தெலுங்கு மூலம் : வாரணாசி நாகலட்சுமி
தமிழாக்கம் : ராஜி ரகுநாதன்
“மானவ், மானவ்”
மானவின் நண்பர்கள் அவன் பெயரைச் சொல்லி அச்சத்தோடும் பரபரப்போடும் அழைத்தனர். டாக்டர் வில்லியம்ஸ் துரத்தியதால் மானவைச் சுற்றிலும் சேர்ந்த மக்கள் தொலைவாக நகர்ந்தனர். டாக்டர் வில்லியம்ஸ் காற்று உடலில் படும்படி ஆடைகளைத் தளர்த்தி, நாடியைச் சோதித்து, அவனுடைய இதயம் மீண்டும் சுவாசத்தை இழுப்பதற்காக முயற்சித்தார். ‘பஞ்சி ஜம்பிங்’ என்ற விளையாட்டில் பங்கு பெற வேண்டும் என்று மானவோடு கூட வந்த நண்பர்கள் மூவரும் பேச்சற்று பயந்துபோய் காத்திருந்தனர். மானவ் உயிரோடு எழ வேண்டுமென்று எல்லோரும் அவரவர் மதத்தின்படி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மானவ், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் ஊசலாடினான்.
**** **** ****
ஆயிரம் ஆண்டுகளாக எல்லையில்லாத பிரயாணம். அடுக்கடுக்காகப் பிரிந்து போகும் எத்தனையோ அனுபவங்கள், உணர்வுகள், பயங்கள், உடல் காயங்கள், மனக் காயங்கள், ஏதேதோ பாதுகாப்பின்மை. பின்னோக்கிப் பயணம் செய்யச் செய்ய ஏதோ கவலை, ஏக்கம். எங்கோ விருப்பமில்லாத, வருத்தமளிக்கும் இடத்திற்கு எதற்காகவோ இந்தப் பயணம். தன்னுடைய முயற்சி இல்லாமலே அவன் உடல் அவ்வாறு லேசாகப் போவதை மானவ் உணர்ந்தான். உடலா? இல்லை. இல்லை. அது மனசாகத்தான் இருக்கும். ஊஹும் மனம் இல்லை. மனம் என்றால் யாருடைய மனம்? மானவின் மனமா? அந்தப் பயணத்தை ஜன்னலில் இருந்து பார்ப்பது போல் கவனிக்கும் அவன் யார்?
இது கனவா, நனவா? உடலை இலைகளால் மூடிக் கொண்டு காட்டு விலங்குகளோடும் பாம்புகளோடும் மரப் பொந்துகள், பள்ளத்தாக்குகள், மலைகள் என்று இயற்கையைப் பிற உயிரினங்களோடு பகிர்ந்து வாழும் இவன் யார்? அவனேதான். அம்மாடியோ, அப்படி எவ்வறு வாழ்ந்தான்? அப்படியென்றால் இது என்ன? அந்த மரத்தை சுற்றிக் கொண்ட பலமான கொடி தொங்குகிறது. அது ஒரு மலைப்பாம்பு. வாயைத் திறந்து அவனை நோக்கி வருகிறது. மானவ் கவனிக்கவில்லை. “ஐயோ, மானவ், கவனமாப் பாரு, கவனம்.
கவனம்” என்று சொல்வது யார்? தானே அல்லவா? தான் என்றால்? உடனே மானவ் சட்டென்று மற்றொரு பலமான கொடியைப் பிடித்துக்கொண்டு சர்ரென்று வழுக்கி, ரொம்ப தூரம் வழுக்கினான், அவனுக்கு அதெல்லாம் பழக்கம் தான் போலும். ஆனாலும் பயம் தான். இதயம் டாமல் டமால் என்று அடித்துக் கொண்டது. உயிர் ரொம்பத் தித்திப்பு இல்லையா?
அம்மாடியோ, வந்தடைந்த இடம் பாதுகாப்பான இடம் போலத்தான் இருக்கு. ஆனாலும் என்ன பாதுகாப்போ என்னவோ, இருட்டி விட்டது. ஏற்றிய திரி படபடவென்று அடித்துக் கொண்டது. அந்த வெளிச்சத்தின் நிழலில் மானவின் கண்களில் பயம், தாகம், களைப்பு, தூக்கம் எல்லாம் தெரிந்தன.
தங்க நிறக் கிரணங்களின் ஒளிகள். வண்ண வண்ண இறக்கைகளின் ஆடைகள் எத்தனை அழகாக இருக்கிறது அதென்ன? மரத்தின் கீழே கையில் சிறிய கத்தியோடு நின்றிருப்பது யார்? அவன் தான். அவனருகில் பளபளவென்று ஒளிரும் உடலோடு விளங்கும் பெண்ணின் கண்கள் எத்தனை அழகாக பிரகாசிக்கின்றன? உயரமான மரத்தின் கிளைகள் எல்லாம் ஒன்றை ஒன்று சுற்றிக் கொண்டு நேர்த்தியான பந்தல் போல் உள்ளன. அவற்றிலிருந்து மெல்லிய பூங்கொடிகள் தொங்கின.
