- நான் ஆணையிட்டால்…
- நான் ஆணையிட்டால்…-2
- நான் ஆணையிட்டால் – 3
இரண்டு
தேர்தல் தினத்துக்கு முன்பே வாக்குப்பதிவுக்காக சரவணப்ரியா நூலகத்தின் முன் ஊர்தியை நிறுத்தினாள். கண்ணைக் கவரும் பதின்பருவப் பெண்களில் ஒருத்தி அவளை நெருங்கி,
“எக்ஸ்க்யுஸ் மீ!” என்று ஒரு வண்ணக் காகிதத்தை நீட்டினாள்.
“தாங்க்ஸ்!”
அதில், ஈசாவுக்கும் ரைமனுக்கும் ஆறு வித்தியாசங்கள். முக்கியமாக…
விசுவாசமான கிறித்துவர் என ஈசாவ் தன்னை சொல்லிக்கொண்டாலும் அவர் நம்பிக்கைகள் அவரோடு தான். பைபிள் பாதையில் கல்விக்கூடங்களை நடத்த டெபரா சிறிதும் அஞ்சமாட்டாள்.
அரசியலில் நுழைந்துவிட்ட டெபரா அவள் அறிந்த பெண் இல்லை. மாற்றம் எதிர்பார்த்தது தான் என்றாலும், இத்தனை வெளிப்படையாக வீசிய கடவுள் வலை அவளைத் தயங்க வைத்தது. ஈசாவிடம் இருந்து சமுதாயத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியினரை அவள் பக்கம் இழுக்க இது அவசியம், தேர்தலில் வெற்றிபெற்றதும் அதைக் கைவிடுவாள் என்ற சமாதானத்தில், டாமினிக்குக் கொடுத்த வாக்குக்காக டெபராவுக்கே தன் வாக்கைப் பதிவுசெய்தாள்.
தேர்தலும் டெபராவும் நினைவில் பின்னுக்குப்போன போது டாமினிக் அழைத்தான்.
“தாங்க்ஸ் மிசஸ் நேதன்!”
“எதற்கு?”
“மறந்துவிட்டதா? நீங்கள் கொடுத்த ஆதரவில் டெபராவுக்கு வெற்றி.”
“பாராட்டுகள்! உனக்கு வீட்டு வேலை அதிகமாகப் போகிறது.”
“இது சின்ன பதவிதானே. டெபரா நிறைய நேரம் செலவிட வேண்டாம்.”
“இப்போதைக்கு. பள்ளிக்கூட நிர்வாகக் குழு டெபராவின் முதல் தப்படி. இந்த வெற்றியில் இருந்து மாநிலப் பேரவை, காங்க்ரஸ், செனட்டர் என்று அடுத்தடுத்துத் தானே நகரும் படிகள். நீ இப்போது ஒரு அரசியல்வாதியின் கணவன். சமூக ஊடகங்களில் ஜாக்கிரதையாக வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும்!”
“அதற்காக ஒரு ஆன்லைன் வகுப்பு.”
டெபராவுக்கு இது புது அனுபவம்.
அதுவரை அவள் வாழ்க்கை பலருடைய ஆளுகைக்குள். அவர்கள் அவள் நலத்தில் அக்கறை கொண்டவர்கள் என்றாலும் அவளுக்கு தன் கட்டுபாடுகள் நன்றாகத் தெரியும். அது அவளைச் சங்கடப்படுத்தியது இல்லை. அவர்கள் வார்த்தைக்கு அடங்கிப் போனதால் கடன் வாங்காமல் மதிப்பான கல்லூரிப்பட்டம். அதிக உடலுழைப்பு தேவைப்படாத வேலை. அட்டோனின் உறவு முறிந்ததும் அவள் தாய்க்குத் திருப்தியாக சுத்தமான ஐரோப்பிய இரத்தத்துடன் கத்தோலிக்க விசுவாசத்தில் டாமினிக். அவளாகவே அவளுக்காக எடுத்த ஒரே தீர்மானம், அட்டோனின் நிழல் அவள் உடலில் வளராமல் செய்தது.
