
1
வீடடைந்ததும்
தன்னுடைய சீருடையை கழட்டி
ஆணியில் மாட்டுகிறார் அப்பா
கனிந்து
வீடு முழுதும்
படர்கிறது
தொழிற்சாலை
2
முற்றத்தில் சாவகாசமாய்
கால்நீட்டி
அமர்ந்திருக்கும்
பாட்டியோடு
விவாதித்துக் கொண்டுள்ளது
இன்று நேரத்துடனே
தாழ்வாரம் வரை வந்துவிட்ட
வெயில்.
3
முன்பின் தெரியாதவர்
சாலை சந்திப்பில்.
எனை
காத்திருக்கச் சொல்லியிருக்கிறார்
என் இருப்பின்
பிரக்ஞையற்று
கடந்து செல்லும்
எல்லோரிடத்தும்
முன்பின் தெரியாத
அவர்
பயணித்துக் கொண்டேயிருக்கிறார்.
4
தூவானத்தில்
அகல்இலை குடைபிடிக்கிறாய்
வடிகிறது
வானம்.
5. ஒளியிலே…..
கைப்பிடித்து
நீண்ட தொலைவு
அழைத்துச்சென்றுவிட்டது
பாலபுத்தனின் புன்னகையோடு
மேஜையின்மீதிருந்த
புத்தகம்…
சட்டென மின்சாரம் துண்டிக்கப்பட
பாலபுத்தனை காணவில்லை
தேடிச்சிறு மெழுகுவர்த்தியொன்றை
ஏற்றுகிறேன்
வகைதொகையில்லாது
வளர்ந்து
அறையெங்கும்
ஆடிக்கொண்டுள்ளான்
புத்தன்.
