Site icon சொல்வனம் | இதழ் 368 | 14 ஜூன் 2026

நான் ஆணையிட்டால்…

This entry is part 1 of 3 in the series நான் ஆணையிட்டால்

ஒன்று

மாவட்ட பள்ளிக்கூட நிர்வாகக் குழுவுக்கான தேர்தலில் ஆறாம் தொகுதிக்கு டெபரா போட்டியிடுகிறாள் என்று சூரனின் பள்ளித்தோழன் டாமினிக் தெரிவித்தபோது சரவணப்ரியாவுக்கு ஆச்சரியம். ஏற்கனவே இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட, அந்த வட்டாரத்தில் பிரபலமான வலதுசாரிக் கொள்கைகளைப் பெரும்பாலும் பின்பற்றும் ஜான் ஈசாவைத் தோற்கடிக்க அனுபவம் இல்லாத அவளால் முடியுமா?  

“அதனால், நீங்கள் மட்டும் அவளை ஆதரித்தால் போதாது. உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லாரையும் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் பெரிய உதவி, மிசஸ் நேதன்!” என்றான் டாமினிக். 

கடந்த சில ஆண்டுகளாக, கல்வி நிர்வாகக் குழு தேர்தலில் சரவணப்ரியா அக்கறை காட்டியது இல்லை. இம்முறை டெபராவுக்காக. 

“ஈசாவுக்கு மாற்றாக அவளுடைய கொள்கைகள்?” 

“முக்கியமாக, உடலுறவை அதிலும் வக்கிரமான உறவுகளை விவரமாக வர்ணிக்கும் புத்தகங்களுக்கு வகுப்பறைகளில் தடை செய்வது.” 

“அப்பட்டமான அந்த சித்திரிப்புகள் எழுதியவரின் கற்பனை வறட்சியைக் காட்டுவதாக என் எண்ணம். ஆனாலும், நூலகங்களில் இருந்து ஒட்டுமொத்தமாகப் புத்தகங்களை அகற்றுவது சர்வாதிகாரம் இல்லையா?”  

“உங்களுக்குத் தான் டெபராவைத் தெரியுமே. மொழியியல், வரலாறு இரண்டிலும் பட்டம் பெற்ற அவளுக்கு இலக்கிய ரசனை உண்டு.” 

டாமினிக்கின் மனைவி என்று இல்லை, சூரனுடன் கல்லூரியில் படித்தவள் என்பதால் திருமணத்துக்கு முன்பே சரவணப்ரியா அவளைச் சந்தித்திருந்தாள். 

அடங்கிய குரலில் எல்லாரிடமும் சுமுகமாகப் பேசும் டெபரா கூச்சலும் கூக்குரலும் குழிபறித்தலும் நிறைந்த அரசியலில் துணிந்து இறங்கியதற்குக் காரணம்? 

“போட்டியிடப் போவதாக டெபரா அறிவித்தபோது எனக்கே ஆச்சரியம். போக்கற்ற வேலை என்று அவளுக்குத் தடைபோடாமல் தேர்தலில் விழுந்து அடிபட்டு அவளே தெரிந்துகொள்ளட்டும் என்று விட்டுவிட்டேன்.”  

“நீ செய்தது புத்திசாலித்தனம்.”  

நீண்ட யோசனைக்குப் பிறகு, 

“டெபராவின் குடும்பத்தில் கட்டுப்பாடுகள் மிக அதிகம். என் வளர்ப்பு அப்படி இல்லை ” 

“சூரனை உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நடத்தியதில் இருந்தே தெரிகிறது.”  

“நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். சுதந்திர உலகத்தைப் பார்க்க அவளுக்கு விருப்பம் இன்னும் வரவில்லை.” 

“சிறுவயதுப் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும்.” 

“அத்துடன், கடந்த சில ஆண்டுகளாக ஒரு புதிய பாதிரி, டாக்டர் கெம்பீரன். தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்.” 

“வந்த புதிதில் அவரை உன் தந்தை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.” 

“மற்றவர்களுடன் சின்ன விஷயங்களில் கூட ஒத்துப்போகக் கூடாது, கத்தோலிக்கக் கொள்கைகளை மற்றவர்கள் ஏற்க வைப்பது கடவுளின் ஆணை. இப்படி ஒவ்வொரு பிரசங்கமும் முடியும்.” 

“அதாவது, சூரனும் நீயும் ஒருவர் காலை இன்னொருவர் மிதிக்காமல் நீண்ட காலம் நண்பர்களாக இருப்பது…” 

“அவருக்கு பிடித்தமானதாக இராது. டெபராவுக்கு அந்த எண்ணம் வந்திருக்கிறது. அதனால், வேறொரு சர்ச்சுக்கு மாறலமா என்று கூட யோசித்தேன்.” 

