Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

விடுதலைப் போராட்ட வீரர்: செங்கோட்டை சாவடி S. அருணாசலம் பிள்ளை

முனைவர் ரமேஷ் தங்கமணி

முன்னுரை:

இந்திய சுதந்திரப் போரில் கோபால கிருஷ்ண கோகலே மற்றும் மகாத்மாவினுடைய அறவழிப் போராட்டத்திற்கு நிகராக பல புரட்சிகர தீவிரவாதப் போராட்டங்களும் நடைபெற்றன. அறவழியிலான விடுதலை இயக்கத்தினர் வெகுமக்கள் ஆதராவோடு அரசுக்கு எதிரான போராட்டத்தை வெளிப்படையாக முன்னெடுத்தனர். இதற்குமாறாக புரட்சிகர தீவிரவாத இயக்கத்தினர் ரகசியமாகவும் சிறு குழுக்களாக மட்டுமே செயல்படனர். புரட்சிகர தீவிரவாத குழுக்களினுடைய முதன்மை நோக்கமானது ஆயுதப் போராட்டத்தின் முலமாக தேச விடுதலையை வென்றெடுப்பதாகும். ஆனால் தீவிரவாத குழுக்களினுடைய நோக்கமானது வெகுமக்கள் ஆதரவின்மை, அரசாங்க ஒடுக்குமுறை மற்றும் ரகசிய செயல்பாடு போன்ற காரணங்களினால் தோல்வியையே சந்தித்தது. இதன்காரணமாக புரட்சிகர விடுதலை இயக்கத்தில் முனைப்புடன் செயல்பட்ட பல தியாகசீலர்களது தனிப்பட்ட வாழ்வு, சமூக மற்றும் அரசியல் பங்களிப்பு பற்றிய தகவல்கள் அறியப்படாமலேயே இருக்கின்றது. இத்தகைய சூழலில் தென்தமிழகத்தில் தோன்றிய முதல் புரட்சிகர விடுதலை இயக்கமான பாரதமாதா சங்கத்தின் உறுப்பினரும் திருநெல்வேலி ஆட்சியர் ஆஷ் படுகொலையில் தொடர்புடையவருமான தியாகி செங்கோட்டை சாவடி அருணாசலம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை, சமூக மற்றும் சுதந்திரப் போராட்டப் பங்களிப்பு போன்றவற்றைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

முக்கியச் சொற்கள்: தீவிரவாத விடுதலை இயக்கம், செங்கோட்டை, பாரதமாதா சங்கம், வாஞ்சிநாதன், சாவடி S. அருணாசலம் பிள்ளை

புரட்சிகர விடுதலை இயக்கங்களின் தோற்றம்:

இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியாவை அடிமைப்படுத்தி வந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி (1757–1858) மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த பிரித்தானிய அரசினை (1858–1947) முடிவுக்குக் கொண்டு வருவதற்காக உருவான எதிர்ப்பு இயக்கங்களே இந்திய விடுதலை இயக்கங்கள் என்று அழைக்கப்பட்டன. இந்தியாவில் தொடங்கப்பட்ட விடுதலை இயக்கங்களுள், 1885ல் தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கமானது பொது மக்கள் ஆதரவோடு அறவழியிலான விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தது. அச்சமயத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்க தலைவர்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் காரணமாக 1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸானது கோபால கிருஷ்ண கோகலே தலைமையில் “மிதவாத தேசியவாதிகள்” என்றும் பால கங்காதர திலகர் தலைமையில் “தீவிரமான தேசியவாதிகள்” என்றும் இருபெரும் பிரிவாக உடைந்தது. மேலும் திலகர் அவர்கள் 1893 ஆம் ஆண்டு காலகட்டத்திலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை மக்கள் மத்தியில் பரவலாக்கியதன் மூலம் வலதுசாரி தத்துவங்களைத் தேச விடுதலைப் போராட்டத்தில் புகுத்தினார். திலகருடைய கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட சாவர்க்கர் சகோதரர்கள் “மித்ர மேளா” எனும் சங்கத்தை 1899-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவிலுள்ள நாசிக்கில் தொடங்கினார்கள். இவ்வியக்கமே இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகர பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 1904-ஆம் ஆண்டு “மித்ர மேளா” சங்கமானது “அபினவ் பாரத் சமீதி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்திய விடுதலைப் போரில் மித்ர மேளா (1899- மகாராஷ்டிரா), அனுசீலன் சமீதி (1902- வங்காளம்), அபினவ் பாரத் சமீதி (1904- மகாராஷ்டிரா), யுகாந்தர் (1906- வங்காளம்), பாரத மாதா சங்கம் (1910- தென்காசி), இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (1924- பஞ்சாப்), இந்திய தேசிய ராணுவம் (1942- தென்கிழக்கு ஆசியா), கோட்வால் டாஸ்டா (1942- மகாராஷ்டிரா) ஆகியவை இந்தியாவிலிருந்து தீவிரமாக செயல்பட்ட புரட்சிகர பயங்கரவாத இயக்கங்களாகும். இதுதவிர பாரிஸ் இந்தியர் சங்கம் (1905- பாரீஸ்) இந்திய தன்னாட்சி சங்கம் (1905- லண்டன்) மற்றும் கதர் கட்சி (1913- கலிஃபோர்னியா) ஆகியவை இந்தியாவிற்கு வெளியிலிருந்து செயல்பட்ட புரட்சிகர பயங்கரவாத இயக்கங்களாகும். இதில் அரவிந்தர் அவர்கள் வங்காளத்தில் செயல்பட்டுவந்த அனுசீலன் சமீதி எனும் இயக்கத்திலிருந்து பிரிந்து யுகாந்தர் எனும் இயக்கத்தை நிறுவி செயல்பட்டார். மேடம் பிகாஜி ருஸ்தம் காமா, எம். பி. டி. ஆச்சார்யா மற்றும் பலர் பாரிஸ் இந்தியர் சங்கத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். சாவர்க்கர், வ. வே. சு. ஐயர், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் வ. உ. சிதம்பரம்பிள்ளை ஆகியோர் அபினவ் பாரத் சமீதி எனும் இயக்கத்தின் கீழ் செயல்பட்டனர். எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, தர்மராஜய்யர், வாஞ்சிநாதன், சாவடி அருணாசலம் பிள்ளை மற்றும் பலர் பாரத மாதா சங்கம் எனும் அமைப்பினை உருவாக்கிச் செயல்பட்டு வந்தனர். தென்காசியில் தொடங்கப்பட்ட பாரத மாதா சங்கமே தென்தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதலும் கடைசியுமான புரட்சிகர பயங்கரவாத விடுதலை இயக்கம் ஆகும்.

பாரதமாதா சங்கம்:

அபினவ் பாரத் சமீதி எனும் புரட்சிகர விடுதலை இயக்கத்தில் உறுப்பினராய் இருந்த எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களால் 10-4-1910-ல் தென்காசியில் உள்ள மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை அவர்கள் வீட்டில் வைத்து ஆரம்பிக்கப்பட்ட சங்கமே பாரதமாதா சங்கம் ஆகும். இச்சங்கத்தில் பெரும்பாலும் தென்காசி, செங்கோட்டை, புனலூர், தூத்துக்குடியைச் சார்ந்த உயர்சாதி இந்துக்களே உறுப்பினர்களாக இருந்தனர். இந்த சங்கத்தினுடைய நோக்கம் ஆயுதமேந்திய போராட்டத்தின் வழியே வெள்ளையர்களை ஒடுக்கி தேச விடுதலையை அடைவதாகும். மேலும் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட புனலூர், கொல்லம், ஆலப்புழை ஆகிய இடங்களில் பாரதமாதா சங்கத்தைச் சார்ந்தவர்கள் ஆங்கிலேயர்களுடைய பொருட்களைப் புறக்கணித்து சுதேசியப் பொருட்களையே இந்தியர்கள் வாங்க வேண்டும் என்று தீவிரப் பிரச்சாரம் செய்தனர். தர்மராஜய்யர் என்பவர் செங்கோட்டையில் பாரதமாதா சங்கத்தினை நிறுவி அதன் தலைவராகவும் செயல்பட்டார். அச்சங்கத்தின் செயலாளராக சாவடி S. அருணாசலம் பிள்ளையும், உறுப்பினர்களாக R. வாஞ்சி அய்யர், சங்கரகிருஷ்ணய்யர், ஹரிஹர அய்யர், ஜகநாத அய்யங்கார், வெங்கடராம அய்யர், வேம்பு அய்யர் என்ற மகாதேவ அய்யர், பிச்சுமணி அய்யர் மற்றும் கஸ்பா S. V. அழகப்ப பிள்ளை ஆகியோர் செயல்பட்டனர். 

