
கபில்தேவ் தலைமையில் நமது அணி 1983ல் உலகக்கோப்பை வென்றது இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய திருப்புமுனை. அத்தொடரில் இங்கிலாந்து நெவில் மைதானத்தில் இந்தியாவுக்கு தோல்வி நிச்சயமென உறுதியாகிவிட்ட நிலையில் கபில்தேவ் விஸ்பரூபம் எழுந்தருளி 175 ரன்களை அடித்து அவுட் ஆகாமல் வெற்றி வாகை சூடினார். இன்று இந்திய மண்ணில் எங்கெங்கும் கிளைத்து வளர்ந்து பரவியிருக்கும் கிரிக்கெட் விருட்சத்தின் விதை நெவில் மைதானத்தில் முளைத்தது என்றே கூறலாம். பிபிசி ஸ்டிரைக் காரணத்தால் சரித்திர புகழ் பெற்ற அந்த மாட்ச் வீடியோவில் பதிவாகும் வாய்ப்பை இழந்தது. நேரடி ஒளிபரப்பும் நிகழவில்லை.
அசலான சாகசங்கள் உலகில் அரிதாகவே நிகழ்பவை. மானுடத்தின் பெரும்பான்மையான வாழ்க்கை என்பது அசல் சாகசங்களின் நிழல்களில் வசித்தபடி, அசலை நகல் செய்யும் முயற்சிகளிலேயே கடந்து சென்று விடுகிறது. சமீபத்தில் வெளியான 83 எனும் திரைப்படம் கூட அசலை நகல் செய்யும் ஒரு முயற்சியே. லண்டனில் கொரோனா முதல் அலை வீசிய நேரத்தில் நானும் எனது கல்லூரி நண்பர்களும் கபில் ஆடிய அந்த நெவில் மைதானத்தை நேரில் சென்று காண முடிவு செய்தோம். கொரோனா காரணத்தால் அப்போது பல நண்பர்கள் வேலையை இழந்து பதட்டத்தில் இருந்தனர். சிலருக்கு விசா முடிந்து இந்தியா திரும்பி செல்ல வேண்டிய நிலை. தேசங்கள் விமான போக்குவரத்தை ரத்து செய்திருந்தன. நட்புகள் உறவுகள் வட்டத்தில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தபடியிருக்க, லாக்டவுன் உச்சத்தில் பித்து பிடித்து சிறைக்கைதிகளாய் தவித்த நேரத்தில், நண்பர்கள் அனைவரும் நெவில் மைதானத்தில் சந்திக்கலாம் என்ற யோசனை எனக்கு பெரும் கிளர்ச்சியை தந்தது.
நான் வசிக்கும் ஊரிலிருந்து நெவில் மைதானம் நான்கு மணி நேரப்பயணம். மூன்று ரயில்கள் மாறவேண்டும். அதிகாலையில் எழுந்ததுமே பரபரப்பு தொற்றிக் கொண்டது. முதல் ரயில் தலைநகர் லண்டன் நோக்கி செல்லும் தேம்ஸ் லிங்க் எக்ஸ்பிரஸ். பெட்டிக்கு ஒருவர் என்ற ரீதியில் அந்த ரயிலை அத்தனை காலியாய் பார்த்ததேயில்லை. வசந்தம் முடிந்து கோடை துவங்கிய காலமென்பதால் ரயிலின் கண்ணாடி ஜன்னலுக்கு வெளியே எங்கெங்கும் பச்சை மின்னியது. ரயில் முன்னே செல்ல என் நினைவுகள் பின்னே நகர்ந்தன.
