Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

1
கடல் மேல் விழுந்த
நேர்கோடான பாதையில்
நடந்து வந்த சூரியன்
நகரத்தில் நுழைந்தான்
சூரியனுக்குக் கடல்
விட்ட வழியில்
நீரில் மினுக்கிய அலைகள்
திசை மாறும் காற்றில்
சப்தமின்றி அசைந்தன
உள்ளத்தின் ஓசை
அது வெடிக்கும்
வரை கேட்காத போது
சாவின் தூரம்
உயிரை வளர்த்த கதையாய்
கொஞ்சம் கொஞ்சம்
கரைந்து காணாமல் போன
எது எதுவோ
உருவாக்கிய அவனது
ரேகைகளில் படிந்திருந்த
நம்பிக்கை இல்லாமல் போக
நம்பிக்கை வைத்த
மாபெரும் உலகம் உருண்டது
இரண்டும் வேறு வேறு
மற்றும் எல்லாமே
தனித் தனி என்றாலும்
அவன் ஒருவன்


2
ஜன்னலின் வழியே
தெரிந்த நிலவின் ஒளி
மரத்தின் மீது
பூசி இருந்தது
கனவில் அவன் காதல்
பால் கிண்ணத்தில் ததும்பியது
உறக்கம் வராத
நீண்ட இரவுகள்
அவன் மனதை
விம்மச் செய்தன
இன்று
இடுகாட்டில் எரியும்
புகைக்கு மத்தியில்
உடையும் சுள்ளிகளின்
ஓசையில் காவல்
காத்துக் கொண்டிருந்த
அவனிடம் எதுவுமே இல்லை
போர் போர்
எங்கும் யுத்தம்
யாரோ ஆடும் ஆட்டத்தில்
அவன் திசை மாறி
போய்க் கொண்டிருந்தான்
நிலவு மேகத்தின் வழியே
வேகமாகப் போய்க்கொண்டிருந்தது


3
சதுரம் சதுரமாய்
உணவு தரும்
நிலத்தின் மீது
வெள்ளை நிறத்தில்
ஒரு பறவை அமர்ந்திருந்தது
நான் அதைப்
பார்த்த போது
அக்காட்சி என்
நினைவில் புகுந்து விட்டது
அந்த நிலையை
அந்த நேரத்தை
திருடியவன் போல்
நான் அந்த
இடத்தை விட்டு
நகர்ந்து விட்டேன்
அப்பறவை அந்த
ஈர நிலத்திலிருந்து
ஒரு புழுவைத் தின்றது
நான் போன பிறகு
அக்காட்சியிலிருந்து
பிரிந்த அப்பறவை
நிலத்தைத் தனியே
விட்டு விட்டு
பறந்து சென்றது


4
எங்கோ அதை எழுதியிருக்கிறது
அதை நான் வாசிக்கிறேன்
நான் அதைத் தேட தேட
அது தொலைந்து போகிறது
கிடைப்பதை நான் சொல்லுகிறேன்
கிடைக்காத அதை
நான் மீண்டும் தேடுகிறேன்
இடையில் வருவதெல்லாம்
சஞ்சரிக்கும் சலனங்கள்
நான் கற்றிருப்பது
நம்பிக்கையற்ற ஒருவன்
வனத்தில் அலைந்து
திரிபவனின் அழகியல்
குகை மனிதனின் ஓவியம்
ஆரம்பமான காலத்தில்
கண்டுபிடித்தது எல்லாம்
இன்று பழமையான போதிலும்
வருடங்களையும் என் கற்பனையையும்
சுமந்து நின்ற அந்த கல்லில்
கிடக்கிறது இனி நான்
எழுத வேண்டியது


5

அந்த அறையில் இருந்தவனை
புத்தகத்தின் வழியே
வெளி உலகிற்கு
அழைத்துச் சென்ற அது
அவனை மீண்டும்
அவ்வறைக்கே அழைத்து வந்து
எழுதச் சொல்லியது
நிலவறையில் தங்கிய மனிதன்
பயணம் செய்த பாதைகள்
பழங்காலத்து நீர்ச் சுனைகள்
கடந்த காலத்து
வீரனின் மன ஓட்டங்கள்
ஒரு பெண்ணால்
பிரிந்த நண்பர்கள்
என்று எல்லோரும்
அவனுடனே இருந்தார்கள்
அவன் அவர்களோடு
நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலும்
வேறு வழியின்றியும்
பேசிக்கொண்டிருந்தான்
அவன் சாலையில்
நடக்கும் போது
மக்களில் ஒருவன்
ஆனால் அப்புகைப்படத்தில்
அக்காலத்தோடு சேர்த்து
அவனைப் பற்றி
வேரொன்றையும் சொல்லியது

——புஷ்பால ஜெயக்குமார்

Exit mobile version