Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

இளம்பருவத்தோள்

“Never Have I Ever” – நெட்ஃப்லிக்ஸ் தொடர்

அமெரிக்க வாழ் இந்தியர்களைப் பற்றிய முதல் நெட்ஃபிளிக்ஸ் தொடர் அமெரிக்கத் தலைமுறையினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. “தி ஆஃபீஸ்” என்ற அமெரிக்க நாடகத்தில் நடித்துப் பிரபலமான இந்திய வம்சாவளி மிண்டி கேலிங் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை “Never Have I Ever” தொடராக இயக்கியிருக்கிறார்.

நன்கு படித்து இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்குப் புலம் பெயர்ந்த குடும்பம் ஒன்று, தங்கள் கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் அப்பா இறந்துவிட, மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மகள் எதிர்கொள்ளும் உடல், மனரீதியான பிரச்னைகள், கணவனை இழந்த மனைவி பருவ வயது மகளை வளர்க்கப் படும் சிரமங்கள், இந்தியன் சென்டிமெண்ட் என்று பலரையும் பலவித கோணங்களில் சிந்திக்க வைத்திருக்கிறது. வெளிநாடுகளில் வசிப்போருக்கு, தலைமுறை இடைவெளியைத் தாண்டிய கலாசார இடைவெளியும் கவனிக்க வேண்டியதொன்றாகி விடுவதால், இத்தொடர் அதிகக் கவனம் பெறுகிறது.

முதல் பாகத்தில் தேவி (மகள் கதாபாத்திரம்) பேசும், செய்ய நினைக்கும் செயல்கள் அம்மாக்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருக்கும். பருவ வயது ஹார்மோன்களின் லீலைகள் கொஞ்சம் ஹாலிவுட்தனமாக இருந்தாலும், சொல்ல வந்த கருத்துக்களை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம். நாம் அனைவருமே பருவ வயதைக் கடந்து வந்தவர்கள்தாம். ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள்போல நடந்து கொள்ளும் சில பெற்றோர்களை நண்பர்கள் வட்டாரத்திலும் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கான தொடர் இது.

இத்தொடரில் அம்மாவாக வரும் கதா பாத்திரம் போலவே நாமும் பல நேரங்களில் நம் பெண் குழந்தைகளை நடத்தியிருக்கிறோம். நடத்திக் கொண்டிருக்கிறோம். வெளிநாட்டில் வசிப்பதால் இயல்பாகவே இருக்கும் மனத்தடையும், அதனால் ஏற்படும் பாதுகாப்பின்மையுமே இதற்குக் காரணம். புரிந்து கொள்ளும் குழந்தைகள் பொறுமையாகப் பெற்றோர்களுக்குப் பக்குவமாக எடுத்துச் சொல்கிறார்கள். எத்தனை பெற்றோர்கள் புரிந்து கொள்கிறார்கள்? குழந்தைகள் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்காத பெற்றோர்களால்தான் பிரச்னைகள் விஸ்வரூபமாக உருவெடுக்கின்றன.

வெளிநாட்டில் வளரும் குழந்தைகளுக்கு, நம் தாய்நாட்டின் பெருமையுடன், அவர்களுடைய தாய்நாட்டின் பெருமைகளையும் தெரிந்து கொண்டு கற்றுக் கொடுப்பது புலம்பெயர் பெற்றோரின் கடமை. அதிலிருந்து தவறினால் என்ன நடக்கும் என்பதைத்தான் இத்தொடர் சுட்டிக் காட்டுகிறது.

எனக்குத் தெரிந்த அம்மாக்கள் பலரும் அமெரிக்கர்களைத் தவறாக நோக்கும் பார்வையுடனே இருக்கிறார்கள். இந்தியர்கள் மட்டுமே ஒழுக்கமானவர்கள் போலவும், அமெரிக்கர்களுக்கு அப்படி ஒன்றும் கிடையாது என்ற எண்ணமே நம் அறியாமைதான். இங்கு வந்த பிறகும் நாம் வளர்ந்த சூழலைச் சொல்லிச் சொல்லியே நம் குழந்தைகளை வெறுப்பேற்றுகிறோம். நம்முடைய முதல் தவறு அங்குதான் ஆரம்பமாகிறது. குழந்தைகள் நம்மிடமிருந்து விலகும் ஆரம்பப் புள்ளியும் அதுதான்.