எண்பதுகளின் முற்பகுதியில் இந்திய கிராமங்களுக்குள் டிவி நுழையாத காலம். நகரத்தில் வசதியான சில வீடுகளில் மட்டுமே கறுப்பு வெள்ளை டிவி இருந்தன. வேகமாய் பெருகிய ஜனத்தொகையும் வேலையில்லா திண்டாட்டமும் சமூகத்தின் பிரதான பிரச்னையானதால், கிரிக்கெட் பற்றிய புரிதலோ விவாதங்களோ மக்களிடம் அப்போது இருக்கவில்லை. சிலர் ரேடியோவில் கமெண்டரி கேட்பதுண்டு. 1983 உலகக் கோப்பை சீசன் முன்புதான் கலர் டிவிகள் வரத்துவங்கின. அவ்வருடம் உலகக்கோப்பை வென்ற பிறகுதான் கிரிக்கெட் பித்து இந்தியாவின் பட்டி தொட்டியெல்லாம் பரவத் தொடங்கியது.
லண்டன் கிங்ஸ் க்ராஸ் ரயில் நிலையத்தில் இறங்கி தெற்கு லைன் பிடித்து ப்ராம்லி நோக்கி பயணத்தை தொடர்ந்தேன். ப்ராம்லியில் சில நண்பர்கள் காரில் காத்திருக்க, பல்வேறு திசைகளிலிருந்து வந்த நண்பர்களை இணைத்துக்கொண்டு நெவில் மைதானத்தை நோக்கி வாகனங்கள் புறப்பட்டன. நெடுஞ்சாலையோரங்களில் விவசாயிகள் விற்ற செர்ரி, ஸ்ட்ராபெர்ரி, ப்ளம்ஸ், பீச் போன்ற பல வகை பழங்கள் கண்களை கவர்ந்தன. நம்மூர் இளநீர், நுங்கு, வெள்ளரி, தர்பூசணி நினைவு வர காரை நிறுத்தி செர்ரி பெர்ரி என பழங்களை வாங்கி குவித்தோம். தேசங்களும் பழங்களும்தான் மாறுகின்றனவே தவிர நமது பழக்கதோஷங்கள் மாறுவதில்லை. கனிந்த பழங்களால் சிறிது நேரத்தில் கார் முழுக்க பழ வாசனை. முகக்கவசம், சமூக இடைவெளி என அதுவரை ராணுவ ஒழுங்குடன் பயணித்த நாங்கள் சட்டென்று சங்ககால குரங்குகளாய் மாறி சுவையான பழங்களை உண்டு மயங்கிப்போனோம்.
1987ல் எனது சித்தியும் சித்தப்பாவும் புதுத் தம்பதிகளாய் எங்கள் வீட்டுக்கு திருமண விருந்துக்காக வந்திருந்தார்கள். சித்தப்பா வாய் பேசாத காது கேளாத மாற்றுத்திறனாளி. அவரை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு சிறுவனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் வரும்பொழுதே 87 உலகக்கோப்பை போட்டியின் அட்டவணையை கையில் வைத்திருந்தார். எங்கள் வீட்டில் டிவி இல்லாததால் தெருவில் இருவரும் நடந்து செல்வோம். எந்த வீட்டின் டிவியிலிருந்து கிரிக்கெட் சப்தம் கேட்கிறதோ உள்ளே நுழைந்துவிடுவோம். ஒரு நாள் நாங்கள் உள்ளே சென்றது போலீஸ்காரர்களின் வீடு. சிறிய கருப்பு வெள்ளை டிவி வைத்திருந்தினர். காவல்துறையில் ஒட்டுனர்கள், சமையல்காரர்கள், பேண்டு வாத்தியம், முடி வெட்டுபவர்கள், தோட்டக்காரர்கள் என பல கிளைத்துறைகள் உண்டு. சமையல் போலீஸ் சுவையான பலகாரங்கள் செய்து கொடுக்க, இசைப்போலீஸ் ட்ரம்பெட் வாசிக்க, டிவியில் கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்க, எனது சித்தப்பாவுக்கு சந்தோஷம் தாளவில்லை. மட்டையை இப்படி அடிக்கணும், பந்தை அப்படி போடணும் என்று சைகை கமென்ட்ரி கொடுத்தபடி இருந்தார். இன்று IPLல் பீப்பீப்பீ என்று ஊதப்படும் ஆதிஒலியின் வடிவத்தை ஒரு போலீஸ்காரர் ட்ரம்பெட்டில் அன்றே ஊதிக்கொண்டிருந்தார். அந்த வீடே ஒரு ஸ்டேடியம் போல் அதிர்ந்தது.