சாவடி S. அருணாசலம் பிள்ளை

வாழ்க்கை:

திருவனந்தபுரம் சமஸ்தான ஆட்சிக்கு உட்பட்ட சிறுநகரான செங்கோட்டையில் வாழ்ந்து வந்த மதிப்புமிக்க செல்வந்தர் சாவடி சுப்ரமணிய பிள்ளை ஆவார். இவருடைய முதல் மனைவிக்கு குழந்தைப்பேறு இல்லாத காரணத்தினால் சுவர்ணம்மாள் எனும் பெண்ணை இரண்டாவதாக மணந்து கொண்டார். திருமணம் நடைபெற்ற பின் பலவருடங்கள் கழித்து, சாவடி சுப்ரமணிய பிள்ளை – சுவர்ணம்மாள் தம்பதியருக்கு 1893-ஆம் ஆண்டு சாவடி S. அருணாசலம் பிள்ளை பிறந்தார். செல்வச் செழிப்போடு வளர்ந்த சாவடி அருணாசலம் பிள்ளை அவர்கள் தனது பள்ளிப் படிப்பை செங்கோட்டையில் முடித்தார். 1910 ஆம் ஆண்டு தங்கம்மாள் எனும் பெண்ணை மணந்தார். வாஞ்சிநாதனோடு நல்ல நடப்புறவில் இருந்த சாவடி அருணாசலம் பிள்ளை அவர்கள் செங்கோட்டை பாரதமாதா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் செயலாளராகவும் செயல்பட்டார். 1911-ஆம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேருவதற்காக கல்கத்தா மருத்துவ கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார். 

சித்திரை மீட்டிங்:

செங்கோட்டையில் பாரதமாதா சங்கம் சார்ந்த முக்கிய கூட்டங்கள் தர்மராஜய்யர் மற்றும் சாவடி S. அருணாசலம் பிள்ளை ஆகியோருடைய இல்லத்தில் நடைபெறுவதுதான் வழக்கம். அவ்வழக்கத்தின்படி 14-04-1911 சித்திரை மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை சாவடி S. அருணாசலம் பிள்ளை அவர்களுடைய இல்லத்தில் புரட்சியாளர்கள் ஒரு ரகசிய சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர். இக்கூட்டத்தில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, R. வாஞ்சி அய்யர், சாவடி S. அருணாசலம் பிள்ளை, ஓட்டப்பிடாரம் மாடசாமிப்பிள்ளை மற்றும் பலர் பங்கேற்றனர். மூன்று மணிநேரம் நீடித்த இக்கூட்டத்தின் முடிவில் திருநெல்வேலியின் ஆட்சியராகவும் மற்றும் மாவட்ட நீதிபதியாகவும் பதவிவகித்த ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷைச் சுட்டுக் கொல்லவதற்கான திட்டம் தீட்டப்பட்டது.

“சித்திரை மீட்டிங்” நடைபெற்ற வீடு

ஆஷ் கொலைக்கான காரணங்கள்:

ஒரு அரசியல் படுகொலையானது பல்வேறு காரண காரியங்களின் அடிப்படையிலேயே திட்டமிடப்பட்டு நடத்தப்படுகிறது. அதன்படி ஆராயும் பொழுது “ஆஷை” கொலை செய்வதற்கான காரணமாக இருந்த செயல்கள் மற்றும் நிகழ்வுகளாவன:

1. வ.உ.சி. அவர்கள் வெள்ளையர்களுக்கு போட்டியாக 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16-ஆம் நாள் சுதேசி கப்பல் நிறுவனத்தை தூத்துக்குடியில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தியது. மேலும் வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா தலைமயில் 1908 பிப்ரவரி 27 இல் நடைபெற்ற தூத்துக்குடி கோரல் மில் தொழிலார்களுடைய வேலைநிறுத்த போராட்டத்தில் வெற்றி பெற்றது போன்ற காரணங்களினால், அப்பொழுது தூத்துக்குடியின் துணை ஆட்சியராக பணியாற்றிய ஆஷ் தீரா வன்மம் கொண்டு வ.உ.சி. அவர்களின் செயல்பாடுகளை ஒடுக்க முயன்றது.

2. சிறையிலிருந்து விபின் சந்திரபால் விடுவிக்கப்பட்ட 1908 ஆம்-ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியை சுயராஜ்ய தினமாக கொண்டாடும் பொருட்டு அரசின் தடையை மீறி சுதேசிகள் ஊர்வலம் சென்றனர். ஊர்வலத்தை தலைமைதாங்கி நடத்திய வ.உ.சி., சுப்பிரமணிய சிவா மற்றும் பத்மநாப அய்யங்கார் ஆகியோர் 1908ம் ஆண்டு மார்ச் 12ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். இதனை கண்டித்து 1908ம் ஆண்டு மார்ச் 13ம்-தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் மக்கள் நடத்திய போராட்டமானது கலவரத்தில் முடிந்தது. இக்கலவரத்தினை மாவட்ட ஆட்சியர் விஞ்ச் மற்றும் துணை ஆட்சியர் ஆஷ் ஆகிய இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்திக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிர் இழந்தனர். இதன் காரணமாக ஆஷ் மீது சுதேசிகளுக்கு ஏற்பட்ட தீர பகைமை.

