Site icon சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

ஏ.ஏ. மில்ன்: பூ என்ற கரடியை உலகிற்கு பரிசாக வழங்கியவன்

குழந்தைகளுக்கான கவிஞர்

குழந்தைகள் இலக்கியத்தில் ஏ.ஏ. மில்ன் என்கிற பெயர் வெறும் எழுத்தாளராக மட்டுமல்ல, ஒரு மௌனமான மகிழ்ச்சியின் அடையாளமாகவும் திகழ்கிறது. அவரது மகன் கிரிஸ்டோபர் ராபினுக்காக எழுதப்பட்ட அந்த எளிய கதைகள் தான், தலைமுறைகளை கடந்தும் உலகமெங்கும் அன்பை குவித்தன.

1882-ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த மில்னின் குடும்பம் புத்தகங்களால் நிரம்பி நிறைந்திருந்தது. கேம்பிரிட்ஜில் படித்துவிட்டு பஞ்ச் பத்திரிகையில் எழுதியதும், அவர் படிப்படியாக சிறந்த எழுத்தாளராக பரிணமித்தார். ஆனால் விதி அவருக்கு வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தது — அதில் ஒரு கரடி, ஒரு சிறுவன், பேசும் விலங்குகளுடன் கூடிய ஒரு கனவுக் காடு இருந்தது.

1926-இல் முதன்முறையாக வெளிவந்த வின்னி த பூ அன்றே குழந்தைகளின் இதயத்தில் இடம்பிடித்தது. பூ, பிக்லெட், ஈயோர், டிகர் உள்ளிட்ட பாத்திரங்கள்  சந்திக்கும் எளிமையான சம்பவங்கள் நம்மை குழந்தைகளின் விழிகளால் உலகத்தை பார்ப்பதற்காக அழைக்கின்றன. நண்பர்கள் நட்பு, சிறுவயதின் இனிமை, மற்றும் கனவுகளின் மேஜிக் — இவை அனைத்தையும் மில்ன் மென்மையாக கற்றுக் கொடுத்தார்.

மில்னின் கவிதைகள் கூட அவ்வளவு இனிமையானவை. When We Were Very Young மற்றும் Now We Are Six என்ற தொகுப்புகளில் உள்ள கவிதைகள், எளிய வரிகளால் குழந்தைகளின் கனவுகளை பேசுகின்றன. “Vespers” (தூங்கும் முன் ஓர் ஜெபம்), “Buckingham Palace” (ராணி அரண்மனையின் காவலர் மாற்றம் பற்றி) மற்றும் “Disobedience” (“James James Morrison Morrison…”—என்பதை  சொல்லும் போது கூட நம்மை சிரிக்க வைக்கும்!) போன்ற கவிதைகள் மில்னின் மொழித்திறனையும், குழந்தையின் மனதைப் பிடிக்கிற திறமையையும் காட்டுகின்றன.

பூ கதைகள் வெறும் பழைய நினைவுகளே என்று எண்ணிவிட முடியாது. அவை நமக்கு மெதுவாக நினைவூட்டுகின்றன — சற்று நின்று பார்க்க, சிரிக்க, சுற்றுப்புறத்தைக் கவனிக்க, குழந்தைப் பார்வையில் வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்று. நூல்களில், ஏ.ஏ. மில்ன் உலகிற்கு மூளையற்ற ஒரு கரடியைக் கொடுத்தார் — ஆனால் அதன் மூலம், அந்த கரடியால் உலகம் நிறைந்தது இதயத்துடன்!

மில்ன்  முதல் உலகப்போரிலும் இரண்டாம் உலகப் போரிலும் பணி புரிந்தவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்ற பின்,  ‘பன்ச்’ பத்திரிக்கையில் நகைச்சுவைப் பாடல்களும் வேடிக்கையான கட்டுரைகளும் எழுதினர். இந்த கால கட்டத்தில் 18 நாடகங்களும் மூன்று புதினங்களும் படைத்தார். பிரித்தானிய திரைப்படத்துறை அரும்பிக் கொண்டிருந்த  காலத்தில், மினர்வா நிறுவனத்திற்காக நான்கு திரைப்படக் கதைகள் எழுதினர்.

