பாகற்காய் விதை ஆமையின் ஓடுபோல வலுவாக இருந்தது. அதை என் விரல்களால் பிடித்து அழுத்தினேன். என் விரலில் உள்ள தசைகள் உள்ளழுந்தின. விரல்கள் வலித்தன. அந்த விதையை என் உள்ளங்கையில் வைத்தபடியே பார்த்துக் கொண்டிருந்தேன்.
“டேய்! இது வீரியமான பாகற்காய்விதை டா!” என்றான் என் நண்பன்.
அவன் அரசுத் தோட்டக்கலைத் துறையில் ஒப்பந்தப் பணியாளராக வேலை பார்த்தான். அவனுக்கு எல்லாத் தாவரங்களைப் பற்றியும் விரிவாகத் தெரியும். ‘வீட்டில் கொடித் தாவரங்களை வளர்க்கலாம்’ என்ற சிந்தனை வந்ததும், அதனைத் தொடர்ந்து எழுந்த பேச்சில், அம்மா கூறியது ‘புடலையும் அவரையும் பாகற்காயும்’தான். எனக்கு இவன் நினைவுதான் வந்தது. நேராக இவனைப் பார்க்கச் சென்றேன்.
‘இவன்தான் புடலையும் அவரையும் வேண்டாம். பாகற்காயை மட்டும் விதை’ என்றான். இவன் எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறான். எங்கள் வீட்டில் செடிகளை வளர்க்க எந்த இடமும் இல்லை என்பது இவனுக்கு நன்றாகவே தெரியும்.
என் வீட்டின் பின்பக்கம் உள்ள மோட்டாருக்கு அருகில் மட்டுமே கையளவு மண்பரப்பு இருக்கிறது. மற்றபடி வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளம்தான். ‘மொட்டை மாடி’ என்ற ஒன்று இருந்தாலும் அதற்குச் செல்ல ஏணியோ, மாடிப் படிகளோ இல்லை.
முற்றமோ, பால்கனியோ இல்லாத வீடு எங்கள் வீடு. மிக நெருங்கியபடி அக்கம் பக்கத்து வீடுகள் இருப்பதால், எல்லோரின் வீட்டு நிழலும் எங்கள் வீட்டின்மீதே விழுந்து கிடக்கும்.
இப்படிப்பட்ட வீட்டில் தாவரத்தை எங்கு வளர்க்க முடியும்? அதனால்தான் என் நண்பன் சரியாகக் கூறினான், “உங்க வீடு செடிகளை வளர்க்க ஏத்த வீடு இல்லை. தொட்டிச் செடி வச்சாலும் அதுக்குக் கொஞ்சமாவது சூரிய வெளிச்சம் வேணும்ல. அதனால நீ பாகற்காயை மட்டும் வளர்த்து வா. அது கொஞ்சம் மண்ணுலையும் சின்ன வெளிச்சத்துலையும் தழைச்சு எழும்” என்றான்.
அவன் பேச்சில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. பத்து விதைகளை வாங்கித் தாளில் மடித்து, வீட்டுக்கு எடுத்து வந்தேன்.
பாகற்காய் விதையைப் பார்த்ததும் அம்மாவின் கண்கள் சுவையில் விரிந்தன.
“டேய்! இது மிதி பாகற்காயா?” என்று கேட்டார்.
“இல்லை, கொடிப் பாகற்காய்” என்றேன்.
“சரி, சரி எதுனாலும் சுவையாத்தான் இருக்கும்” என்றார்.
“புடலை, அவரை?” என்று கேட்டார்.
“அதெல்லாம் நம்ம வீட்டுக்குச் சரி வராதாம்” என்றேன்.
“சரி” என்றார்.
நான் மோட்டாரின் அருகில் சென்றேன். டேய் அதை அப்படியேவா விதைக்கப் போறே?” என்று கேட்டார் அம்மா.
“ஆமாம்” என்றேன்.