வீட்டில் குழந்தைகள் வளரும் சூழலும், வெளியில் நண்பர்களுடன் பழகும் சூழலும் வேறுவேறு. பல குழந்தைகள் இவ்வேறுபாடுகளை லாகவமாகக் கையாண்டு விடுகிறார்கள். பெற்றோர்களிடம் வெளிப்படையாகப் பேச முடியாமல் தடுமாறும் சில குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் அவர்களுடைய குழப்பங்களைக் களைய வேண்டிய பொறுப்பில் இருக்கும் பெற்றோர்களின் அலட்சியத்தால் ஏற்படும் பாதிப்பு இருவருக்குமே. பெற்றோர்களும் குழந்தைகளின் கோணத்தில் இருந்து அவர்களுடைய உலகத்தைக் காண வேண்டும் என்று அறிவுறுத்துகிறது இத்தொடர்.

குழந்தைகள் நல்ல நண்பர்களுடன் இருக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெற்றோரும் ஆசைப்படுவர். அமெரிக்கப் பெற்றோர்கள் குழந்தைகளின் நண்பர்களை, நல்ல நண்பர்களாக மட்டுமே பார்க்கிறார்கள். நாம்தான் நன்றாக படிப்பவனோ(ளோ), ஒழுக்கம் உள்ளவனோ(ளோ), நல்ல குடும்பமா, நல்ல வீடு இருக்கிறதா, ஊதாரியா என்று மைக்ரோ மேனேஜ்மென்ட் செய்து நம் குழந்தைகளின் நட்பைக் கொச்சைப்படுத்துகிறோம். குழந்தைகள் மீதான அவநம்பிக்கை அவர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் பெற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெற்றோருக்குப் பிடிக்காத, அவர்களால் புரிந்துகொள்ள முடியாத விஷயங்களை மறைக்க ஆரம்பித்துப் பொய் பேசவும் ஆரம்பிப்பார்கள்.இத்தொடரிலும், வீட்டிற்கு வரும் தேவியின் ஆண் நண்பனை அவமதிப்பாள் அம்மா. நிஜத்தில் இப்படி நடந்து கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்தலும், அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்தலும் மிகவும் அவசியம். 

இந்தியர்கள் பலர் எங்கு சென்றாலும், அடுத்தவரைப் பற்றிய விஷயங்களில் மூக்கை நுழைப்பதும், முதுகுக்குப் பின்னால் வம்பளப்பதும், பரிதாபப்படுவது போல் பரிகசிப்பதும் நம்மை நாமே பரிசீலனை செய்து கொள்ள வேண்டிய விஷயம். நம் குழந்தைகள் நம்மைக் கவனிக்கிறார்கள். அவர்களின் நண்பர்களுடன் இந்த விவரங்களை எல்லாம் விவாதிக்கிறார்கள். கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் பெற்றோர்களே.

இத்தொடரில், மனம் திறந்து பேசவும், அம்மாவிடம் பேசத் தயங்கும் பிரச்னைகளுக்கானத் தீர்வுகளுக்காக தேவி மனநல சிகிச்சையாளரைச் சந்தித்துப் பேசுவாள். அவள் அம்மாவைப் பொருத்தவரை, மனநல சிகிச்சை என்பது அமெரிக்கர்களுக்குத்தான் என்பது நம்மில் பலருக்கும் இருக்கும் எண்ணமே. வெளிநாடுகளில் வசிக்கும் பெற்றோர்களும் அதிக அளவில் மன பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டு சிகிச்சை பெறவேண்டிய நிலையில் இருப்பதையும் இத்தொடர் உணர்த்துகிறது. 

வெளிநாடுகளில் வளரும் குழந்தைகள் தாங்கள் வாழும் நாடுகளில் சக மாணவ, மாணவியருடன் தங்களுக்கான இடத்தைப் பொருத்திக்கொள்ள அதிகமாக மெனக்கெட வேண்டியிருக்கிறது. முற்றிலும் வேறுபட்டிருக்கும் தங்கள் நிறம், கலாசாரம், பெற்றோரின் கண்டிப்பு குழந்தைகள் பலரையும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகிறது. ஆரம்பத்திலேயே உணர்ந்துகொண்ட பெற்றோரின் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை. 

புலம்பெயர்ந்தவர்கள் அயல்நாட்டில் குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் கற்றுக் கொள்ளவேண்டிய விஷயங்கள் பல. நம் குழந்தைகள்மீது நம்பிக்கையும், அவர்களின் உணர்வுகளைப் புரிந்து வழிநடத்தும் பக்குவமும் பெற்றோர்களாகிய நமக்கு அவசியம். இல்லையேல், நம் கண்முன்னே பொய்யான வாழ்க்கையை வாழும் அவல நிலைக்கு அவர்களை நாமே தள்ளிவிடும் சூழலை உருவாக்குகிறோம் என்பதைத்தான் இத்தொடர் உணர்த்துகிறது.

Exit mobile version