 2003இல் நடைபெற்ற பி பி சியின் பெரும் வாசிப்பு தேர்தலில் அவரது புகழ்பெற்ற படைப்பான ‘வின்னி த பூ’ ஏழாவது இடத்தைப் பிடித்தது. 2006இல் ஹாலிவுட்டின் புகழ் நடைபாதையில் அது நட்சத்திர அந்தஸ்து பெற்றது. அவரது கதைகள் மற்றும் ஓவியர் ஷெபர்ட்டின் படங்கள் மூலம் பிரபலமான ஆஷ்டவுன் வனப்பகுதியில் அவரைக் கவுரவப்படுத்தும் விதமாக கல்வெட்டு ஒன்று 1979இல் நிறுவப்பட்டது. ஆஷ்டவுன் காடு குறித்து  ‘அந்தக் காட்டின் மாய உலகில் ஒரு சிறுவனும் அவனது கரடியும் எப்போதும் விளையாடிக் கொண்டிருப்பார்கள்’ என்று மில்ன் எழுதினர்.  

சோகம் என்னவெனில் மில்னும் அவரது இணையரும் அவரது மகனிடமிருந்து பிரிந்து வாழ வேண்டிவந்தது. தன்னுடைய இளமைக்காலத்தை தன்னுடைய தந்தை அவருடைய படைப்புகளில் பயன்படுத்தியது  அவரது மகனை கோபப்படுத்தியது. மேலும் அவரது படைப்புகளால் பொதுமக்களின் பார்வையில் அவர் திணிக்கப்பட்டதையும் அவர் வெறுத்தார்.

குழந்தைகளின் உணர்வுகளை காட்டும் அவரது சில பாடல்களின் மொழிபெயர்ப்பை இப்போது பார்ப்போம்.

(தகவல்கள் விக்கிப்பீடியா,செய்யறிவு தளங்களிலிருந்து எடுக்கப்பட்டன.. பாடல்கள் poetry.com இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டன.)


விலங்கியல் பூங்காவில்

அங்கே
சிங்கங்களும் உறுமும் புலிகளும்
பெரிய ஒட்டகமும் இன்ன பிறவும்
இருந்தன.
எருது-எருமை – காட்டெருமை
எல்லாமும் இருந்தன.
சிறகு முளைத்த பெருங்கரடியும்
தம்மாத்தூண்டாய் ஒரு நீர் யானை,
கடுகாய் காண்டாமிருகமும்
ஆனால்
உயிரியல் பூங்கா போனபோது
நான் கொடுத்ததென்னவோ
யானைக்கு பன்கள்.

குழிமுயலும் முள்ளெலியும்
கூடவே
ஒரு கண்காணிப்பாளன் வீடும் கண்டேன்.
கூட்டமாய் ஆடுகள்.
துருவக் கரடி
விதவிதமாய் எலிகள்.
ஏதோ ஒன்று
வல்லாபோ என்று
அதுவும் இருந்தது.
ஆனால்
உயிரியல் பூங்கா போனபோது
நான் கொடுத்ததென்னவோ
யானைக்கு பன்கள்.

காட்டெருமையுடன் பேச முற்பட்டால்
பேதை அது ஒன்றும் புரிந்து கொள்வதில்லை.
செங்கால் நாரையுடன்
கை குலுக்கவும் முடியாது.
அதற்கு கைகலப்பு பிடிக்காது.
சிங்கங்களுக்கும் உறுமும் புலிகளுக்கும்
‘ நலமா ‘ என்று கேட்க வெறுப்பு.
ஆனால்
உயிரியல் பூங்கா போனபோது
நான் யானைக்கு பன்கள் கொடுப்பேன்.

