
1
நிம்மதியற்று இருந்து
அதுவே பழகிபோன பிறகுதான்
வரும் எந்த அழைப்பையும்
ஆர அமற எடுத்து
பேச முடிகிறது
சன்னல் ஓரம் நின்றபடி
எதையாவது வெறிக்க பார்த்தாலும்
பயமுறுத்துவதில்லை
குளிரும் வெயிலும்
எந்த காதலியையும்
ஞாபகப்படுத்துவதில்லை
தான் மட்டுமே தனித்திருப்பதாக
அலைக்கழிப்பதில்லை
மத்திய வயதில்
கொஞ்சம் நிம்மதியற்று இருப்பது
இன்னொரு பயணம்
புதிதாய் பழகும்
நாய்க்குட்டி போல
2
நீண்ட தாழ்வாரத்தின் கடைசியில்
ஒரு பூவரசு மரம் தெரிந்தது
அதை
மூன்றாவது மாடியில் இருந்து பார்க்க
கூச்சமாக இருக்கிறது
கீழிருந்து
பார்க்க மட்டுமே
பழகியிருக்கிறோம்
நட்சத்திரங்களை
பறவைகளை
மரங்களை
3
அருகிலிருக்கும் போதுதான்
நாம்
அநேகரை
பார்க்க இயலாமல் போகிறது
கை விட்டவர்களையெல்லாம்
காலத்துக்கும் நினைத்துக் கொண்டு
கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறோம்
இந்த வேனிற் காலத்தில்
4
மூழ்கியதும் திரள்கிறது
தொலைவில் நின்று
அலைக்கழித்த நினைவுகள்
யாரென்று இத்தனை நாட்கள்
தெரியாத முகங்கள்
தெரிகிறது
பாதைகள் விலகிப் போனதற்கான
என்
வருந்தங்களையெல்லாம்
நான்
வழிகளற்று திரியும்
இடங்களில் இருக்கும்
பறவைகள்
கொத்தி தின்று செரித்து எச்சமிட்டு
சிலிர்த்து பறந்து மறைகின்றன
5
எதைத் தின்றாலும் பித்து தீராதென்றால்
கடைசியாக ஒரு முறை
நான் உன்னைத் தான் திண்ண வருவேனென்று
உனக்கு தெரியும்
எனக்காக
உன் சதைகளில்
நிராகரிப்பின் கசப்பேற்றி
தயாராகவே இரு
6
முதுமையை நெருங்கும்
இசை இரசிகன்
ஒருவனின்
முதுகெலும்பில்
ஊர்கிறது
மின்மினி பூச்சி
அதன்
ஆரோகணத்தில்
வந்து போகிறார்கள்
மொசார்ட்டும்
விவால்டியும்
அவன் சுரங்களற்ற
தன் சதையில்
அன்று போல்
அத்தனை இலயமான
இசையை கேட்டதே இல்லை
முதலில்
தன் கை விரல்களை
நக்கி சுவைத்து
அதிலிருந்து
இதமான சூடேறி
சொட்டும் இரத்தத்தை
சுவைக்கிறான்
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக
தன் உடல் முழுவதையும்
தின்று தீர்க்கிறான்
இப்போது
இன்னும் தீவிரமாக
மீதமிருக்கும்
அவன் இதயத்திலிருந்து கேட்கத் துவங்குகிறது
இசையின்
“பியானிஸ்மோ”
