Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

லோலா மான்டஸ்: ரியாலிட்டி ஷோக்களின் சிலந்திப் பெண்

லோலா மான்டஸ் பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஒருவேளை உங்களுக்கு வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். 1821ல் அயர்லாந்தில் பிறந்து, எலிசா கில்பர்ட் என்று பெயர் சூட்டப்பட்ட இவரது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதி இந்தியாவில் கழிந்தது. ‘லோலா மான்டஸ்’ என்ற நடிகையாய் 1850களில் புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர், ‘ஸ்பானிய நடனமங்கை’, பவேரிய அரசர் முதலாம் லுட்விக்கின் ஆசைநாயகியாக இருந்தவர், லாண்ட்ஸ்ஃபெல்ட்டின் கவுண்டஸ்ஸாக அங்கீகரிக்கப்பட்டவர். சூழ்ச்சிகளும் அபவாதங்களும் இந்த மர்ம மங்கையைப் போர்த்தி மறைக்கின்றன (1848ஆம் ஆண்டு நிகழ்ந்த ஜெர்மானிய புரட்சிக்கு வித்திட்டவர் என்று ஒரு வதந்தி உண்டு, சங்கிலித்தொடராய் விரியும் இவரது புகழ்பெற்ற காதல்கள் ஒரு பெருங்கதை), மிகச் சாதாரணமான நடிப்பு என்று விமரிசகர்களால் மட்டம் தட்டப்பட்டபோதும் மூன்று கண்டங்களில் விரிந்திருந்த பத்தொன்பதாம் நூற்றாண்டு ரசிக நெஞ்சங்களுள் ஆடிப் புகுந்தவர். மான்டஸ் பகுதியிலுள்ள Grass Valleyல் வாழ்ந்த சுரங்கத் தொழிலாள நல்லுள்ளங்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள மிக உயரமான சிகரத்தை இந்தப் பெண்ணின் பெயரிட்டு கௌரவித்தனர் – அது இன்றும் மவுண்ட் லோலா என்று அழைக்கப்படுகிறது. லோலா நடிப்பைக் கைவிட்டபின்னர் பேச்சாளராகி உலகம் சுற்றினார் – “வரலாற்றில் பெண்களின் இடம்” என்பது முதல் “பெண்களின் அணிகலன்கள்” என்பதுவரை எக்கச்சக்க தலைப்புகளில் உரையாற்றினார் இவர். ப்ளேக், எமர்சன், தாஸ்தாயெவ்ஸ்கி, பூதலேர் முதலிய மகத்தான எழுத்தாளுமைகளின்பால் தாக்கத்தை ஏற்படுத்திய ஸ்வீடன்போர்க்கின் மறைஞானச் சிந்தனைகளில் கால் நனைத்தபின், 1861ஆம் ஆண்டு மன்ஹட்டனின் மேற்குப் பகுதியில் வறுமை நிலையில் இயற்கை எய்தினார்.