3. பாரீஸ் இந்தியர் சங்கத்தைச் சார்ந்த M.P.T. ஆச்சார்யா அவர்கள் 1910-ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின், புதுவையில் தங்கியிருந்த மண்டயம் ஸ்ரீனிவாச்சாரியாருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஐந்தாம் ஜார்ஜ் அவர்களின் முடிசூட்டு விழாவின்போது “சில காரியங்கள்” செய்ய வேண்டும், அதனை புதுவையில் இல்லாவிட்டாலும் தூரத்தில் எங்காவது செய்யாலாம் என எழுதியிருந்தார்.  இக்கடிதத்தின் நோக்கம், ஜூன் 22, 1911-ல் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மடத்தில் வைத்து நடைபெறவிருந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் முடிசூட்டு விழாவினையும் அதன் தொடர்ச்சியாக டிசம்பர் 12, 1911-ல் பிரிட்டிஷ் இந்தியாவில் (டெல்லி) நடைபெறவிருந்த “தில்லி தர்பார்” நிகழ்ச்சியினையும் எதிர்க்கும் விதமாக புரட்சியாளர்கள் “ஏதாவது” செய்யவேண்டும் என்பதேயாகும்.

4. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ், 1910 ஆகஸ்ட் 2-இல் பதவியேற்றார். அதன்பின்பு குற்றால அருவியில் காலை இரண்டு மணி நேரம் வெள்ளையர்கள் மட்டுமே குளிக்க அனுமதி என்றும் அந்த சமயத்தில் இந்தியர்கள் குளிக்க அனுமதி இல்லை எனும் தடையினை விதித்தார். ஆஷ் விதித்த இந்த தடையானது சுதேசிகள் மத்தியில் குறிப்பாக குற்றாலத்திற்கு அருகில் உள்ள ஊர்களான தென்காசி மற்றும் செங்கோட்டையைச் சேர்ந்த சுதேசிகளுக்கு வெறுப்பினை ஏற்படுத்தியது. போன்ற நான்கு வலுவான காரணங்களும் ஆஷை பாரதமாதா சங்கத்தினைச் சார்ந்த புரட்சியாளர்கள் கொலை செய்ய தேர்ந்தெடுத்தற்கு அடிப்படையாக அமைந்தது.

இதுதவிர ஆஷும் மற்ற வெள்ளையர்களும் சுதேசி கப்பல் நிறுவனத்தை முடக்க செய்த சதியினைக் கண்டித்து அரவிந்தர் தமது வந்தே மாதரம் இதழில் 27 மார்ச் 1908-இல் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். மேலும் 1908 ஏப்ரல் 9-இல் வெளிவந்த ஸ்வராஜ் எனும் இதழ் ஆஷை “நவீன இரண்யன்” என்று வருணித்து கண்டித்திருந்தது. ஆஷுக்கு எதிரான சுதேசிகளின் இது போன்ற கண்டனங்களும், ஆஷைக் கொலை செய்வதற்கான இலக்காக தேர்ந்தெடுப்பதற்கு அடிப்படையாக அமைந்தது எனலாம்.

ஆஷ் கொலைக்கான முன்னேற்பாடுகள்:

சித்திரை மீட்டிங் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி செங்கோட்டையைச் சார்ந்த ரகுபதி ஐயரின் மகனான சங்கரன் எனும் வாஞ்சிநாதன் அவர்கள் ஆஷை கொல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுசமயம் வஞ்சி திருவனந்தபுரத்திலுள்ள மூலம் திருநாள் மகாராஜா கல்லூரியிலும் பி.ஏ. படித்துவிட்டு புனலூர் காட்டிலாகாவில் வன காவலராக (Forest guard) பணியாற்றினார். கொலைத் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டு பணியில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு 1910 டிசம்பரில் புதுச்சேரி சென்று வ.வே.சு. அய்யரை சந்தித்தார். வ.வே.சு. அய்யர் தன்னுடைய நண்பர்களோடு இணைந்து கரடிக்குப்பம் எனும் இடத்தில் வைத்து துப்பாக்கிச் சுடும் பயிற்சியை வாஞ்சிக்கு அளித்தார். பயிற்சி முடிந்து செங்கோட்டைக்குத் திரும்பும் போது வாஞ்சியிடம் பெல்ஜியத்தில் தயாரிக்கப்பட்ட பிரௌனிங் தானியங்கி கைத்துப்பாக்கி ஒன்றைக் கொடுத்தனுப்பினார்.