“டேய்! முட்டாப் பயலே. அதனோட விதை கடினமா இருக்குல்ல. கொஞ்ச நேரம் தண்ணீல ஊறப் போடு. அப்புறமா மண்ணை ஈரமாக்கிட்டு, ரெண்டு அங்குலம் தோண்டி, விதைச்சுடலாம்” என்றார்.
நான் அந்தப் பத்து விதைகளையும் ஒரு டம்ளர் நீரில் ஊறப் போட்டேன். மதியம் முழுவதும் அது ஊறியது. நான் மறந்தேவிட்டேன். மாலையில் தற்செயலாகப் பாகற்காய் விதைகளின் நினைவு வந்தது. வேகமாக வந்து டம்ளரைப் பார்த்தேன்.
அந்தப் பத்து விதைகளுள் ஒன்று மட்டும் உப்பி, மெல்லிய கோடாக வெடித்திருந்தது. அதனுள் இருக்கும் பருப்பு இளம்பச்சை நிறத்தில் வெளியே தெரிந்தது. மற்ற ஒன்பது விதைகளும் தண்ணீருக்குள் அமிழ்ந்திருக்கும் முதலைகள்போல அசைவற்று இருந்தன.
நான் முளைக்கத் தொடங்கிய அந்த ஒரு விதையை மட்டும் எடுத்துக்கொண்டு மோட்டாரின் அருகில் சென்றேன். அதன் அருகில் இருந்த கையளவு மண்ணில் சிறிதளவு தண்ணீரை ஊற்றி, இரண்டு அங்குலம் அளவுக்கு விரல்களால் தோண்டி அந்த விதையை இட்டு, மண்ணை மூடினேன்.
இறந்தவர்களை, இறந்தவற்றைப் புதைப்பதுபோல அல்ல அது; ஓர் உயிரைப் புதைக்கும் செயல். புதைக்கப்பட்ட பின்னரும் உயிர்த்தெழும் சக்தி இந்த உலகில் விதைகளுக்கு மட்டுமே இருக்கிறது. ‘விரைந்து எழுந்து வா பாகற்கொடியே!’ என்று என் மனத்திற்குள் கூறிக்கொண்டு, வீட்டுக்குள் வந்தேன்.
அன்று முழுநிலா. பாகற்காய் மண்ணில் காலூன்றி, தன் இரு கைகளாலும் மண்ணை விலக்கிக்கொண்டு வெளியே வந்தது. அதன் இரு இளந்தளிர் போன்ற கைகளுக்கு இடையிலிருந்து அடுத்தடுத்து இலைகள் சுருண்டு, விரிந்தன. ஒவ்வொரு ஈரிலை அடுக்கின் தண்டுப் பகுதி இணைப்பில் இருந்தும் இளம்பச்சை நிறத்தில் கம்பிபோன்ற வலுவான ஒன்று எழுந்தது. அது அருகில் இருக்கும் சுவரைப் பற்றிக்கொண்டது.
அடுத்தடுத்து நீண்டு வளர்ந்த சுருள்கள் அருகில் இருக்கும் சிறு பொருளைக்கூடப் பிடித்து, கம்பிச் சுருள்போல அவற்றைச் சுற்றிக்கொண்டு, பாகற்கொடிக்கு நல்ல பிடிமானத்தை வழங்கின. எண்ணற்ற கம்பிச் சுருள்கள் நீண்டு வளர்ந்தன. ஒவ்வொன்றும் ஒரு பற்றுக்கோட்டினைப் பிடித்துக்கொள்ள, பாகற்கொடி விரைவாக மேலெழத் தொடங்கியது.
மோட்டாருக்கு அருகில் உள்ள சன்னலுக்கு அருகில் என்னுடைய கட்டில் இருந்தது. நான் சன்னலைப் பார்த்தவாறு தலையை வைத்துக்கொண்டு ஆழ்ந்த துயிலில் இருந்தேன். என் வலக்கை சன்னலை நோக்கி நீண்டிருந்தது. பாகற்காயின் கொடி சன்னலின் உயரத்துக்கு எழுந்து, நின்று என்னைப் பார்த்தது.
