Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

பர்மாவின் செட்டியார்கள்

காரைக்குடி செட்டியார்கள்

இந்திய வணிக விரிவு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விரிந்து பரந்திருந்த காலம் ஒன்று இருந்தது. மொகலாயர் வரவுக்குப்பின் தொடர்ந்த போர்களாலும், இந்துமத சமூகக்குழுக்கள் மீது தொடுக்கப்பட்ட கலாசார தாக்குதல்களாலும் இந்த கடல் கடந்த வணிகம் சுருங்கியது. 19–ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் பிரிட்டிஷ் காலனியாதிக்கம் பெரிதாய் விரிவடையத்தொடங்கியது. கிழக்கிந்திய வணிகம் பரவிய பிரிட்டிஷ் காலனி நாடுகள் அனைத்திலும் இந்திய வியாபார சமூகங்கள் மீண்டும் படிப்படியாக வணிகத்தொடர்பை விரிவாக்கத்தொடங்கின. இதில் முன்னின்ற தென்னிந்திய சாதிக்குழு காரைக்குடி செட்டியார்கள்.
காரைக்குடி செட்டியார்கள் அடிப்படையில் வியாபாரிகள். சோழர்கள் கல்வெட்டுகளில் காணப்படும் நகரத்தார்கள் என்ற குறிப்பை தம்மைக் குறிப்பதாக இவர்கள் கருதுகிறார்கள். அதன் அடிப்படையில் நகரத்தார்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள்.
17-ஆம் நூற்றாண்டில் பெரும்பாலும் உப்புவணிகர்களாக அறியப்பட்டவர்கள் செட்டியார்கள். 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வங்காளத்திலிருந்து மெட்ராஸிற்கும் இலங்கைக்கும் அரிசி தானியங்களையும், மெட்ராஸிலிருந்து வங்கத்திற்கு உப்பையும் வணிகம் செய்யும் பெரு வணிகர்களாக ஒரு செட்டியார் வணிக வலைப்பின்னல் உருவாகி இருந்தது. வியாபாரிகள் என்பதால் பல இடங்களில் பண்டமாற்றம், தொடர்ந்த பணப்புழக்கம், அதன் தொடர்ச்சியாய் கடன் கொடுக்கல், வாங்கல், டெபாசிட் பெற்றுக்கொண்டு பங்குதாரர்களுக்கு வட்டி வழங்குதல் ஆகியவற்றின் வழியாக வணிகம், கடன் நிர்வாகம், வங்கித்தொழில் ஆகியவற்றிலும் செட்டியார்கள் முக்கியப்பங்கு வகித்தனர்.