நெவில் ஸ்டேடியத்தை நெருங்க நெருங்க நெஞ்சத்தில் பட்டாம்பூச்சிகள் பறக்க துவங்கின. ராயல் டன்ப்ரிட்ஜ் வெல்ஸ் எங்களை அன்புடன் வரவேற்றது. வெகுநேரம் அமர்ந்தே பயணித்ததால் காரிலிருந்து இறங்கி நடக்க துவங்கினேன். ஸ்டேடியம் நுழைகின்ற தெருவின் இருபக்கமும் தபாலட்டை புகைப்படங்கள் போல அழகிய வீடுகள். நன்கு பராமரிக்கபட்ட தோட்டங்கள், வீட்டின் வாசல்களில் பூங்கொத்துகளை நீட்டி வரவேற்றன. ரோஜாக்கள் நிறைந்த ஒரு வீட்டில் வயதான தம்பதியர் சூரிய ஒளியில் சிவனும் சக்தியுமாய் புன்னகையுடன் ஜொலித்தனர்.
‘காலை வணக்கங்கள்’ என்றேன்.
‘குட் மார்னிங். அதென்ன சமீபத்தில் நிறைய இந்தியர்கள் இந்த மைதானத்தை நோக்கி படையெடுக்கிறீர்கள்?’ என்றார் சிவன்.
‘கபில் ஆடிய களம்’ என்றேன்.
‘ஆம். இந்த ஸ்டேயத்தில் நிகழ்ந்த ஒரேயொரு சர்வதேச போட்டி அது. லோக்கல் மாட்சுகள் மட்டுமே பார்த்த எங்கள் விழிகளுக்கு அன்று கபில் ஆடியது மாபெரும் தரிசனம்’ என்றார்.
சக்தி நடுவில் புகுந்து ‘ சில மாதங்கள் முன்பு இங்கே 83 சினிமா ஷூட்டிங் நடந்தது. கபில் வந்திருந்தார். வேடிக்கை பார்த்த எங்களுக்கு ஒரு வாரம் சுவையான இந்திய சாப்பாடு. டிக்கா மசாலா அருமை’ என்று சிரித்தார்.
எங்களது பேச்சொலியால் கவரப்பட்டு பக்கத்து வீட்டின் தோட்டத்திலிருந்த பெண்மணியொருவர் அருகில் வந்து அரட்டைக்குள் புகுந்தார். அவரது வீடு ஸ்டேடியத்தை ஒட்டிய வீடு. 83ல் கபில் விளாசிய சிக்ஸர்களில் சில பந்துகள் அவரது வீட்டின் கூரையில் அடித்து விழுந்த இடங்களை சுட்டி காண்பித்தார். அவரது உறவினர் ஒருவர் அந்த பந்தை பல வருடங்கள் பத்திரமாய் வைத்துள்ளார் என்பது சுவாரசியமான தகவல். நாங்கள் அவர்களுக்கு நன்றி கூறி விடைபெற்று ஸ்டேடியத்தை நெருங்கினோம். காரிலிருந்து கிரிக்கெட் மட்டை, பந்து, ஸ்டம்புகளை எடுத்துக் கொண்டு நெவில் மைதானத்துக்குள் நுழைந்தோம்.