பள்ளிக்கூட நிர்வாகக் குழுவின் அங்கத்தினர் பதவி அரசியல் படிகளின் உயர் மட்டத்தில் இல்லாவிட்டாலும் பலரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் அவள் கையில். அதிலும் பன்னிரண்டு பேரில் ஏழு பேர் மார்க்ரெட் தலைமையில் ஒன்றாகச் செயல்படுவதால் வரும் சக்தி. ஒரு விரலுக்கு பதில் ஏழு விரல்கள் மடக்கிய முஷ்டி.
மற்றவர்கள் ஏற்கனவே எதோவொரு விதத்தில் பிறர் வாழ்க்கைப் பாதையை நிர்ணயித்து இருந்தார்கள். தந்தை இல்லாமல் குழந்தையை வளர்ப்பது சரியில்லை என்ற அறிவுரையை அலட்சியம் செய்த ஆர்லினை வேலையில் இருந்து துரத்திய மார்க்ரெட். ஆசியக் குழந்தைகள் அறிவியல் போட்டிகளில் சிறப்பாகச் செய்வது பொறுக்காமல், அதைப் பாரத்து மற்றவர்களுக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டாகிறது என்ற காரணம் காட்டி அப்போட்டிகளின் விவரங்கள் பள்ளிக்கூடங்களுக்கு எட்டாதபடி செய்த கோர்ட்னி.
அவளுடைய முதல் அனுபவம் எப்படி இருக்கும்?
“அனுபவித்துப் பார்த்துவிடு!” என்றாள் கோர்ட்னி.
டெபரா திரும்பிப் பார்த்தாள். அவளை அலட்சியம் செய்தவர்கள், அவமதித்தவர்கள், ஏறிமிதித்தவர்கள்… ஆகா! கங்கா.
“நான் கேன்ப்ரிட்ஜில் வேலை செய்தபோது, அந்நிறுவனத்தின் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த இரண்டு மில்லியனை கங்கா தட்டிப் பறித்தாள். ஏற்கனவே அவள் ஒரு வெள்ளை ஜட்ஜுக்கு எதிராக வாதாடி நீச்சல் போட்டியில் தன் பையனுக்கு வெற்றி வாங்கிக் கொடுத்து இருந்தாள். இந்தியாவில் இருந்து சில்லறை டாலர்களுடன் இங்கே அண்டிப் பிழைக்க வந்த ஒருத்தி. தழைந்து போகாமல் நம்மை எதிர்க்க அவளுக்கு என்ன தைரியம்! என்ன தன்னம்பிக்கை! என்ன பண பலம்! அதைப்போல அவளுடைய இன்னும் சில வெற்றிக்கதைகளைச் சேர்த்து அவள் மகள் புத்தகம் எழுதி இருக்கிறாள்.”
“தெரியும். புத்தகத்தைத் தடைசெய்து அதன் விற்பனையை கணிசமாகக் குறைக்கலாம்.”
“அதனால் அவள் பெண்ணுக்குத் தான் நஷ்டம்.”
“இது எப்படி? மேனிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாறுதலுக்காக மற்ற இனத்து விடுதிகளில் இருந்து மதிய சாப்பாட்டு தருவிப்பது வழக்கம். இந்திய உணவுக்கு ஆந்திரா அட்ராக்ஷன். அது அவளுக்கு சொந்தமான உணவு விடுதி. இனி, வித்தியாசமாக இருக்க வேண்டும் என்றால் கிரேக்க, இத்தாலிய, ஜெர்மன் என்று ஐரோப்பிய மரபு உணவுகள் மட்டுமே.”
கோர்ட்னி சொன்னது முற்றிலும் உண்மை. அந்த கட்டுப்பாட்டை எல்லா பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பிய போது டெபரா கைகளில் ஒரு புதிய சக்தி.
அடுத்ததாக,
“புத்தகங்களை சென்ஸார் செய்ய நம் விருப்பங்களை மதிக்கும் ஒரு மென்பொருள் தேவை” என்று குழுவின் தலைவர் மார்க்ரெட் ஏப்ரஹாம் அறிவித்தபோது,
“என் பொறுப்பு” என்றாள் டெபரா. “சிறில் கெம்பீரன் எனக்கு இலவசமாக வலைத்தளம் அமைத்துக்கொடுத்தான். அதற்கு நன்றியாக…”
“கட்டாயம். தேர்தலில் உதவியவர்களை நாம் மறக்கலாகாது.”