“அப்படிச் செய்வதில் வேறு பிரச்சினைகள். தேர்தல் போட்டி அவள் உலக நோக்கை விரிவாக்கலாம். பொறுத்துப் பார்!” 

ரு பள்ளிக்கூட வாரத்தின் முதல் காலை. சர்க்கரை குறைவான சீரியலைத் தின்ற ஸ்டெல்லா, 

“இந்த வாரம் ஹிஸ்பானிய கலாசாரத்தைக் கொண்டாடப் போகிறோம்” என்று அறிவித்தாள்.  

“எப்படி யெல்லாம்?”   

அதைத் தெரஸா விவரிப்பதற்குள் குழந்தையின் வீல். 

வெள்ளிக்கிழமை காலையில் தான் டெபராவுக்கு ஞாபகம் வந்து 

“ஹிஸ்பானிய பண்பாட்டை சிறப்பிக்க என்ன செய்தீர்கள்?”  

“இரண்டு புத்தகங்கள் படித்தேன்.”   

“எந்த இரண்டு?” 

“‘த ஸ்ப்ரிட் ஆஃப் டியோ ஃபெர்னான்டோ.’ ம்ம்ம்… ‘மரியா மொலினா அன்ட்டேஸ் ஆஃப் த டெட்‘. 

தாயின் அதிருப்தியைக் கவனித்த ஸ்டெல்லா, 

“ஆசிரியை நிறைய புத்தகங்களை மேஜையில் அடுக்கி எங்களை எடுத்துக்கொள்ளச் சொன்னாள். என் கையில் இந்த இரண்டும் அகப்பட்டது.” 

“சரி. அப்புறம்?”  

“இன்று பிற்பகல் ‘கோகோ’ படம் பார்க்கப் போகிறோம்.” 

“டிஸ்னியின் உயிரூட்டிய சித்திரப்படம்?” 

“அப்படித்தான் நினைக்கிறேன்.”  

டெபரா மனதின் ஆழத்தில் ஒரு சூட்டிழுப்பு. அது மேல் மட்டத்துக்கு வருமுன் கிடுகிடுவென ஆசிரியைக்கு ஒரு மின்-தகவல். 

– மிஸ் பால்சன்

‘கோகோ’ படம் பத்து வயது குழந்தைகளின் ரசனைக்கு அப்பாற்பட்டது. அதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சியும் ஆழ்துயரமும் அடையலாம் என்பதால் வகுப்பில் அதைக் காட்டுவது எனக்குச் சரியாகப் படவில்லை. என் அறிவுரைக்கு எதிராக நீ தீர்மானித்தால் ஸ்டெல்லா ‘கோகோ’ படம் பார்க்க அனுமதி மறுக்கிறேன். 

– டெபரா ரைமன்  

ஸ்டெல்லா பள்ளிக்கூடம் போனதும் அவள் வாசித்ததாகச் சொன்ன இரண்டு புத்தகங்களில் ஒன்றை எடுத்துப் பிரித்தாள். பக்கங்களை நிரப்பிய படங்களுக்கு நடுவில்… 

இன்று ‘டே ஆஃப் த டெட்

விழித்ததும் கல்லறை நிலத்துக்கு நடந்தோம். என் குடும்பமும் கூட நடந்ததால் எனக்குப் பயமே இல்லை. சென்ற ஆண்டு எங்களுடன் இருந்த என் பாட்டியும் என் தம்பியும் இந்த இடுகாட்டின் தரைக்குக் கீழே. 

இன்று என் தம்பிக்காக இங்கே வந்தோம். பிறந்த சில மாதங்களுக்குள் இறந்துவிட்டான். அவன் அழுகையும் சிரிப்பும் தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. எங்கோ போய்விட்டாலும் அவனை நாங்கள் மறக்கவில்லை என்று அவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவனும் நல்லபடியாக இருக்கிறான் என்று அங்கே இருந்து எங்களுக்குத் தகவல் அனுப்புவான். 

சந்தையில் பலவகை இனிப்புத் தின்பண்டங்கள், மெழுகுவர்த்திகள், விளையாட்டு சவப்பெட்டிகள், விதவிதமான எலும்புக்கூடு பொம்மைகள் – ஒன்று கிட்டார் வாசித்தது, இன்னும் இரண்டு கல்யாணம் செய்துகொண்டன. அப்புறம் அலங்கார மண்டையோடுகள்.  

வீட்டில் இரவு முழுக்க விழித்திருந்தோம். என் தந்தை ஒரு மெழுகுவர்த்தி ஏற்றிவைத்தார். அதன் பக்கத்தில் தம்பிக்கு ஒரு சாக்லேட் துண்டு, அவன் விளையாடிய ஒன்றிரண்டு பொம்மைகள். 

