Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்

நினைவில் காடுள்ள பறவை

காடும்..
கூடும்..
பெருந்தேடலானதால்

பறத்தல் மறந்து
போயிருந்தது
நினைவில்
காடுள்ள பறவைக்கு ……

எப்போதாவது
விரிக்கும் சிறகுகளிலும்
சிலுவையில்
அறைந்ததைப்
போல வலிகள்..

நாடில்லா காட்டில்
நன்றாய்த்
தானிருந்தது
பறவை..

காடில்லா நாட்டில்
வாழ்வதே
கடினம்..

காடறுத்தவர்கள்
தன் கழுத்தயும்
அறுப்பதாய்
அடிக்கடி கனவு
பறவைக்கு..

பறக்கக் கிடைத்த
கொஞ்ச வானத்தில்
நச்சுப் புகை…

தொண்டையை
நெருக்கும்
தொலைப்பேசி
கோபுரங்கள்..

தனக்கான
வனமும்,
வானமும்
அழிக்கப்பட்ட
தவிப்பினூடே

தினமும்
வந்து விடும்
அடர் கானகத்தில்
வாழ்வதான
கனவொன்று
நிஜமாகும்
நம்பிக்கையில்
நினைவில்
காடுள்ள பறவை….

– வினோத் பரமானந்தன்


இரவின் மழைத்துளி

இரவுபெய்த பெருமழையில்
ஒரு சிறு மழைத்துளி
அந்தமரத்தின் இலைநுனியில்
மதில் மேல் பூனையாக
ஒட்டிக் கொண்டிருந்தது…

தான் அசைந்தால்,
இலை அசையும்
இலை அசைந்தால்
மழைத்துளி மண்ணில்
விழுந்துவிடுமென்று
மரம் தன்னைத்தானே
மௌனித்துக்கொண்டது…

விடியும்போது உதிக்கும்
சூரியனின் சுடுதணலில்
சுருண்டு காய்ந்து போகும்
மழைத்துளியை யார்தான்
காப்பாற்றக்கூடும்?
ஒருஇலையோ அல்லது
ஒருமரமோ?

– ரோகிணி


மௌனத்தின் சப்தம்!

வாய்வாசல் அடைத்திருக்கையில்
வெளியேறத் தவித்து
மனக்குகைச் சுவரெங்கும்
எதிரொலிக்கின்றன
மௌனத்தின் சப்தங்கள்!

வார்த்தைப்பிரசவத்தை
தள்ளிப் போடும் மௌனங்கள்
வலிமிகுந்தவை

மௌனத்தின் சப்தங்கள்
எத்தனை! எத்தனை!

குழந்தையின் மௌனத்தில்
பாலுறுஞ்சும் சப்தம்!
மாணாக்கர்களின் மௌனத்தில்
சேட்டைகளின் சப்தம்!
பருவப் பெண்ணின் மௌனத்தில்
காதலில் சப்தம்!
கணவனின் மௌனத்தில்
கள்ளத்தின் சப்தம்!
மனைவியின் மௌனத்தில்
பாத்திரங்களின் சப்தம்!
இணையின் மௌனத்தில்
விரக்தியின் சப்தம்!
அப்பாவின் மௌனத்தில்
வலிகளின் சப்தம்!
அம்மாவின் மௌனத்தில்
ஆழ்கடல் சப்தம்!
ஞானியின் மௌனத்தில்
இறை சப்தம்!
அகதிகளின் மௌனத்தில்
இரணங்களின் சப்தம்!
கையேந்துபவரின் மௌனத்தில்
இயலாமையின் சப்தம்!
நட்பின் மௌனத்தில்
பிரிவின் சப்தம்!
அரசின் மௌனத்தில்
போராட்ட சப்தம்!
எதிர்கட்சிகளின் மௌனத்தில்
காசுகளின் சப்தம்!

சூழ்நிலைகள் தீர்மானிக்கின்றன
மௌனத்தின் டெசிபல் அளவுகளை…

மௌனம்
சில சமயம்
இசையாக வடியும்
பல சமயம்
ஓசையாக வெடியும்

ஒவ்வொரு…..
மௌனத்திற்குப் பின்பும்
ஓராயிரம்
குதிரைக் குளம்பொலியோசைகள்!

– பா.சிவகுமார்


ஹைக்கூ

மண்குதிரையின் மேல்
அமர்ந்த குழந்தைக்கு
ராஜாவின் மிடுக்கு.!

சுள்ளிகளை சேகரித்ததும்
ஞாபகப் படுத்தும்
காகத்தின் கூடு.!

– எழுவாம்பாடி ச.ப.சண்முகம்

Exit mobile version