Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

ஆதி விடம்

அவன் முன்பின் நகரமுடியாத
இக்கட்டில் மாட்டியபோது  சரியாக அச்சொல்லை எய்ய         இவனைத் தூண்டி 
அவன் குருதியைக்  கொப்பளிக்க வைத்தேன்

சொல் தைத்துப்பெற்ற
தீந்துயரை
திரும்ப அளிக்கக்  காத்திருந்து
பிடுங்கப்பட்ட அதேசொல்லை
எறிந்தான் இவனை நோக்கி

எளிய வழியில்
எதிரிக்கு வெந்நோவை அளிக்க பாவனை செய்கிறான் இவன்
வலிக்காதது போல

தாம் பெற்ற அதே துயரை
அளிக்கவில்லையோ
குருதி பொங்குமிடத்திலன்றி   கசியமிடத்தில் செலுத்தப்பட்டதோவென்ற
ஐயத்துடன்
ஆயத்தமாகிறானவன்
மீளச் செலுத்த

முடிவிலாது தொடரப்போகும்  வஞ்சத்தை உண்டாக்கியபின்
என்ன வேலையிங்கே …
கிளம்பினேன் 
அடுத்த இடம் நோக்கி

Exit mobile version