                                                          **************

விலங்கியல் பூங்கா போவதென்பது குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மகிழ்வான ஒரு விஷயம். ஆனால் அதையும் வேடிக்கையாக சித்தரிக்கிறார் மில்ன். ஒரே இனத்தில் பல்வேறு விலங்குகளைப் பார்ப்போம். அதை எருமை,எருது, காட்டெருமை(biffalo-buffalo-bisons) என்றும் வாயில் நுழையாத பெயர் கொண்ட விலங்குகளை ‘வல்லாபோ’ என்று ஏதோ ஒன்று என்றும் நகைச்சுவையாக எழுதுகிறார். கரடிக்கு சிறகு முளைப்பது, சிறிய நீர் யானை, காண்டாமிருகம் போன்றவை குழந்தைகளின் வேடிக்கையான கற்பனை மனதை காட்டுகின்றன.

                 **************

ஊஞ்சல் பாட்டு

இதோ என் ஊஞ்சல்!
அதிலேறி மேலே போகிறேன்.
எப்போதுமில்லாத உயரம்.
கழனிகளின் அரசன் நான்.
நகரத்தின் தலைவன் நான்.
பூமிக்கு ராஜா.
வானத்து மன்னன்.
இதோ என் ஊஞ்சல்
அதிலேறி மேலே போகிறேன்.
இப்போது கீழே வருகிறேன்.

                                  **************

ஊஞ்சலில் ஆடும்போது குழந்தைகளுக்கு ஒரு பெருமிதம் வரும். தங்களை அரசர்களாக உணர்வார்கள். அதை படம் பிடிக்கிறது இந்தப் பாடல்.

                                 *************

வால்

சிங்கத்திற்கு வாலிருக்கிறது;
மிக அருமையான வால்.
யானைக்கும் வாலிருக்கிறது.
அதே போல் திமிங்கலத்துக்கும் கூட.
முதலைக்கும் குருவிகளுக்கும் இருக்கிறது.
என்னைத் தவிர எல்லாவற்றிற்கும்
வால் இருக்கிறது.

கையில் காலணா இருந்தால்
வாலொன்று வாங்குவேன்.
‘நான் வெச்சுப் பார்க்கிறேனே’
என்று கடைக்காரரிடம் சொல்வேன்.
யானையிடம் போய் சொல்வேன்
‘இதுதான் என் வால்’
எல்லாமும் என்னை சுற்றி நின்று
வேடிக்கை பார்க்கும்.

அதற்கப்புறம்
சிங்கத்திடம் வியந்து சொல்வேன்
‘அடடே உனக்கும் ஒரு வாலிருக்கிறது.
யானைக்கும் இருக்கிறது.
திமிங்கலத்துக்கு கூட.
இதோ பார்! அங்கே ஒரு முதலை.
அதற்கும் ஒரு வால்.
உங்கள் எல்லோருக்கும்
என்னைப்போல் வாலிருக்கிறது’

                                             ************

பிள்ளைகள் வாலை ஒட்டவைத்து விளையாடுவதை நல்ல கற்பனையுடன் விவரிக்கிறார். குழந்தைப் பருவத்தின் வேடிக்கை விழைவுகளை கூட அவர்கள் நல்ல பொழுதுபோக்காக மாற்றுவதை பார்க்கலாம்.

                                ***************

பிரார்த்தனை

படுக்கையின் கீழே
மண்டியிட்டிருக்கிறான் அந்தச் சிறுவன்
சின்னஞ்சிறிய கைகளில்
பொன்னிற தலை கவிழ்த்திருக்கிறான்.
உஷ்! உஷ்! யாரது சத்தம் செய்கிறீர்கள்?
கிறிஸ்டோபர் ராபின் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.

கடவுளே, அம்மாவை ஆசீர்வதியும்.
அப்படி சொல்வதுதான் சரி என்றறிவேன்.
வேடிக்கையாக இருந்தது இரவுக் குளியல்.
குளிர் என்றால் அப்படி ஒரு குளிர்
சூடு என்றால் அப்படி ஒரு சூடு.
ஓ! கடவுளே, அப்பாவை ஆசீர்வதியும்.
அதை நான் மறந்தே விட்டேன்.