இது போதும், வெட்டி ஒட்டப்பட்ட பின்னட்டைக் குறிப்பு போன்ற இந்தத் தகவல்கள் யாரையும் எதையும் நினைத்துப் பார்க்கத் தூண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. லோலாவின் பெருமைகள் அப்படியொன்றும் பிரமாதப்படுத்தக் கூடியவையல்ல என்பதே கண்கூடான உண்மை. மேலும் எனக்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அற்பத்தகவல்கள் விஷயத்தில் நம் அறிவின் போதாமைகள் பற்றி ஒரு கவலையுமில்லை. உண்மையைச் சொன்னால், வரலாற்றுப் பாத்திரமான இந்த ‘டாரன்டெல்லா’ நடன அழகியின் மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லைதான், ஆனால் சற்றே வக்கிரப்பட்ட நம் கற்பனையின் அடிமண்ணில் குழி பறித்து வலை விரிக்கிறாளே, அந்தச் சிலந்திப் பெண்ணைத்தான் நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன். ஆம், உங்களுக்கு லோலா மான்டஸ் தெரியுமோ தெரியாதோ, ஒருமுறையல்லாவிடில் வேறொரு முறை அவளைப் பற்றி கனவு கண்டிருப்பீர்கள் என்பது நிச்சயம். ஏனெனில், நம்மைக் காட்டிலும் ‘உயரத்தில்’ இருக்கும் ஒருவரது அந்தரங்கத்தைத் துருவிப் பார்த்து நமக்கேயுரிய வக்கிரங்களின் ‘சில்லறைத்தனங்களை’ அவருக்கும் கோர்த்து விடுவதற்கான நம் அடக்கமாட்டா தேவையின் அவதாரமன்றி வேறு யார்தான் லோலாவாக இருக்க முடியும்? ரியாலிட்டி ஷோக்களுக்கும் முற்பட்டதாய் உள்ளது, அவற்றுக்கான நம் ஆதிவகைமைத் தேவை- லோலா மான்டஸ் என்ற திரைப்படத்தின் தனித்துவம் இதுதான்: தனிமனித அந்தரங்கங்களை பொதுவெளியில் அரங்கேற்றும் நம் காலத்து கண்கூசும் ரியாலிட்டி ஷோக்களை முன்கூட்டியே அவதானித்து, முரண்பட்ட ஒரு காலவரிசையில் பேசும் பொற்சித்திரமாய் பத்தொன்பதாம் நூற்றாண்டு சர்க்கஸுக்குக் கொண்டு போய் நிறுவுவதில் இது வெற்றி பெற்றுள்ளது என்பதே.

நம் காமாந்தகார விழைவுகளின் இந்தப் பாறையில்தான் தனது பரோக் திருச்சபையை மிகக் கச்சிதமாக, மாக்ஸ் ஓபுல்ஸ் (Max Ophuls) பீட்டரைக் கொண்டு (Peter Ustinov) எழுப்பச் செய்கிறார்- ஆனால் தேவாலயமல்ல, அது ஒரு சர்க்கஸ் கூடாரம், அதன் தலைமைப் பூசாரியாயிருப்பவர் ஒரு ரிங்-மாஸ்டர். கூடாரத்தின் வாயில்கள் திறந்து கொள்கின்றன, நாம் உள் நுழைகிறோம், திரைப்படம் துவங்குகிறது. இப்போது கீழிறங்கிக் கொண்டிருக்கும் இரு அலங்கார விளக்குகளை ட்ராக் செய்யும் காமிரா, முகமூடியணிந்த குழுவொன்றை கோமாளி வேடம் தரித்த அங்கிள் சாம் இசைவித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது. தன்வசம் எப்போதுமுள்ள சாட்டையைச் சொடுக்கிக் கொண்டு ரிங்-மாஸ்டர் உள்ளே நுழைகிறான், இது போல் பரபரப்பான ஒரு நிகழ்ச்சியை இந்த நூற்றாண்டில் யாரும் பார்த்திருக்கப் போவதில்லை, என்று அவன் உறுதியளிக்கிறான்- “என்னிடமுள்ள விலங்குகளில் எந்த மிருகத்தைக் காட்டிலும் கொலைகார” மிருகம் இப்போது வரப் போகிறது.” “ரத்தவெறி பிடித்த, தேவதையின் கண்கள் கொண்ட அதிபயங்கரம்,” “ரத்தமும் சதையுமாக”, நம்முன் தோன்றுவதற்கு முன்பாக, எண்ணற்ற பல ஊஞ்சல் வீரர்களையும் பொருட்களையும் வீசிப்பிடித்து விளையாடும் சூரர்கள், கண்ணைப் பறிக்கும் ஆடை அலங்காரங்கள் போதாதென்று வால் முளைத்த குள்ளர்கள், திசைதடுமாறிப் பதறும் அரசவைக் கூட்டத்தினர், என்று பலரும் காமிராவால் டிராக் செய்யப்பட்டு நமக்கு அறிமுகமாகிறார்கள் – லோலா என்னவோ அவளாகவே நம் முன் தோன்ற முடியாமல் அவளைச் சூழ்ந்திருக்கும் விநோதர்களின் மத்தியில் மறைந்திருந்துதான் வெளிப்பட்டாக வேண்டும் போல…

