Site icon சொல்வனம் | இதழ் 317 | 28 ஏப் 2024

”சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை.”

This entry is part 8 of 10 in the series கி.ரா. - அ.ரா.

34.

கி.ரா.வைத் தொகுத்தளித்த கண்காட்சியைப் பார்க்கும் வாய்ப்பைத் தவறவிட்ட எனக்கு எல்லாப் படங்களையும் வீட்டில் வைத்துப் புரட்டிக்காட்டினார் கி.ரா. அப்படிக் காட்டும்போது, அவரை ஓவியங்களாக வரைந்த ஆதிமூலத்தின் ஓவியங்களில் இருக்கும் பாவனைகளோடு இளவேனிலின் படங்களை ஒப்பிட்டுப் பேசினார்.

படங்கள் எடுப்பதற்காக இளவேனிலோடு புதுவையைச் சுற்றிவந்ததைச் சிரிப்போடு சொல்லிக் கொண்டே வந்தார். நான் முதன் முதலில் வந்து தங்கியிருந்த ஜமீன்தார் கார்டனிலும், அங்காளம்மன் நகரிலும் படம் எடுக்கவில்லை. நீங்கள் இருந்திருந்தால் ஒருவேளை அங்கும் போய்ப் படங்களை எடுத்திருப்போம் என்று சொன்னார்.

மனித முகங்களின் மெய்ப்பாடுகளையும் உடல் அசைவுகளையும் குறிப்பான சூழலில் வைத்து நிழற்படங்களாக்கிய புதுவை இளவேனிலின் அபாரமான படங்களின் நுட்பங்களைப் பார்க்கும் வாய்ப்பு சென்னையில் கிடைத்தது. கி.ரா.விற்கு வைத்ததைப்போலச் சுந்தர ராமசாமிக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை நடத்தவேண்டும் என்ற ஆர்வத்தில் இளவேனிலை நாகர்கோவிலுக்கு அழைத்துச் சென்று சில நாட்கள் தங்க வைத்துப் படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றின் தொகுதி ஒன்றைச் சென்னையின் அல்லயன்ஸ் பிரான்சேவில் கண்காட்சியாக நடத்தியது காலச்சுவடு அறக்கட்டளை.

அந்தக் கண்காட்சியில் சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளை மறுபடியும் நிகழ்த்தும்படி கேட்டுக்கொண்டது. 1992 நிகழ்த்திய பல்லக்குத்தூக்கிகளைத் திரும்பவும் கூட்டுக்குரல் சார்பில் நிகழ்த்தினோம். அந்த நாடகத்தை நிகழ்த்துவதற்கு எனக்கொரு கடப்பாடு இருந்தது. அதுவரை நிஜநாடக இயக்கத்தில் ஒரு நடிகனாகவும் பின்னரங்க வேலைகள் செய்யும் நபராகவும் மட்டுமே இருந்த என்னை, நாடகப் பனுவல்களை உருவாக்கும் எழுத்தாளராக அடையாளம் காட்டியது சுந்தர ராமசாமியின் பல்லக்குத்தூக்கிகள் கதைதான். நிஜநாடக இயக்கம் அல்லாமல் மதுரையில் புதிதாக உருவாக்கப்பட்ட சுதேசிகள் நாடகக்குழுவிற்காக நாடகங்களைத் தேடியபோது, நண்பர்களின் உரையாடல் வட்டத்தில், பல சிறுகதைகள் ‘நாடகீயத் தன்மைகள்’ கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, உதாரணமாகப் பல்லக்குத்தூக்கிகள் கதையின் நாடகீயத்தன்மையை விளக்கிச் சொன்னேன். சொன்னவிதம் நண்பர்களுக்குச் சரியெனப்பட்டதால் எழுதும்படி வற்புறுத்தினார்கள்; எழுதினேன். படித்தோம். சில திருத்தங்கள் செய்யப்பட்டன. மேடையேற்றினோம். சிறுகதையை எழுதிய சுந்தரராமசாமிக்கு நாடகப்பிரதியை அனுப்பிவைத்து மேடையேற்றத்துக்கு அழைத்தோம். “மேடையேற்றத்தின்போது வர இயலவில்லை” என்று கடிதம் எழுதினார். பின்னர் ஒரு நேர்ப்பேச்சில், சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை; நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்பதாகச் சொன்னார்.

