Site icon சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

லக்கி குளோவர்!

விலக்கப்பட்ட கனியைப் புசித்ததற்காக ஏதேன் தோட்டத்திலிருந்து பூமிக்குச் செல்லும்படி தண்டிக்கப்பட்டார்கள் ஆதாமும் ஏவாளும். ஏதேன் தோட்டத்தின் பசுமையையும் அழகையும் விட்டுப் பிரிய மனமில்லாத ஏவாள் தன்  இடுப்பில்  நான்கு இலைகள் கொண்ட லக்கி குளோவர் செடியொன்றை மறைத்துக்கொண்டு பூமிக்கு வந்தாள் என்று ஒரு கிறிஸ்தவ தொன்மம் இருக்கிறது.

இதனாலேயே  சாதாரணமாக மூவிலை கொண்ட லக்கி குளோவர் செடியில் அரிதாகத் தென்படும் நான்கு இலைகள்  கிடைத்தால், சொர்க்கத்தின் ஒரு துண்டையே கையில் வைத்திருக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்னும் நம்பிக்கை உலகெங்கும் நிலவுகிறது.

இளைய குளோவர் என்று பொருள் படும் Shamrock என்னும் சொல் பல வகைச் செடிகளின் மூவிலைகளுக்கும் பொருந்தும் என்றாலும் அவற்றின் வரிசையில் முதலிடத்தில் இருப்பது இந்த வெள்ளைக்குளோவரான ட்ரைஃபோலியம் தான்.

ஐந்தாம் நூற்றாண்டில் புனித பேட்ரிக், அயர்லாந்து பாகன் பழங்குடியினருக்கு இந்த மூவிலைக் குளோவரைக் காட்டித்தான் அதி புனிதத்திரித்துவத்தை விளக்குவார். தனித்தனியே அமைந்திருக்கும் அதன்  மூன்று  இலைப் பாகங்களும் பிதா, சுதன், பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது, மூன்றும் ஒற்றைக்காம்பில் இருப்பது இறைவனின் அந்த மூன்று நிலைகளும் ஒன்றே என்பதை காட்டுகிறது  எனவே மூவிலைக் குளோவரை வைத்திருப்பது மிக அதிர்ஷ்டம் என்று பேட்ரிக் சொல்லிச்சொல்லி பிரசிங்கித்தார், அப்போதிலிருந்துஇந்த குளோவர் கிருஸ்தவத்தில் மிகச்சிறப்பான இடம் பெற்றது. 

பிறகு வந்த காலங்களில்  ஏதேன் தோட்டத்து நாலிலைக் குளோவரை வைத்திருப்பது வெறும் அதிர்ஷ்டம் மட்டுமல்லாது அது பல அமானுஷ்ய சக்திகளை கொடுக்கும், சாதாரணமாகப் பார்க்க முடியாத தேவதைகளை இதை வைத்திருப்பவர்கள் பார்க்க முடியும்,  செல்லும் பாதையில்  சூனியக்காரிகள்  உருவாக்கும் மாயத்தோற்றங்களைக் கண்டறிந்து அவற்றை உடைத்து முன்னேறிச் செல்லமுடியும் என்னும் நம்பிக்கைகள்  வெகுவாகப் புழங்கின. மேலும் அத்தனை ஆயிரம் மூவிலைகளுக்கிடையில் அரிதாகத் தென்படும் நாலிலை குளோவரைக் காண்பது கடவுளின் மீதான விசுவாசம் எத்தனை இருக்கிறதோ அதைப்பொருத்து என்னும் நம்பிக்கையும் நிலவியது.

உலகமெங்கிலும் இந்த நான்கு இலைகளுக்கு அன்பு , கடவுள் மீதான விசுவாசம், அதிர்ஷ்டம், நம்பிக்கை ஆகியன குறியீடாகச் சொல்லப்படுகிறது.