பர்மாவில் செட்டியார்கள்

பிரிட்டிஷ் காலனியம் சென்ற இடங்களில் எல்லாம் காரைக்குடி செட்டியார்கள் தங்கள் வணிகத்தை கொண்டு சென்று விரிவுபடுத்திக்கொண்டே வந்தார்கள். அவ்வகையில், 1826-இல் பர்மாவில் பிரிட்டிஷார் பெற்ற வெற்றிகளைத்தொடர்ந்து பர்மாவில் செட்டியார்களின் வணிகம் துவங்கியது. அடுத்த முப்பது ஆண்டுகளில் வளமான கீழ் பர்மிய நிலம் முழுவதும் பிரிட்டிஷார் கைக்கு வந்தது. செட்டியார்கள் ஏஜென்ஸி ரங்கூனில் 1852-இல் துவங்கப்பட்டது.
பிரிட்டிஷாருக்கும் செட்டி வணிகர்களுக்கும் பொதுவாகவே நல்ல உறவு இருந்தது. 1869-இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டதைத்தொடர்ந்து, கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பாவிற்கு வணிகம் பெருகத்தொடங்கியது. பர்மாவில் அரிசி விளைச்சலைப்பெருக்கி அந்த உபரியை ஐரோப்பிய சந்தையில் விற்பதில் பிரிட்டிஷாருக்கு அதிக லாபம் இருந்தது. கீழ் பர்மிய நிலங்கள் வேளாண்மைக்கு ஏற்ற வளமான நிலங்கள். மேல் பர்மாவிலிருந்து வயல்வேலைக்கு ஆட்கள் கிடைப்பார்கள். ஆனால் விதைகள் வாங்கவும் உரம் வாங்கவும் முறைப்படுத்தப்பட்ட பாசனத்திற்கும் விளைநிலங்களைப் பராமரிக்கவும் தேவையான முதலீட்டுப்பணம் கீழ் பர்மிய விவசாயிகளிடத்தில் கிடையாது. விவசாயத்தில் முதலீடு செய்தால், அப்படி முதலீடு செய்யப்பட்ட பணத்திற்கு உத்தரவாதம் என்று ஒன்று இல்லாமல் அதில் எப்படிப் பணம் முதலீடு செய்வது?
1876-இல் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த கீழ் பர்மிய நிலச் சீர்திருத்தச் சட்டம் இதற்கு பதிலளிப்பதாய் அமைந்தது. விவசாய நிலங்களின் பேரில் கடன் வழங்கப்படலாம் என்பதே அந்தச் சட்டத்தின் சாராம்சம். வேறு வகையில் சொன்னால், கடனுக்கான வட்டி வந்து சேரவில்லை என்றால், அந்த நிலமும் அதன் விளைச்சலும் கடனுக்கு ஒத்தியாக எடுத்துக்கொள்ளப்படலாம். இந்த ஏற்பாட்டிற்குச் சட்டத்தின் வழி பிரிட்டிஷ் அரசு பாதுகாப்பை அளித்தது.
கையில் பணம் இருந்த சீனர்களும், பர்மியர்களும், நாட்டுக்கோட்டை செட்டியார்களும் பர்மிய அரிசி வியாபாரத்திற்கு வங்கிக்கடன் வழங்குவதன் வழியாக பர்மிய வணிகத்தில் போட்டி போடத்தொடங்கினர். 1852-இல் 1000 ஏக்கருக்கும் குறைவான நிலமே வேளாண்மை நிலமாக பர்மாவில் இருந்தது. செட்டியார்கள் பர்மாவின் அரிசி வியாபாரத்தில் நுழைந்த அடுத்த 80 வருடங்களில் இது பத்துமடங்கு அதிகரித்தது.
1820-களில் இருந்து 1870-வரை செட்டியார்கள் பர்மாவில் உருவாக்கி வைத்திருந்த ஒரு வியாபார அடித்தளம் ஏற்கனவே இருந்தது. விளைநிலங்கள் விவசாய முதலீட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட தொடக்க காலகட்டங்களிலேயே உள்ளே நுழைந்து விட்டதால் மிகப்பெரும் புதிய வங்கிச்சந்தை ஒன்று செட்டியார்களுக்கு கிடைத்தது. அங்கு முதலீடு செய்வது இந்திய முதலீடுகளை விட அதிக லாபம் தருவதாகவும் இருந்தது. காரைக்குடி செட்டிக்குடும்பங்கள் அத்தனையும் பர்மாவின் வியாபாரத்தில் முதலீடு செய்தன. 1930-இல் நாட்டுக்கொட்டை செட்டியார்களின் மொத்த செல்வத்தில் 60லிருந்து 80 சதவீதம் வரை பர்மிய முதலீட்டில் இருந்தது. இதில் மூன்றில் இரண்டு பங்கு முதலீடு விவசாயக்கடன் முதலீட்டில் இருந்தது.