இவையனைத்தும் நடந்து முடிந்தபின் ஒரு வழியாய் லோலாவாக நடிக்கும் மார்டைன் கரோல் (Martine Carol), திரையினுள் நுழைகிறாள், சாரட்டு வண்டியொன்றில் -அவளைத் தூக்கி சுழற்மேடையில் இருத்துகிறார்கள். இப்போது அவளை காமிரா மிகையாக அலங்கரித்துக் காட்டுகிறது: அவள் சர்க்கஸ் பண்டமாய் இருப்பதிலுள்ள கொடுங்கனவு உணர்வை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் நீல வண்ண பில்டரில் அவளது உருவம் திரையிடப்படுகிறது. இனி வரப்போகும் பிளாஷ்பேக் காட்சிகளின் கச்சிதமான, தூய சினிமாஸ்கோப் வண்ணங்களுக்கு எதிரிடையாய் இங்கு சர்க்கஸ் காட்சியில் நீல நிறத்தில் தகிக்கிறாள் லோலா. ”கேளுங்கள், கொடுக்கப்படும்,” என்று அவளைத் தோலுரிக்கத் தயாராகிறார் ரிங் மாஸ்டர் – லோலாவைப் பற்றி யாரும் எந்தக் கேள்வியும் கேட்கலாம் என்று பார்வையாளர்களை அழைக்கிறார்.. லோலா கடந்து வந்த பாதையின் உண்மைகள், பீட்டர் உஸ்தினோவின் அப்பழுக்கற்ற நடிப்பின் குரூர பற்றின்மையால் தொடர்ந்து மட்டறுக்கப்படும் நிகழ்கால அரைகுறை உண்மைகளுக்கு அருகில் இத்திரைப்படம் நெடுக தொடர்ந்து இருத்தப்படுகிறது- கடந்த காலத்து தூய நினைவுகளையும் அவற்றைக் கலப்படம் செய்யும் இன்றைய விவரணைகளையும் நாம் ஒருசேர எதிர்கொள்கிறோம்.- இந்த முரணியக்கத்தில் வெளிப்படும் அசவுகரியமான உண்மை, கல்லேந்திய கரங்களைத் தளர்த்தி, நமது விரல்களை நம்மை நோக்கியே திருப்பிவிடுகிறது. ஆம், விலை போனவள் எனினும் தூய்மை லோலாவுக்குரியது, விலை வைத்ததன் சோரம் நமக்குரியது.