 நாலிலைக் குளோவரின் அதிர்ஷ்டத்தைக் குறித்து மற்றுமொரு கட்டுக்கதையும் வெகுவாக புழக்கத்தில் இருந்தது. ஒரு மாபெரும் புல்வெளியில் நடைபெற்ற கடும் போரின் நடுவில் நெப்போலியன் கீழே இருந்த ஒரு நாலிலைக் குளோவரைப் பார்த்து அதை எடுக்கக் குனிந்த மறு நொடி அவரை நோக்கி வந்த ஒரு துப்பாக்கித்தோட்டா அவரது தலையைத் தாண்டிச்சென்றது அவர் மட்டும் குளோவரை எடுக்க குனியாமல் இருந்திருந்தால் நிச்சயம் அந்தத் தோட்டா அவர் உயிரை எடுத்திருக்கும்,  நாலிலைக் குளோவரின் அதிர்ஷ்டம் தான் நெப்போலியனைக் காப்பாற்றியது என்னும் இந்தக் கதை மிக வலுவாக வேர் பிடித்திருந்தது.

ஐரோப்பாவையும் மத்திய ஆசியாவையும் பூர்வீகமாகக் கொண்டது  இந்த மூவிலைக் குளோவர்.  உணவாகவும்  கால்நடைத் தீவனமாகவும் இதன் பயன்களைத் தெரிந்துகொண்ட ஐரோப்பியக் குடியேறிகள் இதன் விதைகளை வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா,ஜப்பான் மற்றும்  நியூசிலாந்துக்கு கொண்டு வந்து சாகுபடி செய்தார்கள். மேலும் உலகின் பிற பகுதிகளுக்கு ஐரோப்பியர்களின் கால்நடைகளின் உடலில் ஒட்டிக்கொண்டிருந்த குளோவர் விதைகள் அறிமுகமாகின.  

ஐரோப்பிய குடியேற்றம் நடந்த இடங்களிலெல்லாம் குளோவர்களும் வளர்ந்ததால் இதை, காலடி பட்ட இடமெல்லாம் வளரும் தாவரம் என்னும் பொருளில் White Man’s Foot: என்றழைத்தார்கள்.

 இந்தத் தாவரத்தின் அறிவியல் பெயரில் உள்ள  Trifolium  என்றால் மூவிலைகள். repens என்றால் படர்ந்து வளருகிற என்று பொருள். இந்தத் தாவரத்துக்கு  Dutch Clover, Ladino Clover  என்றும் புழங்கு பெயர்கள் உண்டு.

உலகின் மிகப் பயனுள்ள களைச்செடியாக இந்த குளோவர் கருதப்படுகிறது. பயறு வகைக் குடும்பமான ஃபேபேசியைச் சேர்ந்த இந்தத் தாவரத்தின் வேர்முடிச்சுகளில் வளிமண்டல நைட்ரஜனை சேர்த்துவைக்கும் ரைசோபியம் பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. எனவே இதன் வேர்களில் மிக அதிக அளவு நைட்ரஜன் இருக்கும். இந்தத் தாவரம் மடிந்தபின்னர் நிலத்தில் அந்த நைட்ரஜன் சத்து சேர்ந்து நிலத்தை வளமாக்குகிறது. இதனால் தான் ட்ரைஃபோலியம் வளர்ந்திருக்கும்  மேய்ச்சல் நிலங்கள் வழக்கத்தைக் காட்டிலும் பசுமையாக செழிப்பாக  இருக்கின்றன. 

ஒரு ஹெக்டேருக்கு அதிகபட்சமாக 545 கிலோ குறைந்தபட்சமாக 170 கிலோ நைட்ரஜனைக் இந்தக் குளோவர் தாவரம் சேமிக்கிறது. வெள்ளைக்குளோவர் பெரும்பாலும் Lolium perenne  போன்ற தீவனப்புற்களுடன் கலந்தே வளர்க்கப்படுகிறது.  இதனால் மிக அதிகமாக குளோவரை உண்ணும் கால்நடைகளுக்கு வரும் வயிற்று உபாதைகள்  தீவனப்புல்லைத் தின்பதால் குணமாகிறது.

முழுத்தாவரமுமே உண்ணக்கூடியது குறிப்பாக மலர்த்தலைகள் எனப்படும் இதன் அழகிய மஞ்சரிகள் மிகுந்த சத்துக்கள் கொண்டது. இதன் இலைகளை அப்படியே சாலட்களில் சேர்த்து பச்சையாகவே சாப்பிடலாம் என்றாலும்  5-லிருந்து 10 நிமிடம் வேகவைத்து சாப்பிடுகையில் ஜீரணமாவது எளிதாக இருக்கும். லேசான இனிப்புச்சுவை கொண்ட மலர்த்தலைகளில் தேநீர் தயாரித்து அருந்தலாம், அவற்றை உலர்த்தி வறுத்துப்பொடித்து பிற உணவுகளுடனும் சேர்த்துக்கொள்ளலாம்.