செங்கோட்டை வந்த பின்பு மே 15, 1911-இல் தன்னுடைய வனக்காவலர் பணியிலிருந்து விலகினார். ஆஷைக் கொலை செய்யும் பொருட்டு வாஞ்சி அவர்கள் 1911-ஆம் ஆண்டு ஜூன் 13-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் வீரராகவபுரம் (திருநெல்வேலி ஜங்ஷன்) ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். ரயில் நிலையத்தில் வாஞ்சியை எதிர்பார்த்து சாவடி S. அருணாசலம் பிள்ளையவர்கள் தற்செயலாக அங்கு வந்திருந்த தன்னுடைய நண்பரும் பத்திரிக்கையாளருமான M. சச்சிதானந்தம் பிள்ளை என்பவரோடு காத்திருந்தார். ரயில் நிலையத்தை அடைந்த பின்பு வாஞ்சியும் சாவடி அருணாசலம் பிள்ளையும் மட்டும் இருப்புப்பாதையின் நடைமேடைக்கு ஒதுக்குப்புறமாக சென்று சிறிது நேரம் உரையாடினார்கள். பின்பு பாரதமாதா சங்க உறுப்பினர்களின் உதவியோடு திருநெல்வேலியில் இருந்தபடியே ஆஷின் செயல்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.

ஆஷ் கொலை:

ஆஷும் அவருடைய மனைவியான மேரி லிலியன் பாட்டர்சனும் கொடைக்கானலில் படிக்கும் தங்களுடைய குழந்தைகளைப் பார்ப்பதற்காக 1911 ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து (வீரராகவபுரம்) தொடர்வண்டியில் பயணப்பட்டனர். இத்தகவலை முன்கூட்டியே அறிந்த வாஞ்சி ஒரு இளைஞரோடு ஆஷ் பயணித்த தொடர்வண்டியில் ஏறினார். வண்டி மணியாச்சி நிலையத்தை அடைந்த பின்பு ஆஷை, வாஞ்சி சுட்டுக் கொன்றார். ஆஷைக் கொன்று விட்டு தப்பியோடிய வாஞ்சி, அருகில் இருந்த கழிவறைக்குள் சென்று தன்னுடைய வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அச்சமயத்தில் வாஞ்சியோடு பயணப்பட்ட இளைஞர் தப்பியோடிவிட்டார். அவ் இளைஞரைக் கண்டுபிடிக்கும் பொருட்டு திருநெல்வேலி துணை ஆட்சியர் காக்ஸ் 18 ஜூன் 1911-இல் வெளியிட்ட விளம்பரத்தில், இளைஞரின் அடையாளாமாக “கிராப்” தலையும் மலையாளி போன்று உடை உடுத்தி இருந்த பிராமணர் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் சைவநெறி – இந்திய பொன்விழா மலரிலும் (1998) மற்றும் குகன் என்பவருடைய கட்டுரையிலும் கொலைச் சம்பவத்தின் பொழுது வாஞ்சியோடு உடனிருந்த இளைஞர் சாவடி S. அருணாசலம் பிள்ளைதான் என்று பதிவு செய்துள்ளனர். 

காவல்துறையின் சோதனை:

1911 ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி அன்று இரவு திருநெல்வேலியைச் சார்ந்த தலைமைக் காவலர், காவலர் மற்றும் தென்காசியைச் சார்ந்த காவல்துறை ஆய்வாளரான ராமச்சந்திர அய்யர் ஆகியோர் வாஞ்சியின் வீட்டை கண்டறிந்து அதனை காவல்துறைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மறுதினம் 18-ஆம் தேதி செங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குமாரபிள்ளை அவர்கள் தலைமயில் செங்கோட்டையிலுள்ள வாஞ்சி, சாவடி அருணாசலம் பிள்ளை, ஹரிஹர அய்யர், வெங்கட்ராம அய்யர் மற்றும் ஜகநாத அய்யங்கார் ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சாவடி S. அருணாசலம் அவர்கள் வீட்டிலிருந்து திலகரது வழக்கு விசாரணை மற்றும் ஜென்ம பூமி எனும் பாரதியாரின் கவிதைத்தொகுப்பு போன்ற புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதவிர கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் ப்ரொஸ்பெக்ட்டஸ் ஒன்றும் காணக்கிடைத்தது. இச்சோதனை நடைபெறும் வேளையில் சாவடி அருணாசலம் பிள்ளையவர்கள் செங்கோட்டையில் இல்லை.

