Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

மொழியின் ரகசியம் – கவிதைகள்

புஷ்பால ஜெயக்குமார்

அவர்கள்

நிஜமில்லை ஆனால்
ஆட்கள் உலவுகிறார்கள்
நான் என் உள்ளத்தின்
கதவைத் திறந்து போய்
அவர்களைப் பார்க்காமல் பார்க்கிறேன்
நான் எண்ணுகிறேன் அவர்களைப் பற்றி
அவர்களைப் பற்றி அறியாமல்
இவர் வருகிறார் அவர் போகிறார்
அவர் அமர்ந்திருக்கிறார் இவர் நடக்கிறார்
அதற்கும் மேலாக
அவர்களைப் பற்றி நானறிந்தது
அது எனக்கு மட்டுமே தெரியும்
அதே போல் அவர்களுக்கும் தெரியும்
எல்லோரும் அறிந்த உலகம் நம் கண்முன்னே இருக்கிறது
இதில் என் உலகம்
அவன் உலகம்
நம் உலகம் என்று
பிரிந்து கிடக்கிறது
இதைச் சொல்பவன் ஒருவன்
ஆம் என்பவன் இன்னொருவன்
அப்படியே அந்தரத்திலிருந்தபடி
காத்துக் கொண்டிருக்கிறது உலகம்
துணிந்தவன் நகர்கின்றான்
அசைந்தது வாழ்க்கை


வார்த்தை

வார்த்தைகள் வார்த்தைகள்
வார்த்தைகள் தான் வார்த்தைகளாகிறது
எண்ணங்கள் சித்திரங்கள்
கண்ணுக்குத் தெரியாதது
நீ ஒன்று சொல்வது போல்
நான் ஒன்று சொன்னாலும்
அதை நான்
புரிந்து கொள்கிறேன்
நான் கரையில் இருக்கிறேன்
மனம் அலையின் ஓசையில்
அல்லல் படுகிறது
நான் மென்மையாக
அதைத் தொடுகிறேன்
பிறகு அது
உறங்குவது போல்
அமைதியற்று மேலும் மேலும்
ஓடிக்கொண்டேயிருக்கிறது
நான் அதைத் தேடும்போது
வேறு ஒன்றையும்
அறிந்து கொள்கிறேன்
அங்கே என்ன இருக்கிறது
என்பது தெரியாததினால்
நான் மீண்டும்
தோல்வியைச் சந்திக்கிறேன்
இன்னும் நான்
என் நினைவில் இருக்கிறேன்


விடுமுறை

ஒரு நாள் எனக்குக் கிடைத்தது
மேலும் அது முழுதாக
எனக்கு மட்டுமே சொந்தமாக
அது இருக்க வேண்டும்
என்று நான் நினைத்தேன்
காலையில் எழுந்ததும்
யாரோ அந்த நாளின்
தலைப் பகுதியை
விண்டு விட்டதை
நான் அறிந்தேன்
நானோ அந்த நாளின்
தொடக்கத்திலிருந்தேன்
என்னைத் தயார் செய்து
கொண்டு காத்திருந்தேன்
இப்பொழுது நான்
அந்த நாளின்
அறைக்குள் என்னை
விடுதலைக்கு அனுமதித்தபடி
இருந்து வந்தேன்
குறைந்த பட்ச பொறுப்புடன்
இருக்க வேண்டி காலத்தின்
விரையத்தை அர்த்தமற்று
என் வெறும் கண்களால்
பார்த்துக் கொண்டிருந்தேன்
அந்த நாள் கரைந்து போனது
என் கண் முன்னால்
அது மறைந்து
பின்னல் போக
நான் முன்னால் வந்தேன்


ரகசியம்

யார் உன்னிடம் சொல்கிறார்கள்
நீ எழுதவேண்டும் என்று
உன் காதில் குசுகுசுப்பது யார்
அது ஒரு கண்டுபிடிப்பு என்று
உன்னை நம்பவைத்தது யார்
நீ சிந்திப்பது சொற்களின்
உயர்ந்த பட்ச கற்பனையா
அல்லது யாரும்
நம்பக் கூடிய ஒரு உன்மையை
நீ மாற்றிச் சொல்வதா
இதற்குள் கருத்து
வார்த்தை சொற்கள்
கவனம் என்று எல்லாம்
உன் முன்னே வந்து
கேலி செய்வதை
நீ அறிந்திருக்கக்கூடும்
உனக்கு ஒரு விருப்பம்
அது அர்த்தமற்றது என்றாலும்
அது சொல்லக்கூடியது
என்று நீ கருதுவது வேடிக்கை
அல்லது உன் குறைந்தபட்ச விடுதலை
உன்னிடம் இருப்பதை
நீ கசக்கி முகர்ந்து
பார்த்துச் சொல்ல
உனக்கு உரிமையிருக்கிறது
அதை நீ எவ்வளவு
உண்மையாகச் சொல்கிறாய்
என்பதைப் பொருத்து


மொழி

என் மனம் எனக்குச்
சொல்லிக்கொண்டே இருக்கிறது
நான் மௌனமாக அதை
கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
இப்படி ஒரு ஆட்டத்தில்
ஒரு டென்னிஸ் பந்து போல்
நான் இருக்கிறேன்
ஒரு நினைவை
ஒரு சித்திரம் போல்
வரைந்து வைக்கிறேன்
பிறகு அதைத் தொலைக்கிறேன்
மீண்டும் அது
ஞாபகத்திற்கு வரும்போது
விண்ணும் மண்ணும்
கலந்த காட்சியை
பெருமையுடன் எனக்கான
பொக்கிஷமாகக் கருதுகிறேன்
நான் ஓடித் திரிகிறேன்
உலகத்தில் ஒருவனாக
நான் சுவாசிக்கும் காற்று
பிரபஞ்சம் எனக்களித்த உணவு
என் துயரம் என்னை
ஒரு மரம் போல்
ஆழமாக வேரூன்றச் செய்தது
என் இருப்பு என்னை
பார்த்தவர்களுக்கு ஒரு சாட்சியாக
இருந்ததை ஒட்டி
நான் என் சிந்தனையிலிருந்து
சிரித்த முகத்துடன் எட்டிப் பார்க்கிறேன்

***

Exit mobile version