வெப்பம் அதிகரித்திருக்கும் நாட்களில் சில இயற்கையாக வளர்ந்திருக்கும் காட்டுக் குளோவர் செடிகள்  பூச்சிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காக சயனைடுக்கு இணையான நச்சுப் பொருட்களை  (linamarin & lotaustralin) உருவாக்கி இருக்கும் எனவே அச்சமயங்களில் இதை   குறைவாகச் சாப்பிடலாம். மேய்ச்சல் நிலமெங்கும் பரவி வளர்ந்து, ஏராளமாக மலர்ந்திருக்கும் இவற்றின் மலரமுதை உண்ணும் தேனீக்கள் சேர்த்துவைக்கும்  மிகச்சுவையான சத்துக்கள் நிறைந்த குளோவர் தேன் கடைகளில் கிடைக்கிறது..

1950 வரைக்கும் உலகெங்கிலும் மேய்ச்சல் நிலங்களுக்கு புல் விதைகள் வாங்குவோர் விரும்பிக்  கேட்டதால் உடன் குளோவர் விதைகளும் கலக்கப்பட்டே விற்பனை செய்யப்பட்டது. குளோவர் வளரும் புல்வெளி மிகப்பசுமையாக, மிக மிகச் செழிப்பாக இருக்குமென்பதால் இது பெரிதும் விரும்பப்பட்டது.  

அப்போது புற்களே இல்லாமல் முழுக்க முழுக்க குளோவர்களே நிறைந்திருந்த மேய்ச்சல் நிலங்களும் ஏராளமாக இருந்தன. ஆனால் 1950-க்குப்பிறகு உபயோகத்துக்கு வந்த 2,4D போன்ற அகன்ற இலைத்தாவரங்களுக்கான பிரத்யேகக் களைக்கொல்லிகள் மேய்ச்சல் நிலங்களில் இருந்த  குளோவர்களையும் டேண்டெலியன்களையும் அடியோடு அழித்து ஒழித்தன.

மிகப் பயனுள்ள குளோவர்கள் அழிந்துகொண்டிருப்பதை மக்கள் உணராவண்னம் களைக்கொல்லி நிறுவனங்கள் குளோவரென்னும் மோசமான களையை அழிக்க களைக்கொல்லிகளை வாங்கச்சொல்லி மக்களை ஊக்குவித்தன. மக்களும் அதை நம்பினார்கள். மிகப்பெரிய அளவில் குளோவர்கள் அழிந்தபின்னரே  “clover lawn movement” என்னும்  மேய்ச்சல் புல்வெளிகளில் குளோவர்களை மீட்டெடுக்கும் இயக்கம் தொடங்கி அவை மெல்ல மெல்ல மீட்டெடுக்கப்பட்டன.

ட்ரைஃபோலியம்   சிற்றினங்களில் இலைக்காம்பின் நீளத்தைப்பொறுத்து இவை சிறிய, நடுத்தரமான, பெரிய என்று மூன்று வகைகள் இருக்கின்றன இது ஒரு பல்லாண்டுத் தரைபடர் தாவரம். தண்டுக்கிழங்குகள் கணுக்கள் மண்ணில் படும் இடமெல்லாம் வேர் பிடித்து வளர்ந்து பரவிக் கொண்டே இருக்கும்.  மலரத்தலைகள் வெண்ணிறத்தில் சிறிது இளஞ்சிவப்பும் பாலாடை நிறமும் கலந்தாற் போலிருக்கும்.

வெள்ளை குளோவரின் ஒவ்வொரு இலைஇதழின் நடுவிலும் வெளிறிய வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் ‘V’ போன்ற ஒரு கோடு இருக்கும். இதைத் தாவரவியல் “Watermark” என்று குறிப்பிடுகிறது.  மற்ற வகைக்குளோவர்களின் முட்டை வடிவ மூவிலைகளில் சில சமயம் ஆங்கில V வடிவ வெண்ணிறக் கோடுகளும், தீற்றல்களும் இருக்கும்.பல சிற்றினங்களில் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் வெண்ணிறத் தீற்றல் உருவாகி பின்னர் மறைவதும் உண்டு.