இவையெல்லாம் பின்னர், தற்போதைக்கு முதலிலிருந்தே துவங்குவோம். கேள்விகளுக்குத் தயாராய், உயர்த்தப்பட்ட சுழற்மேடையில் அமர்ந்திருக்கும் லோலாவின் முதல் பிளாஷ்பேக் – இது மாபெரும் பிரெஞ்சு இசைக்கலைஞரான பிரான்ஸ் லிஸ்ட்டுடனான அவளது காதலை நினைவு கூர்கிறது. இந்தக் காட்சிகளில், ஆண்களுக்கு மத்தியில், புகழ்பெற்ற ஆண்களாய் இருந்தாலும்கூட அவர்களுக்கு மத்தியிலும், தீர்மானமான சுயவிருப்பம் கொண்டவளாய் தனித்திருந்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளக்கூடியவளாய் (இருவருக்கும் தனித்தனி வண்டிகள் இருப்பதால் அவள் தன் விருப்பப்படி எங்கும் செல்லும் சுதந்திரமுள்ளவளாய்) இருக்கிறாள் லோலா- எனினும் அவள் மகாநடிக ஆர்ப்பாட்டங்களுடன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இயல்பு கொண்டவளாகவும் சித்தரிக்கப்படுகிறாள். விடைபெற்றுச் செல்லும் நய நாகரீகத்தைக்கூட அவளுக்கு அளிக்காது, சொல்லாமல் கொள்ளாமல் லோலாவை விட்டுச் செல்ல லிஸ்ட் முயற்சிக்கையில், தனது மன உறுதியையே சோதனைக்குட்படுத்திக் கொள்வதுபோல் லோலா அவனைக் கடைசி முறையாக மயக்குகிறாள், லிஸ்ட் கையும் களவுமாய் அவளிடம் சிக்கிக் கொள்வதோடு இந்தத் தொடர்பு முடிவுக்கு வருகிறது. லிஸ்ட்டிடம் விடைபெற்றுச் செல்கிறாள் லோலா- சாரட்டு வண்டி அவளுக்காகக் காத்திருக்கும் தொடுவானை நோக்கி மெல்ல ஆடிச் செல்கிறது. இந்தக் காட்சியில் லோலாவின் ஆடை, “தகதகக்கும் பச்சை வண்ணத்தில் இருப்பது, ஸ்கார்லட் ஓ’ஹாரா திரைச்சீலையைக் கொண்டு தனக்கெனத் தைத்துக் கொண்ட ஆடையை நினைவுபடுத்துவதை எவரும் தவிர்க்க இயலாது,” என்று எழுதுகிறார் கேரி கிட்டின்ஸ். அவரது அனுமானம் மிகத் துல்லியமானது, தன் சாரட்டு வண்டியில் செல்கையில், “நாளை மற்றுமொரு நாளே,” என்று அவள் முணுமுணுப்பது நம் காதில் ஒலிப்பது போலிருக்கிறது.

ஆனால் ரிங்-மாஸ்டரின் அற்பப் பகட்டு கதைசொல்லலின் நோக்கங்களுக்கு மாறாய் இக்காட்சிகள் லோலாவுக்குக் கொஞ்சம் மிகையான உத்தம குணங்களைக் கொடுத்துவிடுகின்றன. சாட்டையை வேகமாகச் சொடுக்கி, லோலாவின் குழந்தைப் பருவத்தை நோக்கி கதையை மடைமாற்ற அவன் முயற்சிக்கிறான். குழந்தைப் பருவம், அதற்குரிய களங்கமின்மை, மகிழ்ச்சியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இளம் பருவம் எய்தி பதின்ம பருவங்களில் மலரும் இனிய பெண்மை என்று பல பொய்களை கொண்டு பொற்காலமாக மிளிரும் ஒரு கடந்த காலத்தை உருவாக்குகிறான். வரமென அருளப்பட்ட இந்த வாழ்வு முடிவுக்கு வருவதன் வீழ்ச்சி கூடுதல் நாடகியத்தன்மை கொண்டதாக இருந்தால்தான் சர்க்கஸ் பார்வையாளர்கள் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு கோரும் மேட்டரின் கிளுகிளுப்பை கச்சிதமாக அவனால் அளிக்க முடியும். ஆனால் லோலாவின் மலரும் நினைவுகள், யதார்த்தத்தின் உண்மையை வெளிப்படுத்தி நம் எண்ணத்தைத் திருத்துகிறது: அவளது வேசைத்தாய், கிழட்டு பாங்கர் ஒருவனிடம் அவளை குத்தகைக்குவிடப் பார்க்கிறாள். இந்த பிளாஷ்பாக்கின் முடிவில் லோலா அந்த பாங்கரிடமிருந்து தப்பிச் சென்று தாயின் காதலனிடம் தன்னை மணக்கச் சொல்லி துணிச்சலுடன் கேட்கிறாள்.