சாதி என்கிற மூலதனம்

1870-களில் தொடங்கி அடுத்த ஐம்பது ஆண்டுகளில் சீனர்களையும் பர்மியர்களையும் பின்னுக்குத்தள்ளி பர்மிய அரிசி வணிகத்தின் தனிப்பெரும் சக்தியாக செட்டியார்கள் வளர்ந்தார்கள். இதற்கு முக்கியக்காரணமாக இருந்தது செட்டியார்கள் தரும் கடனுக்கு வட்டி விகிதம் சீனர்களையும் பர்மியர்களையும் விட கணிசமான அளவில் குறைவாக இருந்தது. செட்டியார்களால் இப்படி குறைவான வட்டிக்குக் கடன் தர முடிந்தமைக்குப்பின் உள்ளது வெறும் தொழில் நிர்வாகக்காரணிகள் மட்டும் கிடையாது. இது பற்றிய ஆய்வுகள் இப்போதுதான் வெளிவரத்தொடங்கி உள்ளன. (டேவிட் ருட்னரின் ஆய்வு இதில் முக்கியமானது).
நாட்டுக்கோட்டை செட்டியார்களின் வியாபாரத்தின் அடித்தளமாய் விளங்கியது அவர்களது வலுவான சாதிக்கட்டமைப்பு மற்றும் தெய்வ நம்பிக்கை.
நகரத்தார் என்கிற சாதிக்கட்டமைப்பே செட்டிநாட்டின் ஒன்பது கோவில்களைச்சுற்றி அமைந்த ஒன்றுதான். இளையாத்தங்குடி, மாத்தூர், வைரவன்பட்டி, நேமங்கோவில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, இரணிக்கோயில், பிள்ளையார்பட்டி ஆகிய ஒன்பது கோவில்வழிபடு பங்காளிக்கூட்டங்களாக இவர்கள் அறியப்படுகின்றனர். கோவில் அறக்கட்டளைகளுக்கு செலுத்தப்படும் புள்ளி வரியும் செல்வந்தர்களிடமிருந்து பெறப்படும் ஆஸ்தி வரியும் கோவில் நிர்வாகத்திற்கும், பண்டிகைகட்கும் அவை சார்ந்த வியாபாரங்களுக்கும் உதவுகின்றன. இதைத்தாண்டி செட்டி சமூக செல்வந்தர்கள் செட்டிநாட்டையும் அதைச்சுற்றியுமுள்ள கோவில்களுக்கு தனிப்பட முறையில் பெருமளவு தானதர்மங்கள் செய்திருக்கிறார்கள். 1850லிருந்து 1930 வரையிலான செட்டி செல்வந்தர்களின் தனிப்பட்டகோவில் தானம் மட்டும் இந்தக்கோவில்களில் பத்துகோடிக்கும் மேலாக இருந்தது.
செட்டி நாட்டுக்கோவில்கள் தவிர பிற கோவில்களுக்கும் நகரத்தார் அறப்பணி செய்தனர். இந்த அறப்பணியில் தெளிவாக வியாபார நோக்கமும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஏனென்றால் அறக்கட்டளையின் முக்கிய பங்குதாரர்களுக்கு கோவில் வரவு செலவுகளை நிர்வகிப்பதில் அதிகாரம் இருந்தது. ஆனால் இதை ஒரு ஆள் அல்லது ஒரு குடும்பம் என்றில்லாமல் ஊரின் ஒட்டுமொத்த வணிக மேம்பாட்டுக்காக உபயோகப்படுத்தியது கவனப்படுத்தப்பட வேண்டியது. கோவில், அதன் திருவிழாக்கள் இவை சார்ந்து ஊரில் உள்ள அத்தனை வியாபாரங்களும் வளர்கையில் நகரத்தார் வியாபாரமும் வளர்ந்தது.
இதைத்தாண்டி மிகவும் சிக்கலான, நுட்பமான டெபாசிட் திட்டங்களை நிர்வகிப்பதில் காரைக்குடி செட்டியார்கள் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். நகரத்தார் டெபாசிட்டுகள் நம்பிகைக்காகவும், நாணயத்திற்காகவும் பேர் போனவை. பெரும்பான்மையான டெபாசிட்டுகள் தங்கள் சாதிக்குழுக்களுக்கிடையே பெறப்பட்டவை. சொந்த முதலீடு முதல்பணம் என்றும், வெளியிலிருந்து வரும் டெபாஸிட்டுகள் மேம்பணம் எனவும் அழைக்கப்பட்டன. ஒரே கோவிலைச்சேர்ந்த பங்காளிகள் தரும் பணம் தவணைமுறைப்பணம். நகரத்தார்களின் ஒன்பது கோவில்களிலிருந்து பெறப்படும் பணம் கோவில் பணம், வியாபாரத்தில் போடப்படும் குடும்பத்தலைவிகளின் வரதட்சணைப்பணம் ஆச்சிமார் பணம். இப்படி நெருக்கமான உறவுகள், குடும்ப கோவில் பங்காளிகள், பிற கோவில் பங்காளிகள், பிற சாதிக்காரர்கள் முதலீடு செய்யும் பணம் என்று ஒவ்வொன்றும் சரியாய்க்கணக்கு பிரிக்கப்பட்டு, வெவ்வேறு விதமாகக் கையாளப்பட்டன.
நகரத்தார்களிடமிருந்து பெறப்படும் நடப்பு டெபாசிட்டுகளுக்கு தனி வட்டி (simple interest) வழங்கப்பட்டது. நடப்பு கணக்குக்கான வட்டி ஒவ்வொரு மாதமும் சிறு அளவில் மாறக்கூடியது.
குறுகிய கால டெபாசிட்டுகளுக்கு அதிக வட்டி தரப்படும். ஆனால் குறுகிய கால டெபாசிட்டுகள் என்று வரும்போது நகரத்தார்கள் டெபாசிட்டுகளுக்கு (தவணை டெபாசிட்) கூட்டு வட்டியும், பிறசாதிக்காரர்களுக்கு (வயன் வட்டி டெபாசிட்) தனி வட்டியும் தரப்பட்டது.
பணம் கொடுக்கல் வாங்கலில் செட்டியார்கள் நாணயம், நம்பகத்தன்மை, வியாபார ஸ்திரத்தன்மை ஆகியவற்றை முதன்மையாய்க்கொண்டே இயங்கினார்கள். எனவே சக நகரத்தார்களுக்கு வட்டி குறைவு என்பதற்குப் பின் இருந்தது வெறும் சாதிப்பாசம் இல்லை. அதற்குப்பின் இருந்தது அடிப்படையான ஒரு பொருளாதாரக் காரணம்தான்.
வட்டி என்கிற பொருளாதாரக் குறியீடு
வட்டி என்பது உண்மையில் கண்ணுக்குப்புலப்படாத பூடகமான விஷயமான சந்தை இடர்ப்பாடு (market risk) என்பதன் பொருண்மையான குறியீடுதான் என்பதை உணர்ந்தால் இந்த பொருளாதாரக் காரணியின் பின்னணி புரியும். காரைக்குடி செட்டியார் சாதி என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல நூற்றாண்டு உறவுகளால் வந்த சாதிப்பிணைப்பால் இணைந்த நெருக்கமான வலைப்பின்னல். ஒவ்வொரு குடும்பமும், அதன் கோவில் பின்னணியும், சாதிப்பின்னணியும், வியாபாரப்பின்னணியும் பொதுவாய் மற்ற குடும்பங்கள் அறிந்தவை என்பதால், நகரத்தார்களுக்குள் தரப்படும் கொடுக்கல் வாங்கலில் எதிர்பாரா ரிஸ்க் என்பது எப்போதும் குறைவு.
கூட்டு வட்டி கிடைத்ததால் செட்டியார் குடும்பங்கள் குறுகிய கால டெபாசிட்டுகளில் முதலீடு செய்தன. அதே சமயம் பொதுவாக, தெரிந்த குடும்பங்கள், உறவுமுறை ஆகியவற்றிலிருந்து பெறும் பணம் என்பதால் உடனடியாய் இந்தபணம் ஒரேசமயத்தில் ஒட்டுமொத்தமாய் வங்கியிலிருந்து எடுக்கப்படும் சாத்தியம் குறைவு. (அதனாலேயே கூட்டு வட்டி என்கிற சலுகை). அதே சமயம் பிற சாதிக்காரர்களிடமிருந்து பெறப்படும் வயன் வட்டி என்கிற அதே குறுகில கால டெபாசிட்டிற்கு கூட்டு வட்டி கிடையாது- தனிவட்டிதான்.
ஆக, ரிஸ்க் அதிகமுள்ள கூட்டு வட்டி டெபாசிட்டுகளையும், மாதாமாதம் வட்டி விகிதம் மாறக்கூடிய நடப்பு டெபாசிட்டுகளையும் தன் சமூகத்துக்குள் மட்டும் கொடுக்கல் வாங்கலாக வைத்துக்கொண்டதன் வழியாக செட்டியார்களின் வங்கிகளில், திடீர் பண இழப்புக்கான ரிஸ்க் ஒட்டுமொத்தமாகக் குறைந்தது. அதே சமயம் பிற சாதிக்காரர்களிடமிருந்து குறைந்த “விலையில்” (தனி வட்டி) டெபாசிட்டுகளைத் திரட்ட முடிந்தது. செட்டியார்களின் வங்கிக்கு ரிஸ்க் குறைவு என்பதே பிற சாதிக்காரர்களை (தனி வட்டிதான் என்றாலும்) செட்டியார் வங்கிகளில் குறுகிய கால டெபாசிட்டுகளைப்போட வைத்தது.
இப்படிப்பட்ட உறுதியான நிதி ஆதார அடித்தளத்தை வைத்துக்கொண்டுதான் சாதாரண செட்டிக்குடும்பங்கள்கூட பர்மாவின் கடும் போட்டி நிறைந்த வங்கிக்களத்தில் இறங்கின. அதில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை ஏஜெண்டுகளாக இணைத்து பதின்மப் பருவத்திலேயே பயிற்சிக்கு அனுப்பின. செட்டியார் ஏஜெண்டுகள் பர்மாவின் சிறு கிராமங்களில் எல்லாம் வலைப்பின்னலாய்ப் படர்ந்தனர். கடன் கேட்க வருபவரின் பின்னணியையும் அவர்களது தொழிலையும் அருகில் இருந்து அறிந்து கடன் தந்தனர். இதுவும் செட்டியார் வியாபாரக் கடன்களுக்கான ரிஸ்க் என்பதைக் கீழிறக்கியது.