சிக்கலான வலைப்பின்னல் போல அடர்ந்து வளர்ந்து நிலத்தை மூடியிருக்கும் குளோவர்களிலிருந்து அடர்த்தியாக உருவாகும் மலர்த்தலைகளில் 20-லிருந்து 40 சிறுமலர்கள் அமைந்திருக்கும் மலர்கள் மெல்லிய தேன் வாசனை கொண்டிருக்கும். மகரந்தச்சேர்க்கைக்குப் பிறகு காம்பற்ற, இதய வடிவிலிருக்கும்  மஞ்சள் அல்லது பழுப்பு நிற சிறு கனிகளும் அவற்றினுள் நுண் விதைகளும்இருக்கும்.

குளோவரில் கீழ்க்கண்ட வகைகள் உலகமெங்கும் இருக்கின்றன.

Trifolium pratense, என்னும் சிற்றினம்  Red Clover என்று சொல்லப்பட்டாலும் இதன் மலர்த்தலை இளஞ்சிவப்பில்தான் இருக்கும்.

பம்பிள் தேனீக்கள் இவற்றில் மகரந்த சேர்க்கை செய்கின்றன.உலகெங்கிலுமே இவை தீவனப்பயிராக மேய்ச்சல் நிலங்களில் பயிர்செய்யப்படுகின்றன. குளோவர் இது அயர்லாந்து நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் மிக முக்கியமான சின்னமாகவும் இருக்கிறது.

இதன் நைட்ரஜனை சேமிக்கும் இயல்பால் தானியப்பயிர்கள் புல்வெளிகள் மற்றும் காய்கறி பயிரிடும் நிலங்களில் துணைப் பயிராகவும் குளோவர் பயிர் செய்யப்படுகிறது. இவை அடர்ந்து பரவி வளருவதாலும் மிக அழகிய மலர்த்தலைகள் நெருக்கமாக உருவாவதாலும் வேறு களைச்செடிகள் வளர்வது கட்டுப்படுத்தப்படுகிறது எனவே பெரும் பசும்புல்வெளிகளில் குளோவரையும் சேர்த்தே வளர்க்கிறார்கள். ஒரு சில பழங்குடியினர் இதன் மலர்த்தலைகளை உலர்த்தி  அகலமான இலைகளுக்குள் பொதிந்து புகையிலையைப் போல புகைக்கிறார்கள் இந்தப்புகை போதை தராது எனினும்   சிறிது மன அமைதி தருவதாகச் சொல்லபடுகிறது.

இந்தியாவில் இந்த தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் குடற்புழு நீக்க சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் குளோவர்கள் பொதுவாக மூன்று அரிதாக நான்கு மேலுமரிதாக திடீர் மாற்றங்கள் மற்றும் சூழல் மாற்றங்களால் இலைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கக்கூடும் ஜப்பானில் இந்த வெள்ளைக் குளோவர்களில் அதிகம் திடீர் மாற்றம் எனப்படும் மியூட்டேஷன் நடக்கிறது.

ஜப்பானைச்சேர்ந்த ஷிகியோ ஒபாரா (Shigeo Obara) என்னும் தாவரவியலாளர் குளோவரை பயிர்பெருக்கம்  செய்து ஏராளமான ஆய்வுகளையும் அதில்  செய்தவர். இவர் தாவர மரபியலையும் தாவரவியலையும் இணைத்து பல ஆய்வுகள் செய்துகுளோவரில் பல சிறிய இலைகளை உருவாக்கினார்.  60 ஆண்டுகளாக குளோவரில் ஆரய்ச்சிசெய்யும் இவர், மலர்த்தலைகளில்  கைகளால் மகரந்தச்சேர்க்கை செய்து இதன் இலைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து கின்னஸ் சாதனையை இவரே மூன்று முறைச் செய்தார்.

2002-ல் ஒரு இலைக்காம்பில் 18 சிற்றிலைகள்

2008-ல் அந்த சாதனையை அவரே முறியடித்து ஒரு இலைக்காம்பில் 21 சிற்றிலைகள்.

2009- மீண்டும் முந்தைய சாதனையை அவரே முறியடித்து ஒரு காம்பில் 56 சிற்றிலைகள் கொண்ட குளோவரை உருவாக்கி சாதனை படைத்தார்.

இவாரது மறைவுக்குப்பின் 15 ஆண்டுகள் இந்தச் சாதனை மூறியடிக்கப்படாமல் இருந்தது.