புதிய அங்கத்தினர்களுடன் பள்ளிக்கூட நிர்வாகக்குழுவின் பொதுக்கூட்டம். ‘ஃப்ராங்க்லின் ரிபோர்ட்டரி’ன் விவரிப்பில் டெபராவின் பங்கை மட்டும் வெட்டி சரவணப்ரியாவுக்கு டாமினிக் அனுப்பி இருந்தான்.
“நான் பொம்மி மனோகரன். எனக்கும் பள்ளிக்கூட வயதில் குழந்தைகள். வன்முறை மற்றும் உடலுறவு இரண்டையும் தனித்தனியாகவோ, இல்லை கலந்தோ ஏகப்பட்ட விவரங்களுடன் வர்ணிக்கும் கதைகள் தரமற்றவை என்பது என் எண்ணம். அவற்றை ஒதுக்கி வைப்பது இலக்கியத்துக்கு நாம் செய்யும் சேவை. ஆனாலும், நூலகங்களில் இருந்து புத்தகங்களை அப்புறப்படுத்து சரியில்லை.”
“ஏன்? விபத்துகளைத் தவிர்க்கும் சாலை விதிகளைப் போல அதுவும் அவசியம்” என்றாள் டெபரா.
“அப்படியென்றால், சென்ற ஆண்டு நோபல் பரிசு பெற்ற அர்னோவின் ‘இளம்பெண்ணின் கதை’ ஏன் உங்கள் ஒதுக்கலில் இல்லை?”
“சர்ச்சைக்கான எதுவும் எங்களுக்கு அதில் தென்படவில்லை.”
“உங்கள் கண்களுக்கு அப்படி இருக்கலாம். அதைப் படித்து என் மகள் ஒரு அறிக்கை எழுத வேண்டும். கதையின் சம்பங்கள் நிஜமாகவே இருந்தாலும் அவற்றில் எனக்கு ஒப்புதல் இல்லாத பல விஷயங்கள். அதற்காக அதைப் பள்ளிக்கூடத்தில் இருந்து அப்புறப்படுத்த நான் முயற்சி எடுக்கவில்லை. அதற்கு பதிலாக, என் மகள் வாசித்ததும் இருவரும் புத்தகத்தை விவாதித்தோம். வீட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே போனதும் முதலில் எதிர்ப்படும் ஆணிடம் கன்னித்தனத்தை இழப்பது – அதுவும் பாதுகாப்பு இல்லாத சேர்க்கை – ஒரு இளம் பெண்ணுக்கு விவேகம் இல்லை. அதிகாரத்தில் இருக்கும் ஆண் தன் இச்சைக்காக வற்புறுத்தும்போது அதை மறுக்கும் துணிவு ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும். ஆணைத் திருப்திசெய்வது அவள் கடமை இல்லை. உடலுறவு இருவரும் பழகியபின் மனம் ஒப்பிச் சேர்ந்து செய்யும் காரியம்.”
“இப்படி ஒவ்வொரு புத்தகத்தையும் மதிப்பீடு செய்ய பல பெற்றோர்களுக்கு நேரம் இல்லை என்பதால் நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயம். எங்களுக்கு உதவியாக ஒரு மென்பொருள்.”
“தெரியும்” என்று பொம்மி ஒரு காகிதத்தை எடுத்தாள். “‘த ஹில் வி க்ளைம்’ கவிதையை அது ஒதுக்கி இருக்கிறது. எந்த காரணத்துக்காக?”
டெபரா அதற்கும் தயார்.
“ஓப்ரா வின்ஃப்ரீயின் வரிகள் வெறுப்பை வளர்க்கும்.”
“அதை எழுதியது அமான்டா கோர்மன்.”
“எதோவொரு கறுப்புப் பெண். யார் எழுதினால் என்ன?”
“கண்டனத்துக்கான வரிகள்?”