அநியாய வட்டி விதித்தார்களா?

இந்நிலையில், ஒரு விஷயம் குறிப்பிட்டாக வேண்டும். வட்டி என்பதே தவறு என்பது எல்லாவித பொருளாதார சித்தாந்தத்திலும் அபத்தமான கருதுகோள்தான். மார்க்ஸ் கூட தொழில்துறையில் வட்டியின் பங்கை அங்கீகரிக்கிறார். வட்டி என்பது உற்பத்தியிலும், தொழில் விரிவிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதே சமயம் ஒருவரது பொருளாதார இக்கட்டான நிலையை உபயோகப்படுத்திக்கொண்டு அவரது சொத்துகளைப் பிடுங்கும் நோக்கத்துடன் அவருக்கு மிக அதிக வட்டியில் வழங்கப்படும் கந்து வட்டி போன்ற கடன் வகைகள் (usury) எல்லா சமூகத்தாலும் வெறுப்புடனேயே பார்க்கப்பட்டன. ஆனால் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் எவ்விதத்திலும் இப்படிப்பட்ட நாணயமற்ற கடன் வழங்கலில் ஈடுபடவில்லை.
செட்டியார்கள் உண்மையில் சீனா, பர்மிய லேவாதேவிக்காரர்களின் வட்டி விகிதத்தை விட குறைந்த வட்டி விகிதத்திலேயே கடன் வழங்கினார்கள். அன்றைய பர்மாவின் செட்டியார்கள் வழங்கிய கடன் வட்டி வீதம் வருமாறு (ஷான் டர்னல் ஆய்வறிக்கை):