மானவ், வலிமை பொருந்திய தன் தோள்களை கர்வத்தோடு பார்த்துக் கொண்டான். அவளை ஆசையோடு பார்த்தான். அவளுடைய புன்னைகை மின்னலில் தன்னை மறந்தான். அதற்குள், ஐயோ, அந்த மூலையில் குன்றுகளுக்குப் பின்னாலிருக்கும் புதர்களில் மறைந்திருந்து வருகின்ற அந்த வேடன் யார்? அவனை என்ன செய்வதற்கு வருகிறான்?
ஐயோ, இந்தப் பெண்ணின் மோகத்தில் விழுந்து, புலியைக் கொன்ற வெற்றி விழாவில் ஈடுபட்டு, மறைந்திருக்கும் ஆபத்தை கவனிக்கவில்லை. இப்படிப்பட்ட கவனமின்மைக்கு மானவ் எப்படி ஆளானான்?. ஈட்டியை எடுத்து அந்த வேடன் இந்தப் பக்கம் குறி வைக்கிறான். எல்லாம் திரையின் மேல் ஓவியம் போல அவனுக்கு எபபடித் தெரிகிறது? அப்படியானால் அவன் மானவ் இல்லையா? தன்னைத் தானே அவன் எப்படிப் பார்க்க முடிகிறது?
ஈட்டி சர்ரென்று பாய்ந்து வந்து மானவுடைய மார்பில் குத்தியது. இதயத்தைத் தடவிய மானவின் கை சூடான ரத்தத்தால் நனைந்தது. தலை சுற்றியது. ஏனிந்த பாதுகாப்பின்மை? படைப்பில் தோன்றிய உயிரினங்கள் அனைத்திற்கும் இந்த பாதுகாப்பின்மை எதனால் ஏற்படுகிறது?
நொடிகள், நாட்கள், வாரங்கள் கழிந்தன. நிசப்தம், இருள், அதன் பின், மெதுவாக அவனைச் சுற்றிலும் வெளிச்சத்தின் வளையங்கள் சூழ்ந்தன. எங்கோ அவன் பயணம் செய்கிறான். அட, அவன் எத்தனை நன்றாகக் குதிரை சவாரி செய்கிறான். எப்போது கற்றானோ? அவன் தனியாக இல்லை. அவனுக்குப் பின்னால் ராணுவ வீரர்கள். மிகப் பலர். சக ராணுவ அதிகாரிகள், சிவப்பான தலைப்பாகை அணிந்து, இடுப்பில் தொங்கிய கூரான வாட்களோடு விளங்கினர். சொற்கள் தெளிவின்றிக் கேட்டன. சிலருடைய கண்களில் வெற்றியின் மேல் ஆசை தெரிந்தது. வேறு சிலரின் கண்களில் சந்தேகமும், அச்சமும் வெளிப்பட்டன. ஆனால் அனைவரின் கண்களிலும் ஒரு பகையுணர்வு. போர் புரியவா இந்தப் பயணம்? குதிரைகளின் குளம்படிச் சத்தம் எதிரொலித்தது. மலைப் பாதையிலும் மைதானங்களிலுமாக எத்தனை நேரம்தான் இந்தப் பயணம்?
இதோ எதிரில் அம்பு வேகத்தில் பாய்ந்து வரும் எதிரிப்படை. காலாட்படையில் அம்புகளும் ஈட்டிகளும் மோதிக் கொண்டன. மன எழுச்சியோடும், வெப்பமான உடம்போடும் எதிரியின் மேல் குதிக்கும் அந்த வீரன் அவன்தான். கண நேரத்தில் எத்தனை பேரைக் கொன்றானோ தெரியாது. அவன் கண் முன்னால் எங்கு பார்த்தாலும் ஜிவ்வென்று தெறிக்கும் ரத்தத் துளிகள். அங்கு அலைந்து திரிவது அவன் தானா? யாருக்காவது சிறிய காயம் ஏற்பட்டாலும் வருந்தும் மனமுள்ளவன் அல்லவா அவன்? பின் வைரம் போல் கடின இதயம் கொண்ட அந்த சூரன் யார்?