எண்பதுகளில் மரங்களை வெட்டி செதுக்கி இழைத்து கிரிக்கெட் மட்டை செய்து விளையாடிய நாங்கள், தொண்ணூறுகளில் காசு கொடுத்து மட்டைகள் வாங்கினோம். இந்தியாவின் தாராளமயக் கொள்கைக்கு பிறகு எங்கள் வீட்டில் கலர் டிவி நுழைந்தது. கிரிக்கெட்டுக்காக நான் முதலில் அழுதது 1992ல் இந்தியா தோற்றவுடன். அவ்வருடம் உலகக்கோப்பையை பாகிஸ்தான் வென்றது. 1995ல் காம்ப்ளி அழுதார். கோப்பை இலங்கைக்கு சென்றது. அதன் பிறகு ஆஸ்திரேலியாவே தொடர்ந்து ஜெயித்து மற்ற நாட்டினரை அழவைத்தனர். பல வருடங்கள் கழித்து தோனி தலைமையில் இந்தியா மீண்டும் உலகக் கோப்பை வென்றது. கபிலுக்கும் தோனிக்கும் இடைப்பட்ட இருபத்தியெட்டு ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் அடைந்த மாற்றங்கள் எண்ணற்றவை. கிரிக்கெட்டை வாழ்வாதாரமாக்கி பல குடிசை தொழில்கள் உருவாகின. கிரிக்கெட் வீரர்கள் கையெழுத்திட்ட மட்டைகள், பந்துகள், ஸ்டம்புகளின் விற்பனைகள் பெருகின. விளம்பரங்கள். சூதாட்டங்கள். கனவுகள். காமென்டரிகள். ஒளிபரப்பு உரிமங்கள். தினசரி பத்திகள். வார இதழ் கட்டுரைகள். சிறுகதைகள். நாவல்கள். விசிறிகள். புகைப்படங்கள். திரைப்படங்கள். புதிய ஸ்டேடியங்கள். அரசியல் சினிமா பிசினஸ் அனைத்தும் கிரிக்கெட்டுடன் இணைந்து மாபெரும் விசையாகி சமூகத்தை இயக்கின. 83ல் வெற்றிபெற்று நாடு திரும்பிய நமது அணிக்கு பரிசளிக்க கூட நிதியில்லாத பிசிசிஐ, அப்போது லதா மங்கேஷ்கர் அவர்களை டில்லிக்கு அழைத்து நிகழ்ச்சி நடத்தி இருபது லட்சம் திரட்டி ஆளுக்கொரு லட்சம் கொடுத்தது. இன்றோ ஒளிபரப்பு உரிமம் கொடுப்பதன் மூலம் பிசிசிஐக்கு கிடைக்கும் வருமானம் மட்டுமே 3500 கோடி.
குறுகலான ஒரு நுழைவாயில் வழியே நெவில் ஸ்டேடியத்தினுள் சென்றதும் சட்டென்று பிரம்மாண்டமாய் வானம் மேலே விரிய கீழே மரகதக் கம்பளமாய் ஆடுகளம் பிரகாசித்தது. இதமான வெயில். சுத்தமான காற்று. மனித சஞ்சாரங்கள் ஏதுமற்று கைவிடப்பட்ட ஒரு கோவிலின் அமைதி அங்கே நிலவியது. நீல வானில் வெண்மேகங்கள் எங்களை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க துவங்கின. அன்று கபில் ஆடிய சிவ நடனத்தை நகல் செய்தவாறு நாங்கள் ஆடத் துவங்கினோம். பவுலிங் பேட்டிங் ஃபீல்டிங் என ஆட்டம் களைகட்டியது. வேகமாய் அடிக்கப்பட்ட பந்து பவுண்டரி தாண்டி சென்று ஒரு புதருக்குள் மறைந்து தொலைந்து போனது. வெடிச்சிரிப்பும் வியர்வையுமாய் எங்களை மறந்து ஆடியதால் கொரோனா இறுக்கங்கள் மனதைவிட்டு தளர்ந்து குறைந்து மறையத் தொடங்கின. கபில் நடந்த மண்ணில் நாங்களும் நடக்கிறோம் என்பதை நம்ப இயலாமல், கனவும் நனவும் பிணைந்ததோர் காட்சிப் பிழைக்குள் மிதந்துக் கொண்டிருந்தோம்.