நாங்கள் பரம ஏழைகள். எங்களால் ஆனது இவ்வளவுதான். 

தம்பி! இதை ஏற்றுக்கொள்! 

திடீரென்று காற்று வீச, இலைகளின் மெல்லிய சலசலப்பு காதில் விழ, மெழுகுவர்த்தியின் சுடர் நடுங்கி ஒடுங்கி அணைந்துவிட்டது. 

ஆகா! தம்பி சந்தோஷமாக இருக்கிறான். 

எலும்புக்கூடு பொம்மைகள், இறப்பு, என்ன சோகம்! என்ன அவநம்பிக்கை! அலங்கார மண்டையோடுகள், சே! என்ன அருவருப்பு!

ஹிஸ்பானிய கலாசாரத்தைப் பெருமைப்படுத்தும் சிறுவர் புத்தகங்கள் எத்தனையோ. இந்த இரண்டை ஆசிரியை ஒதுக்கி இருக்கலாம். 

பிற்பகல் தெரஸா பள்ளியில் இருந்து திரும்பியதும் முதல் கேள்வி.  

“மற்றவர்கள் படம் பார்த்தபோது நீ என்ன செய்தாய்?” 

“நானும் சேர்ந்து பார்த்தேன்.” 

“நீ பார்க்கக்கூடாது என்று ஆசிரியைக்கு நான் தகவல் அனுப்பினேனே. அப்படியுமா?”  

“ஒரு புத்தகம் கொடுத்து நூலகம் போய் வாசிக்கச் சொன்னாள். நான் தான் மறுத்துவிட்டேன்.”  

அவள் கட்டளையை ஆசிரியை அலட்சியம் செய்ததாகப் பட்டது. அம்மா முகத்தின் கலவரத்தைக் கவனித்த தெரஸா, 

“அதிர்ச்சி தரும்படி படத்தில் ஒன்றும் இல்லை”  என்று சமாதானம் சொன்னாள்.  

டெபராவுக்குத் தன் மகள் தன்னிடம் இருந்து விலகிப்போவது போன்ற மனச்சித்திரம். 

னிக்கிழமை மாலை சர்ச்சில் சிறுவர்களுக்கான பைபிள் பாடம். டெபரா கைக்குழந்தையுடன் வெளியே வந்தபோது கோர்ட்னி எதிர்ப்பட்டாள்.  

கோர்ட்னி மாவட்டப் பள்ளி நிர்வாகக்குழுவின் அங்கத்தினர். வரும் தேர்தலில் அவள் போட்டியிட வேண்டாம். “நீ எப்படி இருக்கிறாய்?” என்று அவள் சம்பிரதாயத்துக்குக் கேட்டது தான், டெபரா உடனே தன் அதிருப்தியைக் கொட்டிவிட்டாள். 

“மிஸ் பால்சன் என் குறிப்புக்கு மதிப்பு கொடுக்கவில்லை. முதலில், ஹிஸ்பானிய கலாசாரமே எதற்கு? அவர்கள் எல்லாரும் கத்தோலிக்கத்தைச் சேர்ந்தவர்கள். கத்தோலிக்க நம்பிக்கைகளை விவரித்தால் போதாதா?”  

அது அரசாங்கப் பள்ளிகளில் முடியாது.  

“உன் நிலைமை புரிகிறது. அவள் திமிர் பிடித்தவள்” என்றாள் கோர்ட்னி.  

சிறு இடைவெளியைத் தொடர்ந்து, 

“பத்து வருஷத்துக்கு முன் இது நடந்தது. ஆர்லின் ஸ்பெக்டர் மூன்றாம் வகுப்பு ஆசிரியை. முப்பத்தைந்து வயதில் திருமணம் ஆகாமலே கருத்தரித்தாள். தந்தை யார் என்று ஆர்லின் தெரிவிக்க மறுத்ததால், மார்க்ரெட் ஏப்ரஹாம் பிறக்கப்போகும் குழந்தையை கணவன் மனைவி இருவரும் இருக்கும் குடும்பத்துக்குத் தத்துக் கொடுப்பது தான் நல்லது, அதற்கு ட்ரினிடி சர்ச் வழியாக எல்லா பிரசவ செலவுகளுடன் இரண்டாயிரம் டாலர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக அறிவுரை கொடுத்தாள். அது பிடிக்காமல் அவள் வேலையில் இருந்து விலகி நாக்ஸ்வில் போய்விட்டாள். ஒரு நல்ல ஆசிரியரை மார்க்ரெட்டின் குறுகிய மத நோக்கத்தினால் இழந்துவிட்டோம் என்ற குற்றச்சாட்டை மிஸ் பால்சன் ஊடகத்தில் பரப்பினாள். பாவம் மார்க்ரெட்! அடுத்த தேர்தலில் தோற்றுவிட்டாள்.” 