ஆ, இது என்ன கவனக்குறைவு? அவனுடைய கை ஒரு நொடி நேரம் தாமதமாக அசைந்தது ஏன்? எதிராளியிடமிருந்து வந்த அம்பு அவனுடைய இதயத்தைக் கிழித்தது. ஜிவ்வென்று ரத்தம் தெறித்தது. எல்லாம் முடிந்து விட்டது, மானவ். உன் காலம் முடிந்து விட்டது. ஏனிந்த துயரம்? அவன் தன் மரணத்தைத் தானே பார்த்து வருந்துவது எதனால்? வியப்பாக இருந்தது. சிந்தனைகள் களைத்துப் போயின. அத்தனை சோகமும் கண நேரத்தில் இருளில் கலந்து விட்டது.
ஆச்சர்யமான அமைதி. தொலைவிலிருந்து குளிர்ச்சியான வெளிச்சம். காலக் கடலில் அந்த வெளிச்சத்தை நோக்கி நீந்தியபடி ஒரு மனிதன் தெரிகிறானே? யாரந்த அந்த மனிதன்? வேறு யாரோ அல்ல. அவனேதான்.
கவனிப்பதற்குள் நகர்ந்து போகும் பலப் பல காட்சிகள். கைத்தடியைப் பிடித்துக் கொண்டு வேகவேகமாக நடந்து சென்ற அந்த மனிதரை அவனுக்குத் தெரியும். அவர் ‘பாபுஜி’. அவரைப் பின் தொடரும் மக்கள் கூட்டத்தில் அவனும் ஒருவன். தேச சுதந்திரத்திற்காக நடந்த போராட்டத்தில் அந்த மகாத்மாவின் பின்னால் அவனும் நடந்தான். அப்படியானால் அவனுடைய வாழ்க்கை பயனுடையதே.
“அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும். ஆக்கிரமிப்புகளைக் கண்டிக்கவேண்டும். அன்னியர் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். வந்தேமாதரம்” போன்ற எத்தனையோ முழக்கங்கள். நரம்பெங்கும் முறுக்கேறியது தேசபக்தி அவனை ஆட்கொண்டது. கடலலை போல முன்னோக்கி ஓடிய மக்களோடு அவனும் ஒரு புள்ளியாகக் கலந்து போனான். ஏதோ நினைவுகள் திரை போல அவன் கண் முன் விரிந்தன.
வீட்டில் காத்திருந்த அம்மா. ஊமையாகக் கண்ணால் பேசும் நிறைமாத கர்ப்பிணியான அவனுடைய இல்லாள். அவள் நினைவு வந்தால் போதும் இதயக் கதவு திறந்து கொண்டு அன்பு பெருக்கெடுக்கிறது. எவ்வாறு அவர்களையெல்லாம் விட்டு அவன் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டான்? இந்த விடுதலை ஹோமத்தில் தன்னைத்தானே ஒரு சமித்தாக சமர்ப்பித்துக் கொண்டானா? துப்பாக்கிகளையும் தோட்டாக்களையும் மனித உடல்கள் எத்தனை நேரம் தான் எதிர்க்க முடியும். அவனுடைய இதயத்தில் மெல்லிய திகில் தோன்றத் தொடங்கியது. அந்த வெள்ளையனின் துப்பாக்கிக்கு அவன் பலியாகிப் போனால், அவனுடைய மனைவி, மான் போன்ற கண்கள் கொண்ட அன்புத் துணைவி என்ன ஆவாள்? இன்னும் பிறக்காத அவனுடைய குழந்தை? கண்ணார ஒரு முறையாவது தன் குழந்தையைக் காண்பானா? தன்னைப் போலன்றி அவன் சுதந்திர பாரத தேசத்தில் பிறப்பெடுப்பானா?
காதுகளைக் கிழித்த தோட்டாக்களின் சத்தம். முழக்கங்களின் நடுவில் “ஹா, ஹா” என்று ஆர்ப்பரிப்பு. தொடை தட்டுதல்கள், வந்தேமாதரம் முழக்கங்கள். ஆ, இதென்ன? எரியும் இருப்புத் துண்டு அவனுடைய வலது கையைத் துளைத்துச் சென்றது. அவனுடைய இருப்பைக் காட்டும் மிக முக்கியமான உடல் உறுப்பு கை. விசித்திரமான உணர்வாக இருக்கிறதே. கடுமையான வலியோடு உடல் துடிதுடித்தது. ஒரு கண நேரத்தில் எல்லாம் முடிந்து போனது.
ஆஹா, எத்தகைய ஓய்வு. குளத்தில் மிதக்கும் மலரைப் போல அவனுடைய மனம் சுகத்தையளிக்கும் நிசப்தத்தை உணர்ந்தது. குளிர்ச்சியான வெளிச்சம். ஓய்வு. களைப்பாறுதல். சுகமாக இருந்தது.
