Site icon சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

நெரிசல்

(1)

நெரிசலில் தொலைந்திருப்பேன் நான்
வானம் மட்டும்
கைதூக்கி விடாமல் இருந்திருந்தால்.


(2)

சாலை
நெரிசலில்
வெறித்துப் பார்க்கிறது
அது
என்னை மட்டுமென்று
தெரியும்
எனக்கு மட்டுமென்று-
தெரிகிறது
விண்
நெரிசலில்
அதனை மட்டும்
நான் பார்க்கிறேனென்று
தெரியும்
அதற்கு-
அந்த நட்சத்திரத்திற்கு.


(3)

நெரிசலில்
என் நிழலுக்கு இருக்கும்
பொறுமை எனக்கில்லை.


(4)

நெரிசலில் சாலையோரம்-
நிற்கும் சிறிது நேரத்திலாவது
சதா தன்னோடு
காத்திருக்கும்
மரத்திடம்
ஒரு சொல் பேசியிருக்கலாம்
பழகியிருக்க நேரமில்லையாயினும்-
ஆசுவாசப்படுத்தியிருக்கும்
எப்படி
தனக்குத் தானே
அவசரப்படாதிருப்பதென்று
சிறிது நேரத்தை
சிறிது நேரமாகவே
உணர்வதில்


(5)

ஒரு நொடிக்குள்
யுகத்தை அடைத்து வைத்து-
ஒன்றுமில்லையில்
முடிவிலியை
அடைத்து வைத்து-
புறப்படும் புள்ளியில்
இலக்கினை
அடைத்து வைத்து-
ஒரே
நெரிசல்!


(6)

இல்லவே
இல்லாததில்
இல்லாததே
உள்ளதாய்-
இல்லா விட்டாலும்
நெரிசல்.

Exit mobile version