முதல் பார்வைக்கு இது அதிகம் போல் தெரியலாம். ஆனால் அந்த காலகட்டத்தில் (1929-இல்) பிரிட்டிஷ் காலனிய வங்கியின் வட்டி வீதம் 7லிருந்து 10 சதவீதமாக இருந்தது. நடப்பு வட்டியாக டெபாசிட்டுகளுக்கு தர வேண்டிய வட்டி பிரிட்டிஷ் வங்கியின் வட்டியை விட இரண்டு அல்லது மூன்று புள்ளிகள் அதிகம். ஆக, இதுவே குறைந்தது 10 சதவீதம் என்று ஆகிறது. செட்டியார் வங்கிகளின் வேறெந்த செலவும் கணக்கில் கொள்ளப்படாத நிலையில், மேற்காட்டிய சதவீதங்களின் அடிப்படையில் செட்டியார்களின் கடனுக்கான வட்டி விகிதம் எவ்விதத்திலும் அதிக வட்டி என்று கூற முடியாது.
இதே காலகட்டத்தில் பிற இனத்தவர் தந்த கடன்களுக்கான வட்டி விகிதம் என்ன?

பர்மிய குறுகியகாலக் கடன் அநியாய வட்டிக்குள் அவர்களைத்தள்ளும். சீன லேவாதேவிக்காரர்களின் வட்டி விகிதமும் அதிகம். அதே சமயம் கிராமங்களில் ஏஜெண்ட் நெட்வொர்க்கும், செட்டியார்கள் அளவுக்குக்கிடையாது.
விரைவில் கிடைக்கக் கூடிய கடன் (1 மணிநேரத்தில்!), எல்லா நேரங்களிலும் திறந்திருப்பது (வருடத்தில் நான்கு நாட்கள்தான் விடுமுறை), அணுக எளிதாக இருப்பது, குறைந்த வட்டி விகிதம்- ஆகியவை செட்டியார்கள் வங்கியை பர்மிய விவசாயிகளுக்கு நெருக்கமாக்கியது. சாதாரண பர்மிய விவசாயிக்கோ, சிறு தொழிலில் முனையும் பர்மியருக்கோ பிரிட்டிஷ் இம்பீரியல் வங்கியின் கடன் என்பது கனவில் கூட எண்ண முடியாத ஒன்று. நாட்டுக்கோட்டை செட்டியார்கள்தான் அந்த இடத்தை நிரப்பியவர்கள். செட்டியார்களின் ஏஜெண்டுகள் வழியாக வங்கி வசதியே இல்லாத தொலைதூர சிறுகிராம பர்மிய விவசாயியும் கடன் பெற முடிந்தது. கீழ்பர்மாவில் ஒவ்வொரு 5000 பர்மியருக்கும் ஒரு செட்டியார் வங்கி ஏஜெண்ட் இருந்தார். பர்மிய லேவாதேவிக்காரர்களுடனோ அல்லது சீன லேவாதேவிக்காரர்களுடனோ ஒப்பிடும்போது ஒப்பீட்டில், குறைவான வட்டி விகிதத்தின் பேரில் செட்டியார்களின் வங்கி கடன் வழங்கியது.