அது தன்னிலிருந்து ஒரு நீண்ட சுருளினை என் விரல்களை நோக்கி அனுப்பியது. அது என் ஆட்காட்டி விரலைப் பிடித்துக்கொண்டு, சுருளத் தொடங்கியது. மலைப்பாம்பு தன் இரையைச் சுற்றி இறுக்குவதுபோல இருந்தது அதன் செயல்பாடு.
நான் திடுக்கிட்டு விழித்தபோது என் உடல் முழுக்கவும் பாகற்கொடி படர்ந்திருந்தது. என் கைகளின் விரல்களிலும் கால்களின் விரல்களிலும் பாகற்கொடியின் நீண்ட சுருள்கள் சுற்றியிருந்தன.
பசுந்தாவரத்தின் பச்சை வாசனையை என்னால் நுகர முடிந்தது. அதனோடு சேர்ந்து, பாகற்காயின் கசப்புச் சுவையை என் நா சுவைக்கத் தொடங்கியது. அதன் பின்னர் என்ன நடந்தது என்றே எனக்குத் தெரியவில்லை.
நான் ஒரு காட்டுக்குள் கிடந்தேன். என் கண்களுக்குத் தெரிந்த பகுதிகளில் எல்லாம் பல்வேறு வகையான கொடித் தாவரங்கள் இருந்தன. அத்தனையும் காற்றையே தன் நீண்ட சுருள்களால் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தன. அத்தனையும் என்னையே பார்ப்பதாக உணர்ந்தேன்.
என் உடலில் சுற்றியிருந்த பாகற்கொடி மெல்ல விலகி, என்னை விடுவித்தது. ஆனாலும், அது தன்னுடைய ஒரேயொரு சுருளால் மட்டும் என் கழுத்தை இறுக்கிப் பிணைத்திருந்தது. நான் எழுந்து நின்றேன். அந்தப் பகுதியில் முழு நிலாவொளி படர்ந்திருந்தது. நான் ஒரு குற்றவாளிபோல அங்கு நிறுத்தப்பட்டிருந்தேன்.
பாகற்கொடி முன்னால் நடக்க, அதன் சுருள் என் கழுத்தைப் பிடித்து அதனோடு இழுத்துச் சென்றது. நான் நடக்க நடக்க என் அருகில் இருந்த அத்தனை கொடிகளும் சேர்ந்து நடந்தன.
அந்தப் பாகற்கொடி என்னை மலைச் சரிவுக்கு அழைத்துச் சென்றது. அங்கு பெரும் பெரும் பாறைகள் இருந்தன. சிறிய குகைக்கு அருகில் என்னைக் கொண்டுசென்று நிறுத்தின. அது குகையா அல்லது கோவில் கருவறையா? என எனக்குத் தெரியவில்லை.
அந்தக் குகைக்கு முன்னால் சிறிய வட்ட வடிவில் ஒரு கல் இருந்தது. வழக்கமாகச் சிவன் கோவிலின் கருவறைக்கு முன்னால் அமர்ந்திருக்கும் நந்திக்கும் உயர்ந்து நின்றும் கொடிமரத்துக்கும் நடுவில் இருக்கும் சிறிய பலிபீடம்போல அந்தக் கல் இருந்தது. அதன் வடிவமைப்பும் அழகும் அதுபோலவே எனக்குத் தோன்றியது.
அருகில் சென்று அந்தக் கல்லினைப் பார்த்தேன். ஒரு பெரிய பூவினைக் கவிழ்த்து வைத்ததுபோல அது இருந்தது. ‘கற்பூவோ!’ என்று நினைத்து வியந்தேன். அந்தக் கல் மெல்லச் சுழலத் தொடங்கியது. ஒவ்வொரு சுழற்சிக்கும் அரையடி என்ற விகிதத்தில் அது விரியத் தொடங்கியது. விரிந்து விரிந்து பெரிய தாம்பாளம்போல மாறிவிட்டது. நான் சற்றுப் பின்னகர்ந்தேன். இன்னும் இன்னும் விரிந்து விரிந்து அது மிகப் பெரிய தாம்பாளம்போல மாறியது. கற்தாம்பாளம்! அதன் சுழற்சி நின்றது.