இந்த பிளாஷ் பேக் முடிந்து அடுத்து வரும் காட்சிகளில் ரிங் மாஸ்டர், அவளது திருமணக் கோலத்தை மீண்டும் நிகழ்த்திக் காட்டச் சொல்லி லோலாவைக் கட்டாயப்படுத்துகிறான்- இந்த வக்கிர சமன்பாட்டின் கூறுகளை வலுப்படுத்தி, திட்டமானதாய்ச் செய்யும் வகையில் அவள் தூய வெண்ணிற ஆடை அணிவிக்கப்பட்டிருக்கிறாள். கிளுகிளுப்பே இவ்வாட்டத்தின் பெயர் – இன்னும் இன்னும் என்று எக்களித்துப் பார்வையாளர்கள் கூச்சலிடும்போதுதான் இந்த ஆட்டம் உச்சத்தைத் தொடுகிறது. ரிங் மாஸ்டர் நல்லறமாகிய இல்லறத்தின் காமத்துப்பாலுக்கு இட்டுச் சென்று ஒழுக்கம் குலையாத கன்னிகையாய் அவளது ஆடைகளை அவிழ்த்துக் காட்டுகிறான், ஆனால் உண்மை அவனது கதையைக் கவிழ்த்துப் போடுகிறது – கணவன் உருவில் வந்திருப்பவன் குடிகார முரடன், அவனை விட்டு மீண்டும் லோலா ஓடிச் சென்று தப்பிக்கிறாள். நம் லோலா ஓடிச் செல்வதற்காகவே பிறவி எடுத்திருக்கிறாள் போல….

உண்மை எப்படி இருந்தாலும், ரிங் மாஸ்டர் இதுவரை லோலாவுக்கு அளித்துள்ள பில்ட் அப், அவளைச் சரியான அற உயரத்தில் இருத்தி வைத்திருக்கிறது, இனி அவளது வீழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அவன் மேற்கொள்ளலாம். பாலே நடனம் பழகுகிறாள் லோலா. விபசாரம் என்று புரிந்து கொள்ளத்தக்க வகையில் காசுகளைத் தலையின் இடத்தில் கொண்ட ஆண்கள் நடனமிட்டுச் சூழ, மையத்தில் இருக்கிறாள் அவள். லோலா உயர உயர, இந்த நடனத்தின் பின்னணியில் ஒரு பாடல் இரக்கமற்ற ஆனந்தத்துடன், அவளது காதலர்களின் எண்ணிக்கையை படிப்படியான அகவல்களில் உயர்த்திச் சொல்கிறது. உயர் கம்பியில் நடந்து செல்லும் லோலா இப்போது மிகவும் சன்னமான, ஆபத்தான அறக்கோட்டின் விளிம்பை நோக்கி நகர்ந்து செல்கிறாள்..

இந்த நிகழ்வின் மிகையுணர்ச்சியைக் கூட்ட இப்போது சர்க்கஸ் கூடாரத்தினுள் நுழையும் மருத்துவர், லோலாவின் இதயம் மிகவும் பலவீனமாக இருக்கிறது எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்து நிறைந்த சாகசங்களில் அவள் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டுமென்றும் சொல்லிச் செல்கிறார். இந்தக் காட்சிகளின் பரபரப்பற்ற யதார்த்த லௌகிகத்தன்மையின் பிரதிபிம்பமாய் ரிங் மாஸ்டரின் பிளாஷ்பேக் அடுத்து இடம் பெறுகிறது – அவன் லோலாவைச் சந்திக்கச் சென்று, அவள் முன்னெப்போதும் நினைத்திருக்காத அளவு பணமும் நட்சத்திர அந்தஸ்தும் பெற்றுத் தருவதாய் உறுதியளிக்கிறான். லோலா இந்த வாய்ப்பை மறுக்கிறாள்- எதிர்காலத்தில் தனக்கு கலைத்துறையில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நூலிழையை அவள் வெட்டிக் கொள்ள விரும்புவதில்லை.