“சூரியோதயத்துக்குப் பிறகும் முடிவற்ற நிழல்
அதில் வெளிச்சம் எப்போது பரவும்?
நம் தோள்களில் இழப்பின் சுமை
நம் கால்களைத் தடுக்கும் கடல்
இவை சிறுவர்களின் நம்பிக்கையை சிதைக்கும்.”
“கவிதை அப்படி ஆரம்பித்தாலும் அதன் இறுதி வரிகள்:
வைகறை வருகிறது
நிழலின் முடிவு தெரிகிறது
அதில் இருந்து வெளியே நடப்போம்;
தயக்கமின்றி அச்சமின்றி
சூரியனின் ஒளி இனி எப்போதும்
மனதின் தளைகளை வெட்டி
அதைத் துணிவுடன் எதிர்கொள்வோம்
அதைத் துணிவுடன் எதிர்கொள்வோம்.
இவை கவிதையை வாசிப்பவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.”
“பேசி முடித்துவிட்டாயா? எது சரி என்று தீர்மானிக்க எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது.”
பலத்த கைதட்டல்.
சரவணப்ரியாவின் பதில்.
– டாமினிக் ! டாக்டர் கெம்பீரன் தன் சிஷ்யைக்குப் பெருமைப்படலாம். –
டாக்டர் கெம்பீரனின் பாதையில் வேதாந்த் வால்ட் குறுக்கிட்டது இல்லை என்றாலும் அவன் அவருக்கு பல தடவை எரிச்சல் தந்திருக்கிறான். சென்னை செய்தித்தாளில் வெளிவந்த அறிக்கையை வாசித்தபோது அவர் முன் அவனுடைய குற்றம்சாட்டும் ஆள்காட்டி விரல்.
சென்ற வாரம் சென்னையில் நடந்து முடிந்த மூன்றாம் பாலினத்தவர் மாநாட்டில் தொலைவழியே பல வெளிநாட்டினர் கலந்துகொண்டனர். ‘ஃப்ராங்க்லின் மாத் அன்ட் சயன்ஸ் அகடெமி’ ஆசிரியர் வேதாந்த் வால்ட் கொடுத்த உரை பலருடைய பாராட்டைப் பெற்றது. அதன் ஒரு பகுதி…
சமுதாயத்தின் கீழ்ப்படிகளில் வசிப்பதால் உங்களில் ஒருவனாக நான் என்னை நினைக்கிறேன். இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
மற்றவர்களை ஆட்டிவைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. அதனால் எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அதைத் தேடிப்போகவும் எனக்கு ஆசை இல்லை. அந்த சக்தியை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்? பிறரை என் வழிக்குக் கொண்டுவரலாம். அதனால் எனக்கு என்ன லாபம்? மற்றவர்களின் வாழ்க்கை விவரங்கள், உணர்ச்சிகள், குறிக்கோள்கள் எதுவும் எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும்போது, என் வார்த்தைகளைக் கேட்டு நடப்பதால் அவர்களுக்கும் என்ன ஆகப்போகிறது? தாங்களாகவே அமைத்துக்கொண்ட பாதைகளில் அவர்கள் ஆனந்தமாகப் பயணிக்கட்டும்!
என்னை அதிகாரம் செய்ய சமுதாயத்தில் எத்தனையோ பேர் இருப்பதை நான் அறிவேன். யாரிடமும் நான் பகைமை பாராட்டுவது இல்லை. காரணம் இல்லாமல் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்னைக் கீழே தள்ளினாலும் நான் ஒன்றிரண்டு படிகள் இறங்கித் தரையில் விழாமல் சமாளித்துக்கொள்வேன்.
சில காலமாக, என்னை அலைக்கும் அதிகாரம் இல்லாதவர்கள் மத்தியில் வாழ்கிறேன். அது என் அதிருஷ்டம். இது தான் உயர்வான, சந்தோஷமான வாழ்க்கை. உங்களில் பலர் அப்படிப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்த்து பரவசம் அடைகிறேன். உங்கள் சுதந்திர வாழ்க்கைக்கு மாநில அரசு ஆதரவு தருவதை அறிந்து பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஆட்சியாளர்களுக்கு என் பாராட்டுக்கள்! இந்நிலை தொடரட்டும்!
