ஹாராக்கிரி
தலைவரெலாம் ஒரு நற்புலரியில்
நல்லவராய்விடும் அபாயம் நேர்ந்தால்
நாடு என்னாகும்?
தீக்குளிப்பு முண்டிதம் மண்சோறு
துலாபாரம் அங்கப் பிரதட்சணம்
பொற்றேர் வடைமாலை
ஆடு கோழி பன்றி நேர்ச்சை
அபிடேகம் ஆராதனை அன்னதானம்
என ஆகக் குழப்பமாகும்
கடைகள் திறவா சந்தையும் இரா
உணவகங்கள் மூடல் பார்சல் ரத்து
பேருந்து இரயில் விமானம் ஏது?
பிரசவ வேதனை காலன் வருகை
எல்லாம் ஆகக் குழப்பமே மிஞ்சும்!
பிரபஞ்ச பாஷா சம்மேளன்
பத்தொன்பதாவது பிரபஞ்ச மூத்தமொழிச் சம்மேளனம்
செவ்வாய்க் கோளில் நடத்தத் திட்டம்
அரசியல்வாதிகள் அவரடியார்கள்
தம்மின அறிஞர் துதிப் பேராசிரியர்
கூத்தாட்டு மன்றம் பிரசங்கியர்
பாதுகை சுமக்கும் பாவலர் பங்கேற்பர்
கலந்து கொண்டு கட்டுரை படிப்போர்
ஆய்வுச் சுருக்கம் அறுபத்தேழு சொற்களில்
அனுப்பி வைக்கவும்
அத்துடன் ஆளுங்கட்சி உறுப்பினர் அட்டை
ஒளிநகல் உத்தமம்
விண்ணப்பத்துடன் மூன்று லட்சம் பணம்
வரைவோலை வைக்கவும்
மறுவாரம் துணைச் செய்தி
ஆளுநரின் அனுமதி மறுப்பாம்
ஒன்றிய அரசின் சம்மதம் தாமதம்!
அட்சய திருதியை
செவிப்பட்டதில்லை முப்பதாண்டு முன்பு
இடையில் ஏதும் இறையனார் தோன்றி
சதுர்மறைக்குப் பிற்சேர்க்கை போட்டார் போலும்
எப்போதும் போல் தேவ பாடையில்!
சேவியர் ஜுவல்லரி சம்சுதீன் நகைக்கடை
பெரியார் ஆபரண மாளிகை பெரியவா ஸ்வர்ண மஹால்
மூன்று நாட்களாய் முழுப்பக்க விளம்பரம்
தாலி அறுத்தேனும் தங்கம் வாங்கு
மருந்து வாங்கவும் மளிகை வாங்கவும்
குவார்ட்டர் வாங்கவும் போக்கற்றவனே
தைரியமாகக் கடனே வாங்கித் தங்கம் வாங்கு!
அக்ஷய திருதியை தங்கம் வாங்கினால்
கழிப்பறையிலும் தங்கம் பொங்கும்
வாங்காது போனால் கடவுள் சாபம்
மானங் கெட்டவனே மனிதனாய் இருந்தால்
தங்கம் வாங்கு நீ!
(தேவபாடை – தேவபாஷை)