2024-ல் தான் ஜப்பானின் யோஷி கரு என்பவர் ஒரே காம்பில்  63 சிற்றிலைகளை உருவாக்கி அந்த சாதனையை முறியைடித்தார். குளோவர் பயிர்ப்பெருக்கம் உலகெங்கிலும் பலருக்கு பிடித்தமான ஒரு கலையாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையில் நாலிலைக் குளோவரை ஒரு மணிநேரத்தில் சேகரிக்கும் சாதனைகளும் உலகெங்கிலும் நடக்கிறது. 

அமெரிக்கரான Gabriella Gerhardt  இந்த கின்னஸ் சாதனையை 5முறை செய்திருக்கிறார். முழு நிலவொளியில் நாலிலைக் குளோவரை சேகரிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான மணவாழ்வு அமையும் என்று ஒரு நம்பிக்கை இருந்து பலர் இரவில் அதைத்தெடிச்சென்றிருக்கிறார்கள். பல உலகப்புகழ்பெற்ற நிறுவனங்களிலும் இந்த நாலிலை குளோவர் வடிவம் லோகோவாக இருக்கிறது.

நாலிலைக்குளோவரைக் கண்டால் கொஞ்ச நேரத்திலேயே நல்லசெய்தி வரும் என்னும் நம்பிக்கையும் இருக்கிறது. முன்பு பத்தாயிரம் மூவிலைகளில் ஒன்று நாலிலையாக இருக்கும் என்று புள்ளி விவரங்கள் சொன்னது, இப்போது அது குறைந்து ஐந்தாயிரம் மூவிலைகளில் ஒன்று நாலிலையாக இருக்கும் எனப்படுகிறது.

பழங்கால மக்கள் குளோவர் இலைகளை வைத்து வானிலையைக் கணித்தனர். மழை வரப்போகிறது என்றால், இந்த இலைகள் நேராக நிமிர்ந்து நிற்கும் என்று நம்பப்பட்டது.குளோவரின் மலர்களில் மோதிரம் அணிந்துகொள்வது மலர்த்தலைகளைக் கோர்த்து மலர்க்கிரீடம் அணிந்துகொள்வது ரோஜாக்களைப் போல் இவற்றை சூடிக்கொள்வது என இதன் கலாச்சார அந்தஸ்தும் குறிப்பிடத்தக்கது. 

சீட்டுவிளையாட்டின் கார்டுகளில், விவசாயிகளை,  பயிர்ச்சாகுபடி செய்யப்படும் நிலத்தை குறிக்கும் க்ளப் என்றழைக்கப்படும் கார்டில் இருக்கும் சித்திரம் சிறு இலைக்காம்புடனிருக்கும் மூவிலைக் குளோவர்தான்.  (சீட்டுவிளையாட்டின் ஒவ்வொரு வகை கார்டுகளுக்கும் அவை குறிப்பிடுவதென்ன என்பதற்கு பிரத்யேகமான வரலாறு இருக்கிறது)

புனித பேட்ரிக்கின் நாளான மார்ச் 17 அன்று உலகெங்கிலுமே வெள்ளைக்குளோவரின் மலர்களையும் இலைகளையும் சூடிக்கொள்கிறார்கள்.  தமிழில் அருகு போல்வேரோடி ஆல்போல் தழைத்து என வாழ்த்துவது போல் ஐரோப்பாவெங்கும் நீண்ட ஆயுளுக்கும் நிறைவாழ்வுக்குமான வாழ்த்தாக   “to be in clover” என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது.

பல தமிழ்த்திரைப்படங்களில் ஐரோப்பா மற்றும் இந்திய மலைவாசஸ்தலங்களில் எடுக்கபட்ட பாடல் காட்சிகளில் லக்கி குளோவரின் அழகிய மலர்ப்படுக்கைகள் தெரியும். உதாரணமாக ’’புல்வெளி புல்வெளி தன்னில்’’ பாடலைச் சொல்லலாம்,

தேவன் தேடுங்கள் கிடைக்கும் என்றார் எனவே இனி மேய்ச்சல் நிலங்களில் குளோவர்களைக் கண்டால்  நாலிலைகளைத் தேடுங்கள் சொர்க்கத்தின் இலையொன்று கிடைக்கலாம்.  

Exit mobile version