“அது தெரியும்.”  

“இப்போது மார்க்ரெட் மறுபடி போட்டியிடுகிறாள்.” 

“அதுவும் தெரியும்.”  

உரையாடலில் இன்னொரு இடைவெளி. 

“மிஸ் பால்சன் போன்ற ஆசிரியர்களுக்கு எதிராகப் பெற்றோர்களின் உரிமைகளைக் காப்பாற்ற ஒரு ஐடியா. நிர்வாகக் குழுவில் இப்போது நாங்கள் ஐந்து பெண்கள். எல்லாரும் விசுவாசமான கிறித்தவர்கள். மார்க்ரெட்டுடன் நீயும் சேர்ந்தால்… ஏழு. நாம் வைப்பது தான் சட்டம்.” 

மார்க்ரெட்டுக்கு வெற்றி நிச்சயம். ஆனால், 

“நானா? எங்கே? எப்படி?” 

“நீ வசிப்பது  ஜான் ஈஸாவ் தொகுதியில். அவன் இடத்துக்கு”.  

“நான் கல்லூரி மாணவர் தேர்தலில் கூட போட்டியிட்டது கிடையாது.” 

“எனக்கு அனுபவம் இருக்கிறது.” குரலைத் தாழ்த்தி, “அரசியல் காற்று இப்போது சுத்தமான ஐரோப்பிய சந்ததியினருக்குச்  சாதகமாக வீசுகிறது. இரண்டும் உன்னை முன்னுக்குத் தள்ளும்” என்றாள்.

“முதலில் டாமினிக்கைக் கேட்கிறேன். அவன் என்ன சொல்கிறான் என்று பார்க்கலாம்.” 

டெபராவின் மனதில் ஆசை முளைவிடுவதை கோர்ட்னி கவனித்தாள்.  டாக்டர் கெம்பீரனைக் கூப்பிட்டு அவளிடம் பேசச்சொல்ல வேண்டும். 

ட்டப்படிப்பின் கடைசி க்றிஸ்மஸ். 

அட்டோன் வாஸ்க்விஸ் தன் இல்லம் போகுமுன் டெபரா அவனை அழைத்து வந்தாள், தன் குடும்பத்துக்கு அவனை அறிமுகம் செய்ய. வீட்டில் பெற்றோர்களுடன் பண்டிகை கொண்டாட வந்த அவள் ஆறு அண்ணன்களும் அவர்களின் மனைவி குழந்தைகளும். அட்டோன் கும்பலில் கலந்தான். குழந்தைகளுடன் விளையாடினான்.  

அப்பாவுக்கும் அண்ணன்களுக்கும் அவனை உடனே பிடித்துவிட்டது. நல்ல பவிசான பையன். ‘குடும்பத்தில் நான் தான் முதன்முதலாகக் கல்லூரியில் சேரப்போகிறேன்’ என்று கெஞ்சாமல் தன் தகுதியை வைத்தே எம்ஐடியில் இடம் வாங்கி இருக்கிறான். எதிர்காலத்தில் சொந்தக்காலிலே நின்று சிறந்து விளங்குவான். 

அட்டோனின் நிறத்தைக் கவனித்த அம்மா, 

“கலப்படம் இல்லாத ஐரோப்பிய மரபில் அவன் வரவில்லையோ?” என்று சந்தேகப்பட்டாள். 

அந்தக்குறை கூட அவன் விசுவாசமான கத்தோலிக்கன் என்பதில் கரைந்துவிட்டது. 

அப்போது டெபராவுக்கு வேடிக்கையான ஒரு கற்பனை உரையாடல்.   

சக-மாணவன் சூரன் வெறும் நண்பனாக இல்லாமல், ஆண்-தோழனாக இருந்து அவனை அழைத்து வந்திருந்தால்… 

‘கத்தோலிக்க சர்ச்சில் திருமணத்தை நடத்தலாமா?’ 

‘ஊகும். கடற்கரை, பூங்கா என்று சர்ச் நிழல் கூடப் படாத பொதுவிடத்தில்.’  

‘என்ன சடங்குகள்?’ 

‘எந்த மத சடங்கும் கிடையாது. புரோகிதர், மங்கல செந்நீர், வேள்வித்தீ இல்லாதது என் தாய்க்கு ஏமாற்றமாக இருக்கும். ஆனாலும் அவள் மனதைத் தேற்றிக்கொள்வாள். அதைப் போல நீங்களும்.’ 

‘திருமணத்தை நடத்துவது…’ 

‘குடும்பத்தின் கௌரவமான பெரிய மனிதர் ஒருவர்.’ 