ஆனால் இதிலுள்ள முரணி, அவள் எவ்வளவு மேலே உயர்கிறாளோ, அவ்வளவுக்கு அவள் ரிங்மாஸ்டர் சொல்லும் கதையில் கீழ்மையுள் ஆழ்கிறாள் (ஒரு சுல்தானுக்காக நிர்வாண குளியல் போடுவது போன்றவை). அற்புதமான நகைமுரண் உணர்வெழுச்சியாய், பிளாஷ்பாக்கில் அற உயரத்தை எட்டும் அதே தருணத்தில் (ரிங்மாஸ்டரின் வாய்ப்பை உதறுவுவது), அதற்கிணையான இயைபுடன் சர்க்கஸ் சாகசத்திலும் அவள் உச்சத்தை எட்டுகிறாள். முன்போல் இப்போது அவளை நாம் ஃபில்டர் வெளிச்சத்தில் பார்க்கிறோம், பவேரிய ஆல்ப்ஸ் மலைச்சிகரங்களுக்கு காமிரா நகர்கிறது – இங்கு பவேரிய அரசன் அவளுக்குக் காத்திருக்கிறான். சற்றே கோமாளித்தனமான இந்த அரைச்செவிடனுடன் கிட்டப்போகும் தொடுப்பு அவள் வாழ்வின் உன்னத உயரங்களுள் ஒன்றாக அமையும்..

ஆனால் அரசனைச் சந்திப்பதற்கு முன்னதாகவே, போகிறபோக்கில், தானாகவே விரும்பி அவள் ஒரு மாணவனோடு சிறிய அளவில் சல்லாபம் செய்கிறாள். ஒபுல்ஸ் அளிக்கும் சித்திரத்தில், தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாத, கையாலாகாத பெண்ணாக லோலாவின் பாத்திரம் அமைக்கப்படவில்லை என்ற காரணத்தால்தான், தனித்தன்மைகொண்ட, உயிரோட்டம் நிறைந்த துயராளுமையாக அவளைப் படைப்பதில் அத்தனை அற்புதமாக அவரால் வெற்றி பெற முடிகிறது. அரசரைச் சந்திக்கத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான ஒத்திகையில் லோலா அவமதிக்கப்படுகிறாள் (“ஸ்பானிஷ் நடனம் பற்றி இங்கே யாருக்கும் விஷயம் தெரியாது,” என்று அவளது தாதிப்பெண் ஆறுதல் கூறுகிறாள்)- லோலா மெய்யாகவே தன் மன உறுதியால் மட்டுமே அரசனைச் சந்திப்பதில் வெற்றி பெறுகிறாள். இதன்பின் அவளது துணிச்சல் அதிகரிக்கிறது, ஒத்திகைகளை அற்பமாய்க் கருதுகிறாள் (ஆணையிட்டவுடன் ஆடவும் அழவும் வேண்டுமா?), வால்ப்ரூக்கிடமே அவன் அரசன் வேடத்துக்கான தேர்வு ஒத்திகைகளில் பங்கேற்றிருக்கிறானா என்று கேட்டு துணிகரத்தின் உச்சம் தொடுகிறாள். ஆனால் அவளது உற்சாகத்தால் வசீகரிக்கப்பட்டு காதல் வலையில் தலைகுப்புற விழும் அரசன், ஒரு ஜதிகூட அவள் ஆடக்காணாமலே, ஃபன்டாங்கோ என்று நடனத்தின் பெயரை அவள் சொல்லக்கேட்ட மாத்திரத்தில், நேஷனல் தியேட்டரில் ஆட அவளை அனுமதிக்கிறான். இதன் சொல்லப்படாத துணைவிதியாக அவள் அரசனின் ஆசைநாயகியாகிறாள். பவேரிய அரசனின் இச்செயலில் கொண்டனம் கொடுத்தனம் என்ற டீலிங் இருப்பது போலிருந்தாலும், ரிங் மாஸ்டரின் அற்பப் பகட்டுப் புத்தகத்தின் வழிகாட்டுதல்களில் ஒன்று போல் இருந்தாலும், அனைத்தையும் ஆண்டன் வால்ப்ரூக்கின் அசாத்திய நடிப்பு உலுக்கிவிடுகிறது. ஏறத்தாழ ஒரு மாமனைப் போல் நடந்துகொள்ளும் அவன், அவளுக்காக ஹாம்லெட் படித்துக் காட்டுகிறான், அன்றைய தினத்துக்கான சுருட்டுகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக அவன் புகைக்கும்போது அவளது அரிசிப் பற்களால் மென்மையாய் கடிபடுகிறான்.