அதிகமான நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம் தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம் கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின் பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத்தூக்கிகளில் அதைத்தான் செய்தேன். பல்லக்குத் தூக்கிகளைப் பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப்பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் இருக்கும். அதன் மூலம் வாசகர்களின் வாசிப்புத்தளத்தை முடிவுசெய்யும் கதைசொல்லியின் அதிகாரத்துவத் தன்மை கதைக்குள் ஊடாடும். அதனைக் கண்டறிந்து தூரப்படுத்தியபின், 1990-களின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில குறியீட்டுச் சொற்களை உரையாடலில் சேர்த்தபோது நாடகப்பிரதி முழுமையானது. அத்தோடு நாடகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ ஒருவித முரணிலையை உருவாக்க வேண்டும். பாத்திரங்கள் சார்ந்த முரணென்றால், அது அகமுரணாக அமையும், வெளியிலிருக்கும் ஏதோவொன்றொன்றால் புறமுரணாகத் தோன்றும். நவீன நாடகங்கள் என்ற வகைப்பாட்டில் பெரும்பாலும் புறநிலை முரண்களே முக்கியத்துவம் பெறும். பல்லக்குத்தூக்கிகளின் உரையாடலின் வழி உருவாக்கப்படும் அந்த நபர் நாடகத்தில் தோன்றா முரணை உருவாக்குவதன் வழி, புறநிலை முரணைக் குறியீடாக உருவாக்கிவிடுகிறார்.

மதுரையில் சுதேசிகள் மேடையேற்றிய பல்லக்குத்தூக்கிகளைப் புதுவையில் கூட்டுக்குரல் நாடகக்குழு மூலம் மேடையேற்றினோம். புதுவையில் இருந்தபோது நண்பர்களோடு சேர்ந்து கூட்டுக்குரல் என்ற நாடகக்குழுவை ஆரம்பித்து பல இடங்களில் 1990 -1997 காலகட்டங்களில் பல நாடகங்களை நிகழ்த்தினோம். நாடகத்துறையிலிருந்து வெளியேறி ஏழு ஆண்டுகள் ஆனபின்பு ஏறத்தாழ நாடகத்தை நெறியாள்கை செய்வதை நிறுத்தியிருந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பின் அந்த நாடகத்தைச் சுந்தர ராமசாமிக்காகச் சென்னையில் நிகழ்த்தும் பொருட்டுக் கூட்டுக்குரல் நண்பர்களை இணைத்துக்கொண்டு திரும்பவும் மேடையேற்றினோம். அந்த விழாவில். எனது இலக்கியப்பயணத்தில் கி.ரா.வும் சு.ரா.வும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். நிழற்படக் கலைஞனாகப் புதுவை இளவேனில் கவனிக்கப்படுவதற்கு இவ்விரு ஆளுமைகளின் படங்கள் ஆதாரங்களாக இருந்தன; இருக்கின்றன.

35

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்குக் கி.ரா.வை அழைக்கும் முயற்சிகள் துணைவேந்தர் வே. வசந்திதேவி காலத்தில் மட்டுமே நடந்தது என்பதில்லை. துணைவேந்தராகப் பேராசிரியர் க.ப. அறவாணன் அவர்கள் இருந்தபோதும் முன்னெடுக்கப்பட்டது. தமிழியல் ஆய்வுகளில் அண்மைப்போக்குகள் என்றொரு கருத்தரங்கை 2002 இல் திட்டமிட்டோம். அப்போது துறையின் தலைவராக இருந்தவர் பேரா. தொ.பரமசிவன். அதன் தொடக்கவிழாவிற்குப் பல்கலைக்கழக எல்லைக்குட்பட்ட மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை அழைத்திருந்தோம். தொடக்க விழாவில் ஒரு எழுத்தாளரின் சிறப்புரையும், ஆய்வாளர் ஒருவரின் தலைமையுரையும் என்பது திட்டம். சிறப்புரைக்காக கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, தோப்பில் முகம்மது மீரான் என்ற மூன்று பேரில் அதே வரிசையில் அழைக்க முயற்சி செய்யலாம் என்ற திட்டப்படி முதலில் கி.ரா.வைத் தொடர்புகொண்டோம். அவரது வட்டார வழக்குச் சொல்லகராதி திட்டத்தை பல்கலைக்கழகப் பரப்பு முழுமைக்கும் விரிக்கும் திட்டம் இருக்கிறது; அதில் எங்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் பொறுப்பில் உங்களைப் பல்கலைக்கழகம் சிறப்பு ஆலோசகராக அமர்த்த விரும்புவதாகத் தொலைபேசியில் சொன்னேன். வழக்கம்போலத் தூரத்தைக் காரணம் சொல்லி கி.ரா. மறுத்துவிட்டார்.

கி.ரா. வராத நிலையில் சுந்தர ராமசாமியைத் தொடர்புகொண்டோம். சு.ரா. ஒத்துக் கொண்டார். தொடங்குவதற்கு முன்பே வந்து துறையின் ஆசிரியர்களோடு உறவாடித் துறையின் போக்கைத் தெரிந்துகொண்டு நிறைவான சொற்பொழிவொன்றைத் தந்தார். தனக்கு ஆய்வுகள் மீதிருக்கும் வருத்தங்களையும், சமகாலத்திற்கு வராமல் சில பத்தாண்டுகளுக்கு முன்பே தங்கிவிடும் இலக்கியத்துறைகளுக்கு மாறாகச் சில நம்பிக்கைகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுப் பேசினார்.

