Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

இரவு – கவிதைகள்

இரவு – குளம்

நிழல்
சபிக்கப்பட்ட வசைகளாய்
வடிவங்களின்றி
என்னைக் காட்டிக் கொண்டிருந்தது
சலனமில்லாத குளத்தின் தோலுக்கடியில்
ஊரும் பார்வைகள்
குமிழியிட்டு ஒளிந்து மறைகின்றன
விளிம்பில் பெயர்ந்து
ஆலின் வேர்க்கால்கள்
வெளிர்ந்து பொள்ளிக் கொண்டிருந்தன
குளத்தின் சளி படர்ந்த சுவாசத்தை.
ஒளியின் வாதை சுருண்டு தொங்கிக்கிடந்தது
முக்குப் பனைமரக் கிளைக்கொம்பில்.
நிசப்தத்தின் கமகம் எதிரொலிக்கிறது எங்கும்
நிழல்களைத் துரத்தியவைகள்
கழுத்து கட்டப்பட்டு
அகாலத்தில் குரைக்கிறது
நுரையண்டிய ஒற்றைப்படித்துறையில்
கதைகளின் சரடவிழ்ந்து
பொட்டலமாய் குவிந்து கிடந்தது
மீறலும் துடுக்கும் தளர்ந்து
விளிம்பில் அலைகள்
மந்திரித்த சரடாய் பாதங்கள் கவ்வின
சாவகாசமாய் நொதிக்கத் தொடங்கியது
இருள்
படர்ந்து கவியும்
புளிப்பின் மதுரத்தை
விரல்களிடை சிந்தச் சிந்த குடித்தேன்
எனக்கு பரிச்சயமான குரலொன்று
அவசர கதியில் விளித்துக் கொண்டேயிருந்தது
அக்கரையில்.

~oOo~

இரவு – நிழல்

கால்களுக்கடியில்
முழுமையின்றி மாட்டப்பட்டிருந்தேன்
ஒளியின் அங்கலாய்ப்புகளில்
மறைந்தும் வியாபித்தும் நகர்ந்தன
என் அரூபங்கள்
எந்தப் பொறுப்பும் பொறுப்பின்மையும்
இல்லை எனக்கு
நிகழ்வின் எச்சத்தில் கவலை கொள்ளாது
துணுக்குற்றிருப்பதாக ஊகம்
மற்றவர்களுக்கு
தெரியுமா?
பிறக்கவோ இறக்கவோ லாயக்கற்றவன்
நான்.
என் ஸ்பரிசத்தின் நொடித் தூண்டலுக்காக
காத்திருக்கின்றன
எண்ணிலடங்கா தேகங்கள்
அலைவுகளின்றி சமனிக்கும் முழுமையின்
துளியின் துளியில்
துளியின் துளியில்
எதிர்த்து நிற்கும் எல்லா சுவர்களையும்
பிறாண்டிக் கொண்டிருக்கிறேன்
சக்தியற்றிருப்பதின்
அசூயை
ஞானம்
இயலாமை
பயம்
வன்மம்
ஒன்றன் மீதொன்றாய் ஏறிக் கலக்கிறது என்னுள்
இரவின் கூர் அந்தகாரம்
மெல்லத் தலையணைந்து
கடைவாயில் அதக்குகிறது
என் மிச்சத்தை
திரும்பவும் ஓளிந்து கொள்ள
திரும்பவும் நீட்டித்துப்படர
துண்டு வெளிச்சத்தையும் இருளையும்
எதிர்பார்த்திருக்கிறேன்
பிறக்கவும் இறக்கவும் லாயக்கற்றிருப்பது
அத்தனை சுலபமா என்ன?

~oOo~

இரவு – கனவு

பகல் இரவுகள்
முரண்பட்டுக் கிடந்தன
பைத்தியக்கார சுருதியில்
சவப்பெட்டிகள் தாளங்கள் தப்பின
இடுக்கு வழி தோய்ந்து வந்த குளிர்த்தடங்களின்
ஸ்பரிசத் தூண்டுதலில்
பழுப்புச்சருகுகள்
ஒவ்வொன்றும் மொய்த்து
காலமின்மையின் நொதித்த படலத்தை
தீற்றித் தொடர்ந்தன
ஆசுவாசப்படுத்திக் கொள்ள
இடம் தேடினேன்
முழுமையாய் அறுந்து கிடந்தன
கை கால்கள்
ஊமைக்குரலின் ஓலத் துதியாய்
பதிய மறுத்த வார்த்தைகளுடன்
அமைதியின்மையைக் கட்டிக் கொண்டு
அசைவற்றுக் கிடந்தது பெட்டி
நிழல்களின் நிழல்கள்
சிறகுகள் உடைந்து
குருதி பீய்ச்சின.
அறை முழுதும் மஞ்சள் திரவமாய் வடிந்து
தலை குப்பறக் கிடந்தேன்
சாசுவதமாய்க் கமழ்ந்த
அவள் அக்குள் வெக்கையில்
அமிழ்ந்து
புரண்டு படுத்தேன்
பின் சகலமும் ஸ்தம்பித்தது.

Exit mobile version