‘சரி, திருமணத்துக்குப் பிறகு மதமாற்றத்திற்கு ஆட்சேபம் இல்லையே.’ 

‘ஏற்கனவே நான் ஹிந்து மதத்தில் இருந்து இயற்கை மதத்திற்கு மாறி இருக்கிறேன். அதில் எல்லா மதங்களின் உயர்வான கொள்கைகளும் அடக்கம். எதற்கு மரத்தின் ஒரு வளையாத கொம்பைப் பிடித்துத் தொங்க வேண்டும்? என் கனத்துக்கு அது முறிந்து நான் கீழே விழுந்தாலும் விழுவேன்.’ 

‘உங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தைகளை கத்தோலிக்க மதத்தின் கட்டுப்பாட்டிற்குள் வளர்க்க சம்மதமா?’ 

‘அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்ப்பது மட்டுமே என் கடமை, அவர்களுக்கு நான் செய்யும் பெரிய உதவி.’ 

அவன் கிளம்பிப்போனதும் ஒருவர் ஒருவராக டெபராவின் மனதை மாற்ற முயற்சிப்பார்கள். 

‘புத்திசாலி, நல்ல குடும்பத்தில் வளர்ந்தவன். ஆனால் நமக்கு ஒத்துவராது.’ 

‘பெற்றோருக்கு ஒரே பையன். தனக்கும் ஒன்று போதும் என்று நினைப்பான். குறைந்த பட்சம் நான்கு குழந்தைகள் நம் எண்ணிக்கையை வளர்க்க.’ 

‘அவன் உறவை உடனே வெட்டிவிடு!’ 

‘சுத்தமான ஐரோப்பிய மரபில் ஒரு கத்தோலிக்கக் கணவன் உனக்கு நிச்சயம் கிடைப்பான்’ – இது அம்மா.  

‘எனக்கு அவனைத்தான் பிடித்திருக்கிறது. என் எதிர்காலத்தைத் தீர்மானிக்க நீங்கள் யார்? என் வாழ்க்கை எனக்கே சொந்தம். எங்கள் குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்று எனக்குத் தெரியும்.’

இப்படி அவர்களை எதிர்த்து அவள் சொல்லி இருப்பாளா? சந்தேகம். அவர்கள் கிழித்த கோட்டிற்குள் வாழ்ந்து அந்த கீழ்ப்படிதலை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டவள். நல்ல வேளை, அந்த இக்கட்டை அவள் சந்திக்க வேண்டியது இல்லை.   

விடுமுறை நாட்கள் ஆனந்தமாகக் கழிந்தன. முக்கியமான ஒரு காரணத்துக்காக கல்லூரி திறப்பதற்கு ஒரு வாரம் முன்னதாகவே திரும்பி வருவதாக அட்டோன் தெரிவிக்க, அவளும் பயணத்தை முன்தள்ளிப் போட்டாள். அப்போது அலைமோதும் எண்ணங்கள். 

அட்டோன் அவள் சம்மதம் கேட்க, அவள் அதை வழங்கும் சம்பிரதாயம் இன்னும் நடக்காவிட்டாலும் திருமண சம்பந்தம் நிச்சயம் ஆன மாதிரி தான். கோடை ஆரம்பத்தில் பட்டம் வாங்கியதும் வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை மணமகள் ஆடை அவள் உடலின் நடுப்பகுதியை இறுக்குவதற்கு சாத்தியம் இருப்பதால், மார்ச் மாதத்தின் ஆரம்பத்திலேயே இளவேனில் விடுமுறையின் போது? சின்சின்னாட்டியில் குளிராக இருக்கும். சான் டியாகோ மிஷன் சர்ச்சில்… 

டெபராவும் அட்டோனும் கல்லூரிக்குத் திரும்பிய முதல் நாள் மாலை.  

“நீ ‘கோகோ’வைப் பார்த்தே ஆக வேண்டும்” என்றான். 

ஆண்டு இறுதியில் வெளியான எத்தனையோ புதுத்திரைப்படங்கள். ‘க்றிஸ்டியன் வீக்’கில் ‘கோகோ’வைக் குறை சொன்னதாக நினைவு. 

“அது வெளிவந்து இரண்டு மாதம் ஆகப்போகிறது.”

“அதனால் என்ன?” 

“குழந்தைகள் படம்.” 

“ஆனாலும், சுவாரசியமாக இருக்கும்.” 

“அப்படியென்றால், நீ ஏற்கனவே பார்த்துவிட்டாய்.”  

“என் தம்பி தங்கையுடன். இன்னொரு தடவை உன்னுடன்.” 

“அந்த அளவுக்கு நல்ல படமா?” 

“மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.” 