பின்னர் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப்பேரவையில் சமூக ஆர்வலர்/ எழுத்தாளர்/ பத்திரிகையாளர் என்ற வகைப்பாட்டில் ஒருவர் நியமனம் செய்யப்படும் வாய்ப்பு வந்தபோது பேராசிரியர் தொ.பரமசிவன் அவர் பெயரை முன்மொழிந்து அனுப்பினார். அனுப்பிச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் நியமனம் செய்யப்பட்டார். ஒரிரண்டு கூட்டங்களுக்கு வந்தார். ஆனால் அந்த நடைமுறையில் தன்னைப் போன்ற எழுத்தாளர்கள் என்ன பங்களிப்பு செய்யமுடியும் என்பதில் இருந்த குழப்பத்தால் பின்னர் கலந்துகொள்வதைத் தவிர்த்துவிட்டார்.

36

1989 கல்வியாண்டின் தொடக்கத்தில் புதுவைப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியைத் தொடங்கிய கி.ரா. வுக்கு முதல் வழங்கப்பட்ட காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது. அந்தக் காலத்திலும் அவர் தொடங்கிய தொகுப்பு மற்றும் பதிப்புப்பணிகள் நிறைவடையவில்லை. புதுவை வட்டார நாட்டுப்புறக் கதைகளையும், பெண்களின் மனவுணர்வுகள் வெளிப்படும் கதைகளையும் தொகுத்துப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியதோடு தனது பணி முடிந்துவிட்டது எனக் கிளம்பிவிடவில்லை. புதுவையிலேயே தங்கிப் பல்கலைக்கழகத்தின் அனுமதியுடன் அவற்றைத் தனது நூல்களை வெளியிடும் பதிப்பகங்கள் மூலம் நூல்களாகவும் வெளியிட்டார்.

தொடர்ச்சியாகப் புதுவையிலேயே தங்கிவிடுவது என்று முடிவெடுத்தபோது தனது இருப்புக்கான காரணங்களை நிறுவும் விதமாக அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கும் பணிகளை ஆரம்பித்தார். அப்பணியில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தாகூர் கலைக்கல்லூரியில் இயங்கிய பட்டமேற்படிப்பு மையப்பேராசிரியர் முனைவர் க.பஞ்சாங்கம் ஆவார். கரிசல் அறக்கட்டளை என்ற பெயரில் கி.ரா. தொடங்கிய அவ்வறக் கட்டளையின் பணிகளாகச் சிலவற்றை அவர் வரையறை செய்தார்.

புதுவையிலிருந்த எழுத்தாளர்களில் பிரேம் – ரமேஷ் ஆகியோர் கதைசொல்லியில் அதிகமாகப் பங்களிப்பு செய்தனர். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ப்ரேம் தில்லிப்பல்கலைக்கழகத்திற்குச் சென்றபிறகு அவரது பங்களிப்பு இல்லை. கி.ரா.வைத் தினசரி சந்தித்துவிடக்கூடிய வெங்கடசுப்பா நாயகர் போன்றோரும் மொழிபெயர்ப்பு வழியாகக் கதைசொல்லியில் எழுதினர்.

புதுவையில் பாரதி என்றொரு நூல் எழுதப்பட்டதுபோலப் புதுவையில் கி.ரா. என்றொரு வரலாற்று நூல் எழுதப்பட வேண்டும். நான் எழுதும் குறிப்புகள் பெரும்பாலும் நான் அங்கிருந்த எட்டாண்டுகளில் அவரோடு பேசிய தகவல்களையும், பிறகு அவ்வப்போது புதுச்சேரிக்குச் சென்றபோது அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டவையே. அவையெல்லாம் பெரும்பாலும் வாய்மொழித் தகவல்களே. நான் புதுவையிலிருந்து வந்தபின் கால் நூற்றாண்டுக்காலம் அங்கு வசித்துள்ளார். அவை முறையான தகவல்களைத் திரட்டி எழுதப்படவேண்டும். அவருக்கு நாட்குறிப்புபோல எழுதும் பழக்கம் உண்டு. அவற்றை விரிவாகப்பரிசீலனை செய்து 32 ஆண்டுப்புதுவை வாழ்க்கையைப் (1989 முதல் 1921 வரையில்) பதிவுசெய்ய வேண்டும். அதற்கு அவரது புதல்வர் பிரபாகரன் முன் முயற்சி எடுக்கவேண்டும்.

Series Navigation<< கி.ரா நினைவுக் குறிப்புகள் – 32-33கிராவின் திரைப்பட ரசனை >>
Exit mobile version