நெவில் மைதானத்தில் நடந்த ஒரேயொரு சர்வதேசப் போட்டி வீடியோ எடுக்கப்படாததால், பிபிசி எடுத்த சில புகைப்படங்கள் மட்டுமே காண்பதற்கு உள்ளது. நடராஜர் தாண்டவம் போல் ஒற்றை காலை தூக்கி கபில் ஆடியபடி நிற்கும் ஒரு புகைப்படம் மிகப் பிரபலம். அந்த போட்டோக்கள் அனைத்தின் பின்னணியிலும் அடர்த்தியாய் அந்திவண்ணத்தில் மலர்கூட்டம் தென்படுவதை காணலாம். பொன்னார் மேனியன் என்றாலே அந்திப்பொன் தானே? நாகலிங்கப்பூ சிவனுக்கு உகந்த மலர். நாகலிங்க மரத்தின் கீழ் உதிரம்போல் உதிர்ந்தோடி நிரம்பியிருக்கும் நாகலிங்கப் பூக்களை சிறு வயதில் விளையாடும் போது பார்த்ததுண்டு. பிபிசி புகைப்படங்களில் பார்த்த அம்மலர்கள் நினைவு வர, நெவில் மைதானத்தின் எல்லைக்கு வெளியே தெரிந்த புதர்களை உற்று நோக்கினேன்.
‘ரோடடென்றான்’ என பரவசமாய் கூவியபடி நந்தனார் போல பவுண்டரி லைன் நோக்கி ஓடினேன். சில நண்பர்கள் குழப்பத்துடன் என்னை பின்தொடந்து ஓடி வந்தனர். செடியா புதரா மரமா என கூற முடியாதபடி சிறியதும் பெரியதுமாய் விண்ணை தொடுகின்ற பேராசையுடன் ரோடடென்றான் அடர்ந்து படர்ந்து உயர்ந்து வளர்ந்திருந்தன. செடிகளின் இடுப்பில் அமர்ந்தபடியும் புற்தரையில் உதிர்ந்து உருண்டோடி விளையாடியபடியும் இளஞ்சிவப்பு ரோடடென்றான் பூக்கள் மழலைகளாய் கண் சிமிட்டின. இவைதானே பிபிசி புகைப்படங்களில் சிரித்தவை. இந்த பூக்களின் மூதாதையர்கள் 83ல் நடந்த சிவ நடனத்தை நேரில் கண்டு களித்து இருக்குமல்லவா? அப்பூக்களின் நகல் வடிவங்கள்தானே இவை? பிரபஞ்ச பெருவெடிப்பின் அதிர்வுகள் நமக்குள் என்றும் இருப்பதுபோல, கபில் அன்று விளாசியதன் அதிர்வுகள் இன்றைய ரோடடென்றான் மலர்கள் ஒவ்வொன்றிலும் மின்னின. அந்தி சாய்ந்ததும் நண்பர்கள் அனைவரும் மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.
கொரோனா முதல் அலை, இரண்டாவது அலை முடிந்து தற்சமயம் மூன்றாவது அலை வீசிக் கொண்டிருக்கிறது. இந்த அலைகளில் விடாமுயற்சியுடன் நீந்தியபடி மனிதர்கள் மெல்ல மேலெழுகிறார்கள். சென்ற வருடம் கபில்தேவுக்கு ஹார்ட் அட்டாக் வந்து ஆஸ்பித்திரியில் சிகிச்சை பெற்று மீண்டெழுந்தார். அன்று வேலை இழந்த நண்பர்களுக்கு வேறு சில வாசல்கள் திறந்து பணியில் அமர்ந்துவிட்டனர். உறவுகளை நட்புகளை இழந்து வலியில் துவண்ட பிறகு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் நகர்வதை தவிர வேறு வழியில்லை. எதிர் வரும் காலங்களில் மனிதர்கள் மீண்டும் பல புதிய சாகசங்களை நிகழ்த்தியாக வேண்டும். அதை காண்பதற்கு மலர்கள் மீண்டும் மீண்டும் பூத்துக் கொண்டேதான் இருக்கும். நகல் செய்து நகல் செய்து மானுடம் நம் கைகளில் திணித்த வாழ்வென்பது நம்பிக்கைகளாலும் சாகசங்களாலும் நெய்யப்பட்டதோர் நீண்ட சரடுதானே?
