Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

மாநில மின்வாரியங்களின் சுமை

india_powerமத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களின் மின்துறை தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்காக தமிழக முதல்வரை நெருங்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் அதற்கான தமிழக அரசின் (தொடர்பில்லாத) பதில் குற்றச்சாட்டுகளும் சமீபத்திய அதிரடிகள். மத்திய அமைச்சரின் குற்றச்சாட்டை புரிந்துக் கொள்ள,  மாநில மின்வாரியங்களின் தற்போதையை நிலையை சற்று தெரிந்திருக்க வேண்டும்.
மின்சாரம் இதுவரை சென்று சேர்ந்துள்ள ஒவ்வொருவருக்கும் அது மிக அடிப்படையானத் தேவையாகி விட்டது. பெரும்பாலான அன்றாடச் செயல்களுக்கு தேவையான கருவிகள், மனித உழைப்பை பெருமளவுக்குக் குறைக்கும் மின்சாரக் கருவிகளாகிவிட்ட நிலையில், மனித உடலில் ரத்த ஓட்டம் போல வீடுகளில் பதிக்கப்பட்டிருக்கும் கம்பிகளில் மின் ஓட்டமும் இன்றியமையாத இயக்கமாகி விட்டது. மின் ஓட்டம் தடைபட்டால் அரசாங்கங்களையே அது மாற்றியமைக்க வைத்துவிடும். இந்த நிலையில் அதை சூழ்ச்சியாக கையாள்வதன் மூலம் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளின் முயற்சியால் இன்று பெரும்பான்மையான மாநிலங்களின் மின்வாரியங்கள்\மின்வழங்கும் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதுடன் மிகப்பெரிய கடன் சுமையையும் சேர்த்து வைத்துள்ளன. மின்வாரியங்கள் மாநில அரசின் நிறுவனங்கள். எனவே அவற்றின் கடன்கள் மாநில அரசின் கடன்களுடன் சேராது. அவை நிறுவனங்களின் கடன்கள்.
2015-ம் வருடம் செப்டம்பர் மாத கணக்குப் படி 4.5 லட்சம் கோடிகள் கடன் சுமையை இந்த நிறுவனங்கள் மொத்தமாக வைத்துள்ளன. இதில் 70%, ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களின் மின்வாரியங்களால் சுமக்கப்படுகின்றன. வாக்கு வங்கி மின்சார அரசியல், அரசியல் சார்புள்ள நிர்வாகங்கள், திறமையற்ற நிர்வாகிகள் போன்ற காரணிகளே இத்தகைய சுமைக்கு காரணிகளாக இருக்க முடியும். இது வெறும் நிறுவனங்களின் சுமை மட்டும் இல்லை. நம் ஒவ்வொருவரின் நிதிச் சுமை. அதைக் குறைக்க ஆவன செய்வது ஆட்சியாளர்களின் தவிர்க்க முடியாத கடமை. நம் மேல் சுமத்தப்பட்டிருக்கும் இந்த சுமையை நாம் அறிந்திருப்பதன் மூலம், ஆட்சியளர்களை அவர்கள் கடமையை நோக்கி திசைத்திரும்ப வைக்கலாம்.
மின்சார வாரியங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்கள். பொருளாதார இயக்கங்களுக்குத் தேவையான சக்தியின் பெரும்பகுதி மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்திலிருந்துதான் போகிறது. தடையில்லாத மின்சாரம் தேவைப்படும் தொடர் இயக்க (Continuous Processing) தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை அவற்றுக்கான மின் உற்பத்தியை தாமே உற்பத்தி செய்தாலும் பிற தொழிற்சாலைகளுக்கும் நடுத்தர மற்றும் சிறு தொழில்கள் முழுவதும் மின்வாரியங்கள் வழங்கும் மின்சாரத்தை நம்பித்தான் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே குடிமக்களின் அன்றாடத் தேவைகளுக்கான மின்சக்தி மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரம் இயங்குவதற்கும் மின்வாரியங்களின் நிலையான இயக்கம் இன்றியமையாதது. எந்த ஒரு நிறுவனமும் நஷ்டத்திலும் கடன் சுமையின் அழுத்தத்திலும், அது அரசாங்கத்தின் நிறுவனமாக இருந்தாலும், வெகுகாலம் இயங்க முடியாது. மேலும் அவற்றிற்கு கடன் வழங்கியிருக்கும் வங்கிகளும் லாப நோக்கில் இயங்கும் நிறுவனங்களே. கடனையும் வட்டியையும் திருப்பிச் செலுத்த இயலாத நிறுவனங்கள் வங்கித் தொழிலையும் அழிவுக்குள்ளாக்குகின்றன. வங்கிகளும் அரசாங்க நிறுவனங்களாக இருந்தாலும் அவற்றுக்கான விதிகளின் படி, கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களுக்கு எல்லையில்லாமல் மீண்டும் கடன்வழங்கிக் கொண்டிருக்க முடியாது. ஆக மின்வாரியங்கள் அவற்றின் கடன் சுமையிலிருந்து மீண்டு தங்கள் இயக்கத்தை நிலைப்படுத்த முடிந்தால்தான் சாமானிய மனிதர்களின் அடிப்படை நுகர்வுகள் தடையின்றி நிகழ முடியும்.
