ தான்.

சொல்லி விளங்க வைக்கும்,

செய்து நிரூபிக்கும் சங்கடங்கள் இல்லை.

எப்படி பிரிந்திருப்பது என்ற

பிலாக்கணங்கள் இல்ல…

எப்போதும் பிரிந்தே இருக்கிறோம்.

எப்போது சேர்ந்திருப்பது

என்ற பதட்டமில்லை

இருமுனைகளாய் சேர்ந்தே இருக்கிறோம்.

மலரே அறிவதில்லை அன்பே

தன் மணத்தை எடுத்து செல்லும் காற்றின்திசையை,

நாம்கூட நம் அன்பின் ரூபத்தை இன்னும் முழுதாய் அறியவில்லை…

பெரும் ப்ரியங்களுக்கு

லௌகீகங்கள் இல்லை அன்பே,

 நம் முன்னே

நம் உடலோ மனமோ கூட இல்லை.

பெற்றுக்கொள்ளுதலும் இல்லை…

நம்மை நமக்கு அளித்தல் என்ற ஒன்று மட்டுமே

 நம்மை நாமாக்குகிறது ப்ரியமே.

விதிகள் குறுக்கே நிற்காத அன்புசாத்தியம்,

 பேரன்பு சாத்தியமில்லை,

அன்பு பேரன்பாவதே விதிகளின்

பிழம்பில் சுட்டு எடுக்கப்படுவதால் தானோ!

ஊழோ விதியோ வாழ்வோ

அதற்குப்பெயர்

எதுவாயிருந்தால் என்ன அன்பே,

அது நம் முன் மண்டியிட்டு

நம் அன்பை யாசகமாய் பெற்று செல்கிறது.

யாசகம் கொடுத்தப்பின் மிஞ்சும்

வெற்றிடத்தில்

வியாபிக்கிறது பேரன்பு.

வியாபித்த பேரன்பை கடைகிறது காலம்,

திரண்டெழுகிறது அமுதமாகிய ஒன்று…

அமுதை அறிந்தவர்கள் நாம்… நம் முன்னே

என்ன செய்யும் இந்த பிரபஞ்ச விதிகள்.

கூடவே நஞ்சை நம்முள் நிறுத்தி

ஒன்றின் இருபாகமானவர்கள் நாம்…

நம்மை என்ன செய்யும் இருப்பின் துயரங்கள்.

Exit mobile version