குளம் மெதுவாக நதியாக மாறி முன்னோக்கிப் பாயும் அனுபவம். மீண்டும் பயணம். பசுமையான கிராமம். பழமையான ஓட்டு வீடு. அதன் சுற்றுப்புறத்தில் ஏனோ ஏகப்பட்ட ஜனங்கள். முரட்டுப் புடவைகள், தோய்க்காத வேட்டிகள், சோர்ந்து போன முகங்கள். என்ன நடந்ததென்று அத்தனை சோகம்? நடந்ததை அவன் அறிவான். நேற்றும், அதற்கு முந்தைய நாளும் நடந்த சம்பவங்களைப் போலவே தினசரி பிரயாணத்தில் இதெல்லாம் அவன் கண்ணுக்குப்படுவது விந்தையாகத் தோன்றியது. ஆர்வம், புதுமை, விருப்பமின்மை, அச்சம், பற்றின்மை இப்படிப் பல உணர்ச்சிகள் ஒன்றாக எழும்பின.
அவன் இவ்வாறு ஒரு பார்வையாளனாக இருப்பது கனவு அல்ல அல்லவா?
அவனுக்கு எல்லாம் தெரிந்து விட்டாற்போலிருந்தது. வாயிலில் கூடிய அவனுடைய தந்தையின் வயதுள்ள விவசாயிகள், வெளிறிய முகத்தோடு மின்சாரம் தாக்கியவனை போல மேற்பூச்சு உதிர்ந்த சுவரில் சாய்ந்து கொண்டு நிற்கும் அந்த இளைஞன் யார்? அவன்தான். அன்று இன்டர்மீடியட் தேர்வு எழுதிவிட்டு வந்திருந்தான். விடுமுறை நாட்களை நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பியவனுக்கு வாழ்க்கைப் பயணத்தில் களைத்துப் போய் நிரந்தரமாக விடுமுறை எடுத்துக் கொண்ட தந்தையின் உடல் தென்பட்டது. கடன் தொல்லை தாங்க முடியாமல் விவசாயியான என் தந்தை தற்கொலை செய்து கொண்டார். வீட்டிற்குள்ளிருந்து வெளிப்பட்ட மெல்லிய விசும்பல்கள். திடீரென்று ஒரேயடியாக வெடித்தெழுந்த அழுகைகள். அம்மாவின் இதயம் வெடித்து விடுமோ என்று அச்சமாக இருந்தது. ஏன் இப்படி நிகழவேண்டும் என்ற ஆத்திரம். யார் மீதோ வெறி, பகை. உறைந்துபோன துயரம். நுரையீரலில் இருந்து வெளிவராத கபத்தைப் போல, கண்ணீரின் வடிவத்தில் வெளியில் பாய்ந்து வரும் துன்பம். பகலிரவு வேறுபாடின்றி கடனை வசூலிக்கத் துன்புறுத்திய கடன்காரர்கள்.
கார்மேகத்தைப் போலச் சூழ்ந்த அழுத்தமான வேதனை. இருண்ட எதிர்காலம். இரவும் பகலும் வயலில் சிரமப்பட்டு பயிர் விளைவித்த அப்பாவின் வாழ்க்கை, அறுவடைக்கு முன்பே நெருப்பில் எரிந்து சாம்பலானது. அவனுடைய மேற்படிப்பு ஆசைகள் அனைத்தும் இனி கனவே. வெறும் பொய்யே. மூத்த மகனாக வீட்டுப் பொறுப்பு இனி அவனுடையதே. அந்தக் கடன்களும் அவனுடையவையே. இந்தத் துயரத்தை விழுங்கி விட்டு, அக்கா, தம்பிகள், அம்மா எல்லோரோடும் சேர்ந்து பயணத்தைத் தொடரவேண்டும். அரசாங்கம் அறிவித்த உதவிக்காக எதிர்பார்ப்பு, பிணத்தைக் குதறித் தின்னும் கழுகுகளைப் போல அரசு உதவியை நடுவில் பறித்துச் செல்லக் காத்திருக்கும் அதிகாரிகள், வரம்பற்றக் காத்திருப்பு, விரட்டல்கள், அவமதிப்புகள்.
பெண்ணை தெய்வமாகப் போற்றும் பண்பாடுள்ளவரா நாம்? சாமந்திப் பூவைப் போல களையோடிருக்கும் அக்காவை எப்போது பார்த்தாலும் துன்புறுத்தும் கீசகனைப் போன்ற கடன்காரரை, பதினாறு வயதேயான அவன் எப்படி எதிர்க்கப் போகிறான். காரிருளில் வெளிச்சத்தைத் தேடி ஆறு வாரப் போராட்டம். கடைசியாக எல்லோரும் சேர்ந்து வெறுமையாகச் சிரித்தபடி பாயசம் உண்டார்கள்.