இந்தப் பின்புலத்தில்தான் மத்திய மின்துறை அமைச்சரின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது. மின்வாரியங்கள் மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்து விடாமல் எடுத்துச் செல்லும் பொறுப்பு மத்திய அரசினுடையது. எனவே மின்வாரியங்கள் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இயங்குவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டியிருக்கிறது.
2012-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அப்போதைய மத்திய அரசு “மாநில மின்வழங்கு நிறுவனங்களின் நிதி மறுகட்டமைப்புத் திட்டம்” (Scheme for Financial Restructuring of state Distribution Companies) என்னும் திட்டத்தை கொண்டு வந்தது. இதன் படி மின் வாரியங்களின் குறுகிய கால கடன்களில் 50% வரையான கடன்களை மாநில அரசுகள் அவற்றின் கடன்களாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாநில அரசுகளின் கடன் பத்திரங்களை கடன் கொடுத்திருக்கும் வங்கிகளுக்கு அளிப்பதன் மூலம், இந்த கடன் மாற்றம் செய்யப்படும். மீதி 50% குறுகிய கால கடன்கள், நீண்ட கால கடன்களாக மாற்றயமைக்கப்படும். இந்த மாற்றியமைத்தலுக்கு, மின் வாரியங்கள் சார்பாக மாநில அரசுகள் கடன் உறுதி (Guarantee) வழங்க வேண்டும். மாநில அரசுகள் உச்ச வரம்பான மின்வாரியங்களின் 50% குறுகியகால கடன்களை முழுவதுமாக ஏற்றுக் கொண்டால், அதில் 25% தொகையை ஊக்கத் தொகையாக மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும்.
மாநில அரசுகள் இந்த கடனை ஏற்றுக்கொள்ளும்போது மாநிலங்களின் நிதி நிலமையையும் கணக்கில் கொள்ளப்படும். மாநிலங்கள் அவற்றின் மொத்த உற்பத்தியில் (GDP) 25% அளவுக்குத்தான் அதிகப்பட்சமாக கடன் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் வருடாந்திர வரவு செலவு பற்றாக்குறை மொத்த உற்பத்தியில் 3% க்கு அதிகமாக இருக்கக் கூடாது. இந்த அடிப்படையில் 50% கடனை  மூன்று வருடங்களாக மாநில அரசின் கணக்கில் ஏற்றுக் கொள்ளலாம். இவ்வாறு நிறுவனங்களின் கடன்கள், கடன் பத்திரங்களாகவும் நீண்ட கால கடன்களாகவும் மாற்றப்படும்போது, வட்டி விகிதம் பெருமளவு குறைக்கப்படும். மேலும் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுகிறது. அதாவது மின் நிறுவனங்களுக்கும் மாநில அரசாங்கங்களுக்கும் வட்டிச் சலுகையுடன் கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் வங்கிகள் வராக்கடன்கள் என்னும் நிலையில் மின்வாரியங்கள் மேல் நடவடிக்கை எடுப்பது தவிர்க்கப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகள், இந்தக்கடன்களை வராக்கடன்கள் என்று கணக்கில் ஏற்றி, வங்கிகளின் நஷ்டமாக வரவுச்செலவு கணக்கில் (Balance sheet) காண்பித்து வங்கியின் பங்குதாரர்களை நஷ்டப்பட வைப்பது தவிர்க்கப்படுகிறது.
மின்வாரியங்கள் இந்தச் சலுகையைப் பெறுவதற்கு, மத்திய அரசு விதிக்கும் சில நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவற்றில் சில….

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகள் அனைத்தும் மத்திய அரசின் 25% ஊக்கத் தொகையைப் பெறுவதற்கு பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். இவை அனைத்தும் மாநில அரசுகளை அமைத்திருக்கும் அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கிகளை இல்லாமல் செய்யும் நிபந்தனைகள். எனவே எந்த மாநிலமும் இந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டிருக்க சாத்தியம் இல்லை. எத்தனை மாநிலங்களின் மின்வாரியங்கள் மத்தய அரசு அறிவித்த இந்த நிதி நிலையை சரி செய்து கொள்ளும் வாய்ப்பை  பயன்படுத்தின என்பதற்கான தரவுகள் இணையத்தில் கிடைக்கவில்லை.
