Site icon சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

இருளின் குதிரைவீரர்கள் – ஸ்டீபன் கிரேன்

மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

ஸ்டீபன் கிரேன் ஒரு நவீனத்துவ முன்னோடிக் (Pre- Modern)கவிஞர். இருபத்தெட்டு வருடங்களே வாழ்ந்த இவர், யதார்த்தவாதக் கதைகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். அமெரிக்க உள்நாட்டுப் போரின் பின்புலத்தில் இவர் எழுதிய “துணிவின் சிவப்புப் பதக்கம்” (The Red Badge of Courage) என்கிற நாவல் மிகப் புகழ்பெற்றது. அமெரிக்க இலக்கியத்தின் தலையாய நாவல்களில் ஒன்று  என்று ஹெமிங்வேயால் புகழப்பட்டது.

கிரேன் எழுதிய இருளின் குதிரைவீரர்கள் என்னும் கவிதைத்தொகுப்பின் முதல் ஐந்து கவிதைகள் இவை. வார்த்தைக்கு வார்த்தை துல்லியமாக அப்படியே மொழிபெயர்க்காமல், கவிதையின் சாரத்தையும், கவிஞனின் காலத்தையும், கவிதையில் வெளிப்படும் அகவாழ்வையும்  ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு கொண்டுவர முயன்றிருக்கிறேன். 

ஆங்கிலம் : ஸ்டீபன் கிரேன்

தமிழாக்கம் : ஷைன்சன்

I
இருளின் குதிரைவீரர்கள் கடலிலிருந்து வந்தனர்
ஈட்டியும் கேடயமும் க்ளங் க்ளங்கென்றன
குளம்பும் குதிகாலும் மோதிக் கொண்டன
காட்டுக்கூச்சலோடும் அலைபரவும் கூந்தலோடும்
காற்றின் வேகத்தோடு
சீறிப்பாய்கிறது தீமை

II
மூன்று சிறு பறவைகள் வரிசையாய் அமர்ந்திருந்தன,
ஆழ்ந்த சிந்தனையில்.
ஒரு மனிதன் அவ்விடத்தைக் கடந்தான்.
ஒன்றையொன்று உசுப்பின அச்சிறு பறவைகள்.
“அவன் தன்னால் பாடமுடியும் என்று நினைக்கிறான்”
எனச்சொல்லி
தலைசரித்துச் சிரித்தன.
விளையாட்டுப் பாவனையுடன்,
ஆர்வமுடன்,
அவனை நோக்கின.
அவ்வரிசையில் இருந்த மூன்று சிறு பறவைகள்.

III
பாலைவனத்தில் நிர்வாணமாக
குந்தியிருந்து
தன் இதயத்தைக் கையிலேந்தி
உண்ணும்
விலங்கிடம் கேட்டேன்
“நன்றாக இருக்கிறதா, நண்பா?”

“கசப்பு- கசப்பாக இருக்கிறது
ஆனால் பிடித்திருக்கிறது
கசப்பாக இருப்பதாலும்,
எனது இதயம் என்பதாலும்.”

IV
ஆம், எனக்கு ஆயிரம் நாவுகளுண்டு
அவற்றுள் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்று ஒன்பது
பொய் பேசும்.
மீதியொன்றை நான் பயன்படுத்த முயன்றாலும்
அது என் ஆசைக்கிணங்கிப் பாடாமல்
என் வாயிலேயே செத்துக் கிடக்கும்.

V
முன்பொரு மனிதன் வந்து
“உலகின் எல்லா மனிதர்களையும்
வரிசையில் நிற்க வையுங்கள்”, என்றான்.
மக்களிடையே கூக்குரல் எழும்பியது.
வரிசையில் நிற்பதற்கு எதிராக
உலகம் முழுக்கப் பெருஞ்சண்டை
தலைமுறை தலைமுறையாக நீடித்தது.
வரிசையில் நிற்பதை வெறுத்தவர்களும்
வரிசையில் நிற்க ஏங்கியவர்களும்
இரத்தம் சிந்தினர்.
இறுதியாக அம்மனிதன் சாகப் போனான்,
அழுதுகொண்டே.
இச்சண்டையில் குருதி வடித்து நின்றவர்களுக்குத்
தெரியாது-
இந்தப் பேரற்பம்.

Exit mobile version