“ஐயோ, மானவ், எதாவது வழி கிடைக்காமல் போகாது. அவசரப்படாதே. எல்லாவற்றையும் விட்டு விட்டுப் புது இடத்திற்கு ஓடிப்போ. ஏதாவது ஒரு வேலையைத் தேடிக்கொள். தற்கொலை எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு அல்ல” அவன் வேண்டிக் கொண்டான்.
இரவு மணி பத்தைத் தாண்டியது. பூச்சி மருந்து கலந்த பாயசம் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. பொறுக்க முடியாத வயிற்று வலி. தம்பிகளின் அழுகை, ஒப்பாரி. அக்காவின் முனகல்கள். வலி தாங்காமல் தரையில் எல்லோரும் விழுந்து புரண்டார்கள். எல்லோர் வாயிலிருந்தும் நுரை வழிந்தது. மரண தேவனின் குளிர்ந்த கரங்களின் அரவணைப்புக்காக பரிதவிப்பு. அவன் கருணை புரிவானா? “மரணதேவா, இந்த மானவிடம் தயவு காட்டு. விடுதலை கொடு”. அந்தத் துன்பத்தைக் காண இயலாமல் பிரார்த்தனை செய்யும் அவன் யார்? இதெல்லாம் என்ன? இன்னுமும் இந்த காலராத்திரி விடியவில்லையே. அனைவருடைய வாழ்க்கையும் அநியாயமாக முடிந்து போனது.
அப்பாடா. எத்தனை ஆறுதல். இனி கவலை இல்லை. குளிர்ந்த காற்றில் மிதக்கும் அவனுக்கு உடல் இல்லை. நினைத்த உடனே எங்கு வேண்டுமானாலும் எந்தவிதமான முயற்சியுமின்றி அவனால் போக முடியும். அவ்வாறு இலக்கின்றி எத்தனை காலம் அலைந்தானோ, தெரியாது.
குளிர்ச்சியாக விரிந்த இருளில் அங்கங்கே வெண்ணிற மின் விளக்குகளின் வெளிச்சம். அழகான பூங்காவில் இசையோடு கூடிய ஊற்றுகளை ரசித்தபடி, அமர்ந்திருந்த அவனை மானவ் பார்த்தான். புன்னகையோடு அவன் அருகில் இருந்த பெண் அவனுடைய மனைவியாக இருக்கலாம். ஆமாம். ஆழமான அவர்களுடைய அன்பை அவனுடைய மனம் புரிந்து கொண்டது. மகிழ்ச்சியளிக்கும் அந்தச் சிரிப்பு அவனுடைய மனமெங்கும் வெண்ணிலவாக விரிந்தது. அவளுடைய தோளின் மேல் அவன் கை சுற்றி வளைத்தது. அவள் மடியில் பச்சை குழந்தை ஒன்று கொஞ்சியது. நெருக்கம் வளையம் போல அவர்களைச் சுற்றியணைத்தது. அவர்களிருவரும் அணைந்து எரியும் அந்த தீபங்களைக் குழந்தைக்குக் காட்டி, இசைக்கு ஏற்ப தலையை அசைத்து மகிழ்ந்தனர். அந்தப் பாசமான உறவைத் தொலைவிலிருந்து கண்டவனுக்கு ஏனோ ஏதோ கவலை. குழந்தையின் முகத்தில் ஒளியைப் பார்க்கும் அந்த தந்தை அவனே அல்லவா? தன்னைத் தானே கவனித்துத் தன் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டு, இந்தப் பிறப்பு, இறப்பு என்னும் சக்கரத்தைக் காண்பது அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஏனிந்த கவலை? எதைப் பற்றி? அதோ அந்தப் பக்கத்தில் இருக்கும் பையில் வெடிப்பதற்குத் தயாராக இருக்கும் வெடிகுண்டு. யாரோ வெறியன் அதனை அங்கு விட்டுவிட்டு திருட்டுப் பார்வையோடு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
ஒவ்வொரு கணமும் ஒரு யுகமாகக் கழிந்தது. பெரும் குண்டு வெடிப்பு. அவனுடைய உடல் ஒரு நொடி நேரம் துடிதுடித்தது. அவ்வளவுதான். அதற்குப்பிறகு நடந்தது எதுவும் அவனுக்குத் தெரியாது.
ஆழ்ந்த இருளில் மீண்டும் பயணம். ‘மரணம் ஒரு கமா மட்டுமே’ என்றார் ஒரு கவிஞர். அந்தச் சொற்கள் உண்மைதான். உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் ஏனிந்த பாதுகாப்பின்மை? எத்தனை காலம் இந்த எல்லையற்ற பிரயாணம்? ஏன் இந்த நிலையற்ற தன்மை? எதற்காக இந்தத் தேடல்? எதை அடைந்தால் திருப்தி கிடைக்கும்?