ஆனால் தமிழகம் உட்பட பெரும்பாலான மாநிலங்கள், மத்திய அரசு வழங்குவதாகக் கூறியிருந்த 25% ஊக்கத்தொகையைத் தவிர மற்ற அம்சங்களை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஏப்பரல்-2012 மற்றும் டிசம்பர்-2014 என இருமுறை மின் கட்டணங்கள் தமிழ்நாட்டில் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தியிருக்கிறது என்பதற்கு மின்கட்டண மாறுதல்களையே சான்றாக எடுத்துக் கொள்ளலாம்\வேண்டியிருக்கிறது. இதைத் தவிர இன்னொரு சுட்டிக்காட்டியையும் (Inicator) கவனத்தில் கொள்ளலாம். 2011-12 ம் ஆண்டு வரையிலும் மின்வாரியங்களின் வருடாந்திர நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து, அந்த ஆண்டில் 76877 கோடி ரூபாயாக இருந்துள்ளது. பின்னர் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. நவம்பர் 2015 க்கு முன் செய்யப்பட்ட கணிப்பின் படி, 2014-15 ம் ஆண்டின் மொத்த நஷ்டம் 60000 கோடியாக இருக்கும்.
இந்தத் திட்டம் முந்தைய மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. நவம்பர் 2015-ல் தற்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ‘உதே’ (UDAY – Ujwal DISCOM Assurance Yojana), இதன் தொடர்ச்சியாகவும், இயல்பாகவே விரிவாக்கப்பட்டதாகவும் உள்ளது. உதே என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு பிரகாசமான எதிர்காலம் என்று பொருள் கொள்ளப்படுகிறது – மின் பகிர்மான நிறுவனங்களின் பிரகாசமான எதிர்காலத்திற்கானத் திட்டம்.

முன்பு அறிவிக்கப்பட்ட திட்டத்திற்கும் தற்போதைய உதே திட்டத்திற்குமான முக்கியமான வேறுபாடு; முந்தையத் திட்டத்தில் குறுகிய கால கடன்கள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டது. தற்போதைய திட்டத்தில் மின்வாரியங்களின் அனைத்துக் கடன்களும் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் முந்தையத் திட்டத்தில் எதிர்கால இழப்புக்களைப் பற்றி எதுவும் கூறப்படவில்லை. தற்போதைய திட்டத்தின் படி மின்வாரியங்களின் எதிர்கால இழப்புக்கள் மாநில அரசின் கணக்கில் வரும்.
மின் பகிர்மானத்தில் முக்கியமான இன்னொரு அளவீடு சராசரி தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்பு (Average Technical & Commercial Loss – AT & C). இதில் தொழில் நுட்ப இழப்பு என்பது, கம்பிகளில் மின்சாரத்தை தொலை தூரங்களுக்கு எடுத்துச் செல்லும்போது ஏற்படும் இழப்புக்கள், மின்சாரத்தை உயர் அழுத்தமாகவும் தாழ் அழுத்தமாகவும் மாற்றும்போது, மாற்றிகளில் (Transformers) ஏற்படும் இழப்புகள் போன்ற தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்படுபவை. வணிக இழப்பு என்பது முறையற்ற கணக்கீடுகள், மின் திருட்டு போன்ற காரணிகளால் ஏற்படுபவை. இவற்றில் தொழில் நுட்ப இழப்பு இருந்து கொண்டேதான் இருக்கும். சிறப்பான உபகரணங்களை உபயோகிப்பத்தன் மூலம் சற்றே குறைக்கலாம். ஆனால் வணிக இழப்பை முழுவதும் இல்லாமல் செய்து விடலாம்.
இதற்குத் தேவை மின் பகிர்மானத்தின் ஒவ்வொரு நிலையிலும் மின்சாரத்தை அளவிடுவது. உதாரணமாக ஒவ்வொரு மின்மாற்றியிலும் அது வழங்கும் மின்சாரத்தை அளவிட்டால், அந்த மின்மாற்றியிலிருந்து செல்லும் மின்சாரத்தில் எவ்வளவு இழப்பு வருகிறது என்பதை அறியலாம். குறிப்பிட்ட இடங்களில் அதிக இழப்பு ஏற்பட்டால், அந்த இடங்களில் இழப்புக்கான காரணத்தை கண்டறிந்து நிவரத்தி செய்யலாம். உதே திட்டத்தின் முக்கியமான ஒரு நோக்கம், மின் இழப்பீட்டை 15% அளவிற்கு குறைப்பது. தற்போது தமிழகத்தின் AT & C  இழப்பு 22% ஆக உள்ளது. இதுவே இந்தியா முழுமைக்குமான சராசரி இழப்பு. AT & C இழப்பு அருணாச்சல பிரதேசத்தில் அதிகப்பட்சமாக 68% ம் குறைந்தப்பட்சமாக கோவாவில் 11% ம் உள்ளது.
