Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

நாளெனும் மோதிரம்

மெலிந்த விரலிடமிருந்துப் பிடுங்கி 

நீர் அணிந்த மோதிரம் 

அருவி பாயும் ஆழத்தில் 

மண்ணோடு உறங்கிக் கொண்டிருக்கும்

தொலைந்த கதையை

எப்படிச் சொல்வேன் 

பிரிவதற்கான அறிகுறி இதுவென 

மோதிரத்தைக் கழற்றி வைக்கிறாள் 

நாளெனும் மோதிரத்தை 

எதனடியில் நழுவ விடுகிறது பூமி 

இரவுகளில் விழித்துக்கொள்ளும் 

காணாமல் போன மோதிரங்கள் 

மின்னி மின்னி என்ன பேசும் 

நாம் விரும்பித்தான் தொலைகிறோமா 

மண்ணைத் துழாவும் போது நீரிலும் 

நீரைத் துழாவும் போது மண்ணிலும் 

எதற்காக ஒளிந்து கொள்கிறோம் 

தூங்கும் போது 

உடல் மொத்தமும் 

சின்னஞ்சிறு விரலாகிறது 

நுழையும் மோதிரங்களால்  

பொன்னெனப் பொலிகிறது இரவு 

நழுவும் கணத்திற்கு பயந்து 

விழிக்காமலேயே இருக்கிறோம் 

ஒன்று போனால் இன்னொன்று இருக்கிறதே என்றேன் 

அணிந்த நாளின் மோதிரத்தில் 

உறைந்திருக்கும் நிச்சயத்தை 

வாங்கிவரச் சொல்கிறாள் 

மீண்டும் ஒரு முறை 

அருவிக்குச் செல்லலாம்தான் 

பயமாக இருக்கிறது 

பூமியிடம் கேட்க.

Exit mobile version