Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

வேம்பில் ஒரு செண்பகம்

பூப்பெய்திய பருவம் முதல்
கசப்புக்குள்ளே சில
இனிய உணர்வுகளின்
ஊடுறுவல்கள்

இளமையின் நியதிகளான
வாழ்வியல் காற்றின்
வேகங்களை
திசைகள்
நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது

வயதின் மூப்பில்
உலர்ந்துகொண்டிருக்கும்
இளமையின் சுவைகள்
ஆறிப்போன
உணவாகி
வெறுமையாக செரித்துவிடுகிறது

முதிர் பருவத்தை நோக்கி
கசந்துகொண்டிருக்கும்
சுவர்களில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
இளமையின் நிறுவிட
இயலாத சுவடுகள் மட்டும்

துணையின்றி பயணிக்கவும்
ஆயத்தமானது
இயல்புகள் இழந்த
உடல்

காலம் முழுவதும் அடைகாத்த
வெம்மை
உதிர்ந்து மெல்லிய விசும்பலாய்
தேய்ந்து கனவுகளற்று
ஏகாந்த மகிழ்வானது

வெட்கத்தில் கூசி சிவந்த
உணர்வுகள்
தவிர்க்க முயன்று தவித்து
சில்லுகளாகிக்
கொண்டிருக்கிறது
வயதின் ஏற்றத்தில்

அனைத்தையும் துடைத்து
சுத்தமாக்கி
ஒதுங்கி ஒதுக்கி
மகிழ நினைக்கும் மனதுக்குள்
கூடுகட்டி குழைகிறது
ஏதோ ஒரு குழப்பம்

வலியின் உள்ளே
வாசமாய் மலர்ந்திருந்த
இளமையும்
இனிமையும்
கைகளிலிருந்து
நழுவியதாலும்
இருக்கலாம். . . . .

Exit mobile version