விரல்களை கொஞ்சம் அகற்றி பார்த்தால்
கதவில் தொங்கும் பாட்டியின்
மேலங்கியை என்னால் பார்க்க முடியும்.
அழகான நீல வண்ணம் அது.
ஆனால் அதில் முக்காடு இல்லை.
ஓ! கடவுளே, பாட்டியை ஆசீர்வதியும்.
அவள் நன்றாயிருக்கட்டும்.

என்னுடயதில் முக்காடு இருக்கிறது.
படுக்கையில் படுத்து முக்காட்டை இழுத்து
தலையை மூடி விடுவேன்.
கண்களை மூடி கொஞ்சம் சுருண்டு படுத்தால்
நான் அங்கே இருக்கிறேன் என்றே
எவருக்கும் தெரியாது.

ஓ! கடவுளே,
இந்த அருமையான நாளைக்கு கொடுத்ததிற்கு
உனக்கு நன்றி.
இன்னும் ஏதாவது சொல்ல வேண்டியதிருக்கிறதா?
‘அப்பாவை ஆசீர்வதியும்’ என்று சொல்லிவிட்டேன்.
வேறு என்ன இருக்கிறது?
ஓ! நினைவுக்கு வந்துவிட்டது.
கடவுளே, என்னை ஆசீர்வதியும்.

படுக்கையின் கீழே
மண்டியிட்டிருக்கிறான் அந்தச் சிறுவன்
சின்னஞ்சிறிய கைகளில்
பொன்னிற தலை கவிழ்த்திருக்கிறான்.
உஷ்! உஷ்! யாரது சத்தம் செய்கிறீர்கள்?
கிறிஸ்டோபர் ராபின் பிராத்தனை செய்து கொண்டிருக்கிறான்.

                                            *************

இந்தப் பாடல் சிறுவர்களின் மனநிலையை காட்டுகிறது. பிரார்த்தனை செய்யும்போதும் அவர்களுடைய கவனம் அங்கங்கே அலைந்து கொண்டிருக்கும். மேலும் ‘அப்படி சொல்வதுதான் சரி என்றறிவேன்’ என்கிற வரிகளை பார்க்கும்போது, பிரார்த்தனையின் போது என்ன சொல்ல வேண்டும் என்று அவனுக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறதோ அதைத்தான் அவன் சொல்கிறான்; அவன் உணர்வுகளை சொல்வதில்லை. வேடிக்கையாக எழுதப்பட்டிருந்தாலும் குடும்பம், நம்பிக்கை மற்றும் நன்றிக்கடன் ஆகிய 20ஆம் நூற்றாண்டு பிரித்தானிய சமூக ஒழுங்குகளையும் சுட்டுகிறது இந்தப் பாடல்.

                                                  *************

மரியாதைக்காக

‘நலமா?’ என்று கேட்பவர்களிடம்
எல்லா நேரமும் சொல்வேன்
‘மிக்க நலம். மிக்க நன்றி. மகிழ்ச்சி’
‘நலமா?’ என்று கேட்பவர்களிடம்
எல்லா நேரமும் பதிலிறுப்பேன்.
‘மிக்க நலம். மிக்க நன்றி.
உங்களுக்கு இன்றய பொழுது எப்படி இருக்கிறது?’
எப்போதும் மறுமொழி கூறுவேன்.
அவர்கள் கேட்கும்போதெல்லாம்
மிகவும் மரியாதையாக கூறுவேன்.
ஆனால் சில நேரங்களில் தோன்றுகிறது
அவர்கள் கேட்காமலிருக்க மாட்டார்களா என்று.

                                        ***************

தெருவில் நடந்துபோகும்போது பார்த்தாலே தெரியும் நாம் கடைக்கு போகிறோம் அல்லது கோயிலுக்கு போகிறோம் என்று. ஆனால் சிலர் ‘ சவுக்கியமா? எங்கே கடைக்கா? கோயிலுக்கா ?’ என்று கேட்பார்கள். ‘அபியும் நானும்’ திரைப்படத்தில் இதை வைத்து ஒரு பாத்திரத்தையே உருவாக்கியிருப்பார் இயக்குனர்.. இத்தகைய சந்தர்ப்பங்களில் நமக்கு உண்டாகும் எரிச்சலை மில்ன் இந்தக் கவிதையில் காட்டியிருக்கிறார்.