ஆனால் வழக்கம் போலவே இந்த உறவின் சொர்க்க ஒளிவட்டத்தில் விதியின் கரிய நிழல் விழுகிறது- இம்முறை அது புரட்சி வடிவம் கொள்வதில் லோலா பலிகடாவாகிறாள், தன்னை தியாகம் செய்யத் தயாராகிறாள். ஆனால் இதற்கு முன்னர் அவளோடு சல்லாபித்த கல்லூரி மாணவனும் அவனது புரட்சிகர வெகுளித் தோழர்களும் காதல், விடுதலை என்று பல லிபரல் வெற்றுச் சொற்களை பிரகடனப்படுத்தி அவள் தப்பிச் செல்ல உதவுகின்றனர். அவள் ஆல்ப்ஸ் மலையின் அடிவார வழியே முன்னர் வந்த ஒவ்வொரு இடமாகக் கடந்து அதே வரிசையில் திரும்பிச் செல்கையில் முதலில் பவேரியாவில் சந்தித்தவனையே இறுதியில் சந்தித்து விடை பெறுகிறாள். கள்ளம் கபடமற்ற அந்த புரட்சியாளன் (“இருபது வயதாகிவிட்ட நான் சிறுவனல்ல,” என்று ஆட்சேபிக்கிறான்), அவள் புதிய வாழ்வு துவக்க உதவ முன்வருகிறான்- சாதாரண, ஊர் பேர் தெரியாத வாழ்வின் சந்தோஷங்கள் அவர்களுக்கு உரித்தாகும், அவன் லத்தின் மொழி ஆசிரியனாக இருப்பான், அவள் “எல்லாப் பெண்களைப் போலவும்” இருப்பாள், குழந்தைகள் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியான இல்லற வாழ்வில்.. ஆனால் அவளுள் ஏதொவொன்று சரிதீர்மானமாக உடைந்து விட்டது, அவள் அவனது அழைப்பை மென்மையாய் மறுக்கிறாள் – ஆனால் அதற்கு முன்னதாக, கிழட்டு அரசனை தான் உளதார காதலிப்பதாய் வலியுறுத்துகிறாள் (அவளைப் பொருத்தவரை அவனே அவளது மகிழ்ச்சிக்கான சாத்தியங்களின் குறியீடாக இருக்கிறான்).