சாவடி அருணாசலம் பிள்ளை கைது:

காவல்துறை சோதனையின் பொழுது சாவடி அவர்களின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட கல்கத்தா மருத்துவக் கல்லூரியின் ப்ரொஸ்பெக்ட்டஸ் மற்றும் காவல்துறை விசாரணையின் மூலம் கிடைத்த தவல்களின் அடிப்படையில் சாவடி அவர்கள் கல்கத்தாவில் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனடிப்படையில் காவல்துறைத் துணைத்தலைவரான P.B. தாமஸ் தலைமையில் கல்கத்தாச் சென்ற போலீஸ் படையொன்று, ராபர்ட்ஸ் எனும் உள்ளூர் காவல் ஆய்வாளரோடு இணைந்து சாவடி S. அருணாசலம் பிள்ளை அவர்களை கல்லூரி விடுதியில் வைத்து 23 ஜூன் 1911-இல் கைது செய்தனர். கைது செய்யப்பட சாவடி அவர்களின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுச் சென்னை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உடல் மற்றும் மனாரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்.

அடையாள அணிவகுப்பு:

திருநெல்வேலி மாவட்ட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆஷ் கொலை வழக்கில் தனி நீதிபதி தாமஸ் ICS நியமிக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட 13 பேரும் நீதிபதியின் முன்பு வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவ்வரிசையில் 11-வதாக நின்ற சாவடி அருணாசலம் பிள்ளைதான் வாஞ்சியோடு ஆஷை கொல்ல வந்த இளைஞன் என்று இக்கொலைச் சம்பவத்தினை நேரில் கண்ட பேராசிரியர் ஞானமுத்து என்பவர் நீதிபதியின் முன்பு அடையாளம் காட்டினார். பின்பு இவ்வழக்கானது திருநெல்வேலி சப் டிவிஷினல் மஜிஸ்ட்ரேட் தம்பு அவர்களின் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

திருநெல்வேலி சதி வழக்கு:

1911 ஆகஸ்ட் 1-இல் ஆஷ் கொலை சம்பந்தமாக குற்றம் சாட்டப் பெற்ற 13 பேர் மீதும் திருநெல்வேலி சப் டிவிஷினல் மஜிஸ்ட்ரேட் தம்பு அவர்களின் முன்னிலையில் இ.பி.கோ. 121A (சதிவழக்கு) பிரிவின் கீழ் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆஷ் கொலை வழக்கானது பின்நாட்களில் திருநெல்வேலி சதிவழக்கு என்றே குறிப்பிடப்பட்டது. குற்றம் சாட்டப் பெற்றவர்களுக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனையாவது கிடைக்கும் வகையில் இ.பி.கோ. 302 மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டாவது குற்றப்பத்திரிகையானது ஆகஸ்ட் 18-இல் மீண்டும் தம்பு அவர்களிடமே தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகளின் ஆரம்பகட்ட விசாரணை ஆகஸ்ட் 18-இல் ஆரம்பித்து 30-இல் முடிவடைந்தது. விசாரணையின் முடிவில் தம்பு அவர்கள் வழக்கினை சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார். இந்தக்கொலை வழக்குச் சம்பந்தமான விசாரணையின் ஒரு பகுதியாக சாவடி அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

வாக்குமூலம்:

சாவடி அவர்களின் வாக்குமூலத்தின்படி, 1911 ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலி சென்ற சாவடி அவர்கள் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் அங்கேயே தங்கிவிட்டு ஜூன் 15-ஆம் தேதி சென்னைக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஜூன் 16-ஆம் தேதி மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் தமிழாசிரியராக பணியாற்றிய அனவரத விநாயகம் பிள்ளை என்பவரின் வீட்டில் தங்கியதாகவும், பின் அங்கிருந்து திருநெல்வேலியிலுள்ள உறவினர் ஒருவருக்கு பணம் கேட்டுத் தந்தி கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். ஜூன் 17-ஆம் தேதி உறவினர் மணியாடர் வழியாக அனுப்பிய பணத்தினைப் பெற்றுக்கொண்டு (கொலை நடந்த) அன்றே கல்கத்தாவிற்குப் புறப்பட்டு சென்றதாகவும், பின் ஜூன்-19 இல் கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவராக சேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் செங்கோட்டை பாரதமாதா சங்கத்தில் தானும் ஒரு உறுப்பினர் என்பதை அவர் மறுக்கவில்லை. மேலும் இவ்வாக்குமூலத்தில் சாவடி அவர்களின் பயணம் சம்மந்தமான தகவல்கள் ரயில்வே போலீஸ் சூப்ரண்டெண்ட் கார்டோசாவால் நுட்பமாக ஆராயப்பட்டு உண்மையென்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விடத்தில் ஆஷ் கொலையின் போது வாஞ்சியுடன் இருந்த இளைஞர் சாவடி அருணாசலம் பிள்ளைதான் என்று சில கட்டுரையாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது ஒப்பு நோக்கத்தக்கது.