பலிகடாக்களான பர்மாவின் செட்டியார்கள்

இவ்வாறு பிற லேவாதேவிக்குழுக்களால் இயலாத அளவுக்கு குறைந்த வட்டியில் செட்டியார்கள் கடன் தரமுடிந்தமைக்கு காரணம் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் சாதிக்கட்டுமானம். சாதிக்கட்டுக்குள் கொடுக்கல்-வாங்கல் வழியாகவும் ஊரிலிருந்து ஏஜெண்டுகளின் இறக்குமதி வழியாகவும் செலவழிக்காது சேமிக்கும் குணமுள்ள குடும்ப அமைப்பாலும் ரிஸ்க்-ரிவார்ட் என்கிற இரண்டையுமே பரவலாக்கியது. அதன் வழியாக செட்டிகள் வழங்கும் கடனுக்கு ரிஸ்க் ஒட்டுமொத்தமாக கீழிறங்கியது. அதனால் மற்ற குழுக்களை விட குறைந்த வட்டியில் பர்மிய செட்டியார்களால் தொழில்களுக்கு கடன் வழங்க முடிந்தது. இது பர்மிய லேவாதேவிக்குழுக்களின் கடும் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டது.
1930-இல் உலக பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகச் சரிந்தபோது வங்கித்தொழில் பெரும் சரிவை அடைந்தபோது, கடனுக்கு ஒத்தியாக வைக்கப்பட்ட நிலம் செட்டியார்கள் கையில் வந்தது, ஆனால் அவர்கள் நில உடமையாளர்கள் அல்ல. எனவே அவர்களது சரிந்த பொருளாதாரம் நிமிரவேயில்லை.
ஜப்பான் பர்மா மீது படையெடுத்தபோது அஸ்ஸாம் நோக்கி தப்பி கால்நடையாய் வந்த கூட்டத்தில் மடிந்த ஒரு லட்சம் பேர்களில் செட்டிக்குடும்பங்கள் பல அடங்கும். இரண்டுமாதங்கள் நடந்து இந்தியாவிற்குள் நுழைந்தபோது அவர்களை மகிழ்ச்சியாய் வரவேற்று உணவும் இருப்பிடமும் தந்து காத்தவர்கள் வங்காளிகளும், மார்வாரிகளும் ஆவர்.
ஆனால் பர்மிய சுதந்திரத்துக்குப்பின் எல்லா காலனிய நிலங்களிலும் வெற்றிகரமாக இருந்த ”அன்னிய” இனக்குழுக்கள் வெறுப்புடன் பார்க்கப்பட்டன. இலங்கை, பர்மா, நைஜீரியா போன்ற நாடுகளின் இந்தியர்கள் குறிப்பாக கடும் அவதிக்குள்ளானார்கள்.
பர்மாவில் இந்த செட்டியார் வெறுப்புக்கு தூபம் போட்டு வளர்த்தவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். (இதற்கு பிரிட்டிஷ் ப்ராட்டஸ்டண்ட் மனோவியலில் ஊறி இருந்த யூத வெறுப்பு மறைகாரணமாய் இருந்திருக்கலாம். 1943-இல் வங்காளப்பஞ்சத்தின்போது, இந்திய வங்காள வியாபாரிகளை சர்ச்சில் வெறுப்புடன் யூதர்களோடு ஒப்பிட்டுப் பேசுகிறார். செட்டியார்களைப்போன்றே யூதர்களும் லேவாதேவித் தொழிலிலும் வியாபாரத்திலும் முன்னின்ற குழு என்பது கவனிக்கப்பட வேண்டியது).
நிலத்தை ஒத்திக்கு வைத்து கடன் வாங்கச் சட்டம் இயற்றியதில் தொடங்கி, ஐரோப்பிய வங்கிகளைப் பெருவியாபாரிகளுக்கான கடன் மையமாக மட்டுமே வைத்திருந்து பெரும்பணம் ஈட்ட வழி செய்தது வரை பிரிட்டிஷ் காலனீய அரசு, பர்மிய சிறு விவசாயிக்கு அவரது உழைப்பிற்கான எந்த ஒரு உத்தரவாதத்தையும் பாதுகாப்பையும் அளிக்கவில்லை. அரிசி உற்பத்தியில் எந்த ரிஸ்கையும் காலனி அரசு எடுக்கவில்லை. அதற்கான ரிஸ்க் முழுவதையும் நகரத்தார்கள்போன்ற இடைவங்கிக்குழுக்கள்மீது சுமத்தியது. ஆனால் செயலூக்கம் மிக்க நகரத்தார்களின் தொழில் முனைப்பும், பர்மியர்களின் உழைப்பும், வளமான கீழ் பர்மாவும் இணைந்து அந்நிலத்தை ஆசியாவின் அரிசிக்களஞ்சியம் ஆக்கின. அதே சமயம் 1930-இல் உலகப்பொருளாதாரம் பெருவீழ்ச்சி அடைந்து அதன் விளைவாய் பர்மியப் பொருளாதாரம் அடிவாங்கியபோது, அதே காலனி அரசு பர்மியர்களின் கோபத்திற்கு, இந்திய வியாபாரிகளையும், நகரத்தார் வங்கிகளையும் காரணமாய் காட்டித்தரத் தொடங்கியது.
வெள்ளையரால் சுரண்டப்பட்டு ஜப்பானால் மிதிபட்டிருந்த பர்மிய மக்களின் கோபத்திற்கு இரண்டாம் உலகப்போருக்குப்பின் கிடைத்த வசதியான பலிகடாவாக செட்டியார்கள் ஆனார்கள். பர்மாவில் செட்டியார்களின் வங்கித்தொழில் பரவலாவதற்கு முன் சிறுதொழில், சிறுவிவசாயக்கடன் என்பது மிகக்கடுமையான வட்டிகள் தருபவர்களுக்கே சாத்தியப்பட்டவையாய் இருந்தன. ஆனால் கடும் உழைப்பு, தெய்வ நம்பிக்கை, குடும்ப அமைப்பு, சேமிப்பு, பேராசையின்மை ஆகிய குழு குணங்களின் வழியாக செட்டியார்கள் பர்மிய லேவாதேவித்தொழிலில் வென்றனர். சிறு தொழில் வளத்தை பரவலாக்கினர். சிறு விவசாயிகள் கூட கடன் வாங்கி பயிரிட்டு, விளைச்சலை விற்று, கடனை அடைத்து, குடும்பம் வளர்த்து, கண்ணியத்துடன் வாழ முடிந்தது.
1930-க்கு முந்தைய பர்மிய பொருளாதாரம் செட்டியார்கள் இல்லாமல் இல்லை. இவர்களின் உடைமையைத்தான் சோஷலிசப்புரட்சி என்ற பெயரில் பர்மிய அரசு அடாவடியாகப்பறித்து விரட்டியது. 1964-இல் இந்தியர்கள் ஒட்டுமொத்தமாக விரட்டப்பட்டனர். அந்த சாபம் பர்மாவை அடுத்த கால் நூற்றாண்டுக்கு கம்யூனிஸப்பிடியில் தள்ளியது. பொருளாதாரம் திவாலானது. ஏழ்மையில், உரிமைகள் பறிக்கப்பட்ட பரிதாபத்தில், வாழ்வாதார அவலத்தில் கொண்டு வந்து நிறுத்தியது.
விரட்டப்பட்ட பர்மாவிலிருந்து பழைய சொத்துக்களை மீட்க இன்றும் பழைய ஆவண ஆதாரங்களைக்கொண்டு செட்டி நாட்டு மக்கள் முயன்று வருகிறார்கள். இன்றைய தேதி வரை எவ்வித பயனையும் தரவில்லை. இன்றைய பர்மாவின் அரசு ராணுவ அரசு. ஜனநாயக அரசாகவே இருந்தாலும்கூட வேற்று நாட்டு வியாபாரக்குழு ஒன்றிற்கு நஷ்ட ஈடு தருவது என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. சீனா-பர்மா- இந்தியா என்கிற பிராந்திய அரசியலின் பரிமாணமும் இதில் உள்ளது. பர்மாவை விட்டு விரட்டப்பட்டு அரைநூற்றாண்டு ஆகிவிட்ட நிலையில், அடையாள முயற்சி என்பதைத்தாண்டி, இம்முயற்சிகள் இனி பலன் தரும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை.