இது தவிர உதே திட்டத்தில் மின் உற்பத்திச் செலவைக் குறைப்பதற்கான, உற்பத்தியைப் பெருக்குவதற்கான, மின் பயன்பாட்டின் திறனை அதிகரிப்பதற்கான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுருக்கின்றன. இதுவரை இத்திட்டத்தை செயல்படுத்தும் முறையில் இது வெறும் திட்டம் மட்டும் அல்ல ஒரு பயணமுமாக இருப்பது தெரிகிறது. இதுவரை ஆந்திரா, ஜார்க்கன்ட், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகன்ட், ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார், மஹாராஷ்ட்ரா மற்றும் ஒடிசா ஆகிய பதினைந்து மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து விட்டன அல்லது சேர்வதாக உறுதி அளித்து விட்டன.
மத்திய மின்துறை அமைச்சரால் தமிழ அரசாங்கத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தில் சேர்வதற்கான கெடு முடிவடைந்து விட்டது அல்லது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏனெனில் இது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியத் திட்டம். இதில் சேர்வதும் சேராததும் மாநில அரசின் தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் சேராமல் இருந்தால், அதன்வழியாக அடையப்போகும் எதிர்மறை விளைவுகள் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்தங்க வைக்கலாம். எந்தத் துறையின் வளர்ச்சிக்கும் தடையற்ற சக்தி, அதிலும் குறிப்பாக தடையற்ற மின் சக்தி மிகவும் அவசியம். இந்தத் திட்டத்தில் சேராததன் மூலம் மின்வாரியங்கள் வங்கிகளிடமிருந்து பெற்றிருக்கும் கடன்களை திருப்பிச் செலுத்த இயலாமல் இருப்பதன் மூலம் அவை வராக்கடன்கள் எனப்பட்டியல் இடப்படும். இதன் மூலம் Credit Rating நிறுவனங்கள் தமிழக மின்வாரியத்தின் கடன் பெறும் தகுதியை இல்லாமல் செய்து விடும். எனவே எதிர்காலத்தில் மின்வாரியம் எங்கிருந்தும் கடன் பெற முடியாது. அவற்றின் முழு இழப்புக்களும் செலவுகளும் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எனில் தமிழக அரசின் பற்றாக்குறை அளவு அனுமதிக்கப்பட்டிருக்கும் மொத்த உற்பத்தியின் 3% அளவிற்கு அதிகமாக செல்லக்கூடும். இதை சமாளிக்க தமிழக அரசு எல்லா வளர்ச்சித் திட்டங்களையும், ஒருவேளை இலவசத் திட்டங்களைக் கூட கிடப்பில் போட வேண்டியிருக்கும். மறுபுறத்தில் பலவீனமடைந்த மின்வாரியத்தினால் தொழில் துறை பாதிப்புக்குள்ளாகும். மொத்த உற்பத்தி குறையும். பற்றாக்குறை அளவு இன்னொரு திசையிலிருந்து 3% அளவிற்கு அதிகரிக்கும்.
தமிழக அரசு “உதவி செய்யுங்கள்” என மத்திய அரசுக்கு கடிதங்கள் எழுதலாம். உதவி செய்யும்போது ஏற்றுக் கொள்ளாத மாநில அரசுக்கு எதுவும் செய்ய முடியாத கையறு நிலைக்கு மத்திய அரசு தள்ளப்படலாம். தமிழகத்தின் நிதிப் பிரச்சினைகள் மத்திய அரசு புறந்தள்ளுகிறது, தமிழகத்தை இந்தியா புறக்கணிக்கிறது என மேடையில் முழங்கலாம். அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசியம் என்னும் கருத்தை உணர்ச்சிக்கரமாக நம் மேல் திணிக்கலாம். நாமும் ‘தமிழ் தேசியம்’ என்னும் பின்பாட்டு பாடலாம்! இன்று நம் தேவையை உறுதியாக நம் அரசாங்கங்களிடம் நம்மால் தெரிவிக்க முடியாவிட்டால், இவையெல்லாம் நம் எதிர்கால சாத்தியங்களில் சில!
தரவுகள்
http://powermin.nic.in/whats_new/pdf/Financial_restructuring_of_State_Distribution_Companies_discoms_Oct2012.pdf
http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=130261
http://powermin.nic.in/upload/pdf/Power_Sector_Reforms.pdf

Exit mobile version