Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

மனித நுட்பம் – மிரொஸ்லாஃப் ஹோலுப்

செக் நாட்டை சேர்ந்த மிரோஸ்லாவ் ஹோலப் (1923-1998) ஒரு மருத்துவர். அவருடைய படைப்புகளில் அவரது மருத்துவத் தொழிலின் தாக்கம் மிகுதியாக இருக்கிறது என்றும் பெரும்பாலும் எதுகை மோனை இல்லாமல் இருப்பதால் மொழிபெயர்ப்பு எளிதாகிறது என்றும் விக்கிபீடியா தெரிவிக்கிறது. அறிவியல் கட்டுரைகள் குறிப்பாக உயிரியல்,மருத்துவம் குறித்து பல சிறு கட்டுரைகளும் எழுதியுள்ளாராம்.(சொல்வனம் 210ஆவது இதழில் கொடுத்த குறிப்புகள்). அவரது கவிதையில் Brief reflection on accuracy எனும் கவிதையின் மொழிபெயர்ப்பு. வசன கவிதை வகை போலிருக்கிறது.

மனித நுட்பம்
எப்பொழுது எங்கு போகவேண்டுமென்று
மீனுக்கு கச்சிதமாய் தெரிந்திருக்கு.
பறவைகளுக்கும்.
காலமும் நிலையும் .
அறி உள்ளுணர்வுண்டு
மனிதனுக்கு இம்மாண்புகளில்லை.
ஆகவே
அறிவியல் ஆய்வு நாடுகிறான் அவன்.
கதையொன்று காட்டுமிதன் கோலத்தை.

படைவீரனொருவன்
ஒவ்வொரு மாலையிலும்
சரியாக ஆறுமணிக்கு
பீரங்கி வெடிக்க வேண்டும்.
படை வீரனாதலால்
அப்படியே செய்தான் அதை.
எப்படி சரியாக
நேரத்தை அறிகிறான்
என்று சோதித்தபோது
அவன் அளித்த விளக்கம்.

கீழே
நகரின் மணிக்கூண்டிலிருக்கும்
மிகச் சரியான கடிகாரமே
என் வழிகாட்டி.
ஒவ்வொரு நாளும்
ஐந்தே முக்கால் மணிக்கு
அதைப் பார்த்து
என் கைக்கடிகாரத்தை
சரி செய்வேன்.
மேலே தயாராய் இருக்கும்
என் பீரங்கி நோக்கி
மலையேறுவேன்.
ஐந்து ஐம்பதொன்பதுக்கு
பீரங்கி மேலேறுவேன்.
சரியாக ஆறு மணிக்கு
வெடிப்பேன்.

இந்த முறைப்படி
வெடிப்பது மிகத் துல்லியமானது
என்பது தெளிவாகியது.
கீழிருக்கும் கடிகாரத்தை மட்டும்
சரி பார்த்து விட்டால் போதும்.
ஆகவே
மணிக்கூண்டு கடிகாரத்தின்
நுட்பம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது.

‘ஓ!அதுவா?’ என்றான் கடிகாரக்காரன்.
என்றைக்கும் மிகச் சரியாக இயங்கும்
இயந்திரங்களுள் இதுவும் ஒன்று.
உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
ஆண்டுகள் பலவாகியும்
ஆறு மணிக்கு மிகச் சரியாய் வெடிக்கும்
பீரங்கி ஒன்று..
ஒவ்வொரு நாளும்
என் கடிகாரத்தைப் பார்ப்பேன்.
அப்பொழுது அதுவும் மிகச் சரியாக
ஆறு மணி காட்டும்.

Exit mobile version