படம் தொடங்கிய சில நிமிடங்களில் டெபராவின் முகத்தில் அதிருப்தி, அலட்சியம், கொஞ்சம் எரிச்சல். அவள் எண்ணங்களில் குறுக்கிடாமல் அட்டோன் முதன்முறை கவனிக்காத நுண்மையான அம்சங்களை ரசித்தான். 

அரங்கில் இருந்து வெளியே வந்து நீண்ட நடை. 

“எங்கே ஆரம்பிப்பது என்று தெரியவில்லை” என்று டெபராவே ஆரம்பித்தாள். 

“கதை.” 

“அது மாமூல் டிஸ்னி. புதிதாக ஒன்றும் இல்லை.” 

அட்டோனின் குடும்பம் மெக்ஸிகோவின் பழக்கத்தைக் கைவிடாமல் ஒவ்வொரு ஆண்டும் இறந்தோர் தினத்தைக் கொண்டாடுவதால், ‘ஐரோப்பிய மரபில் இருந்து விலகிய கற்பனை. கொஞ்சம் அதீதம் என்றாலும் கதையில் விரிசல் இல்லை’ என்பது அவன் எண்ணம். அவள் அதை எற்றுக்கொள்வாள் என்று தோன்றவில்லை. அத்துடன் விவாதம் ஆபத்தான இடங்களுக்குப் போகலாம். அதை ஆரம்பத்திலேயே கிள்ளிவிடுவது நல்லது. 

“படத்தில் வரும் கோகோ இறந்துபோன என் பாட்டியை ஞாபகப்படுத்தியது” என்று விட்டுக்கொடுப்பது போலச் சொன்னான். அதனால் அவனுக்குப் படம் பிடித்திருக்கிறது, அவ்வளவுதான். “வேறு ஏதாவது பேசலாம். மன்ரோவியா ஹெரிடேஜ் சொஸைடியில் இருந்து எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. மெக்ஸிகோவின் மொரேலியா நகரத்தைச் சுற்றி வாழும் ஆதிக்குடிகளுடன் பழகி அவர்களின் ஒழுகலாறுகளைப் பதிவு செய்ய வேண்டும். இது ஒரு அருமையான வாய்ப்பு. அடிப்படைச் செலவுகளை மானியம் வழங்கும். ஒரேயொரு பிரச்சினை. அதை ஏற்றுக்கொண்டால் அடுத்த செமிஸ்டரை ஓர் ஆண்டு ஒத்திவைக்க வேண்டும். உன்னைக் கேட்டு முடிவு செய்வதாக இருக்கிறேன்.”  

டெபரா அவன் எதிர்காலத் திட்டத்தைக் கையில் வாங்கி அப்படியே குப்பையில் தள்ளி, 

“வாழ்க்கைக்கு அறிவுரையை இறந்த முன்னோரிடம் கேட்பது அபத்தம். பாதிரியாரிடம் கேட்க வேண்டும்” என்றாள்.  

பாதிரியாருக்கு மட்டும் ஒரு சிறுவனின் பிரச்சினை பற்றி என்ன தெரியும்?

“அவர்களின் நீண்ட வாழ்க்கை அனுபவங்கள் நமக்கு உதவும் என எதிர்பார்க்கலாம்.”  

அதை மறுத்து அவள் எதுவும் சொல்லாததால், 

“படம் ‘டே ஆஃப் த டெட்டை முன்வைத்து தயாரிக்கப்பட்டது. கோடை முடிவில் இயற்கையின் வேகம் குறையும்போது இந்தப் பண்டிகை. அச்சமயத்தில், நமக்காகப் பல தியாகங்கள் செய்த முன்னோர்களைப் பெருமைப் படுத்துகிறோம். அடுத்த சந்ததியினர் நமக்கு நன்றி சொல்லும் விதத்தில் நாம் வாழ வேண்டும் என்ற தீர்மானத்தையும் சேர்ப்பது அவசியம் என நினைக்கிறேன்.” 

அவன் சொன்னதில் முன்பாதி தான் அவளுக்குப் பெரிதாகப் பட்டது. 

“இறந்தவர்களை வணங்குவதில் அர்த்தம் இல்லை.”  

“பழக்க வழக்கங்கள் அறிவுசான்றவையாக இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. அவை ஒரு இனத்தவரை ஒன்று சேர்க்கும் பசை.”  

“இறப்பைப் பெருமைப் படுத்துவது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.”  

“இறப்பு வாழ்க்கையின் அருமையை உணர்த்துகிறது. நாட்களை மாதங்களை ஏன் முழு வாழ்க்கையையும் பொருளாதார அரக்கனுக்கு நாம் பலிகொடுக்கிறோம். வாழ்க்கை ஒரு சுழற்சி. இயற்கையில் ஒவ்வொரு இறப்பிலும் ஒரு புது ஜனனம். ஒன்று இல்லாமல் இன்னொன்று இல்லை. குறிப்பிட்ட பரிமாணங்கள் கொண்ட இந்த பூமிக்கு அது அவசியம்.”  