“என் கழுத்தைப் பற்றியிருந்த பாகற்கொடி என்னிடம் பேசத் தொடங்கியது.
“எதைப் பலிகொடுக்க உள்ளாய்?” என்று கேட்டது.
“எதற்குப் பலிகொடுக்க வேண்டும்?” என்று கேட்டேன்.
“என்னை விதைத்தவரைப் பக்குவப்படுத்த வேண்டியது என் கடமை. நீதான் என்னை விதைத்தாய். நான் உன்னைப் பக்குவப்படுத்த வேண்டும். நீ பக்குவப்பட வேண்டும் என்றால் நீ உன்னில் இருக்கும் தீய குணத்தை இங்குப் பலியிட வேண்டும்,” என்றது.
“என்னிடம் எந்தத் தீய குணமும் இல்லையே!” என்றேன்.
உடனே எனக்கு அருகில் இருந்த அனைத்துக் கொடித் தாவரங்களும் வாய்விட்டுச் சிரித்தன.
“உன்னிடம் உள்ள அனைத்துக் குணங்களும் தீயவையே!” என்றது பாகற்கொடி.
“இல்லை இல்லை,” என்றேன்.
உடனே, அனைத்துக் கொடித் தாவரங்களும், “ஆமாம் ஆமாம்,” என்றன.
“சொல், எதைப் பலியிடப் போகிறாய்?” என்று கேட்டது.
“ஒரு தீய குணத்தைப் பலியிட்டால் நான் பக்குவப்பட்டுவிடுவேனா?” என்று கேட்டேன்.
“இல்லை” என்றது பாகற்கொடி.
“பிறகு எதற்கு நான் பலியிடவேண்டும்?” என்று கேட்டேன்.
“தீய எண்ணங்களைப் பலியிடுவது எப்படி என்பதை உனக்கு அறிமுகப்படுத்தவே உன்னை இங்கு அழைத்து வந்தேன்” என்றது.
நான் அமைதியா இருந்தேன். அதுவே தொடர்ந்து பேசியது.
“இந்த அறிமுகத்துக்குப் பின்னர்?” என்று கேட்டேன்.
“இனிமேல், நீயே ஆத்மார்த்தமாக உனக்குள் இருக்கும் தீய குணங்களை ஒவ்வொரு நாளும் பலியிட்டுக் கொள்ளவேண்டும்” என்றது.
நான் அமைதியாக இருந்தேன். அதுவே தொடர்ந்து பேசியது.
“உன்னுடைய எந்தத் தீய எண்ணத்தை நீ பலியிடப் போகிறாய்?” என்று கேட்டது.
“எது தீய எண்ணம்?” என்று கேட்டேன்.
“இப்படி நடிப்பதும்கூடத் தீய எண்ணமே!” என்றது.
எனக்கு வெட்கமாக இருந்தது. நான் தலையைக் குனிந்துகொண்டேன்.
“சீக்கிரம் சொல்! சீக்கிரம் சொல்!” என்றன அனைத்துக் கொடித் தாவரங்களும்.
நான் என் கழுத்தில் சுற்றியிருந்த அந்த ஒற்றைச் சுருளினைப் பற்றிப் பிடித்து அறுத்தேன். அனைத்துக் கொடித் தாவரங்களில் இருந்தும் எண்ணற்ற சுருள்கள் என்னை நோக்கி வந்தன. அடுத்த விநாடியே நான் துள்ளிக் குதித்து, அந்தப் பலிபீடத்தின்மீது ஏறி நின்றேன்.
அனைத்துக் கொடித் தாவரங்களும் திடுக்கிட்டு, என்னைப் பார்த்தன. அவை அனைத்தும் செயலற்று நின்றன.
பாகற்கொடி என்னைப் பார்த்து, “என்ன செய்கிறாய்? நீ உன்னையே முழுவதுமாகப் பலியிட்டுக்கொள்ளப் போகிறாயா?” என்று கேட்டது.
ஆம்! என்று கூறியபடியே நான் அந்தப் பலிபீடத்தின் மீது அமர்ந்தேன்.