சற்று நேரத்திற்குள் குளிர்ச்சியான வெளிச்சம் பரவிய இடத்தை அடைந்தான். கவலை என்றால் எப்படி இருக்கும்? பயம் என்றால் எப்படி இருக்கும்? எல்லாம் மறந்தே போனான். காலத்தோடு கூட முன்னோக்கிப் போகிறான். இது தான் முன்னேற்றமா?
உலகமே ஒரு சிறிய கிராமமாகி விட்டது. எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் எளிதாகப் பயணிப்பது சாத்தியமாகி விட்டது. திருட்டு பயம் இல்லாமல் பலவித பாதுகாப்பு அமைப்புகள் ஏற்பட்டன. எத்தனை உயரமானாலும் ஒரே கணத்தில் கொண்டு சேர்க்கும் எலிவேட்டர்கள், வழி தவறி விடுவோமோ என்ற சந்தேகம் இல்லாமல் அமைத்த ஜி.பி.எஸ். பொருத்திய வாகனங்கள். கொடிய விலங்குகளின் அச்சத்தை மறந்து போய் எத்தனை காலமாயிற்று? வீடுகளிலும் அலுவலகங்களிலும் எத்தனை வித நவீன வசதிகள்? ஆஹா, மானவ், கவனித்தாயா, எத்தனை இன்பமான வாழ்க்கை.
தொண்ணுற்று ஒன்பதாவது மாடியில் வேலையை முடித்து விட்டு, உடலைச் சோம்பல் முறித்துக் கொண்ட மானவ், பார்க்க நல்ல அழகனாக இருந்தான். நீளமாக வளர்த்த முடி. நாகரிகமாக அணிந்த உடைகள். தன் கேபின் கதவை மூடிவிட்டு வாசலை நோக்கி நடந்தான். கண்களைப் பார்த்து மனிதனை அடையாளம் காணும் கருவியின் முன்னால் ஒரு நொடி நேரம் நின்று முகத்தைக் காட்டினான். திறந்துகொண்ட கதவின் வழியே எலிவேட்டரிடம் வந்தான். மிக உயர்ந்த நிலையை அடைந்த விட்ட கர்வம். மனமெங்கும் ஒரு மிதப்பு. அதோடு கூட ஏதோ ஒரு தவிப்பு.
சற்று நேரத்தில் கேட்டைத் தாண்டிச் செல்லும் காரில் அவனோடு கூட மேலும் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தார்கள். குதிரைகளையும் மகுடங்களையும் துறந்து மாடர்ன் உடையில் செல்லும் இளவரசர்களைப் போலிருந்தார்கள். எல்லார் கண்களிலும் எல்லாம் கிடைத்து விடுகின்ற சலிப்பு. ‘போரிங்’ உணர்வு. அவர்கள் அவனிடம் பேசுவது அவனுக்குப் புரிந்தது. புரியாமல் என்ன? அவன் மானவின் ஆத்மா தானே. அடடா. அது எப்படி சாத்தியம்?
“டேய், நம் ஸ்போர்ட்ஸ் தினத்தை இன்றைக்கு ஏன் வைத்தேன் தெரியுமா?” அவனருகில் அமர்ந்திருந்த சுருட்டை முடி இளைஞன் ப்ரீதம் கேட்டான்.
“தெரியுண்டா. ஏப்ரல் ஒண்ணாந்தேதி இல்லையா” அலட்சியமாக பதில் சொன்னான் அவன்.
“அதுக்கில்லடா, முட்டாள், இந்த ‘டேர் டெவில் ஸ்போர்ட்ஸ்’ தோன்றிய தினம் இன்று”.
“ஓ, அப்படின்னா, இன்று பர்த் டே செலிப்ரேஷன்னு சொல்லு” மீதி இருந்த மூவரும் மெலிதாக சீட்டி அடித்தார்கள்.
“1979 ல ஏப்ரல் ஒண்ணாந்தேதிதான் ‘பம்ஜி ஜம்ப்பிங்’ பிறந்தது. நம்மளைப் போல நான்கு பேர் ‘டேன்ஞ்சரஸ் ஸ்போர்ட்ஸ் க்ளப்’ என்ற பெயரில் இருநூற்று ஐம்பது அடி உயரத்தில் இருந்து முதல் முறையா ‘பம்ஜி ஜம்ப்பிங்’ செஞ்சாங்களாம்” ஹாலிடே ஏற்பாடுகள் எல்லாம் செய்த ப்ரீதம் உற்சாகமாகக் கூறினான்.
“சரிடா. ஹிஸ்டரி எல்லாம் யாருக்கு வேணும்? இதோட ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்ஸ் என்ன?” பின் இருக்கையில் குண்டாக அமர்ந்திருந்த ‘பொட்டேட்டோ’ கேட்டான்.
