Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

பொய்த்தேவு நாவலுக்கு க.நா.சு எழுதிய முன்னுரை

திருவாசகத்தை – பாராயணம் என்று சொல்லமுடியாது – திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருந்த காலம் அது. திருவாசகத்திலுள்ள வரிகள் எத்தனையோ மனசில் நின்றிருக்கலாம், மனசில் நின்றிருக்கலாகாதா என்று நானே நினைத்த சில வரிகள் மனசில் நிற்கவே இல்லை.

ஆனால் இரண்டு வரிகள் என் அகக்காதில் ஒலித்துக்கொண்டிருந்தன.

’அத்தேவர்தேவ ரவர்தேவர் என்றிங்ஙன்
பொய்த்தேவு பேசிப் புலம்புகிற பூதலத்தே.’

இன்று மனிதனுக்குத் தெய்வம் ஒரு இன்றியமையாத சாதனமாகிவிட்டது. ‘நாத்தழு பேற நாத்திகம்’ பேசுகிறவனுக்குங்கூட, ஒரு கோணத்திலிருந்து பார்க்கும்போது தெய்வம் அவசியமாகத்தான் தோன்றுகிறது.மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடிக்கு ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்வதும் மிகை ஆகாது.இந்த வினாடியின் ஒரே தெய்வம் அடுத்த வினாடி பொய்த்துவிடுகிறது. பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.

மனிதனின் ஆசைகளுக்கு, கனவுகளுக்கு, லக்‌ஷ்யங்களுக்கு, உருவே பெறாத பல சிந்தனைகளுக்கு, தெய்வங்கள் என்று பெயர் தருவதே சரியான விஷயம் என்று எனக்குத் தோன்றியது.ஆனால் சோமு முதலியாரைப் போன்றவர்களே தங்கள் தெய்வங்களாக உள்ளவர்களும் நம்மிடையே இல்லாமல் இல்லை.
சோமு முதலியாரும் மற்றும் இக்கதையில் வருகிற பேர்வழிகளும் வெறும் கற்பனைதான். தெரிந்த மனிதர்கள் யாரையும் வர்ணிக்க நான் முயலவில்லை.

தமிழில் ஆசையும் தமிழ் இலக்கணம் என்று சொல்லப்படுவதில் அவநம்பிக்கையும் கொண்ட என்னுடைய இந்தப் புஸ்தகத்தில் காணப்படுகிற இலக்கண சுத்தங்களுக்கெல்லாம் கலைமகள் காரியாலயத்தார்’தாம்’ பொறுப்பு.

இந்தப் புஸ்தகத்தை நான் எழுதத் தொடங்கிய காலத்தில், முணுக்கு முணுக்கென்ற ஒரே விளக்கு அதிக வெளிச்சம் தராமல் எரியும் கர்ப்பக்கிருஹத்திலிருந்து கொண்டு, என் காரியங்களில் குறுக்கிடாமல், என் வீட்டு வாசலில் இருந்தபடியே கவனித்துவந்த, சிதம்பரம் – செங்கழுநீர்ப் பிள்ளையாருக்கு இப்புஸ்தகத்தைச் சமர்ப்பணம் செய்கிறேன்.

க.நா.சுப்ரமண்யம்
1946, விஜயதசமி
சிதம்பரம்

Exit mobile version