நீதிமன்ற தீர்ப்பு:

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட திருநெல்வேலி சதி வழக்கினைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சர். அர்னால்ட் வெய்ட், சர். சங்கரன் நாயர் மற்றும் ஐலிங் ஆகிய மூவர் அடங்கிய தனிப்பிரிவு (புல் பென்ச்) விசாரித்தது. குற்றவாளிகளின் சார்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களான ஆந்திர கேசரி சர். டி. பிரகாசம் மற்றும் சீனிவாச்சாரியார் போன்றோர் வாதாடினர். சுமார் 80 நாட்கள் (11-09-1911 முதல் 02-02-1912 வரை) நடந்த விசாரணையின் முடிவில் பிப்ரவரி 15, 1912-இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று நீதிபதிகளுமே தங்களுடைய தீர்ப்பில் இ.பி.கோ. 302 மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட மரண தண்டனைக்கு ஏதுவான வழக்கினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இ.பி.கோ. 12A பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கினுடைய தீர்ப்பில் சாவடி S. அருணாசலம் பிள்ளை, அழகப்ப பிள்ளை, வேம்பு அய்யர் மற்றும் தேசிகாச்சாரி ஆகிய நால்வரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தும் எஞ்சிய ஒன்பது பேருக்கு தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தனர்.

எளிய வாழ்வு:

சிறையில் இருந்த 237 நாட்களும் சாவடி அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். சிறைவாசத்தின் விளைவாக உடல் சுகவீனத்திற்கு உள்ளானார். இதுதவிர வழக்கு விசாரணைக்காக தம்முடைய செல்வத்தில் பெரும்பகுதியை இழந்ததால் வறுமையில் வாடினார். வழக்கு விசாரணையிலிருந்து முற்றிலுமாக விடுபட்டாலும் காவல்துறையின் கண்காணிப்பிலேயே இருந்தார். தன்னுடைய மருத்துவப் படிப்பினை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். கொலைவழக்கின் பொருட்டு சிறை சென்றவர் எனும் காரணத்தினால் பொதுமக்களின் ஏளனத்திற்கும் உள்ளானார். இவ்வாறு உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியிலான துன்பங்களுக்கு உள்ளான சாவடி S. அருணாசலம் அவர்கள் விடுதலைக்குப்பின் ஒரு அமைதியான எளிய வாழ்வினை வாழும் பொருட்டுச் சிறிதுகாலம் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து விலகியே இருந்தார்.

அறவழிப் பாதை:

மகாத்மா காந்தி அவர்கள் 1915-இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய திரும்பிய பின்னர் இந்திய விடுதலைப் போராட்டமானது ஒரு தனி எழுச்சி கண்டது. காந்திய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்ட சாவடி அவர்கள் தன்னையும் மெல்ல மெல்ல அறவழியிலான போராட்டங்களில் ஈடுபடுத்தலானார். ஆங்கிலேயரின் ரௌலட் சட்டத்தை எதிர்த்து 1919-ஆம் ஆண்டு காந்தியடிகள் நடத்திய ஒத்துழையாமை போராட்டத்தைச் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதிகளில் அம்பாசமுத்திரம் கோமதிசங்கர தீட்சிதருடன் இணைந்து நடத்தியுள்ளார். 1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்யாகிரகத்திற்கு திருநெல்வேலிப் பகுதியிலிருந்து பலரை உற்சாகப்படுத்தி கலந்து கொள்ளச் செய்தார். இவ்வாறு விடுதலைப் போரில் தீவிரவாத நோக்கிலிருந்து மாறி மிதவாத அரசியல் பாதையைத் தேர்வு செய்து வாழ்ந்தார்.

அரிஜன விடுதி:

மகாத்மா அவர்களின் அரிஜன மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டு, செங்கோட்டையில் அதுவரையிலும் வழக்கத்தில் இல்லாத வகையில் ஒரு விடுதியை 1925-இல் சாவடி அவர்கள் தொடங்கினார். இந்த விடுதியில் வேலை செய்பவர்கள் அனைவரும் ஒடுக்கப்பட்ட (அரிஜன்) வகுப்பினைச் சார்ந்தவர்களாகவே இருந்தனர். இந்த செய்கை உயர்சாதி இந்துக்களை வெறுப்படைய செய்ததால், அவ்விடுதி (“அரிஜன விடுதி”) தீக்கிரையாக்கப்பட்டது.