“எடை முப்பத்தைந்து கிலோவுக்கு மேல் இருக்கணும். வயசு பத்துக்கு மேல் இருக்கணும். அவ்வளவுதான்”.
ப்ரீதம் முடிக்கும் முன்பாகவே, “வெயிட் ‘அப்பர் லிமிட்’ சொல்லுடா, டேய். நம்ம ‘பொட்டேட்டோ’வுக்கு ப்ராப்ளம் வரக் கூடாதில்ல?”.
டோனியின் சொற்களைக் கேட்டு கொல்லென்று எல்லோரும் சிரித்தனர்.
“சரிடா, ரிஸ்க் பத்தி சொல்லுடா ‘லில்லிபுட்’” என்று கேட்டான் பொட்டேட்டோ.
“டேய், ரிஸ்க் இல்லாட்டா த்ரில் ஏதுடா?” சிரித்தான் ஆக்சிலேட்டரை அழுத்தியபடி.
“சரியாச் சொல்லுடா டோனி” கேட்ட பொட்டேட்டோவின் முகத்தில் லேசாக பயம் வெளிப்பட்டது.
“என்ன வேணா நடக்கலாம்டா, மச்சான். இடுப்பு உடையலாம். ஜாய்ன்ட்ஸ் டிஸ்லொகேட் ஆகலாம். உடம்புக்கும் கண்ணுக்கும் காயம் படலாம். எலாஸ்டிக் ரோப் கட்டுவாங்க இல்லையா? அதனால் ‘ரோப் பர்ன்’ ஏற்படக் கூடிய வாய்ப்பு இருக்கும். இதெல்லாம் கால்குலேட் செஞ்சா அட்வென்ச்சருக்கு யாருமே போக மாட்டாங்கடா” ப்ரீதம் அலட்சியமாக பதிலளித்தான்.
டோனி உடனே, “பொட்டேடோ மாதிரி எடை அதிகமிருக்கவங்களுக்கு ‘ரோப்’ ரொம்ப இழுத்துக்கிட்டு தரையில் இடித்து, மூளை தேங்காய் போல உடையலாம் இல்லையாடா?”’ என்றான்.
எல்லோரும் பக்கென்று சிரித்தார்கள்.
கேட்டுக் கொண்டிருந்த அவனுக்கு திகிலாக இருந்தது. மானவ்! உனக்கு ஏன் இப்படிப்பட்ட வேலைகள்? யாராவது தெரிந்தே கொள்ளிக் கட்டையால் முதுகு சொறிந்து கொள்வார்களா? பாதுகாப்புக்காக பல யுகங்களாகத் தவித்த அவன் ஏன் இன்று பயம் ஏற்படுத்தும் விளையாட்டில் நூற்றுக்கணக்கான டாலர் செலவு செய்து பங்கு கொள்ள வேண்டும்? எல்லையற்ற காலத்திலிருந்து மனிதனின் ஏக்கம் பாதுகாப்பு கருதியே அல்லவா? சுகங்களும் வசதிகளும் கிடைத்தவுடன் அவனிடம் இத்தனை சலிப்பு ஏன் ஏற்படவேண்டும்?
இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது? ஒரே மாதிரி சலிப்பூட்டும் வாழ்க்கையிலருந்து மனம் ஒரு மாற்றத்தை நாடுகிறது. ஒரு த்ரில்லுக்காக. நரம்புகளில் ‘அட்ரீனல்’ ஓட்டம் பிடித்து ஓடுவதற்காக. அது ஒரு ‘ஹை’. அது இயல்பாக கிடைக்காது என்பதால் செயற்கையாகத் தயாரித்துக் கொள்கிறார்கள். இல்லாத ஆபத்தை விலைக்கு வாங்கி அதில் வெற்றி பெற்ற அனுபவத்தைப் பெற வேண்டுமென்று முயலுகின்றனர். மானவ், உன் தவிப்பு வியப்பை அளிக்கிறது. பல கேள்விகளை எழுப்புகிறது.
உயரமான மலைச் சரிவை அடைந்த அந்த நால்வரில் தன்னைத் தான் பார்த்துக் கொண்டான் முன்பின் அறியாதவனைப் போல.