[stextbox id=”info” caption=”பிற வணிகர்கள்”]

ஆங்கிலேய ஆதிக்கத்தின் பரவலாக்கத்தின் போது செட்டிகளும் தங்கள் வியாபாரத்தை பரவலாக்கினர். சரி. இந்தியாவில் பிற சாதிகளும் வட்டித் தொழிலில் ஈடுபட்டிருந்தது. அவர்களுக்கும் சாதிக்கட்டமைப்பு இருந்திருக்கும். அவர்கள் ஏன் இவ்வாறு பரவவில்லை?

வியாபாரத்திலும், வட்டித்தொழிலிலும் மார்வாரிகள், அகர்வாலிகள் (கயஸ்த பிராமணர்கள் கூட) ஈடுபட்டிருந்தார்கள். இவர்களுக்கும்- குறிப்பாக மார்வாரிகளுக்கு- நகரத்தார்கள் போலவே சாதிக்கட்டுமானம் இருந்தது. ஓரளவுக்கு பர்மாவிலும் ஈடுபட்டார்கள், ஆனால் செட்டியார்கள் அளவுக்கு அல்ல. இதற்கு முதன்மைக்காரணம், இவர்கள் பெருகி வந்த வட இந்திய வணிகத்தில் முதலிலேயே நுழைந்து நிலைத்தவர்கள். செட்டியார்கள் பர்மாவில் பெற்ற early entrant advantage இவர்கள் வட இந்தியாவில் பல்வேறு வணிகத்திலும் பெற்றிருந்தனர். உண்மையில் செட்டியார்கள் பர்மாவில் நுழைவதற்கு முந்தைய வணிகம் (உப்பு, அரிசி, தானியங்கள் ஆகியவை) இந்த வட இந்திய சாதிகளிடம் கொள்முதல் செய்வதைச் சார்ந்தே இருந்தது. (பிரிட்டிஷ் அரசு குறிப்பேடுகளில் அவர்களது உப்பளங்களிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்த சாதிகளில் செட்டியார்கள் குறிப்பிடப்படவே இல்லை). செட்டியார்கள் இந்த பிற சாதிகளுக்கு கீழ் தட்டில் இருந்த வணிகர்கள்- இடைத்தரகர்களில் கீழடுக்கு- எனவே லாபத்தின் அளவு குறைவு, ரிஸ்க் அதிகம்.

