மூலம் : ஷெல் சில்வர்ஸ்டெயின்
தமிழாக்கம்: ஆர்.ரமணன்
வரிக்குதிரையாரே, வரிக்குதிரையாரே
உன் கருத்த உடலில் வெள்ளைக் கோடுகளா
இல்லை
வெள்ளை உடலில் கருப்புக் கோடுகளா ?
என்று கேட்டேன்.
ஓ சின்ன பையா! சின்ன பையா!
நீ கொஞ்சம் சேட்டைக்கார
நல்ல பையனா
இல்லை
கொஞ்சம் நல்ல குணம் கொண்ட சேட்டைக்காரனா?
கொஞ்ச நேரம் அமைதி காக்கும்
இரைச்சல் பையனா
இல்லை
கொஞ்சம் இரைச்சல் போடும்
அமைதியானவனா?
கொஞ்ச நாள் அழுகையுடன்
மற்ற நாளெல்லாம் மகிழ்பவனா
இல்லை
கொஞ்சநாள் மகிழ்ச்சி
மற்ற நாளெல்லாம் அழுவாச்சியாய் இருப்பவனா?
எப்போதும் சீராய் இருந்து
சில நாள்அசட்டை?
இல்லை
எப்போதும் அசட்டை
சில நாள் சீராய் இருப்பவனா?
இப்படி கேள்வி மேல் கேள்வி மேல்
கேட்டுக்கொண்டே இருந்தது வரிக்குதிரை.
இனிமேல் வரிக்குதிரையிடம்
அதன் வரிகள் பற்றி
நான் ஏன் வாய் திறக்கப் போகிறேன்?
“Zebra Question” by Shel Silverstein
இந்தப் பாடல் 1981இல் அவர் எழுதிய பிரபலமான ‘A light in the Attic’ என்கிற தொகுதியில் உள்ளது. ‘English Literature ‘ என்கிற முகநூல் தளத்திலிருந்து எடுத்துள்ளேன். இந்த தொகுதியில் உள்ள பாடல்கள் குறும்புத்தனத்திற்கும் கற்பனை வளத்திற்கும் பெயர் பெற்றவை; குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒரு சேர கவர்கின்றன என்கிறது அந்த தளம். நகைச்சுவையும் அதே சமயம் ஆழமான தத்துவார்த்த பார்வையையும் கொடுப்பவை.
இந்தப் பாடல் ஒரு பொருள் குறித்த நமது பார்வை, அடையாளம் மற்றும் சூழல் ஆகிய கருத்துகளை ஆய்வு செய்கிறது.
ஷெல்டன் ஆலன் சில்வர்ஸ்டீன் (செப்டம்பர் 25, 1930 – மே 10, 1999) ஒரு அமெரிக்க எழுத்தாளர், கார்ட்டூனிஸ்ட், பாடலாசிரியர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார். இல்லினாய்ஸின் சிகாகோவில் பிறந்து வளர்ந்தவர் சில்வர்ஸ்டீன். அவரது கருத்தப் படங்கள் பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.
ஒரு குழந்தைகள் எழுத்தாளராக, அவரது மிகவும் பாராட்டப்பட்ட படைப்புகளில் தி கிவிங் ட்ரீ , வேர் தி சைட்வாக் எண்ட்ஸ் மற்றும் எ லைட் இன் தி அட்டிக் ஆகியவை அடங்கும் . அவரது படைப்புகள் 47க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 20 மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றுள்ளன.