                                              ***************

அவ்வளவுதான்

ஜானின் காலில்
பெரிய பிரமாதமான மழைக் காலணி
ஜானின் தலையில்
பெரிய பிரமாதமான மழைத் தொப்பி
ஜானின் மேனியில்
பெரிய பிரமாதமான மழை மேலங்கி.
அவ்வளவுதான்
(என்றான் ஜான்)

                                   ****************

குழந்தைகள் தங்களை பற்றி சொல்லும்போது ‘நான்’ ‘எனக்கு’ என்று சொல்லாமல் தன் பெயரையோ அல்லது பாப்பா என்றோ குறிப்பிடுவார்கள். மேலும் கதை சொல்லிக்கொண்டே போகும்போது ‘அவ்வளவுதான்’ என்பார்கள். இந்த இரண்டு இயல்புகளையும் கவிஞர் இதில் காட்டுகிறார்.

                                                 **************

நடுப்படி

பாதிப் படிகள் இறங்கியபின்
நடுப்படியில் அமர்வேன்.
அதைப் போன்றதொரு
படி வேறு எதுவும் இல்லை.
நான் கீழேயும் இல்லை;
மேலேயும் இல்லை.
ஆக
இங்குதான் எப்போதும்
இளைப்பாறுவேன்.
அங்கு
என் மனதுக்குள்
வேடிக்கை பலதும்
பொங்கி வரும்.

படிகளின் மத்தி
மேலும் இல்லை
கீழும் இல்லை.
அது
தோட்டத்திலும் இல்லை
ஊரிலும் இல்லை.
அது உண்மையில்
எங்கும் இல்லை
மாறாய்
அது வேறு எங்கோ இருக்கிறது.

                                       ***************

மில்ன் இந்தப் பாடலில் குழந்தையின் கற்பனையையும் அதே சமயம் சற்று தத்துவார்த்துவமாகவும் எழுதியிருக்கிறாராம். படிகளில் உட்கார்ந்து வேடிக்கையாய் பேசுவதும் கற்பனை செய்வதும் குழந்தைகளின் ஒரு பழக்கம்தானே! ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு இல்லை இல்லை அது அப்படி இல்லை என்று குழந்தைகள் சொல்வார்கள். இந்தப் பாடலின் இறுதி வரிகள் அதை நினைவு படுத்துகின்றன. இந்தப் பாடல் முகநூலில் English Literature என்கிற பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.

                                              ***************

கீழ்ப்படிதல்

ஜேம்ஸ் ஜேம்ஸ்
மாரிசன் மாரிசன்
வெதர்பி ஜார்ஜ் டப்ரி
அவன் வயது மூன்றுதான் என்றாலும்
தன் அன்னையை மிகுந்த அக்கறையுடன்
கவனித்துக் கொண்டான்.
ஜேம்ஸ் ஜேம்ஸ் தன் அன்னையிடம் சொன்னான்
“அம்மா” அவன் சொன்னான், அவன் சொன்னான்;
“நான் உடன் வரவில்லையென்றால்
எப்போதும் நீ நகரத்தின் எல்லைக்கு
போகக்கூடாது”

ஜேம்ஸ் ஜேம்ஸ் மாரிசனின் அன்னை
தங்க நிற ஆடை அணிந்து கொண்டாள்.
ஜேம்ஸ் ஜேம்ஸ் மாரிசனின் அன்னை
நகரின் எல்லைக்கு சென்றாள்.
ஜேம்ஸ் ஜேம்ஸ் மாரிசனின் அன்னை
தனக்குள் கூறிக் கொண்டாள்,
அவள் சொன்னாள்
“நகரத்தின் எல்லைக்கே என்னால் போக முடியும்.
தேநீர் நேரத்திற்கு திரும்ப வந்துவிட முடியும்”