அந்தக் கற்தாம்பாளம் சுழலத் தொடங்கியது. அது சுழல சுழல கற்பீடம் சுருங்கத் தொடங்கியது. அது சுருங்கி சுருங்கி, சிறிய பலிபீடமாக மாறியது. நானும் உருவத்தில் சிறுத்துக்கொண்டே வந்தேன்.
கவிழ்ந்த பூப்போன்ற அந்தப் பலிபீடம் சட்டென நிமிர்ந்தது. அந்தக் கற்பூவுக்குள் நான் இருந்தேன். அந்தப் பூ தன் இதழ்களை மூடி மொட்டாக மாறியது. நான் அந்த மொட்டுக்குள் உறைந்தேன்.
எனக்கு அருகில் வெளியே நின்றிருந்த அனைத்துக் கொடிப் பூக்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது எனக்குக் கேட்டது.
“ஒரு தீய குணத்தை அல்லது சில தீய குணத்தை ஆத்மார்த்தமாகப் பலியிடுபவர்களையே நாம் பார்த்திருக்கிறோம். இவன் என்னடான்னா….”
“தன்னையே முழுவதுமாகப் பலியிட்டவர் இவர் ஒருவர்தான்.”
“தன்னையே பலியிட்டுக்கொள்ளும் அளவுக்கு இவன் மனம் எப்படி ஒரு நொடியில் மாறியது?”
“ஒரு நொடியில் பக்குவப்பட முடியுமா?”
“இவன் மனிதன்தானா? இல்லை, சாபம் பெற்ற கந்தர்வனோ?”
“இவனுக்கு நாம்தான் சாப விமோசனம் தந்துவிட்டோமோ?”
“பலிபீடம் மூடிக்கொண்டதே! இனி நாம் யாரையும் கொண்டுவந்து பலியிடுமாறு கூறிப் பக்குவப்படுத்த முடியாதோ?”
“நாம் நம்மை விதைப்பவர்களைப் பக்குவப்படுத்த முடியாவிட்டால், நம்மால் எப்படிச் செழித்து வளரமுடியும்?”
“இவன் தன்னைப் பலியிட்டு, இந்தப் பலிபீடத்தைச் செயலற்றதாக மாற்றிவிட்டான்.”
“இவன் செய்த இந்தச் செயலால், நம் அனைவரின் வாழ்க்கையும் அழிந்துவிட்டது.”
“இவனின் தீய குணமே பிறரின் வாழ்க்கையை அழிப்பதுதானோ?”
“அந்த அளவுக்குத் தீமைக் குணம் நிறைந்தவனா இவன்?”
“இனி என்ன செய்யலாம்?”
“பலிபீடத்தை உடைத்து, இவனை மீட்கலாம்.”
“பலிபீடத்தை உடைப்பது பெரும் பாவம். அதை உடைக்க நினைப்பதே பெரிய தீக்குணம்தான்.”
“இப்போது என்ன செய்வது?”
“ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றும் செய்ய வேண்டாம். இவன் இங்கேயே உறைந்திருக்கட்டும். நாம் இங்கிருந்து கலைந்து செல்வோம்.”
இரவில் அம்மா எழுந்து வந்தார். விளக்கினை எரியச் செய்தார். தண்ணீரைப் பருகுவதற்காக அந்த டம்ளரை எடுத்தார். அதில் பாதி அளவுக்குத் தண்ணீர் இருந்தது. உள்ளே ஏதோ கிடப்பதைப் பார்த்துவிட்டார். விரல்களால் அதை எடுக்க முயன்றார்.
அந்த டம்ளருக்குள் இருந்த ஒன்பது விதைகளுள் ஒன்று மட்டும் உப்பி, மெல்லிய கோடாக வெடித்திருந்தது. அதனுள் இருக்கும் பருப்பு இளம்பச்சை நிறத்தில் வெளியே தெரிந்தது. அந்த விதைக்குள் இருந்தபடியே நான் என் அம்மாவைப் பார்த்தேன், நித்ய தூயோனாகி.
– – –