ஆனால் எங்கள் நாட்டில்…
‘மற்ற பண்பாடுகளின் ஆண் பெண் அடையாளங்கள் பற்றிய அறிவு நம் நம்பிக்கையை ஆக்கிரமிப்பது மிக ஆபத்தானது. அது பாலின வித்தியாசங்களை மழுங்கவைத்து ஆண் பெண் இருவரின் மதிப்பையும் குறைத்துவிடும்’ என்ற மூட நம்பிக்கையைப் பரப்பும் மதவாதிகள்.
அவர்களுக்கு சிறுபான்மையோர் தாங்கள் விரும்பியபடி வாழ்வது சிறிதும் பிடிக்கவில்லை. அவர்களைத் திருப்தி செய்ய அரசியல்வாதிகளும் மூன்றாம் பாலினத்தவரின் சுதந்திரத்தைக் குறைக்கும் சட்டங்கள் இயற்றுகிறார்கள். ஏன்? அவர்கள் கையில் அதிகாரம் இருக்கிறது. அதை வைத்துப் பிறரை வருத்துவதில் வரும் ஆனந்தம். அவர்கள் மதத்தைப் போலவே அதிகாரமும் அவர்களை இரக்கமற்றவர்களாக ஆக்குகிறது. அதை அவர்கள் ஏன் உணரவில்லை?
நேரடியாகவே டாக்டர் கெம்பீரனையும் அவர் மதத்தையும் வேதாந்த் ஒரே இழுப்பில் மட்டம் தட்டி இருக்கிறான். கீழே தள்ளுகிறேன். எப்படி அவன் எழுந்திருக்கிறான் என்று பார்க்கலாம்.
புதிய கல்வி ஆண்டு. அறிவியலில் அதிகப்படி ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கான ‘ஃப்ராங்க்லின் மாத் அன்ட் சயன்ஸ் அகடெமி’யில் தெரஸா ஆறாம் வகுப்பு மாணவி. அவளுக்குப் பிடித்த ஆசிரியர் வேதாந்த் வால்ட். புரியும்படி, அதேசமயம் சுவாரசியமாக, சிந்திக்கத் தூண்டும் வழியில் அவன் கணிதமும் அறிவியலும் பாடம் நடத்துவதை தெராஸா அடிக்கடி புகழ்ந்தாள். நேரில் சந்திக்க நேரிட்டால் டெபரா அவனைப் பாராட்டுவதாக இருந்தாள். அதற்கு அவசியம் இல்லாமல்,
டாக்டர் கெம்பீரன், “ஒரு சின்ன உதவி”க்காக அழைத்தார்.
“எதுவானாலும்.”
அவர் அதைச் சொன்னதும்,
“அவனை வேலையில் இருந்து விலக்க…”
“நான் வழி சொல்கிறேன். பத்துக்கட்டளைகள் ஏற்காதவனைத் தண்டிக்க கடவுளும் நம் கவர்னரும் நமக்கு அதிகாரம் வழங்கி இருக்கிறார்கள்.”
[டாக்டர் கெம்பீரனின் விருப்பத்தை டெபரா நிறைவேற்றியது ‘வேதாந்த் வேதாந்தம்‘ சிறுகதையில்.]
“மிசஸ் நேதன்! நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்!”
“டாமினிக்! நீ எந்தத் தவறும் செய்யவில்லையே.”
“நான் கேட்டதால் தான் டெபராவுக்கு உங்கள் வாக்கு கிடைத்தது.”
“நான் மட்டுமல்ல, பொம்மி மனோகரன். அவளுடன் இன்னும் பத்துப்பன்னிரண்டு பேர் அவள் வெற்றிக்குக் காரணம்.”
“சரி, தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் நான் மன்னிப்பு கேட்க முடியாது.”
மன்னிப்பின் காரணம் தெரியும். அதை அவனே சொல்லட்டும்.