அவனுடைய குதிகால்களில் எலாஸ்டிக் கயிறு கட்டினார்கள். உயர்ந்த சிகரத்தின் மேலிருந்து அவனைக் கீழே விட்டார்கள். அந்த நேரத்தில் அவன் அவனாக இல்லை. உடல் முழுவதும் ஜிவ்வென்று ஓடும் சூடான ரத்தத்தோடு அவனுடைய இயல்பான மனநிலைக்கு மாறாக இருந்தான். உணர்ச்சிப் பெருக்கால் இதயம் அடித்து கொள்ளும் வேகம் திடீரென்று அதிகரித்தது. அத்தனை உயரத்திலிருந்து அவனுடைய உடல் காற்றில் தலைகீழாகத் தொங்கியபோது தலை தரையில் இடித்து உடைந்து விடுமோ என்ற பயம் முதுகெலும்பில் சரசர வென்று ஊர்ந்தது. அதற்குள் குதிகாலில் இறுக்கிக் கட்டியிருந்த எலாஸ்டிக் இழுவை நாடா அவனுடைய உடலை திடீரென்று நிறுத்தியது. அவனுடைய இதயத்தின் ஓசை அவனுக்கே கேட்டது. எலாஸ்டிக் இழுவை நாடாவோடு சேர்ந்து உடல் இன்னும் கீழே இறங்கியது. ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு யுகமாகக் கடந்தது. ஊமையாகிப் போன தொண்டையில் இருந்து ஏதோ கூக்குரல் வெளிவந்தது. அவனுடைய காதுகளுக்கு அது விகாரமாகக் கேட்டது. கீழே இறங்கிய உடல் தரையைத் தொடும் முன்பாக மீண்டும் ஆகாயத்திற்கு இழுக்கப்பட்டது. அவனுடைய வயிற்றின் தசைகள் பள்ளத்தில் நழுவி விழுந்தாற் போலிருக்கையில் அவனுடைய உடல் மட்டும் வேகமாக மேலே செல்வது பயங்கரமான அனுபவமாக இருந்தது. எத்தனை வேண்டாம் என்று நினைத்தாலும் நிற்காமல் அவனுடைய உடல் நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் மேலும் கீழுமாக ஊசலாடியது. கால்களுக்குக் கட்டிய கயிறு தான் ஒரே ஆதாரம். தலையின் நரம்புகள் கிழிந்து விடுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. நிற்காமல் தொடர்ந்த அவனுடைய கூக்குரல் அவனையே பிளந்து விடுவது போன்ற உணர்வு. அவ்வளவுதான். அவனுக்கு அதன்பிறகு நடந்ததெல்லாம் எதுவும் தெரியவில்லை. அவன் சுயநினைவை இழந்து விட்டான் போலும். சூழ்ந்த இருளில் மூச்சு முட்டி வியர்வை வழிந்தது. ஏதேதோ குரல்கள் மெதுவாகக் கேட்டன.
குளிர்ந்த காற்று வீசியது. அவனுடைய உடலின் மேல் யார் யாருடைய ஸ்பரிசமோ தெரிந்தது. மனத்தில் இனிமையான பாதுகாப்பு உணர்வு. பழக்கமான குரல் ஒன்று அவனை அழைத்தது. அவன் மெதுவாகக் கண்களைத் திறந்தான்.
ஹா, அவன் இன்னும் உயிரோடிருக்கிறான். உண்மையாகவே. நரம்புகளில் எல்லாம் வெற்றியின் கொண்டாட்டம். எதைச் சாதித்தான் என்று புரியவில்லை.
“மானவ், மானவ்? உனக்கு என்ன வேண்டும்? எதற்காக இந்த தவிப்பு?”
அவன் அவனோடு கலந்து விடும் முன்பு மௌனமாக வினவினான். இதே கேள்வியை இதற்கு முன்பும் கேட்டாற்போல் ஞாபகம்.
“கொடிய விலங்குகளிடமிருந்தும், இயற்கைச் சீற்றங்களில் இருந்தும் தப்புவதற்காக இவ்வாறு வீடு வாசலை ஏற்பாடு செய்து கொண்டாய். பலவிதமான கொடிய ஆயுதங்களை வடிவமைத்துக் கொண்டாய். உணவுக்காக வயலும் தோட்டமும் பெற்றாய். திருடர்களிடமிருந்து பாதுகாப்புக்காக செக்யூரிடி அமைப்பும், சுகாதாரத்திற்காக மருந்துகளும் சிகிச்சைகளும் கண்டுபிடித்தாய். வாழும் காலத்தை அதிகரித்தாய். தொலைவுகளைக் குறைத்தாய். உயரங்களை விட உயர்ந்தாய். இத்தனை யுகங்களாக நீ எதற்காகப் பாடுபட்டாயோ அது கிடைத்து விட்டால் நீ திருப்தியோடு வாழ்வாயா? நீ விரும்பியதெல்லாம் இந்த நிமிடத்திலேயே அடையும் நிலை வந்தால் நீ என்ன ஆவாய், மானவ்?”.
விழிப்பு வந்து கொண்டிருந்த மானவின் காதுகளில் சில கணங்கள் அந்தக் கேள்வி எதிரொலித்தது. மெதுவாக அவனுக்கு முழு நினைவு வந்தது. மீண்டும் அவனுடைய ஓய்வில்லாத பயணம் தொடங்கியது.
