Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

குளக்கரை


[stextbox id=”info” caption=”யூகேவும் சவுதியும் சில ஆயுதங்களும்”]

சண்டையிடுவதற்கும் தோள் மீது கைபோட்டு நட்பு பாராட்டுவதற்கும் மேலோட்டமான காரணத்துக்கு அடியில் நிழலென ஆயிரம் அர்த்தங்கள் தேசியங்களுக்கு இருக்கும். சொல்லப்போனால் இம்மாதிரியான விசித்திரமான கூட்டாளிகளை ஒருங்கிணைக்கவே தேசிய வெளியுறவு திட்டங்கள் அமைக்கப்படுகின்றன. சவுதி அரேபியாவும் இங்கிலாந்தும் பரஸ்பரம் வெவ்வேறு நம்பிக்கைகளைக் கொண்ட நாடுகளாயினும் உளவுத்துறையினர் அவ்வப்போது கைகுலுக்கு ரகசியங்களைப் பரிமாறிக்கொள்வதால் நட்புறவைப் பேணும் நாடுகளாக இருக்கின்றன. எந்தளவு என்றால் சமீபத்தில் சவுதி அரசர் அப்துல்லா இறந்தபோது இங்கிலாந்து சட்டசபை வளாகத்தில் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டது. சவுதியில் சாராய புட்டிகள் கைவசம் வைத்திருந்ததற்காக ஒரு பிரித்தானியப் பிரஜைக்கு கசையடி தண்டனை கொடுத்து அதிக நாட்கள் ஆகியிருக்கவில்லை எனும்போது இங்கிலாந்து முதல்மந்திரி டேவிட் கேமரூன் அப்துல்லா இறப்புக்கு துக்கம் அனுஷ்டித்ததை பலர் விரும்பவில்லை.
இப்படியான உறவைத் தாண்டி சவுதி அரேபிய ராணுவத்துக்கு இங்கிலாந்தும் அமெரிக்காவும் துப்பாக்கிகளும் குண்டுகளும் விற்றுவருகின்றன. அத்துடன் இந்த வியாபாரம் முடிவதில்லை. சவுதி அரேபிய அரசு சிரியா நாட்டின் சில இஸ்லாமியக் குறுங்குழுக்களுக்கு அவற்றை அளிக்கின்றன. சிரிய நாட்டுக்கு எதிராகப்போரிடும் ஐஸ் அமைப்பை எதிர்க்கும் குழுக்கள் என்றளவில் நேற்றுவரை தெரிந்திருந்தது. ஐ எஸ் அமைப்பின் அதிகாரப்பரவலாக்கத்தைத் தடுக்க முனைப்போடு இறங்கிய ரஷ்யாவும் இந்த குறுங்குழுக்கள் இயங்கும் பகுதிகளைத் தாக்குகிறார்கள். பெரியண்ணன் இறங்கிவிட்டான் இனி விடுவுகாலம் தான் எனப் பல மாமூல் பாராட்டுகள் தொடங்கிவிட்டன. ஆனால் உண்மை என்ன? சிரிய நாட்டுப் போரை உற்று கவனிக்கும்போது இது ரஷ்யாவுக்கு அமெரிக்க/இங்கிலாந்து நாடுகளும் மறைமுகமாகச் செய்யும் யுத்தமாகத் தோன்றத்தொடங்கிவிட்டது.

https://theintercept.com/2015/10/26/bbc-protects-uks-close-ally-saudi-arabia-with-incredibly-dishonest-and-biased-editing/

[/stextbox]


[stextbox id=”info” caption=”உளவும் சேவையும் தொழிலும் நடக்கட்டுமே”]

உளவாளிகள் கதைகளை நாம் காலங்காலமாகக் கேட்டு வருகிறோம் என்றாலும் நவீன காலத்துக்கு ஏற்றார்போல தினமும் ஒரு புதுவிதமான உளவுமுறைகள் உருவாகி வருகிறதை நாம் அச்சத்தோடு பார்க்க வேண்டியுள்ளது. வடக்கு கொரியா உலகத்தைப் பொருத்தவரை ஒரு கருப்புப்பெட்டி. சத்தமில்லாமல் ஏவுகணை சோதனை, யுரேனியம் பதுக்குவது, அணு ஆயுதங்கள் சேகரிப்பது என மறைமுகமாகத் தன்னைப் பலப்படுத்திவருகிறது. அதே நேரத்தில்  மக்களுக்குக்கானக் கருத்து சுதந்திரத்தை அளிக்காமல் செய்திகள் வெளியே கசியாமல் பார்த்துக்கொள்கிறது. அதிகாரத்தை பலப்படுத்தவும் உலகப்பாதுகாவலராகத் தன்னை நிலைநாட்டிக்கொள்ள ஆசைப்படும் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் சும்மா இருக்குமா? மூடியிருக்கும் பால் பாத்திரத்தை விடாமல் சுற்றிவரும் பூனை போல ஏதாவது ஒரு சந்து கிடைத்தால் தனது உளவு வேலையைத் தொடங்க சமயம் பார்த்துவந்தது. 2004இல் ஒரு அரசு சாரா அமைப்பின் மூலம் அதற்கு ஒரு வழி கிடைத்தது. அமெரிக்காவின் பெண்டகன் அளித்த நிதியில் உருவான இந்த அமைப்பு ஏழைகளுக்கு, நலிந்த மக்களுக்கும் சேவை செய்யும் நோக்கத்தோடு வடக்கு கொரிவாவில் நுழைந்தது. மெல்ல உளவுக்குத் தேவையானப் பல சாதனங்களைக் கடத்தி உள்ளே கொண்டு சென்றாக இன்று சொல்கிறார்கள்.
அமெரிக்கா தனது மூளையின் திறனைக்காட்டியிருப்பதல்ல இங்கு செய்தி. ஆனால் ஒரு அரசு சாரா சேவை அமைப்பில் வேலை செய்வதாக நினைத்து பென்டகனின் பணத்தில் வாழ்ந்த உண்மையான சேவை மனப்பான்மை கொண்டவர்களது மனசாட்சிக்கு பதில் என்ன? சேவை அமைப்பில் சேர்ந்து ஈடுபட நினைப்பவர்கள் தாங்கள் வலையின் எவ்விதமானக் கண்ணி எனச் சதா வெம்பிப்போகவேண்டுமா?

http://www.huffingtonpost.com/entry/pentagon-missionary-spies-north-korea_562d5421e4b0aac0b8fd44a9
[/stextbox]

Exit mobile version