“அப்படியே இருந்தாலும் படத்தில் பல ஆவிகள் எலும்புக்கூடுகளாகத் தாற்காலிக உலகில் அலைந்து கடைசியில் இல்லாமல் போகின்றன. ஆவிகள் நிரந்தரமானவை. கடவுளின் ராஜ்ஜியத்தில் காலமெல்லாம் நிலைத்திருக்கும்.”  

“உன் நம்பிக்கை.”  

“நம் கத்தோலிகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை.” ‘நம்’ மேல் விழுந்த அழுத்தத்தைக் கவனித்த அவன், 

“எனக்கு அவ்வளவு நிச்சயம் இல்லை.” 

“ஏன்?” 

“இப்போது நம்மைச் சுற்றி இருக்கும் இதே மனிதர்களை, தாங்கள் மட்டுமே அனுபவிக்க நுகர் பொருட்களைச் சேர்க்கும் சுலநலமிகளை இன்னொரு உலகத்தில் காலமெல்லாம் பார்க்க வேண்டும் என்றால், அது நிச்சயம் சொர்க்கமாக இராது.”  

அவனுக்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில்,  

“ஆவிகள் குறிப்பிட்ட நாட்களில் நம்மை சந்திக்க வரும் என்பது ஆஸ்டெக் மதத்தின் மூட நம்பிக்கை” என்றாள்.  

“அது கலாசாரக் கொண்டாட்டம்.”  

“என்ன வித்தியாசம்?”

“சமுதாயம் நிலைக்க ஒரு கலாசாரம் மாறுதல்களை ஏற்கும். மற்ற பண்பாடுகளின் வழக்கங்களைத் தன் வசம் ஆக்கிக்கொள்ளும். மதம் உளியால் செதுக்கிய கருங்கல்.” 

“அது தான் அதன் பெருமை.” 

“அதன் பலவீனமும் அது தான்.”  

“எப்படி நீ சொல்லலாம்?” 

“மொழி, ஒழுகலாறு, அரசியல், தனி மனிதனின் கடமைகள் போல மதமும் கலாசாரத்தின் ஒரு அங்கமாக இருப்பது தான் நடைமுறையில் நல்லது.”  

“இல்லை. மதத்தின் ஆணை கலாசாரத்தின் வழக்கங்களுக்கும் மேலானவை.” 

“நான் ஸ்பானிஷ், ஆஸ்டெக் இரண்டு பாரம்பரியங்களின் கலப்படம். அதைப்போல இரண்டு பண்பாடுகளும் சேர்ந்து ஒரு புதிய கலாசாரத்தை உருவாக்கி இருக்கலாம். ஆனால், அப்படி நடக்கவிடாமல் கத்தோலிக்க ஏகாதிபத்தியம் ஆதிக்குடிகளின் கலாசாரத்தை அழித்தது. மிச்சம் இருப்பது இறந்தோர் தினம் போன ஒன்றிரண்டு கொண்டாட்டங்கள் தான். அவற்றைக் காப்பாற்ற வேண்டாமா?”  

“நீ இப்படிச் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது.” 

“ஏன்?”

“இறந்துபோன உன் பாட்டியைப் பெருமையுடன் நினைக்கிறாய். ஆனால், ஸ்பெயினில் இருந்து கடல்கடந்து வந்து நாட்டை உருவாக்கிய முன்னோர்களுக்காக நீ வெட்கப்படுகிறாய்.” வார்த்தைகளில் வெம்மை வெளிப்பட்டது  

“அவர்கள் செய்த அக்கிரமங்களை ஒப்புக்கொள்வதில் என்ன தவறு? மறுபடி அவை நடக்காமல் தடுக்க அது உதவலாம்.” 

அவன் சமாதானம் அவள் கோபத்தைத் தணிக்கவில்லை. அவர்கள் நடை முடிவை எட்டும் வரை மௌனம். அதை முடிவுக்குக் கொண்டுவர அவனுக்கு வழி தெரியவில்லை. 

முதலில், இன்னும் இரண்டு பெண்களுடன் டெபரா வசித்த இல்லம். நடைபாதையில் இருந்து விலகி அதை நோக்கிப் போவதற்கு முன், ‘நாளை அழைக்கிறேன்’ என்று அவள் சொல்லவில்லை. அவனும் அதை எதிர்பார்க்கவில்லை என்பது அவளுக்கு மறுநாள் தெரியவந்தது. 

