Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

அய்யனார் ஈடாடி கவிதைகள்

புதர்மண்டிக் கிடக்கும்
ஒத்த வீட்டின் தாழ்வாரத்தில்
கோடுகிழித்து வலைப்பின்னும்
பூஞ்சிலந்திகளுக்கு
துணைக்கு செல்லும்
மின்மினி ஓடவண்டுகள்
வானில் பூத்த
பொன் நிலவை விட
மிக ரம்மியமாய்
லயிக்க வைக்கின்றன .

பூங்குட்டிகள்
முட்டி மோதும்
மடி கணத்த
தாய் நாய்
சுரக்கும் பாலை
சூட்டுப் பழங்களாய்
கட்டற்ற வெளியில்
சுவைக்கும் இரவு .

நிலைக்குத்தி
தொங்கி நிற்கும்
சுரைக்கூடுகளுக்குள்
வாயிற்காவலனாய்
தலைதூக்கி நிற்கும்
நீளச்சாரைகளை
பார்த்தபடியே
மீண்டும் பின்னும்
வரிச்சிலந்திகளோடு
தூக்கமற்ற இரவில்
கொடிப்பிச்சிகளாய்
செவக்கிறது பூங்கண்கள்
ஒத்த வீட்டில்….


கதிர் அறுத்த
தரிசு நிலங்களில்
காற்சுழற்றி விளையாடும்
குழந்தையின் கொலுசுமணிகள்.
வெறிச்சோடிய வீதிகளில்
கருக்கா நெல்மணிகளோடு
சண்டு புடைக்கும்
தண்டட்டி கெழவிகள்.
அதிரசம் சுட்டவள்
ஆடியலைந்து வருகிறாள்
தூக்குச்சட்டியோடு.
உப்புக்கள் படிந்த
லவுக்கையோடு
களத்துமேட்டிற்கு வரும்
கதிரு கட்டுக்கள்.
கூலம் அரித்த கையில்
குருவி முட்டையோடு
வருகிறாள் மாடக்குளத்தி.
சகதி அப்பிய
கரையடி சம்படையில்
சீப்புக் குரவைகளின்
பச்சை வாசம்.
கரப்பிள்ளையார் ஆலமரத்தில்
கழுத்து நீண்ட உள்ளான்கள்
கட்டக்கிளிகளும் கருநாகமும்.
ஆதமத்தா வயலிலே
அனல் பறக்கும்
கோடை வெயில்.
சூடடித்துவிட்டு வந்த
அப்பச்சிகளையும்
அம்மத்தாக்களையும்
உச்சி நுகரும்
புளியங்கொப்புகள்.
ஊராமகந் தோப்பில
ஊரும் மாவடுக்கு
சேரும் கூட்டம்.
நீர் வத்திய
கொழுவங்கெணத்தில்
தெறிக்கும் மீன்கொச்சைவாசம்.
உழுவை கருவாடுகளோடு
காயும் ஊர்கூரைகள்.
இதயத்தின் வேர்ச்சுவடுகளில்
பதியப்பட்டிருக்குமோர் கோடையிது…


நிதம் நிதம்
மிதித்து வந்த
கெழக்கு குழாயடியில்
தவறவிட்ட நினைவுகளை
தாழப்பறந்து நுகர்கிறேன்
தடித்த சருவபானைகள்
தலைவிரித்த பாசிகள்
தாடிப்பூச்சிகள்
தளும்பியோடும் தும்பை தண்ணீர்
தாவணியோடு
அவள் மட்டும் இல்லை
பூக்கள் அப்பிய
புன்னகை தோட்டத்தில்
பூங்காற்றாய் வீசுகிறாள்
சுழற்றி அணைக்கிறேன்
ஏக்கத்தின் கதகதப்பில்…

முந்தையவை

Exit mobile version