ஜான் அரசன் ஒரு பிரகடனத்தை வெளியிட்டான்.
“தொலைந்து போனாரோ அல்லது திருடப்பட்டாரோ
அல்லது வழி தவறிப் போனாரோ
ஜேம்ஸ் ஜேம்ஸ் மாரிசனின் அன்னை
காணாமற் போனதாய் தெரிகிறது.
கடைசியாகப் பார்த்த போது
அவர் தாமாகவே இலக்கு இல்லாமல்
அலைந்து கொண்டிருந்தார்.
நகரத்தின் எல்லைக்கே போக முயற்சித்தார்.
கண்டுபிடித்து தருபவர்களுக்கு
நாற்பது பொற்காசுகள் பரிசளிக்கப்படும்”

ஜேம்ஸ் ஜேம்ஸ் மாரிசன் மாரிசன்
(ஜிம் என்று பொதுவாக அழைக்கப்படுபவர்)
தன்னைக் குற்றம் சொல்ல வேண்டாம் என்று
உறவினர்களிடம் கூறினான்.
ஜேம்ஸ் ஜேம்ஸ் தன் அன்னையிடம் சொன்னான்
“அம்மா” அவன் சொன்னான், அவன் சொன்னான்:
“என்னுடன் ஆலோசிக்காமல்
எப்போதும் நீ நகரத்தின் எல்லைக்கு
போகக்கூடாது”

ஜேம்ஸ் ஜேம்ஸ் மாரிசனின் அன்னை
அதற்கப்புறம் கேள்விப்படவேயில்லை.
ஜான் அரசன் வருத்தம் தெரிவித்தார்
ராணியும் இளவரசனும் அவ்வாறே.
(யாரோ என்னிடம் சொன்னார்கள்)
ஜான் அரசன் தனக்கு தெரிந்த ஒருவரிடம்
கூறினாராம்
“ஜனங்கள் நகரத்தின் எல்லைக்கே சென்றால்
யாரென்ன செய்ய முடியும்?”

(அப்படியானால் இப்போது மெதுவாக)
ஜே.ஜே
எம்.எம்.
வெ.ஜ.ட.பி
மூன்றே வயதானாலும்
தன் அ* மிகுந்த அ/க கொண்டார். ஜே.ஜே. தன் அ கூறினான்
“அ***, அவன் சொன்னான், அவன் சொன்னான்:
நீ-என்னுடன்-போகவில்லையென்றால்-
எப்போதும்-நகரத்தின்- எல்லைக்கு- போகக்கூடாது”

                                                     *************

இந்தப் பாடல் கீழ்ப்படிதல் என்பதை நகைச்சுவையாக கூறுகிறது. அதிலும் பெரியவர்கள் சிறியவர்களுக்கு கூறுவதை தலைகீழாக மாற்றி ஒரு சிறுவன் தன் தாயாருக்கு அறிவுரை கூறுவதாக காட்டுகிறார். ஒரு வேளை சிறுவர்களுக்கு இதை கதையாகக் கூறி தனியாக நெடும் தூரம் செல்ல வேண்டாம் என்பதை வலியுறுத்தலாம் என்கிறாரோ? அந்த சிறுவனின் பெயரை மீண்டும் மீண்டும் கூறுவது இனிமையாக இருக்கிறது என்கிறார் ஒரு விமர்சகர் (https://www.kith.org/vardibidian/2021/03/10/disobedience-by-a-a-milne/). சில இடங்களில் ‘அவன் சொன்னான், அவன் சொன்னான்’ என்பது, இறுதி பத்தியில் சொற்களை சுருக்கியிருப்பது போன்றவை பேச்சு வழக்கை அப்படியே கவிதையில் கொண்டு வருவது என்று எடுத்துக் கொள்ளலாம்; அல்லது விளக்கிக் கொண்டிருக்காமல் கவிதையை நம் போக்கில் ரசிக்கலாம்.

Exit mobile version