1.
உருவம் பூத்து நிற்கும்
காற்றுக் குடித்த
பலூன் மிருகங்கள்
கைகாட்டியபடிக்
கடந்து செல்லும்
சிறுவனைப் பார்க்கின்றன.
அவன் முகம் எங்கும்
புன்னகையின் பூக்கள்
ஆச்சரியப் புள்ளிகள்
ஏக்கத்தின் வெளிப்பாடுகள்.
டால்பின்களும்
குதிரைகளும்
பறவைகளும்
யானைகளும்
அவன் பின்னே
விரும்பி வருகின்றன.
ஒன்றின் கரம் பிடித்தபடி
வரிசை கட்டி செல்லும் அவை
சிறுவனின் தேடலுக்கு ஏற்ப
அவன் கரம் புகுகின்றன.
வாஞ்சையாய் அணைத்தபடித்
துயிலும்
அவன் கரச்சூட்டில் நொதித்தலாகி
காற்றை உமிழ்ந்து
வெறும் உடலாய்க் கிடக்கின்றன.
2.
இரவில் ஊறும் நத்தைகள்
தொடர் சாரலில்
குளிர்ந்து கிடக்கும்
நிலத்தை விட்டு
வெளிவருகின்றன.
செல்லும் பாதைகளில்
அடுத்தப் பாதத்தை வைப்பதற்கு
இடமின்றி ஊறும் நத்தைகள்
காணக் கிடைக்கையில்
உணர்க்கொம்பின்
அலைவரிசையில்
சிக்கிக் கொள்கிறது உலகு.
நத்தைகள் இட்டுச் செல்லும் நீர்த்தடங்களெங்கும்
ஓயாது ஓடுகளைச் சுமந்தபடி
பயணிக்கும்
மெல்லிய பாதங்கள்
மெல்லிய உணர்கொம்புகள்.
3.
கோயில்களில்
புறாக்களைக் காண்பதில்
கூடுதல் ஈர்ப்பு.
வரிசையில் நின்று
புளியோதரைப் பெற்று வரும்
அம்மாக்கள்
அதைத் தன் பிள்ளைகளுக்கு ஊட்டுகிறார்கள்.
கொஞ்சம் புறாக்களுக்கும் இடுகிறார்கள்.
புறா தன் குஞ்சிற்கு ஊட்டுகிறது
அம்மாக்களால் நிறைகிறது உலகத்தின் வயிறு.
4.
சிறு தூறலில் தொடங்கிய
இக்காலையை
விரும்பி அழைக்கின்றன மைனாக்கள்.
ஜோடிப் பறவைகள்
ஒன்றை ஒன்று உரசியபடி
கீச்சிட்டு குளிரின் மேல்
வெம்மையைத் தெளிக்கின்றன.
இடையே மயிலின் அகவலும் சேர்ந்து கொள்ள
இளங்காலை நாணுகிறது.
நாணும் குளிர்க்காலை
வானுக்கு அதைக் கடத்த
மையல் கொள்ளும் பரிதி
சுரம் கூட்டும் பறவைகளை
பின் தொடர்ந்தபடியே அலைகிறது நாளெங்கும் .
5.
நண்பர்கள் அல்லாது
மகனோடு
தேநீர் அருந்த வருகிறார் தந்தை.
ரூபாயை மகனிடம் அளித்துவிட்டு
தேநீருக்காய்க் காத்திருக்கிறார்
டோக்கன் பெற்று
இரண்டு தேநீர்க்களோடு
வரும் மகனை ரசிக்கிறார்.
தந்தையை
நண்பனாய் பெற்ற மகனுக்கும்
தன் மகனுக்காய்
நேரம் செலவிடும் தந்தைக்கும்
இடையில்
தேநீர் மட்டுமே இருக்கிறதென்று
எப்படிச் சொல்லிவிட இயலும்.
6.
புளியம் இலைகள் உதிர்ந்து
காற்றோடு கைகோர்த்தப்படி
கரணமடித்துச் செல்கின்றன.
முன்னர்
நீர்நிலைகளில்
எம் வயதொத்த பெண்டிர்முன்
வீரத்தைப் பறைசாற்ற
கரணமடித்தோம்.
கயறுகட்டிக் கரணமடிக்கும்
மாருதியை
வேடிக்கைப் பார்த்தபடி
கைதட்டிச் சிரித்தோம்.
எங்குத் தொடங்கி
எங்கு முடிப்பதென
விடை தெரியாதபடி
இன்றோ வாழ்வில்
பலமுறை கரணமடிக்கிறோம்.
கரணம் அடித்து அடித்து
தலைகீழாய்ச் சுழல்கிறது உலகம்.
கரணத்தை நிறுத்த
வழிதெரியாது
தலைசுழன்று நிற்கையில்
தலைகாணியை வைத்து
தலையை ஊன்றி
கரணம் அடிக்கிறான் அச்சிறுவன்.
நேர் நிற்கிறது
தலைகீழான உலகம்.