“சென்ற ஆண்டு ஆந்திரா அட்ராக்ஷனின் வெள்ளிக்கிழமை மதிய உணவு ஒப்பந்தத்தை டெபரா முறித்ததால் அந்த விடுதி மூழ்கிவிடவில்லை. மிஸ் பால்சனை மாவட்டத்தின் கோடியில் திறந்த புதிய பள்ளிக்கு மாற்றியதால் வேலைக்குப் போய்வருவதில் அவளுக்குக் கொஞ்சம் அசௌகரியம். இதெல்லாம் சில்லறை விஷயங்கள். வெஸ்ட்வுட் உயர்நிலைப்பள்ளியில் மிஸ் லீஸா ஸிம்மர்மன் ஆங்கில ஆசிரியர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்க கவிஞர்கள் விருப்பப்பாடம். அதில் லாங்ஃபெலோவின் ‘எ ஸ்லேவ்ஸ் ட்ரீம்’ கவிதையைச் சேர்த்ததற்காக அவளுக்கு இந்த செமிஸ்டர் சம்பளம் கிடையாது. கவிதை சித்தரிக்கும் அவலக் காட்சி ‘க்ரிடிகல் ரேஸ் தியரி’க்கு ஆதரவு தருவதாக இரண்டு பெற்றோர்கள் குறைசொன்னார்கள். அர்த்தமற்ற அந்த முறையீட்டை ஒதுக்கித்தள்ளாமல் இந்தத் தண்டனை. இது கொஞ்சம் பெரிய விஷயம்.”
“தவறு என்றாலும் கும்பலுடன் ஒத்துப்போவது மனித இயற்கை. குழுவின் மற்ற ஆறு பேர் சேர்ந்து அத்தீர்மானத்தை எடுத்திருக்கலாம். அவர்களுக்கு எதிராகப் போவது அரசியல் அனுபவம் இல்லாத டெபராவுக்கு சுலபம் இல்லை. அத்துடன் ஓரின உறவு வைத்திருக்கும் மிஸ் லீஸா ஸிம்மர்மனுக்கு அனுதாபம் காட்டுவது இன்றைய அரசியல் சூழலில் ஆபத்து.”
“உங்கள் புரிதலுக்கு நன்றி! இப்போது ஒரு நல்ல ஆசிரியர் வேதாந்த்தை இழந்துவிட்டோம். இது இன்னும் பெரிய விஷயம். கல்லூரியில் வேலை தேடாமல் இளம் மனங்களை அறிவியலுக்கு அழைத்துப் போவதற்காக அவர் ஆசிரியர் பணிக்கு வந்ததாக யாரோ சொன்னார்கள். தெரஸாவும் அவரைப் பல தடவை புகழ்ந்திருக்கிறாள். அப்படிப்பட்டவரைத் துரத்தியதில் எனக்கு மிகவும் வருத்தம்.”
“எனக்கும் தான்.”
“டெபராவுக்கு உள்ளூரப் பிடிக்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால், அது டாக்டர் கெம்பீரனின் கட்டளை.”
“மேலிடத்தின் அதிகாரத்தைப் பல சமயங்களில் மீற முடிவது இல்லை.”
மூன்றாம் பாலினத்தவர் சார்பில் அவன் கொடுத்த உரையை அவள் வாசித்து இருந்தாள். அவர் கவனத்துக்கும் அது வந்திருக்கும். அதில் இருந்த மேற்கோளைப் படித்ததும் அவனை வேலையில்லாமல் தவிக்க வைக்க வேண்டும் என்ற அவருக்கு ஆசை வந்திருந்தால் ஆச்சரியம் இல்லை.
“தெரஸா?”
“பத்துக்கட்டளைகள் பேச்சை டெபரா எடுப்பதில்லை. தெரஸாவின் தவறைச் சுட்டிக்காட்டி எதாவது சொன்னால் எதிர்விளைவு நிகழலாம். தானகவே திருந்தட்டும் என விட்டுவிட்டாள்.”
டெபரா செய்தது சரியென்றாலும், யோசித்து தகுந்த காரணங்களுடன் கோர்வையாக தெரஸா எழுதிய கட்டுரையில் இருந்து அவள் பைபிள் முழுவதையும் கடவுளின் வார்த்தையாக நம்புவாள் என்பதில் சரவணப்ரியாவுக்கு நிச்சயம் இல்லை.