1857க்குப்பிறகு ராணுவ, வணிக காரணங்களுக்காக வட இந்திய ஊர்களில் சாலைகள் அதிக அளவில் செப்பனிடப்பட்டன, புதிய வழித்தடங்கள் திறந்தன, இதனால் அத்தனை உறுதியான மரக்கட்டைகள் கொண்டு பலமான இழுவண்டிகள் தேவை என்பது இல்லாமலாயிற்று, இதன் காரணமாக 30-40 ரூபாய்க்கு ஒரு வண்டி வாங்கலாம் என்கிற நிலை, அதே பணத்துக்கு 3 வண்டிகள் வாங்கலாம் என்று ஆகியது. இது மேலும் பல “அமெச்சூர்” சாதிகளை வட இந்திய வியாபாரத்திற்குள் இழுத்தது. செட்டியார்கள் வியாபாரத்திற்கு போட்டி அதிகமாகியது. செட்டியார்கள் அடிப்படையில் வியாபாரிகள். வியாபாரத்தைவிட குறைந்த ரிஸ்கில் அதிக லாபம் கிடைக்கும் சூழல் அமையும்போது கடனுக்கு வட்டி தருகிறார்கள். பாஸ்கர சேதுபதி ராஜாவுக்கு இவ்வாறு கடன் தந்து கடனை அடைக்க முடியாமல் போய் கிராமங்களை அவர்களுக்கு எழுதித்தந்திருக்கிறார். (முதலீட்டின் மேல் வரும் வருமானமே, அவர்களுடைய முழுமுதற் குறிக்கோளாக இருந்தது.)
இந்தப் பின்னணியில் இந்திய வணிகத்தை விடவும் அதே முதலீட்டை வைத்து வெளிநாட்டு வணிகத்தில் போட்டாலோ அல்லது (பெரும் முதலீட்டு வசதியற்ற வெளிநாடுகளில் போட்டாலோ) இந்திய வணிகத்தை விட அதிக லாபம் வரும் என்பதால் மலேசியா, இலங்கை, பர்மா என்று போகிறார்கள். மார்வாரி போன்ற வட இந்திய வணிக சாதிகளைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட நெருக்கடியில் அவர்கள் இல்லை. அவர்களது முதலீட்டுக்கு பெரும்பாலும் இந்திய வணிகத்திலும் இந்திய லேவாதேவித்தொழிலிலுமே கணிசமான லாபம் கிடைத்தது. ஏனென்றால் அவர்களுக்கு வட இந்திய துறைமுகங்களில் பல நூற்றாண்டுகளாக நேரடி வியாபாரத் தொடர்புகள் இருந்தன. இந்த தொடர்புகளால் வணிக இடர்ப்பாடுகளின் தன்மையைக் கணிக்க முடியும். இறக்குமதிப் பொருட்களை நேரடியாக ஒட்டுமொத்தக் கொள்முதல் செய்யவும், விவசாய சாதிகளிடமிருந்து தானியங்கள், அரிசி ஆகியவற்றை நேரடியாகக் கொள்முதல் செய்யவும் அவ்ர்களால் முடிந்தது. இதில் கிடைக்கும் லாபம் இதற்கடுத்த தட்டுகளில் வணிகம் செய்த செட்டியார்களுக்குக் கிடைப்பதை விட அதிகம். ரிஸ்க் குறைவு. செட்டியார்கள் பர்மாவில் நேரடியாக விவசாயிகளுடன் தொடர்பு வலை ஏற்படுத்தியது இதுபோன்ற நேரடிக் கொள்முதல் சந்தையைக் கைப்பற்றத்தான். இதனால்தான் பர்மிய விவசாயிகளுடன் நேரடியாகத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்கள். வங்கித்தொழிலில் அதிக லாபம் கிடைக்கவே, விவசாயக்கடன், தொழில்கடன் என்று வளர்ந்தார்கள். வட இந்திய வியாபார சமூகங்களின் முதலீட்டுக்கு இப்படிப்பட்ட அழுத்தம் அப்போது ஏற்படவில்லை. வட இந்திய சந்தையிலேயே அவர்களுக்கு போதுமான “leverage” இருந்தது. (20-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஏற்பட்டது, ஆனால் அப்போது இந்த வெளிச்சந்தைகளில் செட்டியார்கள் உறுதியாக நிலைத்து விட்டிருந்தார்கள்.)
[/stextbox]

Exit mobile version