மரணம்:

தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் பல இன்னல்களை அனுபவித்த சாவடி S. அருணாசலம் பிள்ளை அவர்கள் இறுதியாக பாரதியாருடைய நண்பர்களின் உதவியினால் திருநெல்வேலி இந்து கல்லூரியில் தமிழ்த் துறையில் ஆசிரியராகப் பணியாற்றினார். நாட்டு விடுதலைப் போரில் எல்லாவற்றயும் இழந்த சாவடி S. அருணாசலம் பிள்ளை அவர்கள் 1938-ஆம் ஆண்டு ஏப்ரல் 27-ஆம் தேதி தன்னுடைய 45-ஆம் வயதில் மரணமடைந்தார்.

முடிவுரை:

ஆஷ் கொலை என்பது ஆரிய தர்மத்தினைக் காப்பதற்காக உயர்சாதி இந்துக்கள் இணைந்து செய்த தனிமனித பலாத்காரம் என்று சிலரால் விமர்சிக்கபப்டுகிறது. ஆஷ் கொலைக்கான காரண காரியங்களை நுட்பமாக ஆராயும் பொழுது, இக்கொலையானது ஆஷ் மீது சுதேசிகள் கொண்டிருந்த தீரா பகையின் விளைவாகவே நடந்ததென்பது புலனாகும். மேலும், ஆஷ் மீது ஏற்பட்ட பகையானது சாதி மற்றும் மதம் என்ற நோக்கில் அல்லாது, ஆஷ் சுதேசிகளின் பொருளாதாரம் மற்றும் உயிருக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தலின் விளைவாகவே உருவானது என்பதனையும் உணரமுடிகிறது. மேலும் ஆஷ் கொலைக்குப் பின் பாரதமாதா சங்க உறுப்பினர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சந்தித்த இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகளை நோக்கும் பொழுது, பாரதமாதா சங்கத்தினரை விடுதலைப் போராட்ட தியாகிகள் என்று அழைப்பதில் சிறிதும் தயக்கமில்லை என்றே கொள்ளலாம்.

நினைவுச் சுவடுகள்:

சாவடி S. அருணாசலம் அவர்களின் தியாகத்தை கவுரவிக்கும் வகையில் இந்திய சுதந்திர வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக செங்கோட்டை S.M.S.S. அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் நடப்பட்ட நினைவுக் கல்லில் அவருடைய பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சாவடி S. அருணாசலம் அவர்களின் மகன் தியாகி சாவடி A. செங்கலிங்கம் பிள்ளை அவர்கள் தன்னுடைய தந்தையின் வழியில் தேசவிடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் தியாக மரபை நிலைநாட்டினார்.

குறிப்புகள்:

  1. ஆ. சிவசுப்பிரமணியன் (2009). ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும். காலச்சுவடு பதிப்பகம். (ISBN: 978-81-89945-92-3)
  2. ரா. அ. பத்மநாபன் (2006). சித்திர பாரதி: “வாஞ்சிநாதன்”. காலச்சுவடு பதிப்பகம். பக். 80. (ISBN: 81-89359-61-4)
  3. T.V. ரங்கசுவாமி (ரகமி). மாவீரன் மாடசாமி. விஜயபாரதம் பதிப்பகம். (ISBN: 9788192093895)
  4. சைவ நெறி (1998). ஆஷ் கொலையும் அருணாசலம் பிள்ளையும். இந்திய சுதந்திர பொன்விழா மலர். பக். 82-83. (கட்டுரை)
  5. T.V. ரங்கசுவாமி (ரகமி). இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழக வீரத்தியாகி சாவடி அருணாசலம் பிள்ளை. பக். 1-9. (சிறு புத்தகம்)
  6. Dr. S. N. சோமையாஜூலு (Ex. MLA). தியாகச்செம்மல் சாவடி அருணாசலம் பிள்ளை. ஸ்ரீ ராம் பிரெஸ், செங்கோட்டை. (சிறு புத்தகம்)
  7. S.V. ரமணி (1986). முதல் முழக்கம். கலைமகள்.

Extracts:

  1. Special bench case No. 1 of 1911. In the court of the sub-divisional magistrate, Tinnevelly. (Exhibit VVVVV).
  2. Extracts from Special bench case No. 1 of 1911. Madras High Court:
Exit mobile version