இறுதி ப்ளாஷ்பேக்கில், திரை இறக்குமாறு லோலா முன்னதாகவே அழைப்பு விடுத்துவிட்ட நிலையில், திரைப்படம் தவிர்க்கமுடியாத அதன் முடிவை நோக்கி விரைவதைத் தவிர வேறு வழியில்லை. லோலாவின் இறுதி கயிற்று விளையாட்டுத் தாவலும் அத்தகைய முடிவை அடைவதற்கான ஏற்பாடாகவே அமைக்கப்பட்டிருக்கிறது. சர்க்கஸ் உரிமையாளர் தடை செய்தும்கூட (மருத்துவர் அளித்த எச்சரிக்கையின் சாதக பாதகங்களை சுறுசுறுப்பாகக் கணக்கெடுத்திருக்கிறார் அவர்), லோலா பாதுகாப்பு வலையின்றி தாவி விளையாட முடிவெடுக்கிறாள். தலை கிறுகிறுக்க, போதை கொஞ்சம் தலைக்கேறியவளாக, இப்போது நமக்கு பழக்கப்பட்டுப் போய்விட்ட நீலவண்ண ஃபில்டர் வெளிச்சத்தில், மனக்கண்முன் கடந்த கால ஏமாற்றங்கள் வரிசையாய் ஊர்வலம் செல்ல, மரணத்தை நோக்கித் தாவுகிறாள். சற்றே சாதாரண இயக்குனர்கள் படத்தை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பார்கள், மோசமான இயக்குனர்கள் ரத்தச் சகதியில் கிடக்கும் லோலாவை கடைசி ஷாட்டில் காட்டியிருக்கக்கூடும். ஆனால் சினிமாவின் மாயக்கணங்களில் மகொன்னதமானவற்றில் ஒன்றை ஓபுல்ஸ் இந்தக் கட்டத்தில் நமக்கு அளிக்கிறார். லோலா தாவியபின், கூண்டில் இருக்கும் லோலாவைக் காட்டும் காட்சி வருகிறது, அவள் தன் கரங்களை இருபுறமும் விரித்திருக்கிறாள். கடைசி முறையாக ரிங் மாஸ்டர் அவன் வழக்கப்படி அவளுக்கு விலை பேசிக் கொண்டிருக்கிறான், ஒரு டாலர் என்ற மிகப்பெரும் தொகை அளிக்கும் பார்வையாளர்கள் எவரும் லோலாவைச் சந்தித்து அவள் கைகளில் முத்தம் கொடுக்கலாம் என்கிறான் அவன். ஓபுல்ஸின் மிகப்பெரும் ரசிகரான ப்ரான்சுவா த்ரூபோ மாயத்தை இப்படி விவரித்திருக்கிறார்: “காமிரா பின்வாங்குகையில், சர்க்கஸ் பார்வையாளர்கள் திரையின் கீழ்ப்பகுதியில் முன்னோக்கி வருகின்றனர், நாம் அவர்களோடு ஒருவராகிறோம். முதல் முறையாக, திரையரங்கிலிருந்து நாம் திரை வழியாக வெளியேறுகிறோம்.. இவ்வாறாகவே இத்திரைப்படம் முழுமையும் பிராண்டேல்லோவுக்கு ஒப்பளிக்கப்படுகிறது, ஓபுல்ஸின் அனைத்து படங்களையும் போலவே.

“லோலா மோன்டஸ் கிறிஸ்துமஸ் பரிசாய்கொடுக்கப்படும் சாக்லேட் பெட்டி போல் நமக்கு அளிக்கப்படுகிறாள்- ஆனால், அதன் உறையைப் பிரிக்கும்போது, விலைமதிப்பற்ற ஒரு கவிதை வெளிவருகிறது”

மிகவும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட கதைசொல்லல் உத்திகளும், காமிராவின் லாகவமான அசைவுகளோடும், அபார நடிப்போடும் லோலா மான்டஸ் திரைப்படம், உலகின் மிகச் சிறந்த திரைப்படம் என்று ஆண்ட்ரூ சார்ரிஸ் மிகத்துணிகரமாகக் கூறியதை கிட்டத்தட்ட முழுமையாகவே நியாயப்படுத்துகிறது. களி மிகுந்த நிலையில் வெளியேறும் நாம், என்றென்றும் நம் வக்கிரங்களை அச்சாய் கொண்ட “Keeping up with the Kardashians” பார்த்துக் கொண்டிருப்பது போல் நம் அகங்களில் என்றும் தொடர்ந்து கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோக்களையே இந்தப் படம் வெளிப்படுத்தியிருக்கிறது என்பதை உணர்கிறோம். இப்போது சொன்னது உங்களைக் காயப்படுத்தவில்லை என்றால் ஒரு வேளை நீங்கள் கர்டாஷியான்களைப் பற்றிய அன்றாட தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்வதில் ஆர்வமற்ற அதிசயப் பிறவிகளில் ஒருவராக இருக்கலாம். ஆனால் எனக்கென்னவோ அதைவிட – கர்டாஷியான்கள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பது குறித்து உங்களுக்கு இருக்கும் ஆவலாதியை நீங்கள் இன்னும் முழுமையாய் உணராமல் இருப்பதற்கான சாத்தியங்களே அதிகம் என்று தோன்றுகிறது..

Exit mobile version