Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

கு.அழகர்சாமி கவிதைகள்

துப்பாக்கியின் சிரிப்பு

சாய்த்துத் தான்
வைக்கப்பட்டிருந்தது அது.
ஆனால் வேறெதுவும்
சாய்த்து வைக்கப்பட்டிருப்பது
போலில்லை அது.
சுட்டு விடுவது போல்
ஓர விழியில் என்னைப் பார்க்கிறது.
சுட்டு பலகாலமாகி அதன்
கோரப் பசி தீரவில்லையாம்.
குருதிச் சுவையை
மறக்க முடியவில்லையாம்.
தூக்கச் சொல்கிறது
என்னை.
குழந்தையா தூக்குவதற்கு
அதை?
இல்லையென்றால்
புதைத்து விடு என்னை
என்கிறது.
’பிணம் புதைத்து முளைக்கும்’
மரமா அது?
’சும்மா வேடிக்கை பார்க்காதே
கொஞ்சம் கையிலெடுத்துப் பார்’ என்று
கெஞ்சுகிறது திருப்பித் திருப்பி.
இத்தனை காலம் அது
சுட்டு வீழ்த்திய பிணங்களின்
சுமையாய் அது கனக்க
கையிலெடுக்க முடியவில்லை என்னால்.
அது வாந்தியெடுத்த
தோட்டாக்களின் கொலை நெடி
விரட்டியது அங்கிருந்து
என்னை-
அப்போது வாழ்வினை
மரணம் சீண்டுவது போல்
துப்பாக்கி
கைகொட்டிச் சிரித்தது
என்னை நோக்கி.


துப்பாக்கியின் துரோகம்

துப்பாக்கியைக் கையாளும்
திறமைசாலியான
அவன் துப்பாக்கியின்
அமைப்பை விளக்குகிறான்.
எப்படி குண்டு துளைக்கிறதென்று
விவரிக்கிறான்.
எப்படி துப்பாக்கியை
பகுதி பகுதியாய்ப் பிரித்து
திரும்ப ஒன்றுசேர்ப்பதென்று செய்து காட்டுகிறான்.
எப்படி துப்பாக்கியில் ரவைகளை நிரப்புவது
விசையை அழுத்துவது
குறிவைப்பது என்றெல்லாம்
துப்பாக்கியால் சுடும் நுணுக்கங்களை
தெளிவாக்குகிறான்.
துப்பாக்கி தனக்குத் தானே
சுவாரசியமாகி விட்டது.
வரலாறு தெரியும்
அதற்கு-
தன்னை ஏவும்
அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள
தயாராகி விட்டது.
சோதிக்க
சுடுவதற்கு
குறி வைக்கிறது.
குறி
தப்பவில்லை.
கலைந்து சிதறுகிறது
கூட்டம்.
குருதி வழிந்து
விழுந்து கிடந்தது ஓர் உடல்.
ஆனால்
தற்கொலையாய் இருக்கலாமென்று
முதற்கட்ட விசாரணையில்
சந்தேகிக்கப்பட்டதாய்
தகவல்.

Exit mobile version