இறுதி செமிஸ்டரை ஒரு வருஷம் தள்ளிப்போட்டு மொரேலியா போவதாக இருக்கிறேன். திரும்பி வந்ததும் சந்திப்போம், நிச்சயமாக – அட்டோன்   

அவளுக்கு அவ்வளவு நிச்சயம் இல்லை. அம்மாவுக்கு ஏமாற்றம் இல்லாமல் சுத்தமான கலப்படம் இல்லாத ஐரோப்பிய குழந்தைக்காக ஓர் இடத்தை – நிலைமை கைமீறிப் போவதற்கு முன்னால் – அவள் காலி செய்தாக வேண்டும். ‘கேம்ப்ரிட்ஜ் விமென்’ஸ் ஹெல்த் அல்லயன்ஸி’ன்  சேவை அவளுக்குத் தேவைப்படும் என்று அவள் அதுவரையில் நினைத்தது இல்லை. எதுவும் தனக்கு என்று வந்தால் தான் தெரியும். கட்டடத்தின் முன்னால் உள்ளே நடப்பதை எதிர்த்து எப்போதும் ஒரு கும்பல். அதன் கண்ணில்படாமல்…

ழை பெய்த பிறகு திடீரென முளைத்த காளான்களைப் போல சாலைத்திருப்பங்களில், கண்ணில்படும் மேடுகளில், நூலக நுழைவாசலில், வீடுகளின் புல்வெளிகளில் வெவ்வேறு அளவில் பலகைகள். 

டெபரா ரைமன்  

பள்ளி நிர்வாகக்குழு ஆறாம் தொகுதி 

பெரிய போஸ்டர்களில் மட்டும் ‘க்ரிடிகல் ரேஸ் தியரிக்கு எதிர்’ என்ற வாசகம். அது சரவணப்ரியாவுக்கு சிரமம் கொடுத்தது. 

கறுப்பு ஆண் பெண்களை, சிறுவர்களை மரங்களில் கட்டி அடித்துத் துன்புறுத்திக் கொன்றதை வெள்ளை மக்கள் பார்த்து ரசித்தார்கள் போன்ற வரலாற்றுத் தகவல்கள் அவர்கள் சந்ததிக்கு அதிர்ச்சியும் வெட்கமும் தரலாம் என்ற காரணம் காட்டி, அரசாங்க பக்கபலத்துடன் உடல் நிறத்தின் அடிப்படையில் சமுதாய ஏற்ற தாழ்வுகள் உருவாக்கப்பட்டன என்ற கொள்கையைப் பள்ளிக்கூடங்களில் நுழையாமல் தடுக்கலாம். அண்மையில் பல தேர்தல் வெற்றிகளைத் தேடித்தந்த ஆபத்தான ஆயுதம். அதைப் பயன்படுத்தியதால் டெபரா தேர்தல் களத்தில் இறங்கியது வெறும் பொழுதுபோக்கிற்காக அல்ல. 

“நானும் ஆரம்பத்தில் அப்படித்தான் நினைத்தேன். சில விவாதங்களை மக்கள் கவனத்துக்குக் கொண்டுவந்த முயற்சியில் தோல்வி கூட வெற்றி என்று தேர்தலுக்குப் பிறகு அவளைத் தேற்றுவதாக இருந்தேன்” என்றான் டாமினிக். 

“இப்போது…” 

“அவளுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது, இல்லை அவளை வெற்றிக்கு அழைத்துப்போக முடியும் என்று சிலர் நம்புவதாகத் தெரிகிறது.” 

“யார் அந்த சிலர்?”   

“டாக்டர் கெம்பீரன் சர்ச்சுக்கு வரும் எல்லாரையும் டெபரா பக்கம் சாய்க்க, அவர் மகன் சிறில் கெம்பீரன் கவர்ச்சிகரமான வலைத்தளம் அமைத்துத்தர, தேர்தல் விவகாரங்களில் அனுபவப்பட்ட மார்க்ரெட்டும் கோர்ட்னியும் உதவி செய்ய, தொண்டர்கள் உடல் உழைப்பை வழங்க… வெற்றி கைக்கு எட்டும் இடத்தில்.”  

“பணத்துக்கு டாமினிக்” என்றாள் புன்னகையுடன்.

“என் நிறுவனத்தில் அதற்கான அதிகப்படி பணம் ஏது? கத்தோலிக்க பொதுநலவாதி ஷான் ஃபீலரிடம் இருந்து ஐம்பதாயிரம் டாலர் அன்பளிப்பு.”  

அரசியலில் அன்பளிப்பு என்பது முதலீடு.   

“இந்தச் சின்ன தேர்தலுக்கு அத்தனை பணமா?” 

“நீங்கள் இருப்பது எந்தக்காலத்தில்? மிசஸ் நேதன்!” 

நான் ஆணையிட்டால்

நான் ஆணையிட்டால்…-2
Exit mobile version