Site icon சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

ரவி அல்லது கவிதைகள்

வெப்பச் சலனத்தில் வினோத குளிர்ப் பயணம்

இளம் மொட்டுகளுக்குள்
முளைத்த
குளிர் விதைகளால்
வியாபித்து வளர்ந்தது.
வீதிகளெங்கும்
குளிர்ச்சி இனிப்பு
கொடூரமாக
நாக்கு ருசிக்கு
நாடி அழைத்து.

சீர்கெடாத செரிமான
இயந்திரத்தால்
விளைந்தது
துரித உணவு
துக்கடாக்கள்
மருந்து கடைகளில்
மக்கள் கூடுமாறு.

வல்லரசு கனவில்
வாய்த்தது
வானுயர மருத்துவமனைகள்
சிறு நகரங்களிலும்
வெளி விவகார
கொள்கையின்
வினோதத்தில்
பருப்பொருளாக
பாகங்களை பிரிக்குமாறு.

அரிதென
காண முடிந்தது
விளைச்சலிடங்களில்
உற்பத்தி பெருக்கத்திற்கு
உரமிடுவதாக
நஞ்சு கலப்பதில்
நற் சான்றுகள்
பெற்றவர்களாக
ஆரோக்கியத்தில்.

மரணிப்பதற்கு முன்
மகரந்த சேர்க்கைகள்
துரித கதியில்
துயரமாக நடந்தேறியது
அனல் காற்றைப் பார்த்து
ஆச்சரியத்தோடு
பறந்து.

குப்பைக் கூடங்களில்
கழிவுகளை தின்று
கொழுத்து வந்தார்கள்
அறிவைத் தாண்டாத
அபத்தமாக
இதயத்தை இரும்பாக்கிய
எதிர்கால நம்பிக்கைகள்.

யாவற்றுக்குமிடையில்
வாய்க்கும் பொழுதெல்லாம்
நடந்து கொண்டிருந்தார்கள்
வாழும் நாளைக் கூட்டும்
ஆயுள் நீட்டிப்பிற்காக
பலர்.
உடல்க் கூறு வியாபாரத்தில்
மற்றவைகளைச் சிதைத்ததொரு
மனித வியாபாரத்தில் திளைப்பதறியாமல் .

பாட்டிமார்கள்
வளர்த்த
பேத்திமார்கள்
கை மாற்றியது
பழைய வைத்தியத்தை
பேத்திகள்
விரும்பாதபொழுதும்
அசௌகரிய பதிவாக
எங்கோ ஓரிடத்தில்
எப்பொழுதும்
தளராத நம்பிக்கையில்
அக்கரையாக.


வெயிலிலும் உருகிடாத வெண்ணைகள்

குறித்த நேரத்தில்
வராதுபோன
பேருந்திற்கு
படிக்கும் பயல்கள்
படிக்கட்டில்
தொங்கி
நடத்துனரை கடுப்பேற்றியது போன்ற
ஏதாவதொரு
வெறுப்புக் காரணம் இருக்கலாம்
நீண்ட நேர
காலதாமத்திற்கு.
கர்ம சிரத்தையாக
பதிவுகளை
அனுப்பிக் கொண்டிருக்கும்
இவரைப் போன்றவர்களால் தான்
பல செய்திகள்
உலகம் சுற்றும் போல
வெந்து நோகும் இவ்வேளையிலும்.
காத்திருத்தலில்
பூக்கட்டும்
அக்காவுக்கு
தள்ளு வண்டியில்
போகும்
குளிர் பானத்தை
வாங்கிக் கொடுக்கலாம்
வசவு வார்த்தையில்
வம்பாகிவிடுமென்ற
அச்சம் அசௌகரியமாக தடுத்தாட்டாமல் இருந்தால்.
ஏகக்கடுப்பில் இருக்கும்
எவர் முகத்திலும்
சிரிப்பும் இல்லை
சில்லறையும் இல்லை
முதியவர்
என் முன்
கைநீட்டி
காசுக்கு வரும்வரை.
ஐம்பதை கொடுத்து
இரண்டு இருபது ரூபாயையை
கையில் வைத்து
மரத்தைக் காட்டிய
செய்கையை
புரிந்தவர்
கையில்
ஐம்பதை வைத்து
ஒரு இருபது ரூபாயை
எடுத்துக்கொண்டு
சென்றதும்
நினைத்தேன்
அவரை
நிழலில்
ஓய்வெடுக்க சொன்னது
தவறில்லையென
முடமான பார்வைகள்
மொய்கின்ற பொழுதினில்.


நேசித்தலாகிவிடத் துடிக்கும் துயரங்கள்

பொருளீட்டலின்
பொருட்டான
பிரிதலில்
துய்த்த நேசம்
வாய்க்காது போகிறது
அணுக்கத்தில்
முளைத்திடும்
கலையாக
வேர் விடும்
சலிப்புகள்.
இப் பாந்தமற்ற
வாழ்க்கையை
பகட்டாக காட்ட வேண்டியதாக
இருக்கிறது
புற அடையாளங்களில்
வசதி வாளிப்பில்
வாஞ்சையுடையதாக.
குத்திக் காட்டும்
உறவுகளும்
குதூகலிக்கும்
குழந்தைகளும் தான்
வாழ்வதற்கான
போராட்டத்தில்
யாவும்
கடினப்படுத்தினாலும்
வென்றுவிட
துடிக்க வைக்கிறது
பெரும் பிரயத்தன
பாடில்
எப